"பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சகல சலுகைகளையும் மக்களின் நன்மைகளுக்காகவே அர்ப்பணிப்போம்": பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்

0
0

“மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றப் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் சம்பளம் உள்ளிட்ட சகல வரப்பிரசாதங்களையும் மக்கள் பயன்பெறும் விதமாக பொது நலன்களுக்கே அர்பணிப்போம்” என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட 2ம் இலக்க வேட்பாளருமான பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
காத்தான்குடியில் மௌலான கபுறடி வீதியில் இடம்பெற்ற பிரச்சார நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றும்போது,
“பாராளுமன்ற உறுப்பினர்களாக வருபவர்களுக்கு மக்களின் வரிப்பணத்திலுருந்து ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகின்றன. எந்த உழைப்பும் இல்லாத அதிகூடிய சம்பளம், ஆடம்பர வாழ்க்கை, ஆடம்பர வாகனக் கோட்டா, வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் சமூக அந்தஸ்தும் கௌரவமும் என பல வகையான வரபிரசாதங்களையும் சலுகைகளையும் அனுபவிக்கின்றனர். பெரும்பாலானவர்கள் இவ்வாறான சலுகைகளுக்காகவே பாராளுமன்றம் செல்வதற்கு ஆசைப் பட்டு போட்டி போடுகின்றனர். இவ்வளவு வசதிகள் வாய்ப்புக்களையும் பெற்றுக்கொண்ட அரசியல்வாதிகள், மக்கள் அவலங்களுக்கு உள்ளாகும்போதும் வறுமையில் வாடுகின்றபோதும் அவர்களைக் கண்டுகொள்ளாத நிலையே காணப்படுகின்றது.
உதாரணமாக ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான வாகன கோட்டா வழங்கப்படுகின்றது. மக்கள் வழங்கும் ஆணையின் மூலமாகவே இத்தனை இலாபம் கிடைக்கிறது என்பதனை எந்தவொரு அரசியல்வாதியும் வெளியே கூறுவதுமில்லை. மக்களும் இதனை அறிந்துகொள்வதுமில்லை. ஆனால் இதுவும் கூட மக்களின் நன்மைக்காகவே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் நிலைப்பாடாகும்.
எதிர்வரும் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் பதவி எமக்குக் கிடைத்தால் அதன் மூலம் எமக்கு கிடைக்கும் எந்த சலுகைகளையும் நாம் எமக்காக எடுத்துக் கொள்ள மாட்டோம். அவற்றை பொது மக்களுக்கே வழங்கி விடுவோம். சம்பளம் உட்பட அனைத்து கொடுப்பனவுகளையும் மக்களின் நன்மைக்காகவே செலவிடுவோம். அந்த இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான வாகனக் கோட்டவினை பயன்படுத்தி, இறைவனின் உதவியுடன் பின்தங்கிய கிராமங்களுக்கு போக்குவரத்துக்கான வாகன வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கு நாம் திட்டமிட்டிருக்கிறோம்.
பாராளுமன்றம் செல்வது என்பது இன்று தன்நபர் பிழைப்பு நடாத்தும் ஒரு இலாபகரமான தொழிலாக மாறியிருக்கின்றது. ஒன்றுமில்லாதவன் ஒரு தொழிலுமில்லாத நிலையில் பாராளுமன்றம் சென்று, ஒரு சில வருடங்களின் பின்னர் காணிகளும் சொத்துக்களும் தொழிற்சாலைகளும் அவனுக்கு எப்படி வந்தது என்பதை பொதுமக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தனது சொந்த வாழ்வில் ஆயிரம் ரூபாய் அன்பளிப்புச் செய்ய வழியில்லாதவர் பாராளுமன்றம் சென்றதன் பின் வாக்குக் கேட்பதற்காக ஐயாயிரம் தொடக்கம் ஐம்பது ஆயிரம் வரை இலஞ்சம் கொடுக்கிறார் என்றால் குறுகிய காலத்திற்குள் இந்த நிலை எப்படி ஏற்பட்டது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.” என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here