ஏன் திடீரென பாராளுமன்றம் கலைக்கப்பட்டது?

0
1

(பி.எம். முஜீபுர் ரஹ்மான்)
20 ஆம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னரே பாராளுமன்றம் கலைக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரட்ன பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னைய நாள் தெரிவித்திருந்தார்.
ஆனால், அவர் கூறி மறுநாளே பாராளுமன்ற அவசர அவசரமாக கலைக்கப்பட்டது. இவ்வாறு ஏன் பாராளுமன்றம் அவசரமாக கலைக்கப்பட்டது? இதற்குப் பின்னால் உள்ள அரசியல் மர்மம்தான் என்ன?
அதாவது, சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய கட்சிகளுக்கிடையிலான கடுமையான கருத்து மோதல்களே பாராளுமன்றம் கலைக்கப்படுவதனைத் துரிதப்படுத்தியது. அத்தோடு, ஐக்கிய தேசியக் கட்சியின் கடுமையான அழுத்தமும் இவ்வவசர முடிவுக்கு வரக் காரணமாக அமைந்துள்ளது.

  1. நம்பிக்கையில்லாத் தீர்மானம்

குறிப்பாக நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பிலான சர்ச்சைகளே பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கான உடனடிக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக எதிர்வரும் 7 ஆம் திகதி நம்பிக்கையில்லாத் தீர்மான விவாதம் பாராளுமன்றில் நடத்தப்படவிருந்தது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க ஆகியோருக்கு எதிராகவும் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானங்களை பாராளுமன்றில் சமர்ப்பித்திருந்தனர்.
இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்த விவாதங்களை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களிடம் கோரியிருந்தார்.
எனினும், இந்தக் கோரிக்கைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகித்து வரும் மஹிந்த ராஜபக்ஸ ஆதரவாளர்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கூட காலம் தாழ்த்தி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியும் ஆனால், ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான விவாதம் உடனடியாக நடத்தப்பட வேண்டுமென கோரியிருந்தனர்.
முதலில் 20 ஆம் திருத்தச் சட்டம் குறித்து விவாதம் நடத்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் அதனை நிறைவேற்றி அதன் பின்னர் நம்பிக்கையில்லா தீர்மானங்களை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி கோரியிருந்தார்.
எனினும் ஜனாதிபதியின் இந்த முயற்சி பலனளிக்காத காரணத்தினால் மிக நெருக்கடியான நிலையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
2. 20 ஆம் திருத்தச் சட்டம்
20 ஆம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி அதன் பின்னர் தேர்தல் நடாத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசென மேற்கொண்ட பிரயத்தனங்களுக்கு எந்தவொரு தரப்பும் பூரண ஆதரவினை வழங்கவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி. முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் 20 ஆம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்படுவதனை தொடர்ச்சியாக எதிர்த்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகளும் தேர்தல் முறைமை மாற்றம் குறித்த உத்தேச யோசனைத் திட்டத்தை கடுமையான விமர்சனம் செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

  1. முஸ்லிம் கட்சிகள்

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் சமூகத்தில் எவ்வாறான தேர்தல் பிரச்சார உத்திகளைக் கையாளலாம் என திட்டம் தீட்டிக் கொண்டிருந்தனர்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது இவர்களின் பேசுபொருளாக 20 ஆம் திருத்தச் சட்டம் இருக்கலாம் என்பதும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஓரங்கட்டி தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொண்டுவந்தமை சிறுபான்மையினருக்கு பாரிய பிரச்சினையை ஏற்படுத்துகிறது என்ற கருத்தும் இங்கு நோக்கத்தக்கது.
அத்தோடு 20ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சிங்கள கடும்போக்காளர்களின் நிலைப்பாடும் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தை இல்லாமற் செய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால மற்றும் அமைச்சரவையின் போக்கு என்பன எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் முக்கிய பேசு பொருளாக இருக்கப் போகிறது. இது இன்னும் ஆறு வருடங்கள் ஆட்சி செய்யவுள்ள ஜனாதிபதி மைத்திரிபாலவின் நல்லாட்சிக்கு சிறுபான்மையினர் மத்தியில் விஷேடமாக முஸ்லிம்களுக்கு மத்தியில் பாரிய அபகீர்த்தியை ஏற்படுத்தும் என்பதும் முக்கிய விடயமாகும்.
அத்தோடு, முஸ்லிம் சமூகத்தில் காணப்படுகின்ற முக்கிய பிரச்சினைகளான வில்பத்து விவகாரமும் வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றமும், சாய்ந்தமருதுக்கான தனியான பிரதேச சபை விவகாரம், தென்கிழக்கு அலகு என்பன தேர்தலின் பேசு பெருளாக வலுப்படும். இவ்விடயங்களும் சமூகங்களுக்கு மத்தியில் பாரிய விரிசலைக் கொண்டுவரும் என்ற எதிர்பார்ப்பு.

