பொதுபல சேனா உருவாக்கப்பட்டது எதற்கு? REVEALING INFO

1
8

(ஹலால் பிரச்சினை முதல் ஆட்சி மாற்றம் வரையில்)
அம்பலமாகும் தகவல்கள்!

-சி.ஏ.சந்திரபிரேம-

பொதுபல சேனாவின் செயற்பாடுகள் கடந்த சில வாரங்களாக ராஜபக்ஷ காலப்பகுதியில் காணப்பட்டதையும் விட உக்கிரமான நிலையில் காணப்பட்டது. இவ்வமைப்பு ராஜபக்ஷ அரசாங்கத்தினதும் கோத்தாபய ராஜபக்ஷவினதும் உருவாக்கம் என்பதாக நினைத்துக் கொண்டிருந்தவர்கள் தற்பொழுது ராஜபக்ஷாக்களுக்கு அதிகாரம் இல்லாத சந்தர்ப்பத்தில் இவ்வமைப்பு மீண்டும் செயற்பாட்டில் இறங்கியிருப்பது எப்படி என்கின்ற சிந்தனைக் குழப்பத்தில் உள்ளார்கள். மஹிந்த ராஜபக்ஷவுக்கு கிடைக்கின்ற கிறிஸ்தவ, முஸ்லிம் சிறுபான்மை வாக்குகளும் கூட இவ்வமைப்பின் செயற்பாடுகளினாலேயே கிடைக்காமல் போயுள்ளது. ராஜபக்ஷாக்களினுடையது என்பதாக எல்லோரும் நினைத்துக்கொண்டிருந்த பொ.ப.சேனாவுக்கு ராஜபக்ஷாக்களின் தயவின்றியே, தற்போதைய அரசாங்கத்தினாலும் கடந்த அரசாங்கத்தினால் வழங்கப்பட்டது போன்ற உதவிகள் கிடைப்பது என்பது தெளிவு.

கடந்த காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களைத் தொடர்ந்து அரசாங்கம் ஒரு சிலரை கைதுசெய்தது. ராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழும் பல்வேறு சம்பவங்களைத் தொடர்ந்து ஒரு சிலர் கைது செய்யப்பட்டார்கள். இவ்வரசாங்கம் ஞானசார தேரருக்கு எதிராக வழக்குகளையும் தொடுத்துள்ளது. கடந்த அரசாங்கமும் அவருக்கு எதிராக வௌ;வேறு வழக்குகளை தொடுத்தது. ஒரு சிலரை கைதுசெய்வதின் மூலம் அல்லது சிலருக்கு எதிராக வழக்கு தொடுப்பதின் மூலம் ஒரு வன்முறைமிக்க அமைப்பொன்றை ஒடுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டதாக அர்த்தப்படுவதில்லை. தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஞானசார தேரர் குறுகிய காலப்பகுதிக்கு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தாலும் இந்நடவடிக்கை ஹோமாகம நீதவானின் நடவடிக்கையில் இடம்பெற்ற செயலேயன்றி தற்போதைய அரசாங்கத்தின் உத்தரவில் இடம்பெற்ற சம்பவமொன்றல்ல. ராஜபக்ஷ அரசாங்கத்தினைப் போன்று தற்போதைய அரசாங்கத்தின் கீழும் எவ்வித இடையூறுகளுமின்றி நாட்டின் சட்டத்தை மீறுவதற்கு பொது.ப. சேனாவுக்கு எவ்வாறு முடிந்துள்ளது என்பதை புரிந்துகொள்ள நாம் அவ்வமைப்பின் வரலாற்றை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

ஞானசார உள்ளிட்ட தேரர்கள் சிலர் நோர்வே நாட்டிற்கு சுற்றுப் பயணம் செய்து எரிக் சொல்ஹைம்மினை சந்தித்துவிட்டு இலங்கை திரும்பியதைத் தொடர்ந்தே 2012ம் ஆண்டு பொ.ப.சேனா அமைப்பு உருவாக்கப்பட்டது. ஞானசார தேரரின் நோர்வே சுற்றுப்பயணம் இடம்பெற்று 6 மாதங்களின் பின்னர் திடீரென ஹலால் எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டம் குறுகியதொரு காலப்பகுதிக்குள் மாடறுப்புக்கு எதிரான போராட்டமாக மாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து முஸ்லிம்களது வியாபார நிலையங்களைப் பகிஷ்கரித்தார்கள். பல வியாபார நிலையங்கள் தாக்கப்பட்டன. இன்னும் சிலவை தீக்கிரையாகின. நாடு முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ வழிபாட்டுத்தளங்களுக்கும் தாக்குதல் நடாத்தினார்கள். ஈற்றில், தேரர் ஒருவரை முஸ்லிம்கள் தாக்கிய சம்பவமொன்றை அடிப்படையாக வைத்து அளுத்கமையில் சிங்கள- முஸ்லிம் கலவரமொன்று வெடித்தது.

