தீர்க்கதரிசனத்தின் நிதர்சனம் – உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர்

0
2

– பியாஸ் முஹம்மத் –

இலங்கையில் முஸ்லிம் சமூகத்துக்கு மட்டும் அப்படி ஒரு தனிச்சிறப்பு. இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் என்ற தமிழ்ச் சொற்றொடரின் பிரதிவிம்பமாகவே இந்தச் சமூகத்தின் நிலை தொடர்கிறது. ஏனென்றால் நாளை என்பது நிச்சயமில்லை என்றும் பின்னால் சொல்கிறார்கள். அந்த நாளை எப்போது மலரும் என்பதும் யாருக்கும் தெரியாது. அதனால் இன்றைய தலைவர்களே நாளையும் தலைவர்கள் என்ற தனிச்சிறப்பில் இயங்கிக் கொண்டிருக்கிறது இலங்கை முஸ்லிம் சமூகம். இங்கு தலைமைகள் மாறுவதில்லை. மாற்றம் தேவையென்றால் பிரிந்து சென்று புதிய தலைமை அமைத்துக் கொள்ள அனுமதி வழங்குகின்ற  ஜனநாயகப் பண்பு தலைமைகளிடம் தாராளமாகவே இருக்கிறது. இதுவும் ஒரு தனிச்சிறப்புத்தான்.

அரசியல் கட்சிகள் முதல் சன்மார்க்கத் தலைமைகள் வரை இதே நிலைதான். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் தனது ஆயுள் நிறைவுறும் வரை கட்சியின் தலைவராக இருந்தார். தற்போதைய தலைவரின் தலைமைப் பதவிக் காலமும் ஆயுள் முடியும் வரை நீடிப்பதாகவே தெரிகிறது. அதனால் தனித்துவக் கட்சியிலிருந்து தலைமையில் மாற்றம் வேண்டி பல தனிக்கட்சிகள் தோற்றம் பெற்றன. இன்று அந்த ஒவ்வொரு கட்சியும் கட்சியின் ஸ்தாபகராலேயே அவரது ஆயுள் காலம் முழுவதும் ஓட்டப்படுகின்றது. கட்சிகளின் பெயரால் அழைப்பதை விட ரிஷாதின் கட்சி, ஹகீமின் கட்சி, அதாவுல்லாவின் கட்சி என்றழைப்பது தான் வாய்க்கு வசதியாக அமைகின்ற அளவுக்கு கட்சிகளின் பெயர்கள் மங்கிப் போய் தலைவர்களின் பெயர்கள் தான் ஆயுட்காலம் வரை உயர்ந்து நிற்கின்றது. இந்த வரிசையில் விழுமிய அரசியலுக்கென்று உருவான நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அரசியல் கட்சிகளுக்கு ஒரு முன்னுதாரணம்.

சமூகத் தலைமைகளின் நிலைமையும் இது தான். ஸ்ரீலங்கா முஸ்லிம் கவன்ஸில், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா எல்லாம் நீண்ட காலத் தலைமைத்துவப் பாரம்பரியம் கொண்டவை. இதில் தேசிய சூறா சபை விதிவிலக்கானது.

இவற்றை நோக்கும் போது புதிய தலைமுறை தலைமைத்துவம் தொடர்பிலான முன்னேற்றகரமான சிந்தனையில் இருப்பது தெளிவாகிறது. இந்த வகையில் தான் இலங்கையின் அரை நூற்றாண்டுக்கும் மேல் பழைமை வாய்ந்த இலங்கை ஜமாஅதே இஸ்லாமியும் நவீன தலைமுறைக்கேற்ற வகையில் தலைமையில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கால்நூற்றாண்டுகளுக்கும் மேலாக இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் அமீராக இருந்து பணியாற்றிய உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் தலைமைப் பொறுப்பிலிருந்து நீங்கியிருக்கிறார். என்ன செய்வது, தொடர்ந்தும் என்னையே தலைவராக நியமிக்கிறார்களே என்று சொல்லிக் கொண்டு பதவியை அலங்கரித்துக் கொண்டிருக்காமல் புதிய தலைமுறை புதிய தலைமையை ஏற்றுச் செயற்படுவதற்கு அவர் வழி அமைத்திருக்கிறார். தனது தலைமைப் பதவிக்கு மேலால் தான் தலைமை வகிக்கின்ற அமைப்பில் அக்கறை காட்டுகின்றவர்கள் எடுக்கின்ற ஆரோக்கியமான முடிவு இது.

இதிலிருந்தே உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரைப் பற்றிய உரையாடலை ஆரம்பிக்க முடியும். ஒரு குடும்பத்தின் தந்தை ஸ்தானத்திலிருந்து வழி நடத்தியதால் தான் பொறுப்பை தான் வளர்த்தவர்களிடம் அவரால் ஒப்படைக்க முடிந்திருக்கிறது. நீண்ட கால தொலை நோக்குடன் காரியமாற்றுபவர்களுக்கு எப்போது எந்த வித மாற்றம் நடக்க வேண்டும் என்பது தெளிவாகத் தெரிந்திருக்கிறது. அந்த மாற்றத்தைத் தான் உஸ்தாத் உரிய தருணத்தில் செய்திருக்கிறார் என்று நினைக்கின்றேன்.

உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பருடைய காலத்தில் அவர் நடத்திக் காட்டிய மாற்றங்கள் அவரது காலச்சுவட்டில் பயணிக்கத்தக்கவை. அஷ். ரிஷாத் நஜ்முதீன் அடையாளப்படுத்தியது போல அவர் உஸூலுத் தஃவாவுக்கான நடைமுறையாகத் திகழ்ந்தார். ஆரம்ப கால ஜமாஅத்தே இஸ்லாமியின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அவர் அடியொட்டிய இந்த உஸூலுத் தஃவா காரணமாக இருந்திருக்க முடியும். இலங்கையின் தஃவாப் பரப்பில் நடைமுறைரீதியான உஸூலுத் தஃவாவை கண்டு கொள்வதற்கு அவர் காரணமாக இருந்தார்.

