தவறைச் சுட்டிக்காட்டும் ஒழுங்கு

0
1

– முஹம்மத் பகீஹுத்தீன்
• ஒரு சகோதரனின் தவறை தூய்மையான எண்ணத்துடன் சுட்டிக்காட்டுவது மிக உயர்ந்த இஸ்லாமிய நற்பண்புகளில் உள்ளதாகும்.
• நெருங்கிப் பழகுவதற்கும், அன்பை உணர்வதற்கும், நட்புறவு நிலைப்பதற்கும் இதுவே சிறந்த வழியாகும்.
•வீன் சந்தேகம் வெறுப்பு, குரோதம் போன்ற நோய்களில் இருந்து பாதுகாப்பதும் இந்தப்பண்பாகும்.
• அல்குர்னும் சுன்னாவும் இந்த பண்பை கடைப்பிடிப்பதற்கு இங்கிதமான வழிமுறையை கற்றுத்தந்திருக்கிறது.
• தவறைச் சுட்டிக்காட்டும் பண்பு சகோதரத்துவத்தை பலப்படுத்தும், குடும்ப உறவை உறுதிப்படுத்தும், சமூக உறவைக் நிலைக்கச் செய்யும்.
ஆனால் இது ஒரு கலை. உணர்வுகளோடு உரசிப் பார்க்கும் விடயம். மிகுந்த கவனத்தோடு கையாளத்தவறினால் உறவு பகையாக மாறும். மனோநிலைகளை சரிவர புரிந்து கவனமாகவும் நடுநிலையாகவும் கையாளவேண்டும். ஒரு முஸ்லிம் அடுத்த முஸ்லிமுக்கு கண்ணாடிதான். அது உடையாமல் பாதுகாப்பது ஒவ்வொருவருடையவும் தார்மீகப் பொறுப்பு. எனவே அதற்கு ஷரீஆவின் நிழலில் சில விதி முறைகளும் அனுகுமுறைகளும் உண்டு.
தவறைச் சுட்டிக்காட்டுவதற்கான விதிகள்
1) அடிக்கடி குறைகாண்பதை தவிர்த்தல்
ஒரு தவறை கண்ணடவுடனே எடுத்த எடுப்பில் சரிசெய்திட வேண்டும் என அவசரப்படக்கூடாது. சின்ன சின்ன விடயங்களை தூக்கிப்பிடிக்கவும் கூடாது. அனஸ் ரழி அவர்கள் ரஸுல் ஸல் அவர்களிடம் சிறுவயதிலிருந்தே பணியாளனாக கடமை புரிந்தார்கள். சுமார் 10 வருட கால சேவையின் போது, நபிகளார் ஸல் அவர்கள் செய்த ஒரு வேலைக்காக இதை ஏன் செய்தாய் என்றோ அல்லது செய்யாத ஒரு வேலைக்காக ஏன் செய்யவில்லை என்றோ ஒரு நாளாவது கேட்டதில்லை. (புகாரி) பத்து வருட காலத்தில் எவ்வளவோ சிறு சிறு தவறுகள் நடந்திருக்கலாம். ஆனால் இறை தூதர் அவற்றை பொருட்படுத்தவில்லை.
2) உன் சகோதரன் தவறுவிடவே கூடாது என எதிர்பார்க்காதே.
மனிதன் தப்புத் தவறு செய்யும் இயல்புடையவன். தவறு செய்வது குறையல்ல. தவறில் நிலைத்திருப்பதுவே வேண்டப்படாத பண்பாகும். உன் சகோதரன் ஒரு மனிதன் என்ற வகையில் அவனை மலக்காக பார்க்காதே.
3) தவறிழைப்பவனின் அறியாமை திரையை அகற்று.
தவறு செய்பவனின் பார்வை திரையிடப்பட்டுள்ளது. எது சரி எது பிழை என்பதை அச்சமயம் அவனால் பார்க்க முடியாது. ஒரு முறை நபி ஸல் அவர்களிடம் வந்த ஒரு வாலிபன் தனக் விபச்சாரத்தை ஹலால் ஆக்கித் தருமாறு வேண்டினான். நாலுபேருக்கு மத்தியில் அதற்கு பகிரங்கமாக அனுமதி கேட்டான். சுற்றியிருந்த சில ஸஹாபாக்கள் அவனோடு கோபம் கொண்டார்கள். வேறு சிலர் மனம் நொந்து கொண்டார்கள். இன்னும் சிலர் அவனைப் பிடித்து கொல்லப் பார்த்தார்கள். ஆனால் நபிகளார் அவனைப் பார்த்து புண்ணகைத்தார்கள் நெருங்கி வருமாறு பணித்தார்கள் பின் அழகாக அமைதியாக இது மோசமான காரியம் என்பதை புரியவைத்தார்கள். அவன் பார்வையi மூடியிருந்த அந்தத் திரையை அகற்றினார்கள். அவன் திருந்தியவனாக திரும்பிச் சென்றான். எனவே தவறு செய்பவன் உள்ளம் திரையிடப்பட்ட நிலையில் தான் அதைச் செய்கிறான். உண்மை அவனுக்கு புலப்படுவதில்லை. எனவே நாம் நிதானமாக இருக்கவேண்டும். ஒரு சகோதரன் தவறை புரியும் போது நாம் பொறுமையையாக இருக்க வேண்டும். அவன் அறியாத நியாயத்தை அமைதியாக உணர்த்த வேண்டும், அப்போது அவன் இயல்பு நிலைக்கு திரும்பலாம். நேர்வழியின் பால் மீண்டு வரலாம்.