சம்பிக்க ரணவக்கவிற்கும் மஹிந்த ராஜபக்ஷவிற்குமிடையில் நிலவிய மனக்கசப்பு 2012ம் ஆண்டு தணிய ஆரம்பித்தது. 2013இன் துவக்கத்தில் சம்பிக்க ரணவக்க மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சிலிருந்து நீக்கப்பட்டு அந்தஸ்தில் குறைந்த விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பவியல் அமைச்சராக நியமிக்கப்பட்டார். அக்காலப்பகுதியிலேயே பொதுபல சேனா அமைப்பு பகிரங்கமாக செயற்பட ஆரம்பித்தது. ஹலால் எதிர்ப்பு போராட்டம் முதல் அளுத்கம கலவரம் வரையில் ஞானசார உள்ளிட்ட தேரர்கள் நடுவீதியில் வன்முறைகளில் ஈடுபடுகின்ற போது சம்பிக்க ரணவக்க மற்றும் தேசிய ஹெல உறுமயவின் தலைவர்கள் வெள்ளாடை தரித்து, ஞானசார தேரர் அரங்கேற்றும் சகல படுமகாபாதகச் செயல்களையும் நியாயப்படுத்தும் ஊடவியலாளர் மாநாடுகளை நடாத்தினார்கள். ஞானசார தேரர் உள்ளிட்ட இச்சிறு தரப்பினர் காரணத்துடனோ அல்லது காரணமின்றியோ ஏற்படுத்தும் இக்குழப்பங்களை மஹிந்த ராஜபக்ஷ நிறுத்தத் தயாரான போது, பௌத்த தேரர்களை எக்காரணத்திற்கும் கைது செய்யக்கூடாது என்றும் அவ்வாறு தேரர்கள் கைதுசெய்யப்பட்டால் அவர்களை நடுவீதிக்கு இறக்குவதாக சம்பிக்க ரணவக்க அமைச்சரவையில் கூறிய கருத்தினை மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் அம்பலப்படுத்தியிருந்தார்.

தேசிய ஹெல உறுமய ஆளும் கூட்டணியின் பங்காளிக் கட்சியாக இருந்தமையினால் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஒன்றும் செய்துகொள்ள முடியவில்லை. ராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் பொதுபலசேனாவுக்கு எதிராக தக்க நடவடிக்கை எடுக்காததன் காரணத்தினால் பொ.ப.சேனா அமைப்பு, கோத்தாபய ராஜபக்ஷவின் அணுசரனையிலும் பாதுகாப்பிலும் செயற்படுவதாக நாட்டில் கருத்துப்பரவியது. காலியில் கிரம விமலஜோதி தேரர் ஏற்பாடு செய்த வைபவமொன்றில் கலந்துகொண்ட கோத்தாபய, தேரர்களுடன் உரையாடிக்கொண்டிருக்கும் போது பிடிக்கப்பட்ட புகைப்படமொன்றை பயன்படுத்தி பொ.ப.சேனா கோத்தாபயவின் உருவாக்கம் என அப்போதைய எதிர்கட்சி பிரசாரமொன்றை முன்னெடுத்தது. இக்கருத்து முஸ்லிம்களிடமும் கிறிஸ்தவர்களிடமும் வெகுவாக பாதிப்பை ஏற்படுத்தியது.

ராஜபக்ஷ அரசாங்கத்தை புரட்டிப்போட்ட பின்னர் நடுவீதியில் பேரணிகளை நடாத்தி வன்முறைமிக்க அமைப்பில் நடந்துகொண்ட தேரர்கள் திடீரென காணாமல் போனார்கள். கடந்த இரண்டரை வருட காலத்திற்குள் பொ.ப.சேனாவின் செயற்பாடுகள் குறைந்து காணப்பட்டன. இடைக்கிடை ஓரிரு ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடாத்தினார்களே தவிர, பேரணிகளை நடாத்தவில்லை. நாட்டின் இராணுவ வீரர்களை சர்வதேச சக்திகளிடம் காட்டிக்கொடுக்காத, நாட்டை பிரிப்பதற்கு உடன்படாத, நாட்டிற்கு பாரிய முன்னேற்றத்தை கொடுத்த அரசாங்கம் ஆட்சி செய்த போது தேரர்கள் வீதிக்கிறங்கி வன்முறைகளில் ஈடுபட்டு, இல்லாத பிரச்சினைகளை ஏற்படுத்தி, அத்தேசியவாத அரசாங்கத்தை நிலைகுலையச்செய்ய தங்களால் இயலுமானவற்றை முன்னெடுத்தார்கள். ஆனால் தற்பொழுது இராணுவத்தினரை காட்டிக்கொடுக்கின்ற, நாட்டை பிளவுபடுத்தும் அரசியலமைப்பை உருவாக்கின்ற, தமிழ் இனவாதத்தை போஷிக்கின்ற, சகல உள்நாட்டு வளங்களையும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்கின்ற, சிறுபான்மையின ஆதிக்கத்தின் கீழ் உள்ள அரசாங்கம் உருவானதன் பின்பு அச்செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. இந்நாட்டின் சிங்கள பௌத்தர்கள் இதனை பிரச்சினையாக பார்க்கிறார்கள் இல்லை போலும்.

