தேர்தல் தெருக்கூத்தும் அரசியல்வாதிகளின் பழைய பல்லவியும்

0
0
  • மாலிக் பத்ரி

நாடு மற்றொரு பொதுத் தேர்தலை எதிர்கொண்டுள்ளது. தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் வழமையாகப் பாடிவரும் பழைய பல்லவியை பாடத் தொடங்கியுள்ளனர். நெருக்கடியான தருணங்களில் மக்களின் மனுக்கள் செவிடன் காதில் ஊதிய சங்காகவும் எருமைகளின் முதுகில் பெய்த மழையாகவுமே இருந்தது.

ஆனால், மக்களுக்காகவே நாம் என்றும் உண்மைகளை வென்றெடுப்போம் என்றும் பழைய பல்லவியை பாடி வருகின்றனர். அதையும் கடந்து இனவாதத்தையும் பிரதேசவாதங்களையும் கிளறி வாக்குப் பெறும் சூழ்ச்சியில் இறங்கியுள்ளனர். இந்தத் தேர்தலில் முஸ்லிம்கள் யாருக்கு வாக்களித்தும் எந்தப் பயனும் விளையப் போவதில்லை என்பதைப் போலவே களநிலவரங்கள் உள்ளன.

அஷ்ரபுக்குப் பிந்திய வடக்குக் கிழக்கு அரசியல் ஆளுக்கொரு கட்சியாகவும் வேளைக்கொரு கொள்கை என்றும் உடைந்து உருமாறி விட்டது. ஒருவரை ஒருவர் வசைபாடி, அவதூறு கூறி தன் பக்கம் வாக்குகளை ஈர்க்கும் தெருச் சண்டைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குட்டிக் கட்சிகளின் தேசியத் தலைவர்கள் என்னதான் வாய்வீரம் பேசினாலும் முஸ்லிம் சமூகம் அவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கை உடைந்து நொறுங்கி விட்டது.

தாம் ஆதரவு வழங்கிய அரசாங்கத்தின் பங்காளிகளாக இருந்த நிலையிலேயே எதனையும் சாதிக்க முடியாத ஆற்றாமையை அவர்கள் நிரூபித்து விட்டனர். திகன கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கோ அளுத்கமை கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கோ நஷ்டஈட்டைப் பெற்றுத் தர யோக்கியதையற்ற இந்த தேசியத் தலைவர்கள் இன்று சமூக நலன்களுக்காகவே தாம் கட்சி நடத்துவதாகக் கூறுவது வெட்கக் கேடானது. பொத்துவில் பிரச்சார உரையில் ரிஷாத் பதியுதீன் இவ்வாறு கதை அளந்துள்ளார்.

சமூக நலன்களுக்காகவே கட்சி என்றால் ஹக்கீமும் ரிஷாதும்-ஹிஸ்புல்லாவும் அதாவுல்லாவும் ஒரே மேசையில் உட்கார்ந்திருக்க வேண்டும். சந்தர்ப்பவாதத்தாலும் சுயநலத்தாலும் பிரதேசவாதத்தாலும் முஸ்லிம் அரசியல் பலத்தை கூறுபோட்ட இவர்கள் இன்று சமூக நலன் குறித்துப் பேசுவது மனக்கேடானது.

இன்னொரு புறம் கிழக்கில் இம்முறை தேர்தலில் இனவாதம் தலைதூக்கியிருப்பது கவலைக்குரியது. அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் மட்டக்களப்பைச் சேர்ந்த கருணா அம்மான் இனப்போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தபோது கிழக்கு மாகாணத்தின் கட்டளைத் தளபதியாக இருந்தவர். பிரபாகரனின் விசுவாசம் மிக்க வலது கையாக செயல்பட்டவர். ரணிலின் தந்திரத்தால் புலிகள் அமைப்பிலிருந்து விலகி சிங்கள இராணுவத்திற்கு தமிழர் விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டவர். அவர் தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக பேசிவரும் இனவாதம் அவரது சந்தர்ப்பவாதத்திற்கு மிகப் பெரிய சான்றாகும்.

மொட்டுக் கட்சியின் ஆதரவாளரான அவர், 3000 சிங்கள இராணுவத்தினரை கொன்று குவித்ததாக பிரச்சாரக் கூட்டமொன்றில் கூறிய கருத்து நாட்டில் பெரும் சர்ச்சையைக் கிளறியுள்ளது. தமிழ் தேசத்தின் துரோகி என்று தமிழர்களால் முத்திரை குத்தப்பட்ட கருணா, தனது மாவட்டத்தைத் தாண்டி அம்பாறையில் தமிழர் வாக்கினைப் பெற வேண்டுமாயின், கோடீஸ்வரனை வீழ்த்த வேண்டும். அதற்காக மீண்டும் அவர் சிங்கள தேசியத்திற்கு எதிரான தனது விடுதலைப் போராட்டத்தின் வீரகாவியத்தை தமிழர்களுக்கு நினைவூட்டுகின்றார்.

