நாம் வாழும் தேசத்தைப் புரிந்துகொள்ளல்

0
3

– ரவூப் ஸய்ன் –

முஸ்லிம்கள் தவிர்க்க முடியாத சில காரணங்களால் இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறையில் இல்லாத ஒரு நாட்டில் வாழ நேரிடலாம். உயர் கல்விக்காகவோ தொழில் நிமித்தமோ அந்நிய நாடொன்றில் குடியேறி வாழ நிர்ப்பந்திக்கப்படலாம். மேலும் வரலாற்றுக் காரணங்களால் இன்னொரு மதத்தினர் அல்லது இனத்தினரின் நாட்டை தனது நாடாகக் கொள்ளலாம்.

இத்தகைய முஸ்லிம்கள் தாம் நாடாகக் கொள்ளும் அந்நாட்டை இஸ்லாமியப் பிரச்சாரத்திற்கான (தஃவா) களமாக ஆக்கிக் கொள்ள வேண்டும். அதற்கான மூல நிபந்தனையாக அவனது சொந்த வாழ்வை இஸ்லாமிய அடிப்படையில் ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். இத்தகைய ஒழுங்குபடுத்தலையே சிறுபான்மைக்கான இஸ்லாமிய வாழ்வொழுங்கு (பிக்ஹுல் லில் அகல்லியாத்) எனப்படுகின்றது.

நவீன இஸ்லாமிய அறிஞரும் அல் குர்ஆன் விளக்கவுரையாளருமான இமாம் ரஷீத் ரிழா இதுகுறித்து பின்வரு மாறு எழுதுகிறார்.

“ஒரு சிறுபான்மை நாட்டில் வாழும் முஸ்லிம்கள் வெறுமனே பொருளாதார உழைப்போடும் உலகத் தேவைகளை நிறைவேற்றுவதோடும் தமது வாழ்வை சுருக்கிக் கொள்வார்களாயின் அது பாவமானது” மாறாக அந்த நாட்டை தாருல் தஃவாவாகக் கருத வேண்டும். இவ்வாறு அதனை தாருல் தஃவாவாக ஏற்றுக் கொள்வதே அங்கு வாழ்வதற் கான அடிப்படை நியாயம் என அவர் வலியுறுத்துகிறார். ரஷீத் ரிழா போன்று இக்கருத்தைப் பல்வேறு இஸ்லாமிய அறிஞர்களும் விளக்கியுள்ளனர். தாருல் தஃவா என்பது பிக்ஹுல் அகல்லியாத் தொடர்பாக விவாதிக்கப்படும்போது பயன்படுத்தப்படும் புதியதோர் கலைச் சொல்லாக மாறியுள்ளது. தாரிக் ரமழான் போன்ற நவீன சிந்தனையாளர்கள் இதற்குப் பகரமாக தாருல் ஷஹாதா எனும் சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.

லெபனானின் இஸ்லாமிய அறிஞரும் சிந்தனையாளரும் சிறுபான்மை முஸ்லிம்களுக்கான இஸ்லாமிய சட்டம் குறித்து ஆழ்ந்த நிபுணத்துவம் கொண்டவருமான ஷேக் பைஸல் மௌலவி (ரஹ்) அவர்கள் சிறுபான்மை முஸ்லிம் கள் வாழும் நாட்டை தாருல் தஃவா என்பதற்கான நியாயங்களை மிகத் தெளிவாக முன்வைக்கிறார். அவரது சிந்தனையை பின்வருமாறு தொகுத்துத் தரலாம்.

