பேராசிரியர் முராத் வில்ப்ரட் ஹொப்ஸ்மன்

0
1

இயான் மிஷ்அல்

இஸ்லாத்தின் உட்பகுதிகளை ஆராயவும் விளக்கவும் உள்வீட்டிலிருந்து உலமாக்கள் செய்யும் மகத்தான பணிக்கு அப்பால் இஸ்லாத்தை வெளியிலிருந்து அவதானித்து, இஸ்லாத்தை வெளி உலகுக்கு ஏற்ற வகையில் வடிவமைத்து முன்வைப்பதில் பிறவி முஸ்லிம்கள் அல்லாதவர்கள் பெரும்பங்கு வகிக்கிறார்கள். தனது 51 ஆவது வயதில் இஸ்லாத்தைத் தழுவிய ஜேர்மனியப் பேராசிரியர் முராத் வில்ப்ரட் ஹொப்ஸ்மன், இஸ்லாம், தி ஓல்டர்னேடிவ் என்ற நூலின் மூலமாக நவீன உலகின் வீழ்ச்சிக்கான தீர்வாக இஸ்லாத்தை முன்வைக்கிறார். 1992 இல் இந்த நூல் ஜெர்மனியில் வெளியிடப்பட்ட போது, ஜெர்மனிய இடதுசாரிகளும் பெண்ணியலாளர்களும் ஊடகங்களிலும் பாராளுமன்றிலும் அவருக்கு அடிப்படைவாதி என முத்திரை குத்தினர். மேற்குலகம் முன்வைத்து நடைமுறைப்படுத்துபவற்றுக்கு மாற்றீடொன்று இருக்க வேண்டும் எனவும், அது தான் இஸ்லாம் எனவும் இந்த நூலில் குறிப்பிடும் அவர் 21 ஆம் நூற்றாண்டுக்குள் நுழையும் போது உலகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வு இஸ்லாம் தான் என இந்த நூலில் விளக்குகிறார். இஸ்லாம் பிற்போக்கானது எனவும், பயங்கரவாதம் எனவும் எடுத்துக் காட்ட முனையும் மேற்கத்தேய சக்திகளுக்குப் பதிலளிக்கும் விதத்தில் தவறாகப் புரியப்பட்டுள்ள 20 விடயங்களை இவர் இந்த நூலில் தெளிவுபடுத்துகிறார். இந்த நூல் அரபு மொழியிலும் அல் இஸ்லாம் க பதீல் எனும் பெயரில் வெளிவந்திருக்கிறது. இந்த நூலின் தொடராக இஸ்லாம் 2000 எனும் நூலும் இவரால் வெளியிடப்பட்டுள்ளது.

நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டிருந்த இவர் ஜனவரி 13 ஆம் திகதியன்று தனது 88 ஆவது வயதில் காலமானார். 1931 இல் ஒரு கத்தோலிக்கராகப் பிறந்த இவர் 1980 இல் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் தனது முதுமாணிப் பட்டத்தை முடித்த பின்னர் மியூனிச் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் கலாநிதிப் பட்டம் பெற்று இரண்டாம் உலகப் போரின் பின்னர் சீர்குலைக்கப்பட்டிருந்த தனது நாட்டின் மதிப்பை உயர்த்துவதற்காக ஜேர்மன் வெளிவிவகாரச் சேவையில் 1961 முதல் 1994 வரை சேவையாற்றினார். முதலில் அவர் அணுப்பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களுக்கான விஷேட நிபுணராக அல்ஜீரியாவில் கடமையாற்றினார். 1983 முதல் 1987 வரை பிரஸல்ஸில் நேட்டோவின் தகவல் பணிப்பாளராகப் பணியாற்றி பின்னர் 1987 முதல் 1990 வரை அல்ஜீரியாவுக்கான தூதுவராகவும் 1990 இலிருந்து 1994 வரை மொரோக்காவுக்கான தூதுவராகவும் பணியாற்றினார். ஜேர்மன் முஸ்லிம்களின் மத்திய கவுன்ஸில் (Central Council of Muslims in Germany)  கௌரவ உறுப்பினராகவும் ஆலோசகராகவும் இவர் சேவையாற்றினார்.

