தியாகத்தை வேண்டி நிற்கும் தியாகத் திருநாள்

0
1
EDITORIAL : 376

நபி இப்ராஹீமுடைய தியாகத்தை நினைவுபடுத்தும் ஹஜ்ஜுப் பெருநாள் முஸ்லிம்களால் கொண்டாடப்படுகிறது. தனக்கு வழிகாட்டல் வழங்கிய இறைவனின் கட்டளை எதுவானாலும் அதனை சிரமேற்கொண்டு நிறைவேற்றுகின்ற அர்ப்பணிப்பையும் விசுவாசத்தையும் இந்தத் தியாகத் திருநாள் எடுத்தோம்புகின்றது. தனது சமூகத்தை தனக்கு வழிகாட்டிய இறைவனின் பால் அழைப்பதில் நபி இப்ராஹீம் அடைந்த துன்பங்கள் ஏராளம். பலஸ்தீன், எகிப்து, மக்கா எனப் பல பிரதேசங்களுக்கும் இவர் அலைக்கழிக்கப்படுகிறார். காடுகளால் இருளாகிப் போன வனாந்தரத்தில் இவர் வசிக்க நேரிடுகிறது. யாருமற்ற காட்டுக்குள் தனது குடும்பத்தை அனாதரவாக விட்டு விட்டுச் செல்ல நேரிடுகிறது. சத்தியத்தை மக்கள் முன் எடுத்துரைத்ததால் சத்தியத்தை மறுத்த மக்களால் இவர் எரியும் நெருப்பில் வீசி எறியப்படுகிறார். இத்தனையையும் தாண்டி வந்ததால் தான் சத்தியத்தை நோக்கிய அவரது அழைப்பு வெற்றி பெறுகிறது.

இந்தப் பெருநாளைக் கொண்டாடும் இலங்கை முஸ்லிம்களும் நபி இப்ராஹீம் எதிர்நோக்கிய சோதனைகளால் சூழப்பட்டுள்ளனர். முஸ்லிம்களுடைய இருப்பிடங்களில் இருந்து அவர்கள் பெயர்க்கப்பட்டு புகுந்த இடத்திலும் வாழ முடியாமல், இருந்த இடத்திலும் குடியேற முடியாமல் அலைக்கழிக்கப்படுகின்றனர். இரவோடிரவாக தமது நிலங்கள் பறிபோவதை அவர்கள் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாட்புறமும் இனவாதத் தீ பரவி இருக்கும் சூழலில் அச்சத்துடன் பலர் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கண்முன்னாலேயே தமது நிலங்கள் பறிக்கப்பட்ட போதும் செய்வதறியாது முடங்கிப் போயிருக்கிறார்கள். சமூகத்துக்குள்ளாலும் வெளியிலும் இருந்து தம்மை ஏய்த்துக் கொண்டிருக்கும் நும்ரூதுகளுக்கு எதிராக எதுவுமே செய்வதற்கு வக்கற்று வலுவிழந்து போயிருக்கிறார்கள்.

இந்த மக்களை நோக்கி சமூகம் இந்தத் தியாகத் திருநாளில் தனது தியாகத்தை வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது. மறிச்சுக்கட்டியிலும், மாணிக்கமடுவிலும் நீலாக்கேணியிலும் காணிகள் பிடுங்கி எடுக்கப்பட்டு அநாதரவாக்கப்பட்ட மக்களின் காணிகளை மீட்டெடுப்பதற்கு முஸ்லிம் சமூகம் உழைக்க வேண்டியிருக்கிறது. தொல்பொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் சுவீகரிக்கப்படுகின்ற திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களின் இருப்பிடங்களைப் பாதுகாப்பதில் சமூகம் தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்த வேண்டும். தமது சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்கு முடியாமல் தடைகள் விதிக்கும் சக்திகளுக்கு எதிராகச் செயற்பட முடியாமல் நாதியற்றிருக்கும் மக்களுக்காக உழைக்கின்ற தியாக உணர்வு சமூகத்திடம் வர வேண்டும்.

இவ்வளவு தியாகங்களையும் நோக்கி சமூகத்தை அறைகூவல் விடுக்க வேண்டிய தலைமைகள் ஏட்டிக்குப் போட்டியாக குர்பான் வழிகாட்டல்களை வழங்கிக் கொண்டிருக்கின்ற நிலைமையிலிருந்து சமூகத்தின் கவனத்தை திசை திருப்ப வேண்டும். முன்வைக்கப்படவுள்ள மாகாண சபைகள் தேர்தலில் முப்பது வீதம் பெண்களை வேட்பாளராக நிறுத்துவதில் முஸ்லிம் பெண்களுக்கு வழங்க வேண்டிய வழிகாட்டல்கள், உத்தேச இறைவரிச் சட்டத்தினால் இலங்கையின் வியாபாரச் சமூகத்துக்கு வரக் கூடிய பாதிப்புக்கள், உள்ளுராட்சித் தேர்தல்களை புதிய தேர்தல் முறையில் நடத்தினால் முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறையாமல் பாதுகாப்பதற்கான வழிகாட்டல்கள் என தனது உரிமை சம்பந்தமான பல்வேறு வழிகாட்டல்களை முஸ்லிம் சமூகம் தனது தலைமைகளிடம் இருந்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இப்ராஹீம் நபி தனது அனைத்து விருப்பு வெறுப்புக்களையும் விட்டு விட்டு, தனது இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்குச் செய்த தியாகங்களையே முஸ்லிம் சமூகம் தனது தலைமைகளிடம் எதிர்பார்க்கிறது.

இந்தத் தியாகங்களையெல்லாம் முஸ்லிம் தலைமைகளும் முஸ்லிம் சமூகமும் செய்தால் தான் தியாகத் திருநாள் அர்த்தமுள்ளதாக மாறும்.

வாசகர்கள் அனைவருக்கும் இனிய தியாகத் திருநாள் வாழ்த்துக்கள். ஈத் முபாரக் !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here