“உலகை தாருல் ஹர்ப் (யுத்த தொடர்புள்ள நாடு), தாருல் இஸ்லாம் (இஸ்லாமியப் பூமி) என்று வகைப்படுத்துவது இஸ்லாமிய சட்டத்தில் மிகுந்த கருத்து வேறுபாட்டுக்கு உட்பட்ட பகுதிகளில் ஒன்றாகும். இக்குறிப்பிட்ட நாடுகளை வரைவிலக்கணப்படுத்துவதிலும் அவற்றுக்கான நிபந்தனைகளை (ஷர்த்) விதிப்பதிலும் ஒப்பந்தத் தொடர்புள்ள நாடு (தாருல் அஹ்த்) என இன்னொரு பிரிவை அவற்றோடு இணைப்பதிலும் இவ்வாறான கருத்து வேறுபாடுகள் பாரியளவில் காணப்படுகின்றன.

நாம் வாழும் இன்றைய காலத்தில் உலகை இவ்வாறு பிரித்து நோக்குவது பொருத்தமற்றதென்றே எனக்குத் தோன்றுகின்றது. அனேகமான இஸ்லாமிய நாடுகளுக்கு இஸ்லாமிய சட்ட அறிஞர்கள் இட்ட ஷர்த்துகள் பொருந்துவதாக இல்லை. குறிப்பாக இஸ்லாமிய சட்டம் நடைமுறைப்படுத்தல் என்ற ஷரத்து தற்போது இஸ்லாமிய நாடுகளுக்கு எவ்வகையிலும் பொருந்துவதாக இல்லை. அவ்வாறு இப்பிரிவின் அடிப்படையில் தாருல் ஹர்ப் எனக் கருதப்படும் நாடுகளுக்கும் அதற்கான ஷரத்துகள் பொருந்துவதாக இல்லை.

ஏனெனில், அந்நாடுகளில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக வாழ்கின்றனர். மார்க்கத்தை விட்டு அவர்களைத் தூரப்படுத்துவதற்கான நிர்ப்பந்த சூழ்நிலைகளும் அங்கு காணப்படவில்லை. எனவே, முஸ்லிம்கள் வாழும் அனைத்து நாடு களும் அவற்றில் இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படா விடினும் அது தாருல் இஸ்லாமாகவே (இஸ்லாமிய நாடாகவே) கருதப்பட வேண்டும்.

தாருல் ஹர்ப் என்பது உண்மையில் முஸ்லிம்களோடு யுத்தத்தில் ஈடுபட் டுள்ள முஸ்லிம் அல்லாத நாடுகளுக்கே பொருந்தும். இதற்கு பலஸ்தீனை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலை உதாரண மாகக் கொள்ளலாம். நவீன காலத்தில் தாருல் ஹர்பிற்கு சிறந்த உதாரணம் இஸ்ரேல். இவ்விரு பிரிவுகளிலும் அடங்காத அனைத்து நாடுகளும் தாருல் அஹ்த் (ஒப்பந்த நாடுகள்) என்@ற கருதப்பட வேண்டும். ஏனெனில், இஸ்லாமிய நாடுகளுக்கும் ஏனைய நாடுகளுக்குமிடையே ஐ.நா. ஒழுங்கின் கீழ் ஒப்பந்த உறவு காணப்படுகின்றது. உலக நாடுகளைப் பொறுத்தவரையில் இதுவே எமது அபிப்பிராயம்.

இது மட்டுமன்றி, ஒப்பந்த நாடுகளை பிரச்சாரத்திற்கான நாடாக (தாருல் தஃவா) எனக் கொள்ளல் வேண்டும். இப்புதிய கலைச் சொல் பிரயோகம் உலகின் அனைத்து நாடுகளுக்கும் அவற்றி லிருக்கும் முஸ்லிம்களிடையே ஒப்பந்தம் காணப்படாவிட்டாலும் பொருந்தும். தாருல் தஃவா முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாதவர்களோடு உறவாடுவதைப் பொறுத்தவரையில் மக்கா காலப்பிரிவில் காணப்பட்ட ஒழுங்கை அதற்குரிய அடிப்படையாகக் கொள்ளலாம்.