தான் இஸ்லாத்தைத் தழுவியமைக்கான காரணங்களை Diary of a German Muslim (ஜேர்மன்) என்ற நூலிலும் Journey to Islam (ஆங்கிலம்) என்ற நூலிலும் இவர் அழகாகத் தெளிவுபடுத்தி உள்ளார். நீங்கள் எப்படி இஸ்லாத்தைத் தழுவினீர்கள் என வொஷிங்டன் ரிபோர்ட் பத்திரிகை இவரிடம் கேட்டதற்கு, நீங்கள் எப்படி காதலில் விழுந்தீர்கள் என்பதற்கு ஓர் ஆணோ பெண்ணோ விடையளித்தால் அது நிச்சயமாக காதலாக இருக்க முடியாது. எனது நிலையும் அது தான் என அவர் பதிலளித்திருந்தார்.  தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்குப் பின்னணியாக அமைந்த மூன்று விடயங்களைச் சுட்டிக் காட்டும் அவர் முதலாவதாக தனது அல்ஜீரிய அனுபவம் பற்றிக் குறிப்பிடும் போது, அல்ஜீரிய சுதந்திரப் போராளிகள் பிரான்ஸ் படையினருடன் ஆறு மாத கால யுத்த நிறுத்த ஒப்பந்தமொன்றுக்கு இணங்கியிருந்தார்கள். இவர்கள் இந்த யுத்த நிறுத்தத்தை மீறச் செய்வதற்காக பிரான்ஸ் படையினர் இவர்களுடன் மிகவும் கடுமையாக நடந்து கொண்டார்கள். ஆனாலும் அவர்கள் தமது உடன்படிக்கையில் உறுதியாக இருந்தார்கள். அவர்களுக்கு இந்தளவு சக்தி எங்கிருந்து வந்தது என நான் தேடிப் பார்த்தேன். இவர்களுக்கு இந்தச் சக்தியை வழங்கிய அல்குர்ஆனை நான் படிக்கத் தொடங்கினேன். முழுமையாக இல்லாவிட்டாலும் மனதளவில் நான் முஸ்லிமாகிவிட்டேன். இதன் முதற்கட்டமாக கிறிஸ்தவ கொள்கைகளை கைவிட்டு விட்டேன் என்கிறார்.

இரண்டாவது விடயமாக அவர் இஸ்லாமியக் கலைகளைக் குறிப்பிடுகிறார். பாலே (நடன) விமர்சகராக இருந்த இவர் விமர்சகருக்கு ஒரு தகுதி இருக்க வேண்டும் எனக் கருதினார். ஸ்பெய்னின் கிரனாடா, குர்துபா, அந்தலூஸ் நகரங்களின் இஸ்லாமியக் கலைகளைக் கண்டதன் பின்னர், இதைப் போல வேறு எந்தக் கலைகளும் என்னைக் கவரவில்லை என்று விவரிக்கிறார்.

தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கான மூன்றாவது காரணமாக தத்துவங்களைக் குறிப்பிடும் அவர் உலகின் சிறந்த தத்துவவியலாளர்களாக முஸ்லிம்களே இருந்திருக்கிறார்கள். இப்னு ஸீனா, இப்னு கல்தூன், அல் கஸ்ஸாலி, இப்னு ருஷ்த் ஆகியோர் இவர்களில் முக்கியமானவர்கள். இவ்வளவு காலம் இவர்களை அறியாமல் இருந்ததற்காக என்னையே நான் நொந்து கொண்டேன் என்று தெரிவிக்கிறார்.

