பின்நோக்கித்தண்டு வலிக்கும் நண்டு மனப்பாங்கு

0
0

அபூ ஷாமில்

ஒவ்வொரு சமூகத்தையும் பிரதிபலிப்பதான விலங்கினமொன்றை அடையா ளப்படுத்தும் வகையிலான ஒரு கண்காட்சி நாட்டிலே நடந்ததாம். சிங்களவர் தம்மில் நன்றியுணர்வு மிகைத்திருப்பதை வெளிக்காட்டும் வகையில் நாயை காட்சிப்படுத்தியிருந்தார்களாம். பூஜை செய்து வழிபட்டு விழா எடுக்கும் அளவுக்கு தமது பாரம்பரியத்துடன் ஒன்றித்துப்போன மாட்டை தமிழர்கள் தமது அடையாளமாக காட்சிக்கு வைத்திருந்தார்களாம். முஸ்லிம்கள் தமது அடையாளமாக ஒரு திறந்த போத்தலில் இரண்டு நண்டுகளை வைத்திருந்தார்களாம். நண்டு உங்களுக்கு எப்படிப் பொருந்துகிறது, ஏன் திறந்து வைத்திருக்கிறீர்கள், அவை மேலே ஏறி தப்பிப்பிழைக்காதா என பலரும் பலவாறு கேட்டார்களாம். எங்களது சமூகம் ஒரு திறந்த வெட்ட வெளியில் அடை பட்டிருக்கிறது. இதிலிருந்து யாராவது மேலே செல்ல முயற்சித்தால் அடுத்தவர் அவரை இழுத்துக் கீழே போட்டுவிடுவார். இந்த நண்டுகள் தான் எமது சமூகத்தைப் பிரதிபலிக்கின்ற அடையாளம் என்று முஸ்லிம் தரப்பிலிருந்து விளக்கம் சொல்லப்பட்டதாம்.

 

இந்தக் கதையை பலரும் பலவாறு பலஇடங்களில் எடுத்தாண்டாலும் முஸ்லிம் சமூகத்துக்கு ஏனோ இது மிகவும் பொருத்தமானதாகப்படுகிறது. திறந்து வைக்கப்பட்டுள்ள ஒரு பரந்த வெளியில் எங்களை நாங்களே தடைகள் போட்டு அடைத்து வைத்துக் கொண்டு மீள முடியாமல் தவிக்கிறோம்.

கல்வியிலும் பொருளாதாரத்திலும் பண்பாட்டிலுமான வீழ்ச்சிகளிலிருந்து தடைகளைத் தாண்டி மீண்டு வருவதற்கான தேவை இப்பொழுது சமூகத்தில் பரவலாக உணரப்பட்டுள்ளது. இதற்கான முயற்சிகளும் பல கோணங்களிலிருந்தும் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்குத் தேவையான எல்லா வளங்களும் சமூகத்துக்குள்ளால் தாராளமாக விரவிக்கிடக்கின்றன. இத்தனையும் இருந்தும் சமூகத்தில் இருக்கின்ற நண்டுக்குணம் தான் எம்மை முன்னேற விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது.

பல்வேறு முகாம்களாக சமூகம் பிரிந்து செயற்படுவதும் இவை ஒவ்வொன்றும் தாமே ஹீரோக்களாகத் திகழ வேண்டும் எனக் கருதுவதும் இந்த நண்டுக்குணத்தின் வெளிப்பாடாக விளங்குகின்றன. பொருளாதார முன்னேற்றத்துக்கான வழிகாட்டல் வழங்கும் நிகழ்ச்சிகளை யாராவது நடத்தினால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விடாமல் சில நண்டுகள் பின்நோக்கி இழுக்கின்றன. அந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று அதன் மூலம் அதனை நடத்தியவர்கள் சமூகத்தில் இடம் பிடித்து விடக் கூடாதே என்கின்ற ஆதங்கம் தான் அவர்களை இவ்வாறு செயற்படத் தூண்டுகிறது.

மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சிகள் தற்பொழுது பலராலும் பரவலாக நடத்தப்பட்டு வருகின்றன. அதனை நடத்தும் குறித்த முகாம் சார்ந்தவர்களே அதனால் அதிகம் பயனடைகிறார்கள். ஏனையோர் தமது பிள்ளைகளை அங்கு அனுப்பினால் குறித்த நிறுவனம் பலப்பட்டு விடும், பின்னர் அவர்களது செல்வாக்கு சமூகத்தில் மிகைத்து விடும் என்கின்ற அச்சத்தினால் தமது பிள்ளைகளின் முன்னேற்றத்துக்கான வழிகாட்டல் நிகழ்ச்சிகளையே புறக்கணித்து விடுகிறார்கள்.

சிறந்த குடும்பங்களை கட்டியெழுப்புவதற்கான வழிகாட்டல் நிகழ்ச்சிகள் ஆங்காங்கே நடக்கின்றன. மாணவர்களின் மனோதிடத்தை வளர்ப்பதற்கான கருத்தரங்குகள் மாணவர்களுக்கு வேறாகவும் பெற்றோருக்கு வேறாகவும் வள வாளர்களினால் நடத்தப்படுகின்றன. உளவியல்துறை சார்ந்தவர்களின் கருத்தரங்குகளும் பயிற்சிகளும் ஏராளமாக நடக்கின்றன. சாதாரணதர உயர்தர பரீட்சைகளின் பின்னர் மாணவர்களின் கற்கைத் துறையைத் தெரிவு செய்வதற்கான வழிகாட்டல்கள் பாசறைகள் மாணவர் அமைப்புக்களினால் நடத்தப்படுகின்றன. உலமாக்களின் தரத்தை மேம்படுத்துவதற்கான செயற்திட்டங்கள், ஆசிரியர்களின் முன்னேற்றத்துக்கான செயற்பாடுகள் என சமூகத்தின் விடிவுக்கான நிகழ்ச்சிகள் ஏனைய சமூகங்கள் பார்த்துப் பொறாமைப்படுமளவுக்கு எமக்குள்ளால் தாராளமாக நடக்கின்றன.

இவற்றினால் பயன்பெறுவோர்களின் எண்ணிக்கையை எடுத்துப் பார்த்தால் ஆச்சரியக் குறிதான் விடையாகக் கிடைக்கிறது. மிகவும் சொற்பமான தொகையினரே இவற்றில் பங்கெடுக்கின்றார்கள். சமூகத்துக்காக நடக்கின்ற நிகழ்ச்சிகளை முகாம்களுக்கான நிகழ்ச்சிகளாக எடை போட்டு அவை சிறப்பாக நடக்காமல் முட்டுக்கட்டை போடுவதுதான் இதற்கான பிரதானமான காரணம். கடைசியில் தாங்களும் எதுவும் செய்யாமல் அடுத்தவர்களது நிகழ்ச்சிகளிலும் பங்குபெறச் செய்யாமல் சமூகத்தை கீழ்நோக்கி இழுத்துப் போடுகிற நண்டுச் செயற்பாட்டினால் சமூகத்தின் முன்னேற்றம் தடைப்படுகிறது.

இந்த மனோபாவம் சமூகப் பொது விவகாரங்களிலும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளிலும் வியாபிக்கும் பொழுது நிலைமை இன்னும் மோசம டைகிறது. இவர்கள் இரத்ததான முகாம் நடத்தினால் அவர்கள் இரத்ததானம் செய்வதில்லை. அவர்கள் சிரமதானம் நடத்தினால் இவர்கள் பங்குகொள்வதில்லை. சிலர் டெங்கு ஒழிப்பில் ஈடுபட்டால் பலர் ஒத்துழைப்பதில்லை என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இந்தத் தீவிரம் வளர்ந்து சென்று “நல்ல விடயங்களிலும் தக்வாவிலும் இணைந்து செயற்படுங்கள்” என்ற அல் லாஹ்வின் கட்டளையும் புறந்தள்ளப் படுகிறது.

இப்படி எங்களை நாங்களே புறக்கணித்துக் கொள்வதனால் நாங்கள் முன்னேறப் போவதுமில்லை. யாரும் ஹீரோக்களாகப் போவதுமில்லை. இந்த மனப்பாங்கு இருக்கும்வரை எமது எந்தநிறு வனமும் பலம்பெறப் போவதில்லை. சமூகத்துக்குக் கிடைக்க வேண்டிய நன்மைகள் கிடைக்கப் போவதுமில்லை. செலவுகள் அதிகரிப்பதும் முயற்சிகளும் வளங்களும் விரயமாவதும் இதனால் விளைவுகள் தாமதமாவதையும் தவிர வேறெதுவும் எஞ்சப்போவதில்லை. இந்த நண்டுக்குணத்தை மாற்றாதவரை எம்மை வீழ்த்துவதற்கு வேறு சக்திகள் தேவைப்படப் போவதுமில்லை. சமூகத்தின் நன்மைக்காக யார் எதனைச் செய்தாலும் அவர்களைப் பலப்படுத்துகின்ற, அவர்களைத் தூக்கி விடுகின்ற அளவுக்கு முஸ்லிம் சமூகத்தை முன்னோக்கி நகர்த்திச் செல்வதுதான் இந்த நிலைமையில் தலைமைகளின் தலையாய கடமையாக இருக்கப்போகிறது. .

நண்டு தொடர்பாக சிங்களத்திலும் ஒரு பொன்மொழி இருக்கிறது. முன்னால் செல்கின்ற நண்டு பின்னால் வருகின்ற நண்டுகளைப் பார்த்து கோணலா காமல் நேராய்ப்போ என்று சொல்லுமாம். இதுவும் நமக்குப் பொருந்துவது போல்தான் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here