எனினும், ஒருங்கிணைந்த எதிர்கட்சி காலி முகத்திடலில் நடாத்திய மே தினக் கூட்டத்தினை தொடர்ந்து மீண்டும் சில நாட்களுக்குள் பொதுபலசேனாவின் செயற்பாடுகள் திடீரென 2013, 2014 கட்டத்தை எட்டியிருந்தது. மீளவும் முஸ்லிம்களது பள்ளிவாயல்களுக்கும் வியாபார நிலையங்களுக்கும் தாக்குதல் நடாத்தப்பட்டன. ஞானசார தேரரரை கைதுசெய்வதற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும் சில நாட்கள் அவர் காணாமல்போயிருந்து விட்டு வெளியே வந்து ஒரு நளைக்குள் மூன்று தடவைகள் பிணை பெற்று விடுதலையானார். அஸ்கிரிய மகாநாயக்க தேரரின் வேண்டுகோளுக்கமைய இச்செயல் இடம்பெற்றது என நினைப்பது தவறானது. மகாநாயக்க தேரரின் வேண்டுகோளுக்கு முன்னரே இந்நடவடிக்கை திட்டமிடப்பட்டிருந்தது. அரச அணுசரனையில் ஞானசார தேரர் அன்றைய தினம் சட்டத்தின் முன் சரணானார். இந்நிலையில் ஞானசார தேரரை விஜயதாச ராஜபக்ஷவே மறைத்து வைத்திருந்தார் என்கின்ற கருத்தும் நாடு முழுவதிலும் பரவியது. கிழக்கு மாகாணப் பிரச்சினையொன்றை கலந்துரையாடுவதற்கு விஜயதாச, ஞானசார உள்ளிட்ட சில தேரர்களை ஜனாதிபதியை சந்திக்க அழைத்துச்சென்ற காரணத்திற்கே ஞானசார விவகாரத்தில் விஜயதாசவின் பெயர் அடிபட்டிருக்கலாம். எனினும் அறிமுகமொன்றை தவிர, பொதுபல சேனா அமைப்பின் தேரர்களுடன் விஜயதாச ராஜபக்ஷவுக்கு எவ்வித அரசியல் தொடர்புகளும் காணப்படவில்லை. பொதுபல சேனாவுடனும் ஞானசார தேரருடனும் அரசியல் தொடர்பொன்றை வைத்து, அதனை இன்றளவும் பேணி வருகின்ற தற்போதைய அரசாங்கத்தின் ஒரேயொரு அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆவார்.

ஞானசார தேரர் சில காலம் தேசிய ஹெல உறுமய கட்சியில் பிரதித் தேசிய அமைப்பாளர் பதவியை வகித்து வந்தார். இவர் 2004ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஹெல உறுமய கட்சி சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு தோழ்வியுற்றார். 2005இல் ஞானசார தேரர் தேசிய ஹெல உறுமய கட்சியிலிருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்பை வைத்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சில காலம் இவர் ஐதேகா பிக்குகள் அமைப்புடன் இணைந்து செயற்பட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்க அவர்களின் தாயாரான நாலனீ விக்ரமசிங்க நோயுற்றிருந்த போது அவருக்கு சுகம் வேண்டி பிரார்தனை செய்து பிரித் ஓதிய தேரர்களுள் ஞானசார தேரரும் கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 2012ல் ஹலால் எதிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்படும் வரையில் ஞானசார தேரர் ரணில் தரப்புடன் நல்லுறவுகளை பேணி வந்துள்ளார். பொதுபல சேனாவின் நிறைவேற்று பணிப்பாளர் என கூறப்படுகின்ற டிலந்த விதானகேயும் நீண்ட காலம் தொட்டு ரணில் விக்ரமசிங்கவுடன் நல்லுறவை பேணி வந்துள்ளார். இதன் காரணமாகவே ஆரம்ப கட்டத்தில் எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதமாக ரணில் விக்ரமசிங்கவும் ஹலால் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவான கருத்துக்களை முன்வைத்திருந்தார். ஹலால் சான்றிதழை வெளியிடுகின்ற இஸ்லாமிய மத அமைப்புக்கு அவ்வகையில் சான்றிதழை வெளியிடுவதற்குரிய உத்தியோகபூர்வ அனுமதி இல்லை என்றும் அங்கீகாரம் தொடர்பிலான சான்றிதழை வெளியிடும் அதிகாரம் இலங்கை தர நிர்ணய சபைக்கு மாத்திரமே உள்ளதெனவும் தெரிவித்திருந்தார்.