எனவே, முஸ்லிம்கள் சிறுபான்மை யாக வாழும் நாட்டை தாருல் தஃவா அல்லது தாருல் ஷஹாதா என நாம் கொள்ளும்போது அங்கு இருவகையான போராட்டங்கள் அவசியம் முன்னெடுக் கப்பட வேண்டியிருக்கும். அதற்குரிய மூலோபாயங்கள் ஷரீஆவின் அடிப் படையில் தெளிவாக வகுக்கப்பட வேண்டும். ஏனெனில், பெரும்பான்மை அந்நியர்களுக்கு மத்தியில் வாழும் சிறுபான்மை முஸ்லிம்கள் அந்நாட்டின் மதங்கள், அரசியல் கட்சிகள், அரசாங்கம் ஏனைய இனங்கள், கலாச்சாரங்கள் என்பவற்றைப் பொறுத்தவரை எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும் என்பது மிகத் தெளிவாக வகுக்கப்பட வேண்டும்.

இந்நிலைமை குறித்து இந்திய துணைக் கண்டத்தின் பேரறிஞரும் இஸ்லாமிய சிந்தனையாளருமான ஷெய்க் அல்லாமா அபுல் ஹஸன் அலி நத்வி (ரஹ்) முன்வைக்கும் விளக்கம் அவதா னிக்கத்தக்கது. இவ்வாறான நாடுகளில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள் தமது வாழ்வொழுங்கை நெறிப்படுத்துவதில் எத்தகைய முன்னிலைப்படுத்தலை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து அவர் பின்வருமாறு விளக்குகிறார்.

அபுல் ஹஸன் அலி நத்வி (ரஹ்) ஒரு சிறுபான்மை நாட்டில் பிறந்து வாழ்ந்த வர். அதன் சமூக, அரசியல், கலாசார சூழமைவுகளை நன்கு புரிந்தவர். மட்டுமன்றி இஸ்லாமிய கலைகளிலும் முதிர்ந்தவர். எனவே, அவரது விளக்கம் இலங்கை போன்ற முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாட்டிற்கும் பொருந்தி வருவதைக் காணலாம்.

“கண்ணியமிக்க வாழ்வை மீண்டும் பெற, நபி அவர்களின் பிரதிநிதிகளுக்குப் பொருத்தமான உயர்ந்த வாழ்வை அடைய உலகின் சீர்திருத்தத்திற்குப் பொறுப்பானவர்கள் என்ற வகையில் வாழ்வதற்கு அவர்களுக்குள்ள ஒரே வழி நாட்டில் காணப்படும் “பொருத்தமான தலைமைத்துவமின்மை” எனும் இடை வெளியை நிரப்புவதே.

இறைவனுக்குப் பயந்த, மனிதம் என்ற பெறுமானத்தை  மதிக்கும் தலைமைத்துவம் ஒன்றில்லை. எனவே தான் எமது சகோதரர்கள் சிலர் மனிதம் என்ற இந்தத் தூதை சுமக்க முற்பட வேண்டும். அந்த இடைவெளியை நிரப்புவதற்கு நாம் முயற்சிக்க வேண்டும். மக்கள் மத்தியில் மனிதத்தை மதியுங்கள் என்ற உணர்வைத் திட்டமிட்டு வளர்க்க வேண்டும்.

“மனிதம் என்ற பெறுமானத்தை இழிவுபடுத்தி அழித்துவிடும் நிலை இன்று பாரியளவில் நடந்த வண்ணம் உள்ளது. இத்தகைய ‘தலைமைத்துவம் இல்லாமை’ என்ற இடைவெளியை நிரப்புவதே முஸ்லிம்கள் முன்னாலுள்ள பாரிய பணியாகும். பல்வேறு மதங்கள், கொள்கைகள் அனைத்திற்கும் அப்பால் நின்று மனிதனை அவன் மனிதன் என்ற ஒரே காரணத்திற்காக மதிக்க வேண்டும் என்ற கருத்தை மக்கள் மத்தியில் இன்று பரப்ப வேண்டியுள்ளது. இந்நிலை தோன்றுமானால் முஸ்லிம்கள் அந் நாட்டு மக்களின் அன்பையும், கண்ணியத்தையும் பெறுவார்கள். தலைமைத்துவம் அவர்களுக்குக் கிடைப்பதும் சாத்தியமாகிவிடும்.

