பிரதான கட்சிகள் எந்த வேட்பாளரை நிறுத்தினாலும் நாட்டிற்கு எவ்விதப் பலனும் கிட்டப்போவதில்லை

0
0

அநுரகுமார திசாநாயக்க – ஜேவிபி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளர்

நேர்காணல்: ஹெட்டி ரம்ஸி

  • தேசிய மக்கள் சக்தியை உருவாக்குவதற்கு அடிப்படையாய் அமைந்த காரணிகளை சற்று தெளிவுபடுத்த முடியுமா?

முதலாவது எமது நாடு 71 வருடங்களாகப் பின்பற்றி வருகின்ற சமூக, பொருளாதார, அரசியல் கொள்கைகள் எமது நாட்டை அழிவின் விளிம்பிற்குத் தள்ளிவிட்டுள்ளது. இதனால் இக் கொள்கையை மாற்றியமைப்பது மிக முக்கிய விடயமாக மாறியிருக்கிறது. எல்லாத் துறைகளிலும் இதனை மாற்றியமைக்க வேண்டும் என்ற கருத்தில் மக்கள் உள்ளனர். இதற்காக வேண்டி அனைவருக்கும் ஒன்றுசேர முடியுமான நீண்ட கால நோக்கம் கொண்ட அமைப்பொன்று தேவைப்படுகிறது. இதற்கானதொரு அமைப்பாகவே நாம் தேசிய மக்கள் சக்தியை கட்டியெழுப்பினோம். எமது நாட்டின் இடதுசாரி அமைப்புக்கள், ஜனநாயக அமைப்புக்கள், சிவில் சமூக அமைப்புக்கள் அனைத்தினதும் மற்றும் பொது மக்களினதும் பிரார்த்தனையாக இருப்பது 71  வருட கால ஆட்சி முறையை மாற்றியமைப்பதாகும். எனவே இதற்கான மக்கள் சக்தியை அணி திரட்ட வேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டது.

  • தேசிய மக்கள் சக்தியை இன்னும் பலப்படுத்துவதற்கு நீங்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் என்ன?

குறிப்பாக நாம் இன்னுமுள்ள சிவில் சமூக அமைப்புகள், அரசியல் அமைப்புக்களுடன் கலந்துரையாடல்களை நடாத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம். அதுபோன்று நான் நினைக்கிறேன் அரசியல் தலைவர்களுடன் அரசியல் மேடைகளில் ஏறி கைகளை கட்டிக்கொண்டு ‘நாம் நண்பர்கள், நாம் நண்பர்கள்’என்று கூறுவதால் மக்கள் அமைப்பு உருவாகப்போவதில்லை. பொது மக்களை இதில் பங்குகொள்ளச் செய்வதன் மூலம் மாத்திரமே ஒரு பலமான மக்கள் சக்தியைக் கட்டியெழுப்ப முடிகின்றது. அதனால் வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் தெற்கு போன்ற சகல பகுதிகளிலும் உள்ள மக்களை இவ்வமைப்பில் பங்கு கொள்ளச் செய்வதே எமது நோக்கமாகும்.

மக்களை ஒன்று திரட்டாமல் பெரிய கூட்டணிகளை உருவாக்குவதில் எவ்விதப் பலனுமில்லை. எனவே இவ்வமைப்பை சூழ மக்களை இன்னு மின்னும் அணிதிரட்டும் நடவடிக்கைகளை தற்பொழுது நாம் பரவலாக முன்னெடுத்து வருகிறோம்.

  • இலங்கை அரசியலில் பெரும்பான்மை இனத்தின் வாக்குகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் போக்கு நடைமுறையில் உள்ளது. இவ்வடிப்படையில் பெரும்பான்மையின் வாக்குகளைப் பெறுவதற்கு தேசிய மக்கள் சக்தி முன்வைத்திருக்கும் திட்டங்கள் குறித்து சற்று தெளிவுபடுத்த முடியுமா?

தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களை தனித்தனியாக வெற்றிகொள்ளும் போராட்டம் எம்மிடம் கிடையாது. தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களாகிய நாம் எல்லோரும் இப்பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்திருக்கிறோம். தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களைச் சேர்ந்த பெரும்பாலான விவசாயிகள் தங்களது விவசாய உற்பத்திகளை (கிழங்கு உற்பத்தி) சரியான விலைக்கு விற்றுக் கொள்ள முடியாத பிரச்சினைக்கு முகம்கொடுத்து வருகின்றனர். வாழ்க்கையை முன்னெடுப்பதில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளனர். எல்லாச் சமூகங்களையும் சேர்ந்த மக்களது சுகாதார உரிமைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இன்று எல்லா மக்களும் கல்விக்காக வேண்டி அதிக பணத்தைச் செலவிட நேர்ந்துள்ளது. பல்வேறு நிவாரணங்களும் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் இந்நாட்டில் அநேகவிதமான பிரச்சினைகளை எதிர்நோக்கிக்கொண்டுள்ள மக்களுக்கு இதை விட நல்லதொரு சமூக வாழ்க்கையை பெற்றுக்கொடுப்பதே எமது வேலைத் திட்டத்தின் நோக்கமாகும். அத்துடன் எமது நாட்டிலுள்ள இதர சமூகங்களும் ஏதேனும் பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளார்கள் எனில் அப்பிரச்சினைகளையும் தீர்த்து அவர்களுக்கு நீதியான முறையில் வாழ்வதற்கான உரிமையை பெற்றுக்கொடுப்பதும் எமது குறிக்கோளாகும்.

அதுவல்லாமல் தேசிய மக்கள் சக்தி தனியானதொரு சமூகத்தை மாத்திரம் குறிக்கோளாகக் கொண்டு செயற்படும் அமைப்பொன்றல்ல. இன்று எமது நாட்டில் பல அமைப்புக்கள் தனித்துவமான அரசியல் சுற்றுநிருபங்களை கையில் வைத்துக் கொண்டு செயற்படுகின்றன. முஸ்லிம் சமூகத்திற்குள் முஸ்லிம் இனவாத அரசியலில் ஈடுபடும் அரசியல் கட்சிகள் உள்ளன.

அதேபோன்று சிங்கள சமூகத்திலும் சிங்கள இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சிகளும் இயங்கி வருகின்றன. தமிழ் சமூகத்திலும் தமிழ் இனவாதக் கட்சிகள் செயற்பட்டு வருகின்றன. இதனால் இம்மக்களை தனித் தனியாக விளிப்பதற்கு இனவாத அரசியல்வாதிகள் காணப்படுகின்றனர். ஆனால் தேசிய மக்கள் சக்தி என்பது இம்மூன்று சமுதாயங்களையும் பற்றிப் பேசுகின்ற ஒரே மக்கள் அமைப்பாகக் காணப்படுகின்றது.

  • இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்தல் தொடர்பாக நீங்கள் முன்வைக்கும் திட்டங்கள் என்ன?

நாட்டின் பொருளாதாரம் ஐம்பெரும் நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்துள்ளது. ஒன்று கடன் நெருக்கடி, இரண்டாவது ஏற்றுமதி இறக்குமதிச் சந்தை நெருக்கடி, மூன்றாவது உற்பத்திகளின் வீழ்ச்சி, நான்காவது, அரசின் வறுமானம் குறைந் திருப்பது, ஐந்தாவது, வருமானம் பிரிந்து செல்வதில் காணப்படும் பிரச்சினை. இதனால் இவ் ஐம்பெரும் நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கான பொருளாதாரத் திட்டமே எமக்கு அவசியப்படுகின்றது.

இங்கு கடன் நெருக்கடியை நோக்கும்போது, கடன்பெறுதல் என்பது கூடாத விடயமொன்றல்ல. உலக நாடுகள் இரண்டு குறிக்கோள்களின் அடிப்படையில் கடன் பெறுகின்றன. ஒன்று, எமக்கு அவசியமான முதலீட்டுத் தேவைகளை நிறைவுசெய்துகொள்வதற்கு, இரண்டு எமக்குத் தேவையான தொழில்நுட்பத்தைப் பெற்றுக் கொள்வதற்கு. நாம் பெற்றுக்கொண்ட கடனுக்கு உரிய சொத்துக்கள் உருவாகாமையே கடன் நெருக்கடிக்கு பிரதான காரணமாகும். தேவையான வளங்களை நாம் உருவாக்கவில்லை. வீண்விரயமான, தூரநோக்கற்ற திட்டங்களுக்கு கடன் தொகைகள் பயன்படுத்தப்பட்டமையே அது பெரும் சுமையாக மாறுவதற்கு காரணமாய் அமைந்திருக்கிறது.