தேசிய ஹெல உறுமயவில் உள்ள உறுப்பினர்களை வைத்து அடிக்கடி வேறு அமைப்புக்களை உருவாக்கும் பழக்கம் சம்பிக்கவிடம் காணப்பட்டது. 2014ம் ஆண்டு இவ்வகையில் அதுரலிய ரத்ன தேரர் பிவிதுரு ஹெடக் அமைப்பினை உருவாக்கினார். ஞானசார தேரர் தேசிய ஹெல உறுமயவை விட்டு விலகி ஐதேகாவில் இணைந்துகொண்டதையும் நாம் சம்பிக்கவின் திட்டமொன்றாக நோக்கலாம். தேசிய ஹெல உறுமயவின் வாக்கு வங்கி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து உடைந்து வந்த பகுதியொன்றல்ல என்றும் அது ஐதேகாவிலிருந்து உடைந்து வந்த பகுதியொன்றாகவே சம்பிக்க உள்ளிட்ட அக்கட்சியின் தலைமைகள் எப்பொழுதும் நம்பிய விடயமாக காணப்பட்டது. அதனால் தேசிய ஹெல உறுமயவின் மறைகரமொன்று ஐதேகாவுக்குள் செயற்படுவது அவர்களுக்கு சகல வழிகளிலும் அதிஷ்டமாக காணப்பட்டது. எனவே ஞானசார தேரரும் தேசிய ஹெல உறுமயவின் ஒப்பந்தமொன்றிற்கு அமையவே ஐதேகவுக்குள் நுழைந்திருப்பார் என்பது எனது கருத்து.

எது எவ்வாறிருப்பினும், ஞானசார தேரர் முதற்தடவையாக 2012ல் ஹலால் எதிர்ப்பு போராட்டத்தினை தொடர்ந்தே பிரபல்யம் அடைய ஆரம்பித்தார். ஞானசார தேரர் காட்டுமிராண்டித்தனமான பேச்சு முறையில் வன்முறை மிக்க ஒருவராக செயல்படுவதினாலேயே எல்லோரினதும் அவதானத்தை பெற்றார். சகல தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் ஒளிபரப்பட்ட இக்காட்டுமிராண்டித் தேரரின் பெயரைக்கூட அப்போதைய ஊடகவியலாளர்கள் சரியாக தெரிந்திருக்கவில்லை. யுத்த சமயத்தில் பிரிவினைவாதத்திற்கெதிராக மக்களை விழிப்பூட்டி அவர்களை ஒன்றுபடுத்தியதன் மூலம் பெரும்பாலான தேரர்கள் பிரபல்யம் அடைந்த போதிலும் கலகொடஅத்தே ஞானசார என்னும் தேரர் தொடர்பில் எவரும் அறிந்திருக்கவில்லை. ஞானசார தேரர் மக்களுக்கு உபதேசம் செய்தமையினாலோ, பிரித் ஓதியமையினாலோ, எழுத்தாளராக உள்ளமையினாலோ, பௌத்த அறிஞர் ஒருவராக இருக்கின்றமையினாலோ புகழ் பெறவில்லை. வன்முறையினாலும் காட்டுமிராண்டித்தனத்தினாலுமே அவர் இன்று புகழை பெற்றுள்ளார். இலங்கையில் மாத்திரமல்ல, முழு உலகிலும் குடிபோதையில் வாகனம் செலுத்தி, விபத்தொன்றை ஏற்படுத்தி, நீதிமன்றில் தவறை ஒப்புக்கொண்ட, உபசம்பதா பெற்ற, ஒரேயொரு தேரராக இவர் இருப்பதின் மூலமாவது பிரபல்யம் அடைந்திருக்கவில்லை.

