புதிய அரசியலமைப்புக்கு பயப்படுகிறவர்கள் யார்?

0
0

 – கலாநிதி லக்சிறி பெர்னாண்டோ –

மக்கள் அதிகாரம் மற்றும் நீதிக்கான சமூகத்தின் தேசிய இயக்கம் (NMJS) புதன்கிழமை 18 ஜனவரி 2017 இல் கொழும்பு பொது நூலகத்தில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திற்கான கருப்பொருளின் தலையங்கத்தை நான் வெறுமனே பிரதி செய்துள்ளேன். இந்தக் கூட்டத்தில் பேச்சாளர்கள் பேசப் போவது எதுவாக இருந்தாலும், புதிய அரசியலமைப்பு பற்றி அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்கள் கிளப்பியுள்ள போலியான திருப்பங்கள் மற்றும் திருகுதாளங்கள் காரணமாக கேள்விக் களமாக மாறியுள்ள சாதாரண வெகுஜனங்களின் மனதை இந்தக் கருப்பொருளும் அதன் தலைப்பும் தீவிரமாகவும் துல்லியமாகவும் கைப்பற்றியிருக்கும். யார், ஏன் பயப்படுகிறார்கள் என்ற கேள்விகளுக்கான பதிலைத்தான் நான் இந்தக் கட்டுரையில் சொல்லப் போகிறேன்.

தொடர்ச்சியான ஆணை

இந்த நாட்டு மக்கள் 1994 தேர்தல் முதல் அவர்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு ஒரு புதிய அரசியலமைப்பு வரைவு செய்து அதனைப் பிரகடனப்படுத்துவதற்கான ஆணையை தொடர்ச்சியாக வழங்கி வந்துள்ளார்கள். அதற்கான பிரதான காரணம் தற்போதைய அரசியலமைப்பின் கீழுள்ள அதிகாரக் கட்டமைப்பில் உள்ள சர்வாதிகாரத் தன்மையே. 1994 தேர்தல்களை நாங்கள் குறிப்பிடும்போது, அதன் அர்த்தம் பாரம்பரிய இடதுசாரிக் கட்சிகள் உட்பட்ட தற்போதைய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் (UPFA) முன்னோடிகளான பொதுசன முன்னணிக்கு (PA) வழங்கிய ஆணையாகும். 2000 ஆம் ஆண்டளவில் தற்போதைய நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் முன்னோடியான ஐக்கிய தேசியக் கட்சியும் முன்வந்து ஒரு புதிய அரசியலமைப்புக்கு ஆதரவு தெரிவித்தது.

ஏனைய சிறுபான்மைக் கட்சிகளிடையே, பிரதான தமிழ் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு (TNA) மற்றும் பிரதான முஸ்லிம் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  (SLMC) என்பன பிரதானமான தங்கள் பல பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதற்காக நீண்டகாலமாக ஒரு அரசியலமைப்பு மாற்றத்துக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றன. அவர்கள் ஒரு புதிய அரசியலமைப்புக்காக ஆட்சேபணை எதுவும் தெரிவிக்கவில்லை.

எனினும், இந்த நோக்கங்களுக்கான வாக் குறுதிகள் அல்லது உறுதி மொழிகள் காரண மாக ஆகஸ்ட் 2000 இல் நாடு ஒரு புதிய அரசியலமைப்புக்கு நெருக்கமாக வந்த போதிலும் அது பூர்த்தி செய்யப்படவில்லை. இது கிட்டத்தட்ட 17 வருடங்களுக்கு முன் நடந்தது. இப்போது அந்த வரைவு மிகவும் காலாவதியான ஒன்றாகிவிட்டது.

அப்படியானால் புதிய அரசியலமைப்பை தாமதம் செய்வது எது? யுத்தம்தான் புதிய அரசியலமைப்பை தாமதிக்கச் செய்தது என  ஒருவர் வாதிடலாம். ஆனால் சில அரசியல் வாதிகளிடம் ஒரு பகுதி யுத்த மனோநிலை தங்கியிருப்பதைத் தவிர, யுத்தம் 2009 மே உடன் முடிவடைந்து விட்டது? இது 8 வருடங்களுக்கு முந்தியது.

