‘பெரும்பான்மைக் கட்சிகளை நாம் இனி மேலும் நம்பத் தயாரில்லை’ – பேருவலை நகர சபை மேயர்

0
0

‘பெரும்பான்மைக் கட்சிகளை நாம் இனி மேலும் நம்பத் தயாரில்லை

மஸாஹிம் முஹம்மத் – மேயர், பேருவலை நகர சபை

தற்பொழுது நீங்கள் பேருவலை நகர சபையின் மேயராக தெரிவுசெய்யப்பட்டுள்ளீர்கள். உங்களது அடுத்தகட்ட நகர்வுகளை எவ்வாறு முன்னெடுக்கவுள்ளீர்?

பேருவலை நகர சபைக்கு உட்பட்ட பகுதியில் 80 வீதமான முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். இதுவரை காலமும் ஐக்கிய தேசியக் கட்சியே இங்கு வெற்றியீட்டி வந்தது. ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய நான் இரண்டு தடவைகள் மேயராகவும், இரண்டு தடவைகள் எதிர்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளேன். கடந்த தடவையும் நான் எதிர்க்கட்சித் தலைவராகவே செயற்பட்டேன். கட்சி பேதங்களின்றி சகல மக்களுக்கும் சேவையாற்றுவதே எமது குறிக்கோள்.

தற்பொழுது பேருவலையில் சுமார் 16 வீதிகள் காபட் இட்டு அபிவிருத்திசெய்யப்பட வேண்டியுள்ளன. மரதானை, மாளிகாஹேன, மஹகொட போன்ற பகுதிகளில் உள்ள வீதிகள் திருத்தப்பட வேண்டியுள்ளன. பேருவலை நகர சபைக்கு உட்பட்ட மித்திமிராஜவெல நீரோடை மாசடைந்து துர்வாடை வீசும் நிலையிலுள்ளது. முன்னர் இந்த நீரோடையில் மக்கள் குளித்தார்கள். இந்த நீரோடையையும் துப்புரவுசெய்து அபிவிருத்திசெய்ய வேண்டும். சில மக்கள் இந்தப்பகுதியிலுள்ள கால்வாய் வீதிகளை பிடித்து வீடுகளை கட்டிக்கொண்டுள்ளார்கள். சிறியதொரு மழை பொழிந்தாலும் இந்தப்பிரதேசமே நீரில் மூழ்கிவிடும். எனவே இந்த நீரோடைப் பகுதிகளில் நீர் முறையாக வழிந்துசெல்லும் வகையில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க வேண்டும்.

48 லட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட பெலஸ் பாத் வீதியை கடந்த தினம் நாம் திறந்துவைத்தோம். 100 லட்சம் ரூபா செலவில் அரப் வீதியும் காபட் இட்டு அபிவிருத்திசெய்யப்பட்டுள்ளது. இவ்வாறான பணிகளை மேற்கொள்வதற்காக வேண்டியே மக்கள் இம்முறை எனக்கு வாக்களித்துள்ளனர்.

சுயேட்சைக் குழுவொன்றில் போட்டியிட்டு வெற்றிபெருவதென்பது இலகுவான விடயமல்ல. என்மீது நம்பிக்கை வைத்து மக்கள் 11,000 வாக்குகளை தந்துள்ளார்கள். முழு இலங்கையிலும் எடுத்துக்கொண்டால் தற்பொழுது நாங்களே முதன் முதலாக வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம்.

இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சுயேற்சைக் குழுவில் போட்டியிட்டமைக்கான மிக முக்கிய காரணம் என்ன?

பேருவலை தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளராக இப்திகார் ஜெமீலை நாமே தேர்ந்தெடுத்தோம். ஆரம்பத்தில் இவர் சுதந்திரக் கட்சியில் இருந்தார். ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து 4 வருடங்களிலேயே அவருக்கு அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. அவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து ஒரு வருடத்திலேயே மாகாண சபையில் போட்டியிடும் எனது வாய்ப்பை அவருக்கு வழங்கினேன். ஆனால் அவர் அந்தத் தேர்தலில் தோல்வியைத் தழுவினார். கடந்த முறை மாகாண சபைத் தேர்தலில் நானும், இம்தியாஸ் பாக்கிர் மாக்காரும் இணைந்தே அவரை வெல்லச் செய்தோம். கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது பேருவலை, பத்தயில் ஒரு தேர்தல் மேடையில் நான் இம்தியாஸ் பாக்கிர் மாக்காரை பற்றி பேசிய போது அவரைப் பற்றி இங்கு பேச வேண்டாம் என எனக்கு விரல் நீட்டிக்கொண்டு வந்தார்.

