பலவந்தமாக காணாமல்போவதை தடுக்கும் சட்டம்; ஒரு பார்வை

0
0
பலவந்தமாக காணாமல்போவதை தடுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச சாசனத்தில் இலங்கை நேற்று முன்தினம் கைச்சாத்திட்டுள்ளது.

அந்த வகையில் அடுத்த ஆண்டுமுதல் இந்த சாசனத்தின் பிரகாரம் இலங்கை செயற்படவேண்டும். எதிர்காலத்தில் ஏதேனும் காணாமல் போதல் சம்பவங்கள் இலங்கையில் இடம்பெறும் பட்சத்தில் இந்த சாசனத்தின் சட்டதிட்டத்துக்கு அமைய அரசாங்கமே முழுமையான பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

அதேபோல் சர்வதேச மட்டத்திலும் இவ்வாறான பிரச்சினைகளுக்கு பொறுப்புக்கூற வேண்டிய நிர்ப்பந்தம் தற்போது ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் தலைமை அலுவலகத்தில் செயற்படும் இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி நேற்று முன்தினம் பலவந்தமாக காணாமல் போவதை தடுக்கும் ஐக்கிய நாடுகளின் சர்வதேச சாசனத்தில் கைச்சாத்திட்டுள்ளார்.

இந்நிலையில் ஐக்கிய நாடுகளின் காணாமல் போனோர் குறித்து ஆராயும் சாசனத்தில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மனித உரிமைகள் தொடர்பில் எமது அரசாங்கம் காட்டும் அக்கறை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் சகல மக்களினதும் மனித உரிமைகளை பாதுகாத்து அவர்களின் செயற்பாடுகளை பலப்படுத்த வேண்டும் என்பதே எமது நோக்கமாகும் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இலங்கையில் மனித உரிமைகளை நிரந்தரமாக பாதுகாக்கும் வேலைத்திட்டத்தை எமது அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. ஆகவே ஐக்கிய நாடுகளின் காணாமல் போனோர் குறித்த சாசனத்தை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த ஆண்டு முதல் இந்த சட்டத்தின் கீழ் அரசாங்கம் செயற்படும் வகையில் நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் எனவும் வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இதேவேளை கடந்த காலத்தில் இலங்கையில் இன, மத அடிப்படையில் மக்கள் கடத்தப்பட்டு காணாமல் போனமை எம் அனைவருக்கும் நினைவில் உள்ளது. முக்கியமாக கடந்த 10 வருடங்களில் நாட்டினுள் நடந்த மோசமான நிலைமைகள் மற்றும் பிரச்சினைகள் இல்லாத சூழ்நிலையிலும் காணாமல் போதல் சம்பவங்களை தடுக்கமுடியாத ஒரு சூழ்நிலை இருந்தமை அனைவரும் அறிந்ததேயாகும்.

எனவே இந்த நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் தமது பாதுகாப்பை பலப்படுத்தும் வகையிலும், கடத்தல் கலாசாரத்தை முழுமையாக இந்த நாட்டில் இருந்து ஒழிக்கும் ரீதியிலும் இந்த சாசனத்தில் அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் இந்த சாசனத்தில் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே எமது அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளது. எதிர்காலத்தில் யாரும் கடத்தப்படக்கூடது என்பதில் நாம் கவனமாக இருக்கின்றோம்.

ஆனாலும் கடந்த காலகட்டத்தில் நடந்த சம்பவங்கள் தொடர்பிலும், உண்மைகளை கண்டறிவது தொடர்பிலும், மக்களுக்கான இழப்பீடுகளை பெற்றுக் கொடுப்பது குறித்தும் தேவையான பொறிமுறையை உருவாக்கி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் எனவும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருக்கிறார்.

எமது நாட்டைப் பொறுத்தவரையில் பலவந்தமாக காணாமல் போதல் மற்றும் கடத்தப்பட்ட சம்பவங்கள் மிக அதிகளவில் இடம் பெற்றுள்ளமை யாவரும் அறிந்த விடயமாகும். அதாவது கடந்த காலங்களில் மிக அதிகமானோர் கடத்தப்பட்டு காணாமல் போக செய்யப்பட்டதுடன் அவ்வாறு கடத்தப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது இதுவரை அறியப்படாமல் உள்ளது.

இவ்வாறானதொரு சூழலில் பலவந்தமாக காணாமல் போதல் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளமையானது மிகவும் வரவேற்கத்தக்க ஒரு விடயமாகும்.

இவ்வாறு அரசாங்கம் இந்த சாசனத்தில் கைச்சாத்திட்டுள்ளமையின் காரணமாக இதற்குப் பின்னர் ஏதாவது காணாமல் போதல் மற்றும் கடத்தல் சம்பவங்கள் இடம் பெறுமாயின் அதற்கு அரசாங்கம் முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டும் என்பதுடன் பாதிக்கப்பட்டோர் சர்வதேசம் வரை செல்வதற்கான சந்தர்ப்பங்களும் கிடைத்துள்ளன.

