திட்டமிட்ட வெறுப்புப் பிரச்சாரத்துக்கு எதிராக 11 முஸ்லிம் அமைப்புக்கள் முறைப்பாடு

0
0

முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத சக்திகளால் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படும் வெறுப்புப் பிரச்சாரங்கள் தொடர்பில் விசாரணை நடத்தி அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி 11 முஸ்லிம் அமைப்புக்கள் பதில் பொலிஸ் மாஅதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு முறைப்பாடொன்றை அனுப்பிவைத்துள்ளன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில், தேசிய சூறா சபை, வை.எம்.எம்.ஏ, இலங்கை ஜமாஅதே இஸ்லாமி, ஸலாமா சொசைட்டி, ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனம், லங்கா மினாரத், அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் சங்கம், கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம், சமாதானத்தை மீள அடைதல் ஆகிய 11 அமைப்புக்களும் இதில் கைச்சாத்திட்டுள்ளன.

ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், கொரோனா வைரஸ் தொடர்பான விஷேட செயலணியின் தலைவர் ஆகியோருக்கு பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையில், முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் வெறுப்புப் பிரச்சாரங்கள் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு இங்கு குறி்ப்பிடப்பட்டுள்ள முஸ்லிம் அமைப்புகளாகிய நாம் உங்களிடம் இந்த முறைப்பாட்டை முன்வைக்கின்றோம். இலங்கை சுகாதார அதிகாரிகள் சங்கத்தின் தலைவரின் வீடியோ பதிவு உள்ளிட்ட பல பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பரிமாறப்பட்டு வருகின்றன.

அவற்றில் இனந்தெரியாத நபர் ஒருவரினால் வெளியிடப்பட்டு பொதுமக்கள் மத்தியில் பகிரப்பட்டு வருகின்ற ஒலிப்பதிவொன்றை இத்துடன் இணைத்துள்ளோம். குறித்த ஒலிப்பதிவானது ஐசிசிபிஆர் சட்டம், பயங்கரவாத தடைச் சட்டம், தண்டனைச் சட்டக் கோவை உள்ளிட்ட நாட்டின் பல சட்டங்களை மீறுவதாக உள்ளது. குறித்த பதிவை வெளியிட்ட நபரை இதன்மூலம் இலகுவாகக் கண்டறிய முடியும் என நாம் நம்புகிறோம்.

மேலும் கொவிட் 19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் முழுமையாகக் கவனம் செலுத்தி வரும் நிலையில், நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் வகையில் இன மற்றும் மதவாதப் பிரச்சாரங்களை ஏதேனும் குழுக்கள் திட்டமிட்டு மேற்கொள்கின்றனவா அல்லது அவற்றுக்கு உதவுகின்றனவா என்பது பற்றியும் விசாரணைகளை நடத்த வேண்டியது முக்கியமானது என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.

குறிப்பாக இந்த சக்திகள் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தோற்றுவிக்கவும் திட்டமிட்டுச் செயற்படுகின்றனவா என்றும் சந்தேகிக்க வேண்டியுள்ளது. எனவே இவை தொடர்பில் விரிவாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு வேண்டிக் கொள்கிறோம் என அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here