4) பண்பாடான வார்த்தைகளை தெரிவு செய்ய வேண்டும்.
பொதுவாக ஒரு முஸ்லிமின் நற்பண்புகளில் உள்ளதுதான் அவன் குiகூற மாட்டான் சபிக்க மாட்டான். அசிங்கமாக பேச மாட்டான். மற்றவனை திட்ட மாட்டான். எனவே அவன் தெரிவு செய்யும் வார்த்தைகள் நல்லதாக இருக்க வேண்டும். அது தான் சகோதரனின் உள்ளத்துக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். ‘என்னுடைய அடியார்களுக்கு நபியே நீர் கூறுவீராக: பேசும் போது எது மிகவும் சிறந்ததோ அதையே அவர்கள் பேசட்டும். எனவே தவறை சுட்டும் போது கூட மனம் புண்படாத வார்த்தைகளை பயண்படுத்த வேண்டும்.
5) விவாதம் புரிவதை விட்டுவிடு
உன் பக்கம் சத்தியம் இருந்தாலும் கூட தர்க்கத்தை விட்டுவிடுமாறு ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள். விவாதம் பெருமைக்கு இட்டுச்செல்லும், அடுத்தவரை மடக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும், மிகை;க வேண்டும் என்ற மனப்பாங்கு வலுப்பெறும். ஆனால் இதே விடயத்தை அமைதியாக உரையாடல் மூலம் வெளிப்படுத்தினால் சத்தியத்தை தெரியவேண்டும் என்ற ஆசை வளரும். தவறிழைத்தவன் மனமிளகி திருந்திவிடலாம்.
6) மாற்றீடு பற்றி சிந்தி
இடிப்பதற்கு முன்பு கட்டுவது பற்றி சிந்திக்க வேண்டும். உறவை துண்டிப்பது இலகுவானது. மீளக் கட்டுவது கடினமானது. தப்பு என்று சுட்டிக்காட்ட முன்பு சரி இதுதான் என தெளிவுபடுத்த வேண்டும். தீமையின் இடத்தில் நன்மை இடம்பிடிக்க முயற்சிக்க வேண்டும். வட்டி ஹராம் என்று கூறிய அதே அல்குர்ஆன் வசனம் வியாபாரம் ஹலால் என்ற மாற்றீடை முன்வைத்துள்ளது இங்கு நோக்கத்தக்கது.
7) மென்மையை கடைப்பிடி :
மிருதுவான தன்மை எப்போதும் வெற்றியோடு இணைந்திருக்கும். அல்லாஹ் மிருதுவாக நடப்பதை விரும்புகின்றான். ஒரு நாட்டுப்புற அறபி பள்ளிவாசலில் சிறுநீர் கழித்த போது ரஸுல் ஸல் அவர்கள் நடந்து கொண்ட முறை இங்கு குறிப்பிடத்தக்கது.
8) தவறை தவறுசெய்தவனே உணர்வதற்கு வழி விடவேண்டும்
நாம் அவன் உணர்வு பெறுவதற்கான வழிகாட்டியாக இருந்தால் அவன் தானாகவே தீர்வை தேடிக் கொள்வான்.
9) தவறை சுட்டிக்காட்ட முன்பு நற்செயல்களை குறிப்பிடு
ஒரு சகோதரனின் குறைகளi எடுத்துக் கூற முன்பு அவனது நல்ல செயல்களை குறிப்பிட்டு அதனைப் பாராட்ட வேண்டும். பின்னர் தவறை உணர்த்தி பேசும்போது அவனது மனதில் அது நியாயம் என்ற உணர்வை தோற்றுவிக்கும். அதனால் அமைதி காண்பான். ஒரு முறை ஸல் அவர்கள் அப்துல்லாஹ் பின் உமரைப்பார்த்து ‘அப்துல்லா மிகவும் சிறந்த ஒரு மனிதர். அவர் தஹஜ்ஜுத் தொழுகையை கடைப்பிடித்து வந்தால் எவ்வளவு நல்லது’ என்றார்கள். வேறொரு சந்தர்ப்பத்தில் ஒரு நபித் தோழர் முதல் ரக்அத்தை அடைந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கோடு சத்தம் எழுப்பிக்கொண்டு வந்து தொழுகையை அடைந்து கொண்டார். நபி ஸல் அவர்கள் தொழுது முடிந்தவுடன் அந்பரைப் பார்த்து முதலில் அவருடைய ஆர்வத்தை மெச்சி விட்டு பின்பு தான் இப்படி இதற்கு பிறகு நடந்து கொள்ள வேண்டாம் எனப் பணித்தார்கள்.
10) தவறுகளை துருவித் துருவித் தேடாதே
உன் சகோதரனுடைய குறைகளை, தவறுகளை துருவித் துருவித் தேடக் கூடாது. உன் சகோதரன் எங்கு போகின்றான். என்ன செய்கின்றான் என பின்தொடர்ந்து உளவு பார்க்கும் வேவை இஸ்லாம் வெறுக்கும் பண்பாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here