“தேர்தலிலே போட்டியிடுவதனூடாக என்னை சுத்தப்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது”

0
1

ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்

  • இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் போட்டியிடத் தீர்மானித்தமைக்கான காரணங்கள் என்ன?

இந்த நாட்டினுடைய ஜனாதிபதியை தீர்மானிக்கின்ற ஒரு ஜனாதிபதி வேட்பாளராகவே நான் போட்டியிடுகிறேன். எதிர்வரும் தேர்தலில் எந்த வொரு ஜனாதிபதி வேட்பாளரும் 50 வீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளை பெற முடியாது. அந்த சூழ் நிலையிலேயே என்னுடைய வாக்குகள் இரண்டாவது தெரிவு வாக்கினூடாக இந்த நாட்டினுடைய ஜனாதிபதியை தீர்மானிக்கின்ற ஒரு சக்தியாக முஸ்லிம் சமூகத்தை மாற்ற முடியும் என்ற அடிப்படையில் ஜனாதிபதியைத் தீர்மானிப்பதற்காக வேண்டி தேர்தல் களத்தில் நான் குதித்திருக்கின்றேன்.

  • நீங்கள் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஜனாதிபதி வேட்பாளர் என்ற வகையில் கிழக்கு மாகாணம் தவிர்ந்த இலங்கையின் ஏனைய  பிரதேசங்களில் இருக்கின்ற முஸ்லிம்கள் உங்களுக்கு ஆதரவு வழங்குவார்கள் என நீங்கள் எதிர்பார்க்கின்றீர்களா?

நான் முழுமையாக எதிர்பார்க்கின்றேன். இந்நாட்டிலுள்ள மொத்த மாவட்டங்களில் கிட்டத்தட்ட 19 மாவட்டங்களுக்கான தேர்தல் பிரச்சார நடவடிக்கை களை நான் ஆரம்பித்திருக்கின்றேன். நாடு முழுவதிலும் உள்ள முஸ்லிம் சமூகம் பெரும்பான்மை மக்கள் எனக்கு வாக்களிப்பதற்கு தயாராகிக் கொண்டிருப்பதை அறிந்து நான் மிகவும் சந்தோசமடைகின்றேன்.

  • நீங்கள் சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள். ஆனால் சு.க. பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபயவை ஆதரிப்பதாக பகிரங்கமாக அறிவித்துள்ளது. அத்துடன் சு.க.விலிருந்து எந்தவொருவரும் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடவில்லை. இப்படியான சந்தர்ப்பத்தில் நீங்கள் எந்த அடிப்படையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகிறீர்கள்?

நான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் அங்கத்தவர் ஒருவராக இருந்தேன். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்தேன். அந்த அடிப்படையில் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றேன். கட்சி இது தொடர்பாக எந்தத் தீர்மானமும் எடுத்ததாக நான் அறியவில்லை. கட்சியினுடைய உறுப்பினர்கள் தற்பொழுது பல்வேறுபட்ட கட்சிகளில் சேர்ந்து செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே கட்சி இது தொடர்பாக எவ்விதத் தீர்மானங்களையும் எடுக்கவில்லை.

  • ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் உங்களது பெயரில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அவ்வாறான குற்றச்சாட்டுக்களை நீக்கிக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக இந்த ஜனாதிபதி வேட்பாளர் போட்டி அமையுமா?

ஏற்கனவே பொலிஸ் திணைக்களம் CID, TID, NID, FCID இருக்கின்ற திணைக்களங்கள் அனைத்தும் விசாரித்து எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் இல்லை, எல்லாம் அப்பட்டமான பொய்யென்று எனக்கு சான்றிதழ் வழங்கியிருக்கின்றார்கள். பாராளுமன்றமும் இதனை அறிவித்துள்ளது. ஆகவே இன்னுமொரு தேர்தலிலே போட்டியிடுவதனூடாக என்னைச் சுத்தப்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது. ஏற்கனவே பொலிஸ்மா அதிபர் இவர்களுக்கும் பயங்கரவாதத்துக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லையென தெளிவாகவே அறிக்கை விட்டி ருக்கிறார்.

  • உங்களுக்குச் சொந்தமான பட்டிக்கலோ கம்பஸை பாதுகாப்பதற்கே இம்முறை தேர்தலில் போட்டியிடுவதாக ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறதே இது குறித்து…