2012 வரையில் எவரும் அறிந்திருக்காத இத்தேரருக்கு 2011 முதல் அமெரிக்காவிற்குள் விரும்பியவாறு நுழைவதற்கும் வெறியேறுவதற்கும் முடியுமான வகையில் ‘மல்டிபல் ரீ என்ட்ரீ வீசா’ வழங்கப்பட்டிருந்தது. 1980களில் என்.சத்தியேந்திரன் போன்ற தமிழ் பிரிவினைவாதிகளுக்கும் அமெரிக்காவினால் இவ்வாறான வீசா வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நாட்டின் தேரர் சமூகத்திற்குள்ளால் தாக்கத்தை ஏற்படுத்தாமல் தமது குறிக்கோளை நிறைவேற்றிக்கொள்ள முடியாது என மேற்கத்தேய சக்திகள் 2002ம் ஆண்டாகும் போது புரிந்து வைத்திருந்தது. முன்னர் நோர்வே அரசாங்கத்தின் அரச சார்பற்ற அமைப்பொன்றின் பிரதானியாக செயற்பட்ட குமார் ரூபசிங்க அவர்கள், நோர்வே 2004 சுனாமி அனர்த்தத்தை சாதகமாக பயன்படுத்தி, பௌத்த விகாரைகளை புனர்நிர்மாணம் செய்வதற்கான நிதியுதவியை அளித்து ஆரம்பத்தில் பிக்குமார்கள் மத்தியில் தாக்கமொன்றை ஏற்படுத்திக்கொள்ள முனைந்ததாக என்னிடம் தெரிவித்தார். இச்செயற்திட்டத்தின் ஓர் அங்கமாகவே ஞானசார தேரரும் நோர்வே சுற்றுப்பயணத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார் என்பது தெளிவாகிறது.

