நெருங்கிய உறவினரை திருமணம் செய்தல்

0
3

திருமணம் முடிக்க அனுமதிக்கப்பட்டோரில், நெருங்கிய உறவினர் எனக் கருதப்படக்கூடியவர்களை திருமணம் முடிக்க இஸ்லாம் தடை விதித்துள்ளதா?

–  அஷ்-ஷெய்க் Dr. அப்துல் கரீம் ஸைதான் –

இது விடயம் தொடர்பாக ஷாபிஈ மத்ஹபினைச் சேர்ந்த அறிஞர்கள், திருமணம் முடிக்கப்படக் கூடிய பெண் நெருங்கிய உறவினராக இருக்கக் கூடாது என்ற கருத்தை கொண்டுள்ளனர். இதற்கு பின்வரும் ஹதீஸை ஆதாரமாக காட்டுகின்றனர்.

“உங்களுக்கு நெருக்கமான உறவினரொருவரை நீங்கள் திருமணம் முடித்துக் கொள்ளாதீர். ஏனெனில் அது உங்கள் சந்ததியினரை நலிவுற்றவர்களாக ஆக்கிவிடும்.” (பலவீனமானது)

எனினும், இந்த ஹதீஸ் எந்தவொரு ஆதாரபூர்வமான ஹதீஸ் கிரந்தங்களிலும் குறிப்பிடப்படவில்லை என இப்னு அஸ்- ஸலாஹ் கூறுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இக்கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அஸ்-ஸுப்கி குறிப்பிடுகின்றார். ஏனெனில், இக்கருத்துக்கு வலுச் சேர்க் கின்ற வகையிலான எந்தவொரு நம்பத் தகுந்த ஆதாரமும் இல்லை என்பதோடு, நபி(ஸல்) அவர்கள் கூட தனது மகள் பாதிமா(ரழி) அவர்களது நெருங்கிய உறவினரான அலி (ரழி) அவர்களுக்கே திருமணம் முடித்துக் கொடுத்தார்கள்.

‘முக்னி அல்-முஹ்தாஜ்’ என்கின்ற ஷாபிஈ பிக்ஹ் சார் புத்தகமொன்றில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

“ஒருவர் தனது நெருங்கிய உறவினர் ஒருவரை திருமணம் முடிக்காமல் இருப்பதுவே மேலானது என இமாம் ஷாபிஈ (ரஹ்) குறிப்பிட்டுள்ளனர். அஸ்-ஸின்ஜானி அவர்கள் இதனை விளங்கப்படுத்துகையில், திருமணத்தின் மிக முக்கியமான நோக்கங்களில் ஒன்று மனித குலத்தினரை ஒன்றுபடுத்தி அவர்களுக்கிடையில் ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.”

எனவே, குடும்ப உறவுக்குள் இல்லாது, குடும்ப வட்டத்திற்கு வெளியே திருமண உறவுகளை ஏற்படுத்திக் கொள்வது விரும்பப்படுவதற்கான முக்கிய காரணமாக அஸ்-ஸின்ஜானி குறிப்பிடுகின்ற இந்த கருத்தையே நான் பொருத்தமாகக் கருதுகின்றேன். அதாவது, சமூக உறவுகளின் வட்டத்தை விரிவுபடுத்தி, மக்கள் மத்தியில் பலமான ஒரு உறவை கட்டியெழுப்பி, அவர்களுக்கிடையிலான ஒத்துழைப்பை அதிகரிக்கச் செய்வதாகும். மாற்றமாக, குடும்ப உறவுக்குள் திருமணம் முடிப்பது தவறானது, குறைபாடுடையது எனக் கருத்து கொள்ள முடியாது.

ஹன்பலி மத்ஹபைச் சேர்ந்த அறிஞரான இமாம் இப்னு குதாமா தனது ‘அல்-முக்னி’ என்ற புத்தகத்தில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். “ஒரே தன்மையைக் கொண்ட குடும்ப உறவின் மூலம் கிடைக்கின்ற குழந்தையை விட, சாமர்த்தியமான, புத்தி சாதுர்யமுள்ள குழந்தைகள் கிடைப்பதற்கு வழிவகுக்கும். அதேபோன்று கணவன்-மனைவி குடும்ப உறவினர்களாக இருக்கின்ற போது, அத்தம்பதியினருக்கிடையிலான முரண்பாடுகள் அல்லது விவாகரத்து என்பன குடும்ப உறவுகளுக்கிடையில் விரிசல்களை ஏற்படுவதற்கும் காரணமாக அமைந்துவிடும்.” குடும்ப வட்டத்துக்கு வெளியே திருமண உறவுகளை ஏற்படுத்திக் கொள்வது     சிறந்தது என்ற கருத்துக்குப் பின்னாலுள்ள நியாயங்களை இது சுட்டிக் காட்டுகின்றது.

எது எவ்வாறிருப்பினும், ஒருவர் குடும்ப உறவுக்குள் திருமணம் முடிப்பதா அல்லது குடும்ப வட்டத்துக்கு வெளியே திருமணம் முடிப்பதா என்பது அவரவர் சந்தர்ப்ப, சூழ்நிலைகளை பொறுத்தே முடிவெடுக்கப்பட வேண்டும். குறிப்பாக, அவரது முடிவு மார்க்கத்தை முன்னுரிமைப்படுத்தியதாகவே அமைய வேண்டும்.

தமிழில்: பிஷ்ருள் ஹாதி 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here