பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு அங்கீகாரம்

0
0

இன்னும் பல விடயங்களைச் சேர்க்குமாறும் கோரிக்கை

வெளிநாட்டு அமைச்சர் திலக் மாரப்பனவினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் இன்னும் பல அத்தியாவசியமான விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, விஜேதாச ராஜபக்ஷ ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர். அதனால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட பத்திரம் இன்னும் பல திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முன்னைய பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்குப் பதிலாகவே இந்தச் சட்டம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவிருக்கிறது. புதிய சட்டத்தில் பல திருத்தங்களை வேண்டி நின்ற உயர்கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, கொலைக் குற்றத்துக்கு தற்போது அமுலிலுள்ள மரணதண்டனைக்குப் பதிலாக ஆயுள் தண்டனை வழங்கப்பட வேண்டும் என புதிய சட்டத்தில் உள்ளதை திருத்தி அமைக்கும்படி வேண்டிக் கொண்டார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய ஒருவரின் ஒப்புதல் வாக்குமூலத்தைக் கொண்டு நீதிமன்ற நடவடிக்கைகளைத் தொடர முடியுமாக இருந்தது. தற்பொழுது தொடர முடியாது என புதிய சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இங்கிலாந்து போன்ற நாடுகளில்  பயங்கரவாதத்துடன் தொடர்புடைய ஒருவரின் ஒப்புதல் வாக்குமூலத்தைக் கொண்டு வழக்குத் தொடரப்படுகிறது எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.

சட்டம் நிறைவேற்றப்பட்டால் அதனை நடைமுறைப்படுத்தும் நிறுவனமாக பொலிஸ் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதனை பாதுகாப்பு அமைச்சு பொறுப்பெடுக்க வேண்டும். பிரிவினைவாதம் குற்றமாகக் கருதப்பட வேண்டும் என்ற பல திருத்தங்களும் அமைச்சர் விஜேதாசவினால் முன்வைக்கப்பட்டன. இவற்றை ஜனாதிபதியும் ஏற்றுக் கொண்டார்.

இலங்கைக்கு ஜீஎஸ்பி ப்ளஸ் சலுகையை வழங்குவதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதான கோரிக்கையாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது. 03 வருட முயற்சிக்குப் பின்னர் அரசாங்கம் இதனை நடைமுறைப்படுத்த முன்வந்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here