அப்படியானால் இந்த யுத்த மனநிலை தான் புதிய அரசியலமைப்பு பற்றி சிலரை பீதியடைய வைக்கிறதா? இந்த விடயத்தில் அவர்கள் சொல்வதையும் செய்வதையும் ஆராய்ந்தால் அது ஓரளவு சாத்தியமாகும். புதிய அரசியலமைப்புக்கான ஆணை ஒரு ஒற்றை தேர்தல் மூலம் பெறப்படவில்லை. ஒரு தொகுதி தேர்தல்கள் மூலம் பெறப்பட்டது. இந்த ஆணை ஒரு ஜனாதிபதிக்கு மட்டும் வழங்கப்படவில்லை. ஆனால் முக்கியமாக பாராளுமன்றம் மற்றும் பாராளு மன்ற உறுப்பினர்களுக்கு தொடர்ச்சியாக வழங்கப்பட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக பாராளுமன்றம், பாராளுமன்ற அங்கத்தவர் கள் மற்றும் மக்கள் ஆகியோர் ஒரு பொதுசன வாக்கெடுப்பு மூலமாக ஒரு புதிய அரசியலமைப்பைக் கொண்டுவர வேண்டும்.

இதற்கு வேறு காரணங்களும் இருந்தன; இருந்து வருகின்றன. ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்குவது அல்லது அதற்காக ஒரு வரைவை மேற்கொள்வது ஒரு இலகுவான பணி அல்ல என்பதில் கேள்விக்கு இடமில்லை. மாற்றமாக ஒரு அரசியலமைப்பில் திருத்தம் செய்வது இலகுவானது. தற்போதைய அரசியலமைப்பு அதில் திருத்தம் மேற்கொள்ளும் நடைமுறையில் ஓரளவு உறுதியான ஒன்றாக உள்ளது. ஒரு புதிய அரசியலமைப்புக்கு மட்டுமன்றி அதில் அடிப்படையான திருத்தங்களுக்கு கூட, பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான் மையும் ஒரு பொதுசன வாக்கெடுப்பும் தேவைப்படுகிறது. 19 ஆவது திருத்தம் ஒட்டு மொத்தமாக ஜனாதிபதி முறையை மாற்றியமைக்க முடியாமற் போனதுக்கு இதுவும் ஒரு காரணம். ஒரு பொதுசன வாக்கெடுப்பைக் கோராமல் யாராவது அடிப்படைத் திருத்தங் களுக்கு ஆலோசனை தெரிவிப்பது மற்றவை களுக்கு மத்தியில் மிகவும் அறியாமையான செயல் என்பது உண்மை.

புது யுகமொன்றுக்கான புதியதோர் அரசியலமைப்பு

அரசியலமைப்பை உருவாக்கும் நடவடி க்கை முற்றிலும் ஜனநாயகமானதாக இருக்க வேண்டும். அதில் ஒளிவு மறைவோ அல்லது சூழ்ச்சியோ இருக்கக் கூடாது. இந்த நட வடிக்கை வெளிப்படையானதாகவும் மக்க ளுக்கு பொறுப்புக் கூறத்தக்கதாகவும் இருக்க வேண்டும். அரசியலமைப்பை உருவாக்குப வர்கள் மக்களுக்கு நேர்மையானவர்களாகவும் மற்றும் வெளிப்படையானவர்களாகவும் இருக்க வேண்டும்.

இந்த புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவது சர்வதேச சமூகத்துக்காக அல்ல. இந்த நாட்டு மக்களுக்காக. எனினும், ஒரு புதிய அரசியலமைப்பில் சர்வதேச விதிமுறைகள் நாட்டிற்கு பொருத்தமான போக்கு கள் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். புதிய அரசியலமைப்பு உருவாக்கும் நடவ டிக்கை, பொருத்தமான முறையில் கையாளப்பட்டு  தொடர்புகள் மேற்கொள்ளப்பட்டால், ஜனநாயகம் மற்றும் நல்லாட்சி பற்றி மக்களுக்கு புகட்டப்படும் நல்லதொரு கல்வி அனுபவமாகவும் இருக்கும். இது தொடர்பில் ஏராளமான அனுகூலங்களும் கிடைக்கும். இலங்கை புரட்சிகரமானதாகவும் நவீனமய மானதாகவும் மாறும்.

2015 ஜனவரியில் ஏற்பட்ட மாற்றம் அல்லது புரட்சி இப்போது பல பல பின்னடை வுகள், தடைகள் மற்றும் மாயைகளை எதிர்கொள்கிறது. பொருத்தமான ஒரு புதிய அரசியலமைப்பு சந்தேகமின்றி இந்த நடவடிக் கைகளை எதிர்கொள்ளும் புத்துணர்ச்சியை வழங்கி, திரும்பவும் ஜனநாயக நடவடிக்கை களுக்கான பாதையில் நம்மை இட்டுச் செல் லும். தற்போதுள்ள அரசியலமைப்பு சட்ட குளறுபடியான ஒன்று. தற்போது அது பயனற்ற நிலையில் இருப்பது அது மிகவும் பழமையானது என்பதால் மாத்திரமல்ல. ஆரம்பத்திலிருந்தே அது முற்றாக ஜனநாயக மானதாக இருக்கவில்லை என்பதினாலும் தான். இப்போது அது முற்றாக முரண்பாடு கள், முன்னும் பின்னும் இயற்றப்பட்ட ஏடாகூடமான திருத்தங்களை உள்ளடக்கிய தாக உள்ளது.

ஒரு புதிய அரசியலமைப்பு வேறு பல முற்போக்கான மாற்றங்களுக்கு வழி வகுப்ப துடன், வெறுமே செல்வந்தர்களுக்கு மட்டு மன்றி, வறிய மற்றும் நடுத்தர மக்களின் நலன்களுக்கான நிலையான பொருளாதார முன்னேற்றங்கள் ஏற்படவும் வழி ஏற்படுத்தும். பெரிய அளவிற்கு நீதியான பொருளா தார மற்றும் சமூக உரிமைகளை அது பிரகடனப்படுத்த முடியும். தற்போதைய அரசியலமைப்பில் அவை இடம்பெறவில்லை.

ஒரு புதிய அரசியலமைப்பால், எங்கள் வெளிநாட்டுக் கொள்கை எவரிடமோ அல்லது எந்த ஒரு அதிகார சக்தியிடமோ வெளிப்படையாகத் தங்கியிருக்காது சரியான சமநிலையில் தங்கியிருக்கும்படி கொண்டுவர முடியும். அது வெளிநாட்டுக் கொள்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும். மிகவும் முக்கியமாக  முட்டாள்தனமான  இன மோதலை அதனால் முடிவுக்கு கொண்டு வர முடியும் மற்றும் ஆகக் குறைந்தது சண்டை சச்சரவுகளை நீக்கி, அதனை அடைவ தற்கு வழி ஏற்படுத்த முடியும். இவையெல்லாம் நடப்பதற்கு ஒரு புதிய அரசியலமைப்பு உருவாக வேண்டும், மற்றும் தற்போதுள்ள அருவருப்பான அரக்கத்தனமான அரசியல மைப்புக்கு ஒட்டுப் போடும் வேலை அல்ல.

யார் பயப்படுகிறார்கள்?

சிலர் இயற்கையாகவே மாற்றங்களுக்கு பயப்படுகிறார்கள். வேறு சிலர் காலம் முழுவதும் பழமைவாதிகளாகவும் மாற்றங்க ளுக்கு உட்படுவதற்கு சோம்பேறிகளாகவும் உள்ளார்கள். இந்த சோம்பேறித்தனம் அதிகாரத்துவம் அல்லது அரசாங்க ஊழியர்களாக குறிப்பாக சட்ட நிறுவனங்களில் உயர் பதவிகளில் உள்ளவர்களிடத்தில் இலகுவில் வந்து விடும். ஒரு புதிய அரசியலமைப்புக்கு வேண்டி அவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். அவர்களுடைய திறமையின்மை அதனால் வெளிப்பட்டு விடலாம். ஒரு அரசியலமைப்பு உருவானதன் பின்னர் அவர்களுடைய பொறுப்புகள் கூட இன்னும் அதிகமாகலாம். இது வெளிப்படையாகவே சில அமைச்சர்களையும் மற்றும் அரசியல் வாதிகளையும் செல்வாக்கிற்கு உட்படுத்தும் ஒரு குழுவினர் ஆவர்.

மற்றும் சிலர் இருக்கிறார்கள்; அவர்கள் ஜனநாயக மாற்றத்தைக் கண்டு அஞ்சுபவர்கள். ஏனென்றால், நேரடியாகவே அதிகாரம் மற்றும் சலுகைகளை அவர்கள் இழக்க வேண்டியிருக்கும். இவர்கள் ஒட்டுண்ணி அரசியல்வாதிகள். ஆகவே ஒட்டு வேலைகளை மேற்கொள்வதுதான் அவர்களது சிறந்த தெரிவாக உள்ளது. அவர்களால் இப்போது எந்த விதமான மாற்றத்தையும் முற்றாக எதிர்க்க முடியாது. அவர்கள் இப்போது புதிய அரசியலமைப்புக்கு மாறாக திருத்தங்களுக் காக வாதாடுகிறார்கள். 2000 ஆம் ஆண்டில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் முன்னேற்றம் காண முடியாமல் போனதுக்கு இதுதான் சரியான காரணம்.

சில வட்டாரங்கள் தெரிவிப்பதன்படி,  அந்த முயற்சி முடங்கியதுக்கு காரணம் அந்த வருடத்தில் கூட அப்போது ஆட்சியில் இரு ந்த ஜனாதிபதி தனது அதிகாரத்தை மேலும்  சிறிது காலத்துக்கு வைத்திருக்க விரும்பியது தான் எனத் தெரிகிறது.

அதிகாரத்தை விட்டுவிடத் தயக்கம் காட்டியதுதான் இப்பொழுது பிரபலமற்றிருக்கும் மஹிந்த ராஜபக்ஷ ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு முயற்சி எதுவும் செய்யாததற்கான முக்கிய காரணம். இல்லாவிட்டால் அதற்கான வாக்குறுதி முதலில் 2005 இல் வழங்கப்பட்டது. 2009 க்கு முதல் அதை தவிர்ப்பதற்கு யுத்தம் அவரது எளிதான சமாதானமாக இருந்தது. இல்லை யெனில், மனித உரிமைகளுக்காக அவர் போராடியதாக கூறப்படும் நாட்களில் ஜனாதிபதி அமைப்புக்கு எதிரான கடும் விமர்சகராக அவர் இருந்தார். யுத்தம் முடிவடைந்த தன் பின்னர் அவர் எதிர்த் திசையில் சென்று 18 ஆவது திருத்தம் ஊடாக ஜனாதிபதி அதிகாரங்களை அதிகரித்துக் கொண்டார்.

எனினும் மக்கள் மற்றும் ஜனநாயக பிரச்  சாரகர்களுக்கு, எந்தத் தலைவரையும் மைத் திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரம   சிங்க ஆகியோரையும் கூட, அளவுக்கு அதி கம் நம்பக்கூடாது என்பதற்கு இது ஒரு பாடம். அவர்கள் அனைவரும் சந்தேகத்துக்கு இடமான நிலையற்ற மனிதப் பிறவிகள்! மனிதர்களைவிட கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை நம்புவது எப்பொழுதும் சிறந்தது. ஜனநாயக அல்லது மனித உரி மைகள் பிரச்சாரகர்கள் ஆனாலும் கூட இது தான் வழக்கமாகும். அது மஹிந்த ராஜ பக்ஷவோ, மைத்திரிபால சிறிசேனவோ அல்லது ரணில் விக்கிரமசிங்கவோ யாராக இருந்தாலும் புகழுக்கு உரியவர்களுக்கே புகழ் கிட்ட வேண்டும்.