மொட்டுக் கட்சியினருக்கு கருணா தேவை என்பதனால் கருணாவை நாம் மன்னிப்போம் என்கிறார் எஸ்பி திஸாநாயக்க. ஆனால், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை வேண்டும் என்கிறார் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா. எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்திற்கு தீனி போட்டுள்ளார் கருணா.

இன்று அம்பாறை பிரச்சாரக் கூட்டங்களில் கருணா ஹரீஸை முஸ்லிம்களின் நலன்களுக்காக குரல் கொடுக்கும் போராளியாகக் காண்பித்து இனவாதத்தைத் தூண்டுகிறார். இதன் மூலம் அப்பாவி தமிழ்-முஸ்லிம் மக்களிடையே வேண்டாத வெறுப்பையும் பகை முரண்பாடுகளையும் வளர்க்கின்றார். பாராளுமன்றக் கதிரைக்காக நாக்கை வெளியே நீட்டிக் கொண்டு அலைகின்ற எவரும் யோக்கியதையானவர்கள் அல்லர். காரணம் இன்று தேர்தலில் களமிறங்கியுள்ளவர்களை ஊக்கும் காரணிகள் பல. ராஜபக்ஷர்களுக்கு அஞ்சுபவர்கள், ஊழல் மோசடி குற்றம்சாட்டப்பட்டவர்கள், பயங்கர வாதச் செயல்களோடு இணைக்கப்படுபவர்கள், இனவாதிகள், பிரதேசவாதிகள் என்று பல்வேறு முகமூடிகளை அணிந்துகொண்டவர்களே இன்று மக்கள் மன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.

அமைச்சுப் பதவிகள் வகித்தபோது தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி சமூகத்திற்கு எந்த நலனையும் செய்யாதவர்கள் இன்று பெரும் சமூகப் போராளிகளாகவும் தானைத் தளபதி களாகவும் தம்மை நிலைநிறுத்துவது வெட்கக் கேடானது. யார் நாடாளுமன்ற உறுப்பினரானாலும் எதிர்வரும் ஐந்தாண்டுகள் தமிழ், முஸ்லிம் சிறுபான்மை மக்களுக்கு சவாலாகவே இருக்கும் என்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பா.உ. சுமந்திரன். பதட்டமான ஒரு சூழல் உருவாக்கப்பட்டுள்ளது என்கிறார் றவூப் ஹக்கம்.

ஆக, அனாவசியமாக சிறுபான்மைச் சமூகங்கள் தமக்குள் மோதிக்கொள்ள வேண்டியதில்லை. திட்டமிட்டு தமது விகிதாசாரத்திற்கு ஏற்ப பிரதிநிதிகளை வென்றெடுப்பதில் அவர்கள் கவனம் குவிக்க வேண்டும். ஜனநாயக வழியில் தமது மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். வாய்ப்புக்கேடாக கடந்த தேர்தலை விட இந்தத் தேர்தலில் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் புற்றீசல்கள் போல் பெருகியுள்ளன. அதற்கு மேலாக இனவாதத்தையும் பிரதேச வாதங்களையும் கிளறுகின்றனர். இது ஒட்டுமொத்த சிறு பான்மை அரசியலுக்கும் அடிக்கப்படும் சாவுமணி என்பதை சமூகங்களை மென்மேலும் பிளவுபடுத்துபவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஒன்றுபட்டுச் செயல்படுவதற்கான ஒரு விரிந்த கூட்டு உருவாக்கப்பட வேண்டும். அதுவே இன்றைய உடனடித் தேவை.

வடக்குக் கிழக்கில் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதாகக் கூறிக் கொள்ளும் பல்வேறு கட்சிகள் களத்திற்கு வந்துள்ளன. அவை ஒவ்வொன்றும் பிரதிநிதிகளை வென்றெடுப்பதில் பெரும் சவாலாக மாறியுள்ளன. வாக்குகளை அநாவசியமாகச் சிதறடிப்பதற்கே அவை காரணமாகின்றன.

முஸ்லிம் சமூகத்தில் முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் போன்ற தனிக்கட்சிகளுக்கு அப்பால் ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, மொட்டு, சுயேச்சை என அணிகளின் பட்டியல் நீள்கின்றன. இதன் மூலம் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. முஸ்லிம்களின் நலன்களை நோக்காகக் கொண்டு பரந்துபட்ட ஓர் கூட்டணியை உருவாக்குவது ஏன் தவறிப் போனது என்ற கேள்வி முக்கியமானது. கொள்கைவாதமோ தூரநோக்கோ கட்சி அரசியலில் மறைந்து போய் தேர்தல் பிரச்சாரங்கள் வெறும் தெருக் கூத்தாகவும் உள்வீட்டுச் சண்டையாகவும் மாறி வருவது அரசியல் எதிர்காலத்தின் மிக ஆபத்தான குறிகாட்டியாகும்.

மக்களே தமது பிரதிநிதிகளை கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கான அளவுகோல்களை அவர்களே தீர்மானிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here