மனிதன் எவ்வாறு சீர்கெட்டுப் போனாலும் உள நோய்களாலும் ஒழுக்கச் சீர்கேடுகளாலும் பாதிக்கப்பட்டாலும் அவன் நல்லதையே மதிப்பான். மனிதன் எவ்வளவு கடுமையான இனவெறி கொண்டவனாக இருந்தாலும் அவனால் மனத் தூய்மையோடு நிறை வேற்றப்படும் செயலை, தியாகத்தை மதிக்கும் இயல்பினை அவன் கொண்டுள்ளான். எனவே, முஸ்லிம்கள் இறைவனின் அருளால் தமது சொந்த நலன்களையும் தாம் வாழும் சமூகத்தின் நலன்களையும்  தியாகம் செய்து மனித இனத்தின் நலன்களை மேலாக மதிக்கும் போது மக்கள் மனங்களில் வெறுமையாக இருக்கும் இடத்தை அவர்கள் பிடித்துக் கொள்ள அல்லாஹ் அவர்களுக்கு உதவுவான். மக்கள் அவர்களை மதித்து நடப்பார்கள்.”

உண்மையில் அபுல் ஹஸனின் இக்கருத்து முஸ்லிம்கள் தமது அடிப்படை உரிமைகளுக்காகப் போராடுதல் என்பதற்கு மிகத் தூரமாக உள்ளது போன்றே தோன்றுகிறது. எனினும், அபுல் ஹஸன் அலி தனது நிலைப் பாட்டையும் அபிப்பிராயங்களையும் மேலும் விளக்குவதைக் கவனிப்போம்.

கொள்கைப் பற்றுமிக்க மக்களுக்கு கொள்கையை நிலைநாட்டுவதே அடிப்படையான இலட்சியம். அதில் பிடிவாதமாக இருப்பவர்களுக்கு இக்கருத்தை ஜீரணிப்பது முடியாததொன்றல்ல. நாட்டின் பொதுப் பிரச்சினைகளில் ஒரு முஸ்லிம் கலந்து கொள்ளும்போது, பொதுவான சீர்கேடுகளைச் சீர்திருத்த உழைக்கும்போது அனைத்து மக்களோடும் அவன் கலக்கின்றான், உறவாடுகின்றான். நேர்மையோடும் தூ#மையோடும் அவன் பாடுபடுகின்ற போது அவர்களது மனதில் இடம்பிடிக்கின்றான்.

தன் சொந்த மக்கள் மீது மட்டுமல்ல யார் மீது அநியாயம் நடந்தாலும் எங்கு மக்கள் கஷ்டப்பட்டாலும் அவன் பேசுவான். இதுவே ஒரு சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் வாழ்வொழுங்காக மாறும்போது அச்சமூகம் நிச்சயம் மக்கள் மனதில் இடம் பிடிக்கும். முஸ்லிம் அல்லாத வர்கள் அவர்களை கண்ணியத்தோடு நோக்குவர். எவ்வாறாயினும், விதிவிலக்காக இத்தகைய சூழ்நிலையிலும் சிறுபான்மை முஸ்லிம் களை எதிர்க்கும் சிறு குழுக்கள் அல்லது தனிநபர்கள் அங்கு இருக்கவே செய்வர். இத்தகைய ஷைத்தானிய சக்திகள் எல்லா சமூகங்களிலும் எப்போதும் இருப்பர். ஷைத்தான் இலகுவில் தோல்வியை ஒப்புக் கொள்வதில்லை. இத்தகைய எதிர் சக்திகளிடமிருந்து தம்மைக் கவனமாகக் காத்துக் கொள்ளும் வழிமுறை நிச்சயமாக அந்த சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திடம் காணப்படல் வேண்டும். அதற்கான மூலோபாயங்களை அவர்கள் வகுத்துக் கொள்ள வேண்டும்.