  1. மீண்டும் தலைதூக்கும் இனப்பிரச்சினை

20 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் மீண்டும் பாரிய பிரச்சினையை இந்நாடும் எதிர்நோக்கும் என்று ஜே.வி.பி. அறிவித்துள்ளது. மேலும், அன்று தங்களுக்கு சரியான பிரதிநிதித்துவம் வழங்கி இருந்தால் 1980 காலங்களில் தென் இலங்கையில் இரத்தாறு ஓடியிருக்காது என அவர் கூறியமை முக்கியமாகும்.
அத்தோடு, கடந்த 30 வருடங்களாக இந்நாட்டில் புரையோடிப் போயிருந்த இந்த இனக்கலவரம் தற்போது இல்லாமற் செய்யப்பட்டுள்ளது. இதனை மீண்டும் இந்நாட்டில் கொண்டு வருவதாக இருந்தால் இந்த 20 ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள் என தமிழர் கூட்டணியின் தலைவர் தெரிவித்திருந்தமை.
இவைகளுக்கு அப்பால் பொது பல சேனா போன்ற சிங்கள கடும்போக்கு அமைப்புகள் மீண்டும் ஹலால் விவகாரம் மற்றும் ஏனைய மத எதிர்ப்பு விவகாரங்களை தங்களது கையில் எடுக்க எத்தனித்தமையும் இக்கலைப்புக்கு முக்கியமாகின்றது.

  1. தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்

தேர்தலில் போட்டியிட முன்வரும் வேட்பாளர்கள் போதைப் பொருள் விற்பனையுடன் தொடர்பு வைத்துள்ளார்களா? இல்லையா? என்பது தொடர்பில் உறுதிச்சான்று வழங்க அபாயகரமான போதைப் பொருள் கட்டுப்பாட்டு சபை தீர்மானித்துள்ளது.
அரசியல் கட்சிகளால் கோரிக்கை முன்வைக்கப்பட்டால் உறுதிச்சான்று வழங்க முடியும் என அபாயகரமான போதைப் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் நிலங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மார்ச் 12 அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ´ஆரோக்கியமான அரசியல்வாதிகளை அழைக்கும் மக்கள் அணிதிரள்வு´ திட்டத்தின் மூலம் 20 இலட்சம் கையெழுத்து பெறும் தேசிய நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான அழைப்பை மார்ச் 12 அமைப்பின் ஏற்பாட்டாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஏற்பாடுகள் சட்டமாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டால் தற்போதுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருக்கும். எனவே, இவ்வாறான ஏற்பாடுகள் முன்னெடுப்பதற்கு முன்னர் பாராளுமன்றத்தைக் கலைக்குமாறு தற்போது பாராளுமன்றத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்திருப்பார்கள்.
இவ்வாறான பல விடயங்களைக் கருத்திற் கொண்டும், மேலும் பல பிரச்சினைகள் தலைதூக்குவதற்கு ஸ்திரமற்ற பாராளுமன்றம் இருப்பதே முக்கியம் என்பதாலும், பாராளுமன்றத்தைக் காலைத்து ஸ்திரமான சிறந்த பாராளுமன்றத்தை உருவாக்குவதே சிறந்தது என ஜனதிபதி முடிவெடுத்திருக்கலாம். அதன் விளைவே இப்பாராளுமன்றம் அன்று நல்லிரவுடன் கலைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here