பேருவலையில் ஐக்கிய தேசியக் கட்சி மேடையில் இம்தியாஸ் பாக்கிர் மாக்காரைப் பற்றி பேசாமல் வேறு யாரைப் பற்றி பேசுவது? அவர்கள் வெற்றி பெற்றவர்களைப் போல் மமதையுடன் செயற்பட்டார்கள். அதனாலேயே இன்று இந்த அவல நிலையை அனுபவிக்கிறார்கள். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் இப்திகார் ஜெமீல் 1050 வாக்குகளால் தோல்வியைத் தழுவிக்கொண்டார். எனது ஆதரவாளர்கள் அவருக்கு வாக்களிக்கவில்லை. இதனால் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எனக்கு வேட்புரிமை வழங்கப்படவில்லை. வேட்புரிமை வழங்கப்படாவிட்டால் பன்றியின் சின்னத்திலாவது உங்களை நாம் வெற்றிபெறச்செய்வோம் என்று எனது ஆதரவாளர்கள் எனக்கு கூறினார்கள். இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ராஜித சேனாரத்ன 6 கோடி ரூபாவுக்கு மேல் செலவுசெய்துள்ளார். பாராளுமன்றத் தேர்தலிலாவது அவர் அப்படிச் செலவழித்திருக்க மாட்டார். பேருவலையில் ராஜிதவினை தோற்கடிப்பது என்பது மிகப்பெரும் சவாலாகும். அவரது சக்தியை தோற்கடித்தோம் என்றால் எங்களுடன் எப்படிப்பட்ட சக்தியொன்று உள்ளதென்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.

அளுத்கம சம்பவத்தை தொடர்ந்து மக்கள் ஆளும் தரப்பின் மீதும் கடந்த ராஜபக்ஷ அரசின் மீதும் அதிருப்தியுற்றிருக்கும் நிலையில் உங்களது சுயேற்சைக் குழுவால் எவ்வாறு இந்த வெற்றியை பதிவுசெய்ய முடிந்தது?

உண்மையிலேயே இது சவாலானதொரு விடயம். இந்தப் பகுதியிலுள்ள பெரும்பாலான மக்கள் ஐ.தே.கா ஆதரவாளர்களாகவே இருந்தனர். எனினும் எப்போது சுயேட்சைக்கு மாறினேனோ அன்றிலிருந்து பெரும்பாலான மக்கள் எனக்கு ஆதரவு தெரிவிக்க முன்வந்தார்கள். எதிர்வரும் மாகாண சபைத்தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலிலும் போட்டியிடுங்கள், நாங்கள் வாக்களிக்கிறோம் என மக்கள் கூறுகிறார்கள். நாங்கள் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டால் உண்மையிலேயே எமக்கு பாராளுமன்றம் செல்ல முடியும் என நான் நம்புகிறேன். பெரும்பான்மைக் கட்சிகளை நாம் இனி மேலும் நம்பத் தயாரில்லை. நம்புவதில் எவ்வித பிரயோசனமுமில்லை. ஐ.தே.கா, ஐ.தே.கா என்று செத்தோம். ஆனால் கண்டி, திகன பிரதேசத்தை தாக்கிய வேளையில் ஐக்கிய தேசியக் கட்சி எங்களுக்கு எதைச் செய்தது? திகன கலவரத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைதுசெய்து பிணையும் வழங்கியுள்ளார்கள். எனவே அங்கு உரிய முறையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மைத்திரி, ரணில், மஹிந்த என எவருமே சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. இனிமேலும் நாம் இவர்களை எப்படி நம்புவது?

இந்தப் பகுதி மக்கள் எதிர்கொள்ளும் மிக முக்கிய பிரச்சினைகளை குறிப்பிட முடியுமா?