முஸ்லிம் சமூகம் ஓர் இனம் அல்ல. பூகோள எல்லைகளால் அதனை வரையறுக்க முடியாது. இக்கருத்துக்குப் பொருத்தமான சிந்தனைப் போக்கையே ஷெய்க் அபுல் ஹஸன் அலி நத்வியின் இக்கூற்று தெளிவாக்குகின்றது. நியாயமான உரிமைகள் ஏதுமின்றி தொடர்ந்தும் திட்டமிட்ட அநியாயங்களுக்கு உட்படுத்தப்படும் ஒரு சமூகம் மேற் குறிப்பிட்ட கருத்தை ஜீரணித்துக் கொள்வது சற்று கடினமாகவே இருக்கலாம். அந்த ஐயத்தையும் அபுல் ஹஸன் அவர்கள் தெளிவுபடுத்துகின்றார்.

இயன்றளவு முஸ்லிம் சமூகம் தமது தேவைகளைத் தாமே பூர்த்தி செய்து கொள்ளும் ஒழுங்கை வகுக்க வேண்டும். ஈமான், சகோதரத்துவம் என்ற இரு கருத்தும் இஸ்லாமிய சமூகத்தில் மிக ஆழமாகப் பதியுமானால் அந்த சமூகம் தமது தேவைகளைச் சுயமாகவே பூர்த்தி செய்து கொள்ளும் ஒழுங்கிற்கு வர முடியும். இப்பகுதியில் இஸ்லாமிய சட்டத்தில் காணப்படும் பல்வேறு ஒழுங்குகளை மிகச் சிறந்த முறையில் நடைமுறைப்படுத்துவது பயன் தரும். அதுவே இப்பாதையில் எடுத்து வைக்கும் முதல் அடியாகும்.

இதேவேளை அடிப்படை உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான போராட்டத்தையும் கொள்கை ரீதியான உழைப்பிற்கும் போராட்டத்திற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அதன் உள்ளே அமைந்த போராட்டமாகவும் அமைத்துக் கொள்ளல் வேண்டும். உனது சகோதரனுக்கு அநியாயக் காரனாயினும் அநியாயத்திற்கு உட்பட்டவனாயினும் உதவி என்பது ஜாஹிலியக் காலத்தில் காணப்பட்ட ஒரு கருத்தாகும். இதே வசனத்தைக் கூறிய இறைத் தூதர் (ஸல்) அவர்கள் அநியாயம் இழைக்கும் சகோதரனுக்கு உதவுவது என்றால் அவனை அநியாயம் செய்வதிலிருந்து தடுப்பதாகும் என்று விளக்கம் தந்தார்கள்.

சிறுபான்மையாக முஸ்லிம்கள் வாழும் நாட்டை இவ்வாறுதான் தாருல் அஹ்த், தாருல் தஃவா, தாருல் ஷஹாதா என்ற பூமியாக முஸ்லிம்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். கொள்கைப் பற்றுள்ள சிறுபான்மை முஸ்லிம்களாயின் அவ்வாறு மாற்றிக் கொள்ள முயல்கின்றபோது மேலே இமாம் அபுல் ஹஸன் அலி நத்வி அவர்கள் குறிப்பிடும் கருத்தை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். இக்கருத்து சிறுபான்மை முஸ்லிம்களிடையே பரவலாக பிரச்சாரம் செய்யயப்பட வேண்டும். முஸ்லிம்களின் உள்ளங்களில் இச்சிந்தனை ஆழமாகப் பதிக்கப்பட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here