எவராலும் அசைக்க முடியாத பெருந்தூணாக காணப்பட்ட ராஜபக்ஷ அரசாங்கத்தை முதலில் நிலைகுழையச் செய்தது பொதுபலசேனாவாகும். பொதுவாக வாக்குச் சாவடிக்குச் செல்லாத கிறிஸ்தவ, முஸ்லிம் மக்களை கூட வாக்களிக்கச் செல்ல வைத்து, ராஜபக்ஷ அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வாக்களிக்க வைத்தவர் ஞானசார தேரராவார். 2015 ஜனவரி 08 ஆட்சி மாற்றத்தினைத் தொடர்ந்தே மேற்படி திட்டம் அம்பலமானது. 2015 மார்ச் மாதமளவில் தேசிய ஹெல உறுமயவின் மிக முக்கிய செயற்பாட்டாளர்களுள் ஒருவரான அசோக அபேகுணவர்தன அவ்வாட்சி மாற்றம் இடம்பெற்ற முறை தொடர்பில் ‘யுக மாற்றம்’ என்னும் பெயரில் நூலொன்றை வெளியிட்டுள்ளார். ராஜபக்ஷ அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கு தேசிய ஹெல உறுமய, பொதுபலசேனாவை பயன்படுத்திய விதம் தொடர்பாக அந்நூலில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஹெடிகல்லே விமலசார தேரர் தந்திரோபாயமான முறையில் தேசிய உறுமயவிலிருந்து நீக்கப்பட்டு பொதுபலசேனாவில் இணைக்கப்பட்டார். தேசிய ஹெல உறுமயவிலிருந்து விலகியிருப்பதாக விமலசார தேரர் காட்டிக்கொண்டாலும் ஹெல உறுமயவின் உள்ளக உயர் மட்டப் பேச்சுவார்த்தைகளில் இவர் தொடர்ந்தும் பங்குபற்றி வந்துள்ளார். ஞானசார தேரருக்கு அருகிலிருந்து அவரை வழிநடத்துவதே விமலசார தேரரின் பணியாக காணப்பட்டது. 2014இல் பல அரசியல் மாற்றங்கள் தொடர்பில் தேசிய ஹெல உறுமய அவதானம் செலுத்தியது. இதில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சம்பிக்க ரணவக்க சிங்கள பௌத்த வேட்பாளராக களமிறங்கி மஹிந்த ராஜபக்ஷவினது வாக்கு வங்கியை சிதைத்து எதிராளிக்கு வெற்றியை தேடிக்கொடுப்பதற்குரிய பேச்சுவார்தையும் இடம்பெற்றுள்ளது. அவ்வேளையில் பொதுபலசேனாவின் பங்களிப்பு சம்பிக்கவுக்கு மிக முக்கிய அதிஷ்டமாக அமையும் என்றும் கலந்துரையாடப்பட்டுள்ளது. பொதுபலசேனா ராஜபக்ஷாக்களின் உருவாக்கம் என்பதாக ஒரு சிலர் நினைத்துக்கொண்டிருந்தாலும் உண்மையில் அது, ராஜபக்ஷாக்களுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள தேசிய ஹெல உறுமயவின் கைப்பாவையொன்றாகும்.
எதிராளியை அழிப்பதற்குரிய இலகுவான வழிமுறை வெளியால் தாக்குவதல்ல, உள்ளால் அழிப்பதாகும் என்கின்ற கூற்றுக்கு இதன் மூலம் புதியதொரு அர்த்தம் கிடைக்கிறது. கிறிஸ்தவ, முஸ்லிம் வழிபாட்டுத்தலங்களை தாக்கி, அம்மக்களின் வாக்குகளை முழுமையாக மறுபக்கத்திற்கு அனுப்பியதன் பின்னர் தேசிய ஹெல உறுமயவும் ராஜபக்ஷாக்களை விட்டு விட்டு மறுபக்கத்திற்குச் சென்றது. எனினும் பொதுபல சேனா தொடர்ந்தும் ராஜபக்ஷாக்களுடன் இருப்பதாக காட்டிக்கொண்டது. சம்பிக்க சென்றதன் பின்னர், ‘சம்பிக்க அண்ணா! எங்களை ஏன் விட்டுச் சென்றீர்கள்? என ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் ஞானசார தேரர் நகைச்சுவையாக கேள்வியெழுப்பியது இங்கு நினைவுகூறத்தக்கது.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் பொதுபலசேனாவை வழிநடாத்தி வந்த ஹெடிகல்லே விமலசார தேரர் பொ.ப.சேனாவிலிருந்து விலகி மீண்டும் தேசிய ஹெல உறுமயவில் இணைந்துகொண்டார். தற்பொழுது இவர் தேசிய ஹெல உறுமயவின் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆட்சி மாற்றத்திற்கு அயராது உழைத்தமைக்காக வேண்டி ஞானசார தேரருக்கும் பரிசொன்றை வழங்க வேண்டும் என ராஜித சேனாரத்ன ஒருதடவை என்னிடம் தெரிவித்திருந்தார். 2017 ஜூன் 16ம் திகதி பொதுபலசேனா நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில், ஞானசார தேரர் முன்பு தேசிய ஹெல உறுமயவின் செயற்பாட்டளராக இருந்ததாகவும் அவரை சம்பிக்க ரணவக்கவும் அதுரலியே ரத்ன தேரருமே வன்முறைகளில் ஈடுபடுத்தியதாகவும் சம்பிக்கவின் ஒப்பந்தமொன்றை நிறைவேற்றியமையினாலேயே அவர் இன்றுள்ள நிலைமைக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் அவ்வமைப்பின் நிறைவேற்றதிகாரி டிலன்த விதானகே ஒப்புக்கொண்டார்.