பட்டிக்கலோ கம்பஸை பாதுகாக்க நான் இந்தத் தேர்தலில் களமிறங்கவில்லை. பட்டிக்கலோ கம்பஸை பாதுகாக்க வேண்டிய எந்த அவசியமும் எனக்கில்லை. குறிப்பாக அந்தப் பல்கலைக்கழகம் ஏற்கனவே பாதுகாக்கப்பட்டிருக்கிறது. நாங்கள் சட்ட பூர்வமான அதனுடைய எல்லாப் பணிகளையும் செய்திருக்கின்றோம். அரசாங்கம் சாதாரண சட்டங்களின் கீழோ அல்லது அவசரகால சட்டத்தை பயன்படுத்தியோ பல்கலைக்கழகத்தை பொறுப்பேற்பதற்கு கடும் பிரயத்தனங்களை ஜனாதிபதி தொடக்கம் அனைவரும் முயற்சித்தார்கள். அவையத்தனையும் இன்று வீண் போன நிலையில் அவர்கள் மீண்டும் அதனை எங்களிடத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். ஆகவே பல்கலைக்கழகத்தை இறைவன் பாதுகாத் துள்ளான். அதனைப் பாதுகாப்பதற்காக நான் இத்தேர்தல் களத்தில் இறங்க வில்லை. அப்படிப் பாதுகாப்பதற்காக இறங்கியிருந்தாலும் எந்தவிதமான பிரச்சினைகளும் கிடையாது. ஏனென்றால் வறிய மாணவர்களுக்காக, ஏழை மாணவர்களுக்காக, அநாதை மாணவர்களுக்காக கட்டப்பட்ட அப்பல்கலைக்கழகத்தைப் பாதுகாக்க வேண்டிய முழுப் பொறுப்பும் கடமையும் இந்நாட்டு முஸ்லிம்களுக்குச் சொந்தமானது. அது வக்பு சொத்து. என்னுடைய சொத்தல்ல. இதில் 90 வீதமான பங்குகள் வக்பு சொத்தாகும். 

  • ஜனாதிபதியை தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளர்’ என்கின்ற சுலோகத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறீர்கள். இதன் அர்த்தத்தை சற்று தெளிவுபடுத்த முடியுமா?

ஜனாபதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகின்ற போது முஸ்லிம் சமூகம் தீர்மானிக்கின்ற A எனும் வேட்பாளர் 62,00,000 வாக்குகளை எடுக்கின்றார். B என்ற வேட்பாளர் 60,00,000 வாக்குகளை எடுக்கின்றார். ஆகவே இப் பொழுது தேர்தல் ஆணையாளர் அறிவிப்பார் முதலாவது சுற்று முடிவடைந்துவிட்டது. A வேட்பாளர் 62,00,000 வாக்குகளையும் B வேட்பாளர் 60,00,000 வாக்குகளையும் பெற்றுள்ளார்கள். யாருமே 50 வீதத்துக்கு மேல் பெறவில்லை, ஆகவே 02ஆம் சுற்று வாக்கெண்ணும் பணி ஆரம்பிக்கப்படும் என்பார். இப்பொழுது எங்களுடைய 250,000 பேர் இந்தத் தேர்தல் களத்திலே B என்ற வேட்பாளருக்கு வாக்களித்திருந்தால் தேர்தல் ஆணையாளர் எங்களுடைய 250,000 ஐயும் கொண்டு போய் அந்த B எனும் வேட்பாளருடன் சேர்த்தால் இப்பொழுது அவர் 64,50,000 வாக்குகளை பெற்றவராக இருப்பார். அதற்குப் பிறகு 50 வீதத்துக்கு மேல் பார்ப்பது கிடையாது. தேர்தல் ஆணையாளர் அறிவிப்பார் முதலாவது சுற்றில் தோல்வியடைந்த B எனும் வேட்பாளர் இரண்டாவது சுற்றிலே ஒட்டகத்தில் போட்டியிட்ட இன்னாருடைய இரண்டரை லட்சம் வாக்குகளை கொண்டு இந் நாட்டின் 8 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார் என்று.

இன்னுமொரு கட்டமாக இதனை நோக்கினால் முதலாம் சுற்றில் A என்ற வேட்பாளர் 60,00,000 வாக்குகளை எடுக்கின்றார். நமது B என்ற வேட்பாளர் 59,00,000 வாக்குகளை எடுக்கின்றார். 1 லட்சம் மேலதிக வாக்ககளால் A எனும் வேட்பாளர் முதல் சுற்றில் வெற்றிபெற்றிருக்கின்றார். ஆனால் ஜனாதிபதியாக வர முடியாது. ஏனெனில் 51 சதவீதம் எடுக்க வில்லை. நமது சமூகம் இந்த ஒட்டகைச்  சின்னத்திற்கு 110,000 வாக்குகளை அளித்திருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். 16 லட்சம் வாக்காளர்களில் 110,000 வாக்குகளை மாத்திரம் எடுத்திருக்கிறேன் என வைத்துக்கொள்ளுங்கள். இப்பொழுது தேர்தல் ஆணையாளர் A எனும் வேட்பாளர் இத்தனை லட்சம், B எனும் வேட்பாளர் இத்தனை லட்சம் ஆகவே ஒருவரும் பெரும்பான்மை பெறவில்லை முதல் சுற்றில் எல்லோரும் தோல்வி என்று அறிவிப்பார். இரண்டாம் சுற்று நடை பெறும். அப்போது முஸ்லிம்கள் எமக்கு அளித்த 110,000 வாக்குகளையும கொண்டு போய் B எனும் வேட்பாளருக்கு வழங்கினால் முதல் சுற்றில் தோல்வியடைந்த அவர் 2ஆவது சுற்றில் 10,000 மேலதிக வாக்கினால் இந்நாட்டின் 8ஆவது ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்படுவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here