துருக்கி – கிரேக்கம்: இடையில் நடைபெறும் பனிப்போர்

0
9

பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் துருக்கி அதன் படைப் பலத்தையும் பெருக்கி வருகின்றது. உற்பத்தித் துறையில் சமீபகால அதன் வளர்ச்சி குறிப்பிடத்தக்கது. துருக்கிய ஜனாதிபதி ரஜப் தையிப் அர்தூகானின் ராஜதந்திர நகர்வுகளும் பொருளாதாரத் திட்டமிடல்களும் துருக்கியின் அரசியல் ஸ்திரப்பாட்டுக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிப்புச் செய்து வருவதாக துருக்கியின் அரசியல் துறை நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.

எனினும், துருக்கி தனது எல்லைப்புற நாடுகளுடனான முரண்பாடுகளை தீர்த்துக் கொள்வதில் இன்னும் முழு வெற்றி பெறவில்லை என்பது அவர்களின் கருத்தாகும். கடந்த சில வாரங்களாக மத்திய தரைக் கடலின் கிழக்குப் புறத்தில் துருக்கி எண்ணெய் வள அகழ்வாராய்ச்சியில் இறங்கியுள்ளது. துருக்கியின் கடற் படையினர் இப்பெரும் பணியில் இறக்கப்பட்டுள்ளனர்.

துருக்கிய கடற் படையினர் மத்திய தரைக் கடலின் கிழக்குப் புறத்தில் இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள அதேநேரம், அப்பகுதியில் இருப்பதாக ஊகிக்கப்படும் எண்ணெய் வள அகழ்வாராய்ச்சியிலும் ஈடுபட்டுள்ளனர். இதற்கான சட்ட ரீதியானதும் தார்மீக ரீதியானதுமான உரிமை தனக்குள்ளது என்று அங்காரா வாதிக்கின்றது.

கிழக்கு மத்திய தரைக் கடலின் தனக்கு சொந்தமான கடற் பிராந்தியத்திலேயே துருக்கிய கடற் படை பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் எண்ணெய் வளத் தேடுதலில் இறங்கியுள்ளதாகவும் அங்காரா கூறுகின்றது. ஆனால், அங்காரா கிரேக்கத்தின் கடல் எல்லைப் பரப்பில் ஊடுருவி வருவதாக எதென்ஸ் அரசாங்கம் குற்றம் சாட்டி வருகின்றது.

இரு வாரங்களாக சர்வதேச அரசியலின் முக்கிய பேசுபொருளாக துருக்கி-கிரேக்க அரசியல் பதட்டம் மாறியுள்ளது. நேட்டோவில் அங்கத்துவம் வகிக்கும் இரு நாடுகளுக்கும் இடையிலான கருத்து மோதல்களைத் தவிர்ப்பதற்கு நேட்டோ முயற்சித்து வருகின்றது. அமைதிப் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கான முயற்சிகளில் நேட்டோ ஈடுபட்டுள்ள போதும் கிரேக்கம் முன்னிபந்தனைகளை விதித்திருப்பது பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது. துருக்கியுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு அங்காரா சில நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டும் என்று எதென்ஸ் வற்புறுத்தி வருகின்றது.

கடந்த மாதம் அகழ்வாராய்ச்சிக்கான பரீட்சார்த்த முயற்சிகளை மேற்கொள்ள துருக்கி இப்பிராந்தியத்திற்கு கடற்படையுடன் தனது கப்பல்களை அனுப்பியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையில் சொற்போர் ஆரம்பித்தது. ஏலவே, இப்பிராந்தியத்திலுள்ள எண்ணெய் வளத்தை அகழ்ந்தெடுப்பது தொடர்பாக எகிப்திற்கும் கிரேக்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. இவ்விணக்கப்பாடு பிராந்தியத்தில் தனக்குள்ள உரிமையை மீறும் செயல் என்று துருக்கி அறிவித்துள்ளது.

கிரேக்கத்தின் கருத்தில் தனது கடற் பிராந்தியத்தில் துருக்கி அத்துமீறுவதாகவே அது கருதுகின்றது. கிரேக்கப் பிரதமர் மிட்சோ டாக்கிஸ் இது குறித்து கருத்து வெளியிடுகையில், ஏஜியன் கடலில் துருக்கியினதும் கிரேக்கத்தினதும் எல்லைப் பிரதேசங்களை வரையறுப்பது தொடர்பாகவே நாம் பேச்சுவார்த்தை நடத்தத் தயார். அது சர்வதேச கடல் சட்டங்களை அடிப்படையாகக் கொண்டிருத்தல் வேண்டும். புறம்பாக, எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் நாம் அடிபணிய மாட்டோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார். 

சீன ராஜதந்திர அதிகாரிகளோடு கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மத்திய தரைக் கடலின் கிழக்குப் புறத்தை சீனாவும் குறிவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிரேக்க வெளியுறவுச் செயலாளர் ஐ.நா. செயலாளருக்கு இது தொடர்பான கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை நேட்டோ செயலாளர் நாயகம் இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். கிரேக்கமும் துருக்கியும் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என்று அவ்வறிக்கையில் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, கிரேக்க அரசாங்கம் பொய் கூறி வருவதாகவும் நேட்டோ மத்தியஸ்தம் வகிக்கும் பேச்சுவார்த்தைக்கு மறுப்புத் தெரிவித்து வருவதாகவும் அங்காரா குற்றம் சாட்டியுள்ளது. ஏற்கனவே இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் இணக்கம் கண்டதற்கு ஏற்பவே துருக்கி இராணுவப் பயிற்சியிலும் அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளதாக அங்காரா கூறுகின்றது. சர்வதே கடல் சட்டத்தை துருக்கி ஒருபோதும் மீறவில்லை என்றும் எல்லைப் பிரதேசம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த துருக்கி எப்போதும் தயாராகவுள்ளது என்றும் அங்காரா அரசியல் வட்டாரம் தெரிவித்துள்ளது.

கிரேக்கம் பொருளாதார ரீதியாக பாரியளவு பின்னடைந்து வருவதனால் அதன் எல்லைப் புறத்திலுள்ள மத்திய தரைக் கடலின் கிழக்குப் புறத்தில் காணப்படும் எண்ணெய் வளத்தை அகழ்வதற்கான ஒப்பந்தங்களை சீனா மற்றும் எகிப்து போன்ற நாடுகளுடன் மேற்கொண்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் பேச்சுவார்த்தைகள் மூலம் முடிவுக்கு வர வேண்டும் என்பதே சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here