டெங்கு நோய்த் தொற்று, மின்சாரப் பிரச்சினை, வீடில்லாப் பிரச்சினைகளை இந்தப் பிரதேசத்து மக்கள் எதிர்கொண்டு வருகிறார்கள். ஒரு வீட்டைக் கட்டுவதற்கு சட்டபூர்வமாக 6 பர்சஸ் காணி வழங்கப்பட வேண்டும். ஆனால் இந்தப் பகுதியிலுள்ள பெரும்பாலான மக்களுக்கு 6 பர்சஸ் காணி இல்லை. உதாரணத்திற்கு ஒரு குடும்பத்தில் 3 பெண் பிள்ளைகள் இருந்தால் ஒருவருக்கு தளா 2 வீதம் 6 பர்சஸ் என்றே வழங்கப்படும். 2 பர்சஸில் வீடு கட்டுவதற்கு விஷேட அனுமதியொன்றை நகர சபை மேயரிடம் பெற வேண்டும். எல்லா மேயர்களும் இந்த அனுமதியை வழங்கமாட்டார்கள். ஏதும் பிரச்சினைகள் வந்தால் மேயரே பொறுப்புச்சொல்ல வேண்டும். ஆனால் நாம் கஷ்டப்பட்டு அதற்கான அனுமதியை வழங்குகிறோம். இவற்றை மக்கள் எம்மிடம் எதிர்பார்க்கிறார்கள். நகரசபை பிரதேசத்திற்குட்பட்ட வீதியிலுள்ள கம்பங்களில் பொறுத்தப்பட்டுள்ள வீதி விளக்குகளை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். கால்வாய்களை துப்புரவு செய்யும் பணியையும் முன்னெடுத்துள்ளோம்.

சுற்றுலாத்துறை உள்ளிட்ட மாணிக்கக்கல் வர்த்தகத்துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஏதும் முன்னெடுக்கப்பட்டுள்ளனவா?

பேருவலை துறைமுகத் திடலை சுத்தம் செய்து அலங்கரிக்கும் திட்டத்தை விரைவில் ஆரம்பிக்கவுள்ளோம். இலங்கையில் சுற்றுலாத்துறைக்கு பெயர்பெற்ற இடமே பேருவலை. தற்பொழுது அது படிப்படியாக அருகிவருகிறது. மாணிக்கக் கல் வர்த்தகத்தை மேற்கொள்வதற்கான Jem Market சந்தையொன்றை அமைப்பதற்கு 10 ஏக்கர் காணியை வழங்கி அதற்குரிய நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றோம்.

இதுபோன்ற அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு அரசாங்கத்தின் உதவிகளை பெற்றுக்கொள்வதில் ஏதும் தடங்கல்கள் காணப்படுகின்றதா?

எமக்கு சகலரது உதவிகளும் உள்ளது. எம்மிடம் பணம் உள்ளது. மக்களின் உதவியும் உள்ளது. அரசாங்கத்தின் உதவியும் உள்ளது. நாம் சுயேட்சை என்ற படியால் எதிர்க்கட்சிகளது உதவியும் உள்ளது. இலங்கையில் ஒரு நகரசபையும் மேற்கொள்ளாத வேலைத்திட்டங்களை நாம் ஆரம்பித்துவிட்டோம். ஆரம்பித்தது மாத்திரமல்லாமல் அந்தத் திட்டங்களை திறந்தும் கூட வைத்துள்ளோம். தற்பொழுது நாம் 4 கோடிக்கு மேற்பட்ட திட்டங்களை ஆரம்பித்துள்ளோம்.

ஐக்கிய தேசியக் கட்சி மீது நீங்கள் அதிருப்தியுற்றமைக்கான காரணங்கள் என்ன?

நான் 10 வருடங்களாக ஐ.தே.கா பேருவலை நகர சபை மேயராக இருந்தும் ஒரு வீதியைக் கூட நிர்மாணிப்பதற்கு ரணில் உதவவில்லை. இன்னும் இவரை நம்பிப் போக முடியாது. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் இலங்கையின் சகல தேர்தல் தொகுதிகளிலும் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியைத் தழுவும் நிலையிலுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ இரவில் திருடினார். ரணில் விக்ரமசிங்க ரவியுடன் இணைந்து பட்டப் பகலில் மத்திய வங்கியில் கொள்ளையிட்டார். கட்சியின் அவல நிலைக்கு இதுவே உடனடிக் காரணம். இந்த நிலையில் ரவி கருணானாயக்கவுக்கு மீண்டும் உப தலைவர் பதவி வழங்கப்படவுள்ளது. இனிமேலும் சிங்கள மக்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்க விரும்புவார்களா?