இது எதிர்வரும் காலங்களில் இவ்வாறான அசம்பாவிதங்கள் இடம் பெறாமல் இருப்பதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுப்பதாகவே அமைந்திருக்கிறது.

அந்த வகையில் அரசாங்கம் திட்டமிட்ட ரீதியில் எடுத்துள்ள இந்த நடவடிக்கையானது பாதிக்கப்பட்ட மக்கள் விடயத்தில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இலங்கையில் காணாமல் போனோர் குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட மெக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு நேற்று யாழ்ப்பாணத்தில் விசாரணை அமர்வுகளை ஆரம்பித்தது.

அரசாங்கத்தின் இவ்வாறான விசாரணை கட்டமைப்புத் தொடர்பான நம்பிக்கையின்மையுடனேயே மக்கள் காணப்படுகின்றனர்.இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் நம்பிக்கையற்ற சூழல் நிலவுகின்ற இக்காலப்பகுதியில் அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச சாசனத்தில் கைச்சாத்திட்டுள்ளமை பாரியளவில் நம்பிக்கைதரும் நகர்வாக அமைந்திருக்கிறது.

அண்மையில் பலவந்தமாக காணாமல் போதல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற்குழுவின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு இலங்கையில் இடம் பெற்ற காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் மதிப்பீடுகளை செய்திருந்தனர். குறிப்பாக காணாமல் போதல் சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து இந்த ஐ.நா. குழுவினர் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர்.

அதுமட்டுமன்றி திருகோணமலை கடற்படை முகாமிற்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகளின் செயற்குழுவினர் அங்கு இரகசிய முகாம்கள் இருந்தமைக்கான சான்றுகள் தமக்குக் கிடைத்ததாக அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டிருந்தனர்.

இது உள்நாட்டு மற்றும் சர்வதேச மட்டத்தில் சர்ச்சையை ஏற்படுத்தும் விடயமாக அமைந்தது. குறிப்பாக கடந்த காலத்தில் இவ்வாறு இரகசிய முகாம்கள் இருந்தனவா? அவற்றில் மக்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனரா? அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டுமென மிகவும் தீவிரமான முறையில் வலியுறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் இவ்வாறு ஐக்கிய நாடுகள் செயற்குழுவே விடயங்களை முன்வைத்துள்ளதையடுத்து இந்த விடயங்கள் தொடர்பில் நம்பகரமான விசாரணையை நடத்த வேண்டிய கட்டாயத் தேவை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. இவ்வாறான பின்னணியிலேயே அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் இந்த சர்வதேச சாசனத்தில் கைச்சாத்திட்டுள்ளமை இங்கு குறிப்பிடவேண்டிய அம்சமாகும்.

இந்நிலையில் அரசாங்கம் காணாமல் போதல் மற்றும் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்பில் சர்வதேச ரீதியில் பொறுப்புக்கூறும் செயற்பாட்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள நிலையில் கடந்த காலங்களில் இடம் பெற்றுள்ள காணாமல் போதல் மற்றும் கடத்தல் சம்பவங்கள் தொடர்பிலும் நம்பகரமான, சுயாதீனமான மற்றும் விரிவான விசாரணைகளை நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

தமது உறவுகளை தொலைத்து விட்டு பாரிய வேதனைகளை சுமந்து கொண்டிருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக விடிவைப் பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் கடமையாகும். வெறுமனே ஆணைக்குழுக்களை நியமித்து தீர்வு கிடைக்காத செயற்பாடுகளை மேற்கொண்டிருப்பதை விடுத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது மிகவும் முக்கியமாகும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவதில் தாமதங்கள் இருக்கக்கூடாது. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமனாகும்.

எனவே அவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி ஒருபோதும் மறுக்கப்பட்டுவிடக்கூடாது. விசேடமாக தற்போது இலங்கை அரசாங்கமானது சர்வதேசம் சார் பொறுப்புக்கூறலுக்குள் தன்னை உட்படுத்திக் கொண்டுள்ள நிலையில் அதற்கேற்ற வகையில் ஆரோக்கியமான நடவடிக்கைகளை மேற்கொண்டு நாட்டில் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் காணாமல் போனோர் மற்றும் கடத்தப்பட்டோர் சம்பவங்களுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அத்துடன் இதுபோன்ற அசம்பாவிதங்கள் இதற்கு பின்னர் இடம் பெறாமல் இருக்க நாட்டின் சட்டம் ஒழுங்கை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதுடன் ஜனநாயகத்தை பலப்படுத்துவது அவசியம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here