ராஜபக்ஷ ஆட்சிக்காலப்பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வன்முறைகளுக்கு மத்தியில் தேசிய ஹெல உறுமயவினால் ஞானசார தேரரை நெறியாழ்கை செய்வதற்கு அனுப்பப்பட்டிருந்த ஹெடிகல்லே விமலசார தேரரின் செயற்பாடுகளை விவரித்த டிலன்த விதானகே, ஞானசார தேரர் ஊடகவியலாளர் சந்திப்பில் கூற வேண்டிய விடயங்களை அவர்கள் கஷ்டப்பட்டு எழுதிக் கொடுத்தாலும் மேசையில் அமர்ந்த பின்னர் விமலசார தேரர், ஞானசாரவின் அருகில் உட்கார்ந்து பேச வேண்டிய விடயங்களை இரசகியமாக சொல்லிக் கொடுத்ததாகவும் இறுதியில் அவர்கள் எழுதிக்கொடுத்த விடயங்கள் ஒருபுறத்தில் இருக்க, விமலசார தேரருக்கு அவசியமான விடயங்களை ஞானசார தேரர் கூறியதாகவும் தெரிவித்தார்.
தேசிய ஹெல உறுமய கட்சி ராஜபக்ஷ ஆட்சியை மாற்ற முன்வந்தது சம்பிக்கவின் அமைச்சுப் பதவி மாற்றப்பட்டமை தொடர்பில் பலிவாங்குவதற்கோ அல்லது அவர்களுக்கிடையில் காணப்பட்ட ஏனைய முரண்பாடுகளை தீர்த்துக்கொள்வதற்கோ அல்ல என்பது எனது கருத்து. ராஜபக்ஷ அரசாங்கத்தை தோற்கடித்து ராஜபக்ஷாக்களை சிறையில் தள்ளி, அவர்களை அரசியலை விட்டும் துடைத் தெரிந்து தேசியவாத அமைப்பின் தலைமைத்துவத்தை தேசிய ஹெல உறுமயவுக்கு பெற்றுக்கொள்வதே அவர்களது எதிர்பார்பார்பாக இருந்தது. யுத்தத்தை வெற்றிகொண்டமை, வெளிநாட்டு சக்திகளுக்கு அடிபணியாமை, தேசிய வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யாமை போன்ற விடயங்களினால் ராஜபக்ஷாக்கள் பெற்றிருந்த தேசியவாத பிம்பத்தை அவர்கள் மோசடிமிக்க முறையில் பணம் சம்பாதிப்பதாக பிரசாரத்தை கொண்டு செல்வதின் மூலம் சிதைத்துவிடுவதே சம்பிகவின் தந்திரோபாயமாக உள்ளது.
அது பெரும்பாலும் வெற்றியளித்ததென்றே கூற வேண்டும். ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து ராஜபக்ஷாக்களை சிறைபிடிக்க வேண்டும் என அதிகமாக குரலெழுப்பியவர் சம்பிக்க ரணவக்க ஆவார். ராஜபக்ஷாக்களை அரசியலிலிருந்து ஒதுக்கி விடுவது அவருடைய அடுத்த கட்ட அரசியல் முன்னெடுப்புக்கு அத்தியாவசிய விடயமாக காணப்பட்டது. எனினும் ஆட்சி மாற்றத்தினை தொடர்ந்து எதிர்பார்த்த அளவில் சகல விடயங்களும் அரங்கேறவில்லை. ராஜபக்ஷாக்கள் இழைத்ததாக கூறிய மோசடிகள் அம்பலமாகவில்லை. நினைத்தவாறு அவர்களை சிறையில் தள்ளவும் முடியவில்லை. தேவதத்தன் புத்தரை கொலை செய்து புத்தராக முயற்சித்தது போல் ராஜபக்ஷாக்களை அரசியலிலிருந்து துடைத்தெரிந்து விட்டு தேசியவாத அமைப்பின் தலைமைத்துவத்தை பெற்றுக் கொள்ளும் தேசிய ஹெல உறுமயவின் கனவு சிதைந்துபோயுள்ளது. சம்பிக்க ரணவக்க நல்லாட்சி அரசின் பக்கம் தாவியது அங்கு நீண்ட காலம் நிலைத்திருப்பதற்கல்ல. ராஜபக்ஷ அரசாங்கத்தை மாற்றியதன் பின்னர் அவர்களை அரசியலிலிருந்தே ஒதுக்கிவிட முடிந்திருப்பின் சம்பிக்க ரணவக்க நல்லாட்சி அரசிலிருந்து விலகி இன்று எதிர்கட்சிக்கு தாவியிருப்பார்.
இத்திட்டம் செயற்படாததினால் தேசிய ஹெல உறுமயவிற்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. 2015 ஆகஸ்ட் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் போட்டியிட நேர்ந்தமையினால் அவர்களின் பிம்பம் களைய ஆரம்பித்தது. அவர்கள் இன்று நிச்சயமற்ற நிலையில் உள்ளார்கள். சம்பிக்க மாத்திரமே தேர்தலின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினராக உள்ளார். ராஜபக்ஷ அரசை வீழ்த்தியதில் வழங்கிய பங்களிப்புக்காக வேண்டியே அவருக்கு கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐதேகா ஆதரவாளர்கள் வாக்களித்தார்கள். எனினும் நிறைவேற்றதிகாரம் மிக்க ஜனாதிபதிப் பதவியை நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐதேகாவின் தலைவருக்கு நிறைவேற்றதிகாரமிக்க பிரதமராவதற்கான வாய்ப்பை இல்லாமல் செய்தவர் சம்பிக்க. இதனால் அடுத்த தேர்தலில் ஐதேகா ஆதரவாளர்கள் அவருக்கு விருப்பு வாக்கினை அளிப்பார்களா என்பது சந்தேகத்திற்கிடமாக உள்ளது. இவர் ஐதேகாவின் மையப்புள்ளியும் இல்லை. தேர்தல் முறை மாற்றப்பட்டு மீண்டும் தொகுதிவாரி முறை அறிமுகப்படுத்தப்பட்டால் சம்பிக்க ரணவக்க எப்படியும் அடுத்த தேர்தலில் தோழ்வியை தழுவிக்கொள்வார். இதனால் தேசிய ஹெல உறுமய மீண்டும் தனது எதிர்கால இருப்புக்கான திட்டமிடலில் உள்ளது.