கட்சியில் மறுசீரமைப்பு பணிகளை செய்யப்போவதாக போலிப் பிளாஸ்டர் ஒட்ட முனைகிறார் ரணில். இதுவல்லாம் சரிப்பட்டுப் போகாது. மக்கள் இதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். நாங்கள் கட்சியை விட்டுப் பிரிந்து நின்று சுயேட்சையாக போட்டியிட்டதை போன்று ஏனையோரும் குழுக்களாக பிரிந்து செல்லும் காலம் வெகுதொலைவில் இல்லை. பேருவலை தொகுதியில் ஐ.தே.கா ஒருபோதும் தோல்வியைத் தழுவாது. நாம் இம்முறை தனித்துநின்று போட்டியிட்டமையினாலேயே ஐ.தே.காவுக்கு இங்கு தோல்வியைத் தழுவ நேரிட்டது. ஏன் என்னைத் துறத்தினார்கள்? இப்திகார் ஜெமீல் தவறு செய்தால் கட்சியின் தலைவரால் அதை திருத்த முடியுமல்லவா? அமைச்சர் என்ற வகையில் ராஜிதவுக்கும் இதைச் சரிசெய்ய முடிந்தது. ஆனால் அவர் முன்வரவில்லை. அவற்றின் விளைவையே தற்பொழுது அனுபவிக்கிறார்கள்.

அரசியல் கட்சிகளிலிருந்து உங்களது சுயேட்சைக் குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா?

ஆம் எல்லா தரப்பும் அழைப்பு விடுத்தார்கள். நாம் ஒருபக்கமும் சாய மாட்டோம். எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் சுயேட்சையாகவே போட்டியிடுவோம். பேருவலையின் ஒட்டுமொத்த மக்களும் எங்களுடனேயே கைகோர்த்துள்ளார்கள். எமது பலமே மக்களின் பலம். இது பணத்தால் வந்த கூட்டமல்ல. அன்பால் வந்த கூட்டம். நீண்ட காலமாக நாம் பட்ட துன்பங்களுக்காக வேண்டியே இறைவன் இதுபோன்றதொரு வெற்றியை எமக்குத் தந்துள்ளான்.

அளுத்கம இனவாதத் தாக்குதல்களுக்கு பொறுப்புச் சொல்லக்கூடியவர்கள் யார்? இந்தச் சம்பவம் தொடர்பில் நீதி உரிய முறையில் நிலைநாட்டப்பட்டதா?

நாம் நம்பியிருந்தவர்களே எமக்குத் துரோகம் இழைத்துள்ளார்கள். மஹிந்த ராஜபக்ஷவை தோல்வியடையச் செய்ய வேண்டும் என்பதற்காக ராஜித சேனாரத்னவும், சம்பிக்க ரணவக்கவும் இணைந்து இந்தச் சூழ்ச்சியை அரங்கேற்றியுள்ளார்கள். நல்லாட்சி அரசாங்கம் உருவானதன் பின்னர் அளுத்கம இன்வன்முறைத் தாக்குதல் குறித்து ஆராய ஒரு ஆணைக்குழுவேனும் நியமிக்கப்படவில்லை. ஆணைக்குழுவொன்று அமைக்கப்படும் போதே சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க முடியும். யார் இந்தக் கலவரத்துக்கான சூத்திரதாரிகள் என்பதை கண்டுபிடிப்பதற்கு இதவரையில் ஒரு ஆணைக்குழு உருவாக்கப்படவில்லை.

திகன இனவாதத் தாக்குதல் சம்பவத்தில் அந்தத் தாக்குதல் இடம்பெருவதற்கு முன்னைய தினமே ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியிருப்பின் பிரச்சினை வெகுதூரம் சென்றிருக்காது. திகனயில் பிரச்சினையொன்று வருமென்பதை தெரிந்துகொண்டும் அதற்கு இடமளித்துள்ளார்கள் இந்த ஆட்சியாளர்கள். எல்லாவற்றுக்கும் ரணிலே காரணம். சொத்துக்கள் எவ்வளவு தீக்கிரையானாலும் அதற்கு 50,000 ரூபா நஷ்டஈடு வழங்கினால் எல்லாம் சரிப்பட்டு விடுமா? இனிமேலும் இவர்களை நம்ப முடியாது. எமக்கு நடந்த அநியாயத்துக்கான எதிர்ப்பை நாம் காட்ட வேண்டும். இதனாலேயே நாம் சுயேட்சையாக களமிறங்கினோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here