இதனால் இக்கடன் பொறியிலிருந்து விடுதலையாவதற்கு சில வழிமுறைகள் உள்ளன. அதில் ஒரு விடயமாக கடன் பெற்று நன்கு பிரயோசமான இலாபங்களைப் பெறக்கூடிய திட்டங்களுக்குப் பயன்படுத்த வேண்டும். அதன் மூலமே பழைய கடன்களையும் புதிய கடன்களையும் அடைக்க முடிகிறது. இதனால் யாராவது நாளைய தினம் ஆட்சிக்கு வந்ததன் பிறகு கடன் பெறுவதில்லை எனக் கூறினால் அவ்வாறு கடன் பெறாமல் முன்னகர முடியாத நிலைக்கு எமது நாடு தள்ளப்பட்டுள்ளது. ஆனால் நல்ல பிரயோசன மிக்க திட்டங்களுக்குக் கடன் தொகைகள் பயன்படுத்தப்படுமாக இருந்தால் மாத்திரமே இந்தக் கடன் நெருக்கடியிலிருந்து கரைசேர முடியும். எனவே கடனிலிருந்து விடுதலையாவதற்கு நீண்ட காலத் திட்டமொன்று எமக்குத் தேவைப்படுகின்றது. அந்தத் திட்டத்தையே நாம் தேசிய மக்கள் சக்திக்கூடாக முன்வைத்திருக்கிறோம்.

  • தமிழ் மக்கள் முகம்கொடுத்துள்ள அரசியல் பிரச்சினைக்கு வழங்கக் கூடிய நிரந்தரத் தீர்வு எதுவாக இருக்கும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

எமது நாட்டிலுள்ள சகல மக்களினதும் அடிப்படையான பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என நாம் நம்புகிறோம். அவர்களது பொருளா தாரம் மற்றும் சமூக வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும். சகல இன மக்களும் தாம் பேசுகின்ற மொழி, தாம் பின்பற்றுகின்ற சமயம், தமது கலாசார அடையாளங்களுடன் கூடியதான சமஉரிமைகளுடன் வாழக் கூடிய சூழலை உருவாக்க வேண்டும். இதற்குள்ளாலேயே நாம் வடக்கின் பிரச்சினையையும் நோக்க வேண்டும். சகல இனமக்களும் அரசியலில் பங் காளர்களாக மாற வேண்டும். அப்போதே வடக்கின் பிரச்சினை எமது பிரச்சினையாகத் தென்படும். அதுவல்லாமல் ஏதேனும் ஒரு இனத்தை அதிகாரத்திலிருந்து தூரமாக்கின்ற ஆட்சியொன்று எமக்குத் தேவையில்லை. அதனால் இச்சகல மக்களினதும் பங்குபற்றலுடன் ஆட்சி முறையொன்றை உருவாக்குவது எப்படி என்பதே எமது முதன்மையான விடயமாகும். எல்லா மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடியதொரு அரசியல் தீர்வை வழங்குவதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம். அது என்னாலோ அல்லது இன்னுமொரு அமைப்பினால் தயாரிக்கப்பட்ட தீர்வொன்றாக அல்லாமல் மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்படும் கலந்துரையாடலின் மூலம் இதற்கான தீர்வை பெற்றுக் கொடுக்க முடியும் என நான் நினைக்கிறேன்.

  • அரபு மத்ரசாக்களுக்கான மாணவர்களை 16 வயதில் இணைத்துக்கொள்ள வேண் டும், குறைந்த வயது திருமணம் மற்றும் LGBT தொடர்பாக ஜேவிபி முன்வைத்துள்ள சில கருத்துக்கள் இன்று சமூக வலைத் தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகின்றன.  தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்கும் முஸ்லிம்களுக்கு எதிராக இருக்கும் முஸ்லிம்கள் இந்தக் குற்றச்சாட் டுக்களை முன்வைக்கின்றனர். இது தொடர்பாக நீங் கள் அவர்களுக்கு வழங்கும் பதில் என்ன?

நாட்டில் ஒரு பொதுவான சட்டமுள்ளது. அது போன்று அந்தந்த நாடுகளின் கலாசாரங்களுக்கு அமைவான பண்பாடுகளும் பழக்க வழக்கங்களும் சட்டங்களும் உள்ளன. எனினும் எமது நாடு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றால் எமக்கு மத்தியில் வேறுபாடுகள், வித்தியாசங்களை ஏற்படுத்துவதன் மூலமல்ல. ஒன்றுபட்டு எல்லோரையும் அரவணைத்துச் செல்வதன் மூலமாகும்.