இலங்கையில் முஸ்லிம் சமூகத்துக்குள்ளால் தோற்றம் பெற்ற அனைத்து இஸ்லாமிய நிறுவனங்களும் அமைப்புக்களும் முஸ்லிம் சமூகத்துக்குள்ளாலேயே தமது செயற்பரப்பை வரித்துக் கொண்டிருக்கின்றன. இந்தக் கட்டுக்குள் இருந்து விலகி இயக்கங்கள் செய்ய வேண்டிய பொறுப்பை உணர்ந்து தூய தேசக் கோட்பாட்டுக்கு அமைவாக “தேசத்துக்குப் பங்களித்தல்” என்பதில் கூடுதல் கரிசனை செலுத்தினார்.

சமூக மாற்றக் கோட்பாடு தொடர்பில் அவருக்குத் தெளிவான நிலைப்பாடு இருந்தது. இஸ்லாமிய உலகம் தொடர்பிலான அகன்ற அறிவு அவரது புலமைச் சொத்து. சமகாலத்திய இஸ்லாமிய உலகின் செல்நெறியையும் இஸ்லாமல்லாத உலகின் திசைவழியையும் அன்றாட அறிவினால் அறிந்தவர் அவர். இவற்றின் உதவியினால் சமூகப் பரப்பில் செயற்படுவதற்குத் தேவையான பல நிலைப்பாடுகளை நோக்கி ஜமாஅத்தை வழிநடத்துவதற்கு  அவரால் இயலுமாகியது. அரசியல் தொடர்பிலான ஜமாஅத்தே இஸ்லாமியின் நிலைப்பாடு இதற்குத் தக்க சான்று.

ஒரே நோக்கத்துடன் உழைக்கின்றவர்கள் இணைந்து செயற்பட வேண்டும் என்பதில் அவர் தணியாத தாகம் கொண்டிருந்தார். இந்த நோக்கத்தில் அவர் ஜமாஅதுஸ் ஸலாமாவைச் சந்தித்த வேளையொன்றில், நைல் நதியை எடுத்துக் காட்டாக முன்வைத்தார். ஒரே பிரவாகத்திலிருந்து ஆரம்பிக்கும் நைல் நதி இடையில் இரண்டாகப் பிரிந்து ஓடுகிறது. ஒரு தூரம் ஓடிய பின்னர் ஓரிடத்தில் சங்கமித்து மீண்டும் இணைந்து தனது பயணத்தைத் தொடர்கிறது. பிரிந்திருந்த இரு நதிகளும் தமக்குள் சுமந்து வந்த பசளைகளினால் அவை இணைந்து செல்லும் போது முன்னரை விட வளமாகிறது என்ற அவரது வரிகள் அவரது அறிவின் ஆழத்துக்கும் விரிந்த உள்ளத்துக்கும் சான்று.

முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தம் தொடர்பான இரு அறிக்கைகளுக்கும் இடையில் இணக்கப்பாட்டை எட்டுவதற்காக ஜமாஅத்தே இஸ்லாமியுடன் இணைந்து செயற்பட்டவர்கள் அடங்கிய அவையில் உஸ்தாதும் அவரது புதல்வரும் மாறி மாறித் தெரிவித்த கருத்துக்கள் உஸ்தாத் தனது வாரிசை உருவாக்கியிருக்கிறார் என்ற உணர்வை என்னுள் தோற்றுவித்தது. அதே போல கால் நூற்றாண்டு காலம் அவர் ஜமாஅத்தே இஸ்லாமிக்கு வழங்கிய வழிகாட்டல் பல ஆயிரம் வாரிசுகளை தஃவாவுக்கு ஈண்டு தந்திருக்கிறது. இனி அவர்களுக்கு வழிவிடுதைத் தவிர அவரிடம் வேறென்ன பொறுப்பு மிஞ்சியிருக்கப் போகிறது ?

தலைமையில் இருந்து இறங்கிய பின்னர் அடுத்த கட்டங்களில் எப்படிச் செயற்படுவது என்ற சங்கடம் தான் பலரை தலைமையிலேயே தேக்கமடையச் செய்கிறது. உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் தஃவாப் பாசறையில் வளர்ந்தவர். அவர் இயங்குவதற்கு தலைமை என்ற பதவி தான் தேவை என்றில்லை. வழிகாட்டுவதற்கு தலைமையில் தான் இருக்க வேண்டும் என்பதும் இல்லை. ஆயுள் முடியும் முன்னே தலைமையில் மாற்றம் கொண்டுவருவது தான் சமூக நிறுவனங்களின் ஆயுளை நீடிக்கும் என்பதற்கு ஜமாஅத்தே இஸ்லாமியும் அதற்கு இவ்வளவு காலம் அமீராக இருந்த உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரும் சான்றாக அமையட்டும்.

நாளை மறுமையில் படைத்தவனை சந்திக்கும் பாக்கியத்தை அவரது தஃவாப் பணி அவருக்குப் பெற்றுக் கொடுப்பதாக. புதிய தலைமைத்துவத்தை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக. இஸ்லாமிய இயக்கங்கள் பாரிய சவால்களை எதிர்கொள்ளும் வேளையில் புதிய தலைமை பொறுப்பேற்றிருக்கிறது. இந்த சவால்களையெல்லாம் தாண்டிச் செல்ல புதிய தலைமைக்கு எமது பிரார்த்தனைகள் உரித்தாகட்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here