பொதுபலசேனாவுடனான சமரசம்: முஸ்லிம் சமூகத்தின் ஏற்பாடா?

0
1

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு உணர்வை நாட்டு மக்களுக்கு மத்தியில் விதைத்து முஸ்லிம்களுக்கெதிரான பெரும் கலவரமொன்றுக்கே காரணமாக இருந்ததாகக் கருதப்படும் பொதுபலசேனா அமைப்புடன் தற்போது நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

கடந்த 02 ஆம் திகதிய சந்திப்புடன் இதுவரை ஐந்து சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டிருப்பதுடன் பல்வேறு விடயங்களில் சமரசம் எட்டப்பட்டுள்ளதாகவும் அறியவருகிறது. இந்தப் பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம்கள் தரப்பிலிருந்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் சார்பில் அஷ். பாஸில் பாரூக், ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவர் என்.எம்.அமீன், அண்மையில் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்ட தேசிய ஐக்கிய முன்னணியின் செயலாளர் அசாத் சாலி உள்ளிட்ட பலரும் இந்தச் சந்திப்புகளில் தொடர்ச்சியாக பங்கெடுத்து வருகின்றனர்.

இந்தச் சந்திப்புகளின் பி்ன்னர், முஸ்லிம்கள் தொடர்பாக பொதுபலசேனா ஏற்றுக் கொண்டிருந்த பல்வேறு தவறான விடயங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டிருப்பதாகவும், இந்தத் தவறுகளை அவர்கள் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. எதனையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்வது, தவறுகளை மன்னித்து அவற்றைத் திருத்திக் கொள்வதற்கு வழிவகுப்பது என்ற முஸ்லிம்களின் மகத்தான பண்பினை வெளிக்காட்டும் விதமாக இந்தப் பேச்சுவார்த்தைகள் அமைந்திருப்பதாக பலரும் கருத்து வெளியிட்டிருந்தனர்.

இருந்த போதிலும், பொதுபலசேனாவின் செயற்பாடுகளினால் ஒட்டுமொத்த இரண்டு மில்லியன் முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் எட்டப்படுகின்ற இந்தச் சமரசத் தீர்வுகள் முஸ்லிம் சமூகத்தின் அங்கீகாரத்துடன் தான் நடைபெறுகின்றனவா என்ற கேள்வி முஸ்லிம் சமூகத்துக்குள்ளால் இருந்தே எழுப்பப்பட்டு வருகின்றது. முஸ்லிம் சமூகம் சார்பில் எடுக்கப்படும் தீர்மானங்கள் முஸ்லிம் சமூகத்தின் அங்கீகாரத்துடனேயே எடுக்கப்பட வேண்டும் என்பதனால், இது போன்ற சந்திப்புக்களின் போது முஸ்லிம் சமூகத்தில் அக்கறை காட்டிச் செயற்படுகின்ற அகில இலங்கை ஜம்மியதுல் உலமா, ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில், தேசிய சூறா சபை ஆகியவற்றின் உத்தியோகபூர்வ பிரசன்னம் வேண்டப்படுவதோடு, எட்டப்படும் தீர்வுகளும் இவை அனைத்தினதும் இணக்கப்பாட்டுடன் வெளியிடப்பட்டாலேயே அது முஸ்லிம் சமூகத்தின் தீர்வாக அமையும் என பலரும் சுட்டிக் காட்டுகின்றனர்.

முஸ்லிம் அரசியல் தலைமைகளால் முஸ்லிம் சமூகம் விற்கப்பட்டு ஏமாற்றப்படும் நிலையில், தற்போதைய இறுதி நம்பிக்கையாக முஸ்லிம் சிவில் தலைமைகள் மீது முஸ்லிம்கள் வைத்துள்ள நம்பிக்கை சிதைவடையாத வண்ணம் முஸ்லிம் சிவில் தலைமைகள் நடந்து கொள்ள வேண்டும் என்ற கருத்து தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. முஸ்லிம் சமூகத்துக்கான அரசியல் தீர்வை ஒரு தனிக்கட்சி முன்வைக்க முடியாதது போலவே, முஸ்லிம் சமூகம் தொடர்பான விவகாரங்களையும் ஒருசில அமைப்புக்களோ தனிநபர்களோ கையாள முடியாது எனவும் சமூகத்தில் இருந்து குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here