பல்கலைப் பரீட்சைகள் 22 முதல்

0
1

அனைத்து மருத்துவ பீடங்களும் தவிர்ந்த ஏனைய பீடங்களுக்கான இறுதியாண்டுப் பரீட்சைகள் இம்மாதம் 22 முதல் ஆகஸ்ட் 15 வரை நடைபெறும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். மருத்துவபீடப் பரீட்சைகள் நாளை (15) ஆரம்பிக்கப்படவுள்ளன.

22 ஆம் திகதி முதல் எந்தெந்தத் திகதிகளில் எந்தெந்தப் பல்கலைக்கழகங்கள் இறுதியாண்டுப் பரீட்சைக்காக ஆரம்பிக்கப்படும் என்பதனை குறித்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்கள் மாணவர்களுக்கு அறிவிப்பார்கள். கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலை, கல்வி, சட்டம், விஞ்ஞானப் பீடங்களின் இறுதியாண்டுப் பரீட்சைகள் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும். பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீட பரீட்சைகள் 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும். இவ்வாறு ஆகஸ்ட் 15 ஆம் திகதியாகும் போது அனைத்துப் பல்கலைக்கழகங்களினதும் இறுதியாண்டுப் பரீட்சைகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பரீட்சைகளின் போது ஆசனங்களை ஒதுக்குதல், எழுத்து மற்றும் பிரயோகப் பரீட்சைகளுக்கான மாணவர்களின் எண்ணிக்கை என்பன சுகாதார விதிமுறைகளுக்கேற்ப தீர்மானிக்கப்படும். முடிந்தவரை மாணவர்கள் தமது வீடுகளில் இருந்து பல்கலைக்கழகங்களுக்கு வருவதற்கான வாய்ப்பு தொடர்பில் மாணவர்களுக்கு தெளிவூட்டுமாறு பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மறுஅறிவித்தல் வரை விடுதிகளில் ஒரு அறையில் ஒரு மாணவர் மட்டுமே தங்க முடியும். இரவு 7.00 மணிக்கு முன்னர் நூலகம் உட்பட பல்கலைக்கழக வளாகத்திலிருந்து அனைவரும் வெளியேறிவிட வேண்டும். பல்கலைக்கழகத்துக்குள்ளும் வெளியிலும் எந்தவொரு வகையிலும் மாணவர்கள் ஒன்றுகூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. எந்தவொரு பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு நடவடிக்கைளுக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது.

முதுகலை ஆராய்ச்சி மாணவர்கள் சுகாதார வழிகாட்டுதல்களின் படி தமது கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளதோடு, பல்கலைக்கழகத்தின் அனைத்து நிர்வாக அதிகாரிகளும் நாளை (15) முதல் கடமைக்குத் திரும்ப வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here