பீஜேயின் இலங்கை வருகை குறித்த பூதாகரமான வாதப் பிரதிவாதங்கள் கவலை தருகின்றது

0
0

தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்தின் ஸ்தாபகர் மௌலவி ஜெய்னுலாப்தீன் அவர்களது இலங்கை வருகை குறித்து ஊடகங்களில் பூதாகரமாக வெளியிடப்படுகின்ற ஆதரவானதும் எதிரானதுமான வாதப் பிரதிவாதங்கள் கவலை தருகின்றது – 

ஷெய்க் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

தமிழ் நாடு தவ்ஹீது ஜமாத்தின் ஸ்தாபகர் மௌலவி ஜெய்னுலாப்தீன் அவர்களது இலங்கை வருகை குறித்து ஊடகங்களில் பூதாகரமாக வெளியிடப்படுகின்ற ஆதரவானதும் எதிரானதுமான வாதப் பிரதிவாதங்கள் கவலை தருகின்றது.
தனிப்பட்ட முறையில் எனக்கு உடன்பாடுகள் இல்லாவிட்டாலும் சர்வதேச அளவில் அஹ்லுஸ்ஸுன்னா அறிஞர்கள் மத்தியில் நிலவுகின்ற கருத்து வேறுபாடுகள் போன்றே அவரது சில நிலைப்பாடுகளையும் நான் காண்கின்றேன், அவரது சில கருத்துக்கள் மிகைப்படுத்தப்பட்ட திரிபுகளுக்கும் உள்ளாகியுள்ளன.
இலங்கையில் உள்ள பிரபலமான இஸ்லாமிய அமைப்பு ஒன்று தமது விருந்தினராக அவரை அழைத்திருக்கின்ற நிலையில் முரண்படுகின்ற முஸ்லிம் அமைப்புக்கள் சகிப்புத்தன்மையுடன் மிகவும் கண்ணியமாக நடந்து கொள்வதே சிறந்த அணுகுமுறையாகும்.

கருத்து முரண்பாடுகள் உள்ள ஒவ்வொரு ஜமாத்தினரும் அடுத்தடுத்த ஜமாஅத்தினருக்கும் வருகை தரும் அறிஞர்களுக்கும் எதிராக இவ்வாறு போர்க்கொடி தூக்கும் நிலை வரின் நாம் அனுபவிக்கின்ற பல உரிமைகளை எதிர்காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பறிகொடுக்கின்ற நிலைமையே ஏற்படும் எனபதில் சந்தேகமில்லை.
குறிப்பாக தம்மால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ஒரு நிகழ்விற்கு அழைக்கப்பட்டிருக்கின்ற விருந்தினர் வருகை தர இருக்கின்ற நிலையில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் தமது வழமையான அதி தீவிர எதிர்வினையாற்றல்களை தவிர்த்துக் கொண்டு சுமுகமாக கள நிலவரங்களை பொறுப்புணர்வுடன் கையாள்தல் கட்டாயம் என்பதனையும் வலியுறுத்த விரும்புகின்றேன்.
அவர்கள் வெளியிடவுள்ள சிங்கள மொழி பெயர்ப்பினை பெற்று அதனை வாசித்து விட்டு அகில இலங்கை ஜம்மியதுல் தமது கருத்துக்களை வெளியிட்டிருந்தால் பொருத்தமான பணியாக இருந்திருக்கும் என்பது எனது மிகத் தாழ்மையான கருத்தாகும்.
அண்மையில் காதியானி அகமதியா ஜமாத்தினர் கண்டியில் உள்ள பௌத்த பீடாதிபதியிடம் தமது சிங்கள குரான் மொழி பெயர்ப்பினை கையளித்திருக்கின்றார்கள், அது குறித்தும் உலமா சபையின் மேலான கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது.
பகிரங்கமாக வழிகேட்டில் இருக்கின்ற சக்திகளும் சியோனிச இஸ்ரேலிய சக்திகளும் அரசியல் இராஜ தந்திர பின்புலன்களோடு இந்த நாட்டில் ஊடுருவுகின்ற நெருக்கடியான இந்த காலகட்டத்தில் முஸ்லிம்களாகிய நாங்கள் மிகவும் பொறுப்புணர்வுடனும் விழிப்பாகவும் சமயோசிதமாகவும் நடந்து கொள்வது அவசியமாகும்.
எமக்குள் சகிப்புத்தன்மையையும் , உடன்பாடுகளையும், புரிந்துணர்வினையும் கட்டி எழுப்புவதற்கு பலநூறு நியாயங்கள் இருக்க நாம் முரண்படுவதற்கும் முட்டி மோதிக் கொள்வதற்கும் ஒருசில நியாயங்களை தேடிக் கொண்டிருக்கின்றோம்.
சிலர் தாம் பறிகொடுத்து பரிதவிக்கின்ற செல்வாக்கினை எந்த குறுக்கு வழியிலாவது மீண்டும் கட்டி எழுப்பிக் கொள்ளலாம் என மட்டரகமான கருத்துக்களை ஊடகங்களில் வெளியிட்டு வருகின்ற பொழுது நியாயமான கரிசனைகளும் அனாவசியமான பிணக்குகளிற்கு இட்டுச் செல்வதனை அவதானிக்க முடிகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here