இந்நிலையில் மீண்டும் ஒருமுறை பொதுபல சேனா செயற்பாட்டுக் களத்தில் குதித்திருப்பது, சிங்கள பௌத்த வாக்கு அடிப்படையில் ஒரு பகுதியையேனும் தேசிய ஹெல உறுமயவிற்கு உடைத்துக்கொடுக்கும் நோக்கிலாகும் என்பது தெளிவானது. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் சம்பிக்க ரணவக்க மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவாக வேண்டுமெனில் ஐதேகா ஆதரவு வாக்குப் பலத்திற்கு மேலதிகமான பிறிதொரு வாக்கு அடிப்படையும் அவருக்கு காணப்பட வேண்டும். பொதுபலசேனாவை மீண்டும் நடுவீதிக்கு இறக்கி முஸ்லிம்களின் பள்ளிவாயல்களுக்கும் வியாபார நிலையங்களுக்கும் தாக்குதல் நடாத்தி, முஸ்லிம் தீவிரவாதிகள் வடகிழக்கு மாகாணங்களில் தொல்பொருள் முக்கியத்தும் மிக்க காணிகளை அபகரிக்கிறார்கள் என்கின்ற கருத்துக்களை பரப்பும் போது நாட்டிலுள்ள ஒரு சிலரை தம்பக்கம் திசைதிருப்பிக் கொள்ளலாம் என்பது அவர்களது நம்பிக்கையாக உள்ளது. தற்போதைய அரசின் கீழ் தமிழ் முஸ்லிம் தலைமைகள் முன்பிருந்ததை விட பலம் பெற்றுள்ளார்கள். அதற்கான காரணம், ராஜபக்ஷ அரசினை தோற்கடித்து, சிங்களப் பெரும்பான்மையின் விருப்பமின்றி, தமிழ், முஸ்லிம் பெரும்பான்மையினால் மைத்திரிபால சிறிசேனா ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளமையாகும். பொதுபலசேனாவை ஈடுபடுத்தி சகல கிறிஸ்தவ, முஸ்லிம் வாக்குகளையும் சிறிசேனவுக்கு ஒன்றுதிரட்டிக்கொடுத்த பெருமை தேசிய ஹெல உறுமயவினைச் சாரும். தற்பொழுது இவர்களாலேயே ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட அந்நிலைமையிலிருந்து பிரயோசனம் பெற்று சிங்கள வாக்குகளை உடைப்பதற்கு முயற்சிப்பதன் மூலம், நாம் இலங்கை அரசியலில் இதற்கு முன்னர் கண்டிராத வகையில், மிகவும் சூரர்களாக, கலகத்தை ஏற்படுத்தும் சூழ்ச்சிக்காரர்களே இவர்கள் என்பது எல்லோருக்கும் தெளிவாகிறது.
சிங்களவர்கள் தொடர்பில் நல்லாட்சி அரசிலோ, ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியிலோ ஒருவரும் குரல் எழுப்புவதில்லை என்றும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் அணுசரனையில் வடமாகாணத்தில் வனவிலங்கு சரணாலயங்கள் அழிக்கப்பட்டு அங்கு முஸ்லிம்கள் குடியமர்த்தப்படுவதாகவும் கிழக்கு மாகாணத்தில் அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பில் தொல்பொருள் முக்கியத்துவமிக்க நிலங்கள் சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்டு வருவதாகவும் அப்பகுதிகளிலுள்ள அரசாங்க அதிகாரிகள் அச்சத்தின் காரணமாக எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருப்பதாகவும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஊழல் மோசடிகளை கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் அச்சப்படுவதாகவும் தெரிவிக்கின்ற போது அதைச் செவிமடுக்கின்றவர்கள் அவை உண்மையென்றே நினைப்பர். விக்னேஷ்வரனும் சிவாஜிலிங்கமும் வடக்கில் தீவிரவாத கருத்துக்களை தெரிவிக்கும் போது மௌனமாக இருக்கின்ற அரசாங்கம், ஞானசார தேரர் முஸ்லிம் தீவிரவாதம் குறித்து கதைக்கின்ற போது கைது செய்ய முயற்சிப்பது சிங்களவர்களுக்கு வேறுபாடு காட்டும் செயலல்லவா என நினைப்பார்கள். எனினும் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் பலம்பெரும் அளவிற்கு களம் அமைத்தது பொதுபலசேனாவும் தேசிய ஹெல உறுமயவும் இணைந்து செய்த செயற்பாடுகள் என்பதை பகுத்தறிவுள்ள எல்லோரும் புரிந்திருப்பர்.
முஸ்லிம் எதிர்ப்பை மேலெழுப்பி சிங்கள வாக்குப் பலத்தை உடைக்கும் திட்டத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பங்களித்துள்ளார் என்பது விளங்குகிறது. நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதிமுறையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கும் இரண்டாவது தடவையாக ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடுவதற்கும் மைத்திரிபால எதிர்பