பாதுகாப்பு சமிக்ஞை கருவிகளை வழங்கும் தன்னார்வ தொழிலை மேற்கொள்ளும் கண்டுபிடிப்பாளர் இஸ்பாக்!

0
1

பாதுகாப்பு சமிக்ஞை கருவிகளை வழங்கும் தன்னார்வ தொழிலை மேற்கொள்ளும் கண்டுபிடிப்பாளர் இஸ்பாக்!

– அனஸ் அப்பாஸ் –

புத்தளம் கனல் வீதியைச் சேர்ந்த மரத் தளபாட வேலைப்பாடுகள் செய்யும் தொழிலாளியான முஹம்மது இல்யாஸ் அவர்களின் மகன் முஹம்மது இஸ்பாக் 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற “ஸஹஸக் நிமவும்” கண்டுபிடிப்பாளர் போட்டியில் தேசிய விருது வென்றார். 05 வினாடிகளில் பாதிப்பேதும் இன்றி ஒரு கிலோகிராம் வெள்ளைபூண்டின் தோளை அகற்றும் எளிய பொறிமுறையை கண்டுபிடித்த சாதனைக்காகவே அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. சூழலுக்கு பாதிப்பு இல்லாத இவ் இயந்திரத்துக்கான பதிப்புரிமை சான்றிதழுக்காகவும் அவர் விண்ணப்பித்துள்ளார்.

இவரின் தாயார் ரம்சியாவுக்கு இஸ்பாக்கையும் சேர்த்து நான்கு புதல்வர்கள். இலத்திரனியல் விஞ்ஞானியான சேர் நிகேலோ டெஸ்லாவை தனக்கான வலுவூட்டல் முன்மாதிரியாகக் கொண்ட இஸ்பாக் இன்னும் பல படைப்புக்களையும் மேற்கொண்டுள்ளார். தாங்கியில் நீர் நிரம்பியதும் மின்குமிழ் ஒளிர்ந்து அதனை உணர்த்துவதுடன், நீர் விரயத்தை தவிர்க்கும் தன்னியக்க ஆளி செயற்பாட்டைக் கொண்ட “தன்னியக்க சமிக்ஞை மின்தாங்கி”, மனித வள வேலையை குறைத்து, நேர சிக்கனத்துடன் இயங்கும் நவீன மா-அறி இயந்திரம், கண் பார்வை அற்றவருக்கு முன்னால் வரும் வாகனத்தை ஒலி மூலம் சமிக்ஞை கொடுக்கவும், வாகன ஓட்டுனருக்கு ஒளி மூலம் சமிக்ஞை காட்டும் “வெள்ளைப் பிரம்பு பாவிப்போருக்கான உணரு தடி”, “இடியப்பம் தயாரிக்கும் கருவி”, “சாதாரண கையடக்கத் தொலைபேசி மூலம் (தூர எல்லையின்றி) தொழிற்படும் நீர் பாய்ச்சும் மோட்டர்”, “வாகன பாதுகாப்புக் கருவி”, “முத்திரை அடிக்கும் கருவி” என அவரது படைப்புக்கள் நீள்கின்றன.

தற்போது 23 வயதான இஸ்பாக் ஒரு மெக்கானிக்கல் இஞ்சினியராக (பழுதுபார்த்தல் பொறியியலாளராக) தான் ஆக வேண்டும் என்ற நோக்கில் குளியாப்பிட்டியில் அமைந்துள்ள வயம்ப பல்கலைக்கழகக் கல்லூரியில் பயின்று வருகின்றார். தனது பாடசாலைக் கல்வியை புத்தளம் சாஹிராக் கல்லூரியில் பயின்றதுடன், உயர்தரம் தொழிநுட்பப் பிரிவில் கற்றமை விசேடமானது.

“எமது அன்றாட வேலைகளை இலகுபடுத்துவதன் மூலம் நேரத்தையும், வீண்விரயத்தையும் குறைக்க முடியும். மேலும் நாட்டின் வளர்ச்சிக்கும் பங்களிக்க அது உதவும்” என தனது கண்டுபிடிப்புக்களுக்கான நோக்கத்தை அவர் குறிப்பிடுகின்றார்.

பல பரீட்சைகள், பரீட்சிப்புகள், ஊண், உறக்கம் தொலைத்து தொழிற்பட்ட பல கடினமான அனுபவங்கள்தான் இவ் அறுவடைகளுக்கான மூலதனம் என அவர் குறிப்பிடுவதுடன் இவற்றை சந்திக்காமல், இவற்றில் வெற்றிபெறாமல் இலக்கை அடைவது சாத்தியமற்றது என்கின்றார். அதுமட்டுமன்றி, “புத்தாக்கம் ஒன்றை மேற்கொள்ளும்போது, பலரின் பார்வைக் கோணங்களில் இருந்து ஒத்துணர்வால் சிந்திக்க வேண்டும். அப்போதுதான் முழுமையான வெற்றி கிட்டும். உதாரணமாக, கண் பார்வை அற்ற ஒருவரின் மனோ நிலையில் இருந்து யோசித்தால் மட்டுமே அவருடைய பிரச்சினை எமக்குப் புரியும். இதே சிந்தனையுடன் பயணிப்பதே ஒரு கண்டுபிடிப்பை மேற்கொள்ள முனையும் புதிய நபருக்கான எனது அறிவுரை” என கூறுகின்றார் இஸ்பாக்.

சமூகத்தில் காணப்படும் பரிதாபத்துக்குரிய வலது குறைந்தோர் குறித்து தான் அதிகம் கரிசனை செலுத்துவதாக குறிப்பிடுகின்றார் இஸ்பாக். தனது அடுத்த இலக்குகள் குறித்து அவர் குறிப்பிடுகையில் வலது குறைந்தோரை சுயாதீனமாக செயற்பட வைப்பதற்கான புத்தாக்கங்கள் மேற்கொள்வது தனதும், இதர கண்டுபிடிப்பாளர்களதும் கடமை என்பதால் அது தொடர்பில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.

மாதாந்தம் கொழும்பில் நடைபெறும் கண்டுபிடிப்பாளர் கமிஷனின் கூட்டங்களுக்கு சமூகமளிப்பதன் மூலம் தனது புத்தாக்க திறனை அவர் பட்டை தீட்டி வருவதுடன், இறைவனின் அருளாலும், பெற்றோர், ஆசிரியர்களின் வழிகாட்டலாலும் தான் பெற்ற கண்டுபிடிப்பு ஆற்றலை வளர்ந்துவரும் மாணவர்களுக்கு ஊட்டுவதற்கான செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றார். குறிப்பாக, புத்தளத்தில் ஸாஹிராக் கல்லூரி, பாத்திமா கல்லூரி, மணல்குன்று முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆகியவற்றிலும் தனது திறன் சார்ந்த அனுபவ பகிரளையும் பயிற்சியையும் வழங்கியுள்ளார். மட்டுமன்றி, தனியார் கல்வி நிலையங்களுக்கு சென்று பயிற்சிகளை வழங்கி வருகின்றார்.

அத்தோடு நின்றுவிடாமல் இன்று சிறுபான்மை சமூகங்கள் அச்ச சூழலில் எதிர்நோக்கி வரும் பாதுகாப்புசார்ந்த தேவைகளுக்கு தீர்வுகளை இவர் முன்வைக்கினார். அதாவது, வதிவிட மற்றும் சொத்து பாதுகாப்பு சமிக்ஞை (Home and Property Security Alarm System), அறிவார்ந்த ஸ்மார்ட் வீட்டு பொறிமுறை (Smart Home Intelligent System), இலத்திரனியல் பொறிமுறை மூலமான பிரச்சினை தீர்த்தல் (Problems Solving by Using Electronic System). இவற்றை தனது பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு சேவை அடிப்படையிலும், தன்னார்வ தொழிலாகவும் தற்போது மேற்கொண்டு வருகின்றார் இஸ்பாக். இளம் கண்டுபிடிப்பாளர் இஸ்பாக்கின் தேசிய கண்டுபிடிப்பாளர் அடையாள அட்டை இலக்கம் 754294462150001. தொடர்பிலக்கங்கள் : 0719399814 / 0758680164

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here