ஏன் பயப்படுகிறார்கள்?

மைத்திரிபால சிறிசேன 19 ஆவது திருத்தம் முன்மொழியப் பட்டபோது, தனது அதிகாரங்களில் பலவற்றையும் விட்டுக் கொடுக்க சம்மதித்ததன் மூலம் முன்னெப் போதுமில்லாத ஒரு தியாகத்தை செய்த ஒருவராகக் காணப்படுகிறார். எனினும், அது இறுதியான ஒன்றல்ல. அவர் ஸ்ரீ.ல.சு.க. வின் தலைமைத்துவத்தை ஏற்றதிலிருந்து அவரது பாணி மெதுவாக மாறிவிட்டதாகத் தோன்றுகிறது. அது ஒருவேளை, புதிய அரசியலமைப்பு அல்லது அரசியலமைப்பு திருத்தங்கள் மேற்கொள்வதில் ஐதேக மற்றும் ஸ்ரீ.ல.சு.க இடையில் எழுந்துள்ள கொள்கை வேறுபாடுகளின் கேள்விகளினால் ஏற்பட்ட தாகவும் இருக்கலாம். அதை விட அதிகமானதாகவும் இருக்கலாம்.

ஸ்ரீ.ல.சு.க அமைச்சர்கள் இப்பொழுது ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிப்பதற்கு தாங்கள் எதிரானவர்கள் என்று கருத்துக் கூறி வருகிறார்கள். இது பிரதான கட்சிகள் இடையே கலந்தாலோசிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அவர்கள் சாத்தியமான மற்றும் ஒரு மாற்றுத் தீர்வுக்கு வர வேண்டும். பிரச்சினைகளில் ஐ.தே.க. கூட மௌனமாக இருக்கக்கூடாது. இரட்டை   அதிகாரத்தோடு எந்த அமைப்பும்

நீண்ட காலத்துக்கு இயங்க முடியாது. கண்காணிப்பு மற்றும் சீர் செய்தல்கள் இருக்க வேண்டும். இரண்டுக்கும் இடையே வேற்றுமை உள்ளது.

ஸ்ரீ.ல.சு.க, ஜனாதிபதி முறையை அல்லது பதவியை தொடர்ந்து வைத்திருப்பது பற்றி சில வகையான முன் மொழிவுகளை மேற்கொள்கிறார்கள் என்றால் அதற்கான காரணம் அல்லது காரணங்கள் என்ன? மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள அச்சமாக இருக்குமா? வேறு சில விஷயங்கள் பற்றி கூறியுள்ள அதேவேளை இந்த விடயம் பற்றிய தனது கருத்தை மைத்திரிபால சிறிசேன இன்னமும் வலியுறுத்தவில்லை. இது எதிர்மறையான ஒரு விஷயமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

தற்போதைய அமைப்பில் ஜனாதிபதிக்கும் மற் றும் பிரதமருக்கும் இடையில் பரஸ்பர ஒத்துழைப்பு என்கிற ஒரு ஆரோக்கியமான கட்டமைப் பின் கீழ், கண்காணிப்புகளும் மற்றும் சமப்படுத் தல்களும் இருக்கலாம். அது ரணில் விக்கிரமசிங்க வாதிட்டுவரும் ‘லிச்சேவி’ கொள்கைகளின் வரி சையில் செல்லக் கூடும். எனினும் இந்தக் காரணங்களில் எதுவும் புதிய அரசியலமைப்பைக் கைவிட்டு போலியான ஒட்டு வேலைகளை மேற் கொள்வதற்கான காரணமாக இருக்க முடியாது.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் பொது மக்கள் பிரதிநிதித்துவ குழுவிடம் (PRC)  நான் முன்மொழிந் தது. ஜனாதிபதியை தெரிந்தெடுக்கும் முறை அயர் லாந்தில் உள்ளதுபோல பாராளுமன்ற ஜனநாயக முறைப்படி இருக்க வேண்டும் மற்றும் அவரது கடமைகள் தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய நல் லிணக்கம் என்பவற்றுடன் மட்டும் மட்டுப்படுத் தப்பட வேண்டும். ஏனைய கடமைகள் யாவும் வெறும் சடங்குகளாக மட்டும் இருக்க வேண்டும். எனினும் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி தனது கட்சிப் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்து விட்டு சுதந்திரமானவராகவும் மற்றும் அனைத்துக் கட்சிகள் மற்றும் குழுக்களுக்கு நியா யமான ஒருவராக நடக்க வேண்டும் என்று.