இஸ்லாமிய நாடுகளில் சேவையாற்றச் செல்லும் இராஜதந்திரிகளுக்கு இஸ்லாம் தொடர்பான அறிமுகத்தை வழங்கும் நிகழ்வொன்றை 1980 களில் ஜேர்மன் வெளிநாட்டுச் சேவைகள் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்தது. பேராசிரியர் முராதும் இதில் கலந்து கொண்டார். அன்றைய தினம் தனது மகனின் பிறந்த நாளாக இருந்ததால் மகனுக்கு விலைமதிக்க முடியாத பரிசொன்றை வழங்க அவர் தீர்மானித்தார். நிகழ்ச்சியை நடத்திய இமாமிடம் 14 பக்கங்களில் தனது ஆவலை எழுதிக் கொடுத்த பின் அடுத்த நாள் அதே இமாமின் முன்னிலையில் இஸ்லாத்தை ஏற்றார். தான் இஸ்ரேலுக்கோ வத்திக்கானுக்கோ இராஜதந்திரியாக அனுப்பப்படாமல் இருக்கும் வகையில் அவர் தான் இஸ்லாத்தை ஏற்றதை உடனடியாக வெளிநாட்டமைச்சுக்கு அறிவித்தார்.

இஸ்லாத்தை ஏற்றதன் பின்னர் இரண்டு தடவைகள் ஹஜ்ஜையும் ஐந்து தடவைகள் உம்ராவையும் முடித்துள்ளார். இவர் இமாமுக்கு எழுதிய 14 பக்க ஆவணம் பிரசுரிக்கப்பட்டு பல இடங்களிலும் விநியோகிக்கப்பட்டுள்ளது. அதன் பின் தான் அவர் ஒரு ஜேர்மனிய முஸ்லிமின் டைரி என்ற நூலை எழுதினார். இது தவிர Islam: The Alternative, Islam and Quran:  An Introduction, Journey to Makkah, Religion on the Rise: Islam in the Third Millenium என்ற நூல்களுட்பட 13 புத்தகங்களை இவர் எழுதியுள்ளார். The Future of Islam in the East and the West இவரது இறுதி நூலாகும். 250 க்கும் மேற்பட்ட நூலாய்வுகளை இவர் செய்திருக்கிறார்.

இவரது மறைவு தொடர்பில் தனது அனுதாபத்தை வெளியிட்ட அமெரிக்க முஸ்லிம் அறிஞர் கலாநிதி யாஸிர் காழி, உண்மையிலேயே இவர் நமது காலத்தில் கிடைத்த பெரும் பேறு. அற்புதமான பாரம்பரியத்தையும் வரலாற்றையும் அவர் எமக்கு விட்டுச் சென்றுள்ளார் என்று தெரிவித்திருக்கிறார். அவர் இஸ்லாத்தை ஏற்றமை ஜேர்மனியின் தூதுவராகக் கடமையாற்றுவதற்குத் தடையாக இருக்கவில்லையா எனத் தான் கேட்டதற்கு வாய்விட்டுச் சிரித்ததாகக் கூறும் கலாநிதி யாஸிர் காழி, அவர் அதற்குத் தந்த பதிலையும் குறிப்பிடுகிறார். “இது எனது சொந்தத் தெரிவு எனவும் இதனை நான் உங்களுக்குத் தெரியப்படுத்துவதாகவும் நான் ஜேர்மன் அரசாங்கத்துக்கு அறிவித்தேன். அதற்கு அவர்கள் அது எனது பணியைப் பாதிக்காத வரையில் எனது மதத்தைப் பற்றிய அக்கறை தமக்கு இல்லை எனத் தெரிவித்திருந்தார்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.     

எல்லாம் வல்ல அல்லாஹ் அவரது பணிகளை ஏற்றுக் கொண்டு அவரை அவனது உயர்ந்த சுவனத்தில் சேர்த்து வைப்பானாக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here