எல்லா சமயங்களுக்கும் அந்தந்த சமயங்களைப் பின்பற்றுபவர்களுக்கு அந்தச் சமயத்தை பற்றி சரியான முறையில் போதிக்கின்ற உரிமையுள்ளது. இம்மதங்கள் குறித்து சரியான விளக்கங்களை அம்மக்களுக்கு வழக்க முடியாமல் போயிருப்பதன் மூலம் சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகள் தோற்றம் பெற்றிருக்கிறது. நாடெனும் வகையில் ஒன்றாக நாம் முன்னோக்கிச் செல்கையில் எமக்கு மத்தியில் பொதுவான சட்டம் காணப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பெரும் பாலானவர்கள் உள்ளனர் என்பதையும் நாம் மறுக்கக்கூடாது.

  • 2015 ஜனவரி 8ஆம் திகதி இந்நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு கடந்த ராஜபக்ஷ ஆட்சியை தோற்கடித்தது போன்று தேசிய மக்கள் சக்தியாலும் ஒரு மாற்றத்தை இம்முறை ஏற்படுத்த முடியும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா?

நாம் வெற்றியை எதிர்பார்க்கின்றோம். ஏனெனில் பிரதான கட்சிகளின் ஆளுகையின் கீழ் இந் நாடும் மக்களும் களைப்புற்றுள்ளது. இவர்களின் கீழால் இந்நாட்டை தொடர்ந்தும் ஒப்படைக்க முடியாது. வெற்றியின் எதிர்பார்ப்பில் நாம் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் குதித்துள்ளோம். தொடர்ந்தும் இவ்வழிவுகரமான பாதையில் செல்வதற்குப் பதிலாக புதிய பாதையை தெரிவுசெய்யு மாறும், அதற்காக எமது வெற்றிக்கு பங்களிக்கு மாறும், எம்முடன் கைகோர்க்குமாறும் நாம் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

எமது முன்னோர்கள் எடுத்த பிழையான தீர்மானங்களின் காரணமாக இந்நாடு இத்தகைய அழிவு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. எனவே இளைஞர்களாகிய நீங்கள் எமது மூதாதையர்கள் மேற்கொண்ட பிழையான அரசியல் முடிவுகளுக்குப் பதிலாக புதிய முடிவுகளுக்கு வர வேண்டும் என கூறுகிறோம். அத்தகைய எதிர்பார்ப்புடனும், நல்லெண்ணத்துடனுமேயே நாம் இம்முறை தேர்தலில் போட்டியிடுகிறோம்.

  • பிரதான கட்சிகள் இரண்டும் முன்னிறுத்து கின்ற வேட்பாளர்கள் உங்களுக்குச் சவாலாக இருப்பார்கள் என்று நீங்கள் கருதுகிறீர்களா?

இவர்கள் நாடு எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிக்கான தீர்வுகளல்ல. இவர்கள் நெருக்கடியின் பெறுபேறுகளாகும். அவர்களாகவே இந்நாட்டின் பாதுகாப்பை நெருக்கடிக்குள் தள்ளிவிட்டு அவர்களாகவே இதற்குத் தீர்வு வழங்க முன்வந்துள்ளனர். இவர்களாகவே இந்நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியுறச் செய்து அவர்களாகவே இதற்குத் தீர்வு காண்பதற்கு தலைவர்களை முன்னிறுத்துகின்றனர். இதனால் இவர்கள் நெருக்கடிகளுக்கான தீர்வுகளல்ல. நெருக்கடிகளால் உருவான விளைச்சல்களாகும். அவர்களிடம் தொடர்ந்தும் தீர்வுகளை எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை. எனவே பிரதான கட்சிகள் எந்த வேட்பாளரை நிறுத்தினாலும் நாட்டிற்கு எவ்விதப் பலனும் கிட்டப்போவதில்லை.

இதுபோன்று எத்தனையோ பேரை நாம் ஆட்சிக்குக் கொண்டு வந்திருக்கிறோம். கணவனை ஆட்சியில் அமர்த்தியிருக்கிறோம், மனைவியை அமர்த்தியிருக்கிறோம். மைத்துனரை ஆட்சியில் அமர்த்தியிருக்கிறோம். மகனை கொண்டு வந்திருக்கிறோம். தொடர்ந்தும் முன்னாள் ஜனாதிபதியின் சகோதரரை அல்லது முன்னாள் ஜனாதிபதியொருவரின் மகளை ஆட்சிக்கு கொண்டு வருவதில் எவ்வித பிரயோனசமும் கிட்டப்போவதில்லை. வரலாற்றில் எதிர்கொண்ட இக்கசப்பான அனுபவங்கள் மக்களுக்கு இன்னும் புளித்துப்போயுள்ளன. இவற்றுக்கு எதிரான பரந்ததொரு மக்கள் சக்தியை ஒன்றிணைப்பதே காலத்தின் தேவையாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here