நான் மைத்திரிபால சிறிசேனவை பற்றி மட்டும் நினைத்து இதைச் சொல்லவில்லை ஆனால் பொதுவாக தேர்ந்தெடுக்கப்படும் ஒரு ஜனாதிபதியை பற்றியே சொல்லியிருந்தேன். அதே போல மாகாணங்களின் ஆளுனர்கள் பிரதம மந் திரியின் ஆலோசனையின் பேரிலும் மற்றும் மாகாண சபைகளுடன் கலந்தாலோசித்த பின்னர் மேற்கொள்ளப்படும் ஜனாதிபதியின் நியமனமாக இருக்க வேண்டும், அவர்களும் கூட ஜனாதிபதியின் ஆலோசனைப்படி தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய நல்லிணக்கம் என்பனவற்றுக்கு பொறுப்பாக இருக்க வேண்டும் ஏனைய பணிகள் கட்டாயமாக வெறும் சடங்குகளாக இருக்க வேண்டும் என்றும் சொல்லியிருந்தேன்.

அதிகாரப் பரவலை நீட்டிப்பது அல்லது ஆழ மாக்குவது என்கிற அளவுக்கு மீறிய அச்சம்   தேசிய பாதுகாப்பாக இருந்தால், அப்போது அதனை அத்தகைய ஒரு ஏற்பாட்டினால் மட்டுப்படுத்தலாம். நிறைவேற்று அதிகாரமுள்ள ஒரு ஜனாதிபதியை வைத்திருக்கத் தேவையில்லை. நான் மேலும் முன்மொழிந்தது என்னவென்     றால் ‘கூட்டுறவான அதிகாரப் பரவல்’, இங்கு மாகாண சபைகள் மத்தியுடனும் மற்றும் தேசிய அரசாங்கத்துடனும் தேசிய நன்மைக்காக கூட்டுறவாக இணைந்து பணியாற்றும் அதேவேளை அதிகரிக்கப்பட்ட அதிகாரங்களை அல்லது பொறுப்புக்களை பரந்த ஒற்றையாட்சி கட்டமைப்பின் கீழ் நடைமுறைப்படுத்தலாம் என்று.

மத்திய – புற எல்லை உப – குழுவினது அறிக்கையும் மற்றும் சிலவற்றினது அறிக்கைகளும் சந்தேகமின்றி தேன் கூட்டை கலைத்ததைப் போன்ற செயலைச் செய்துள்ளன. சிலபேர் தெரிந்தோ தெரியாமலோ அதனை அரசியலமைப்பு வரைவு என விளக்குகிறார்கள். வழிகாட்டும் குழு அல்லது பிரதமரின் அலுவலகம் சில காரணங்களுக்காக அந்த விஷயத்தை இன்னும் தெளிவுபடுத்தவில்லை. அவர்களும் இன்னமும் தங்கள் சொந்த வரைவை வெளியிடவில்லை. ஒரு வரைவாக இல்லாவிட்டாலும் குறைந்தது புதிய அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளையாவது இப்போது மக்கள் முன் சமர்ப்பித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் புதிய அரசியல மைப்பை முன்னேற்றுபவர்கள் கூட புதிய அரசியலமைப்புக்குப் பயப்படுகிறார்கள் என்று தோன்றக்கூடும்.

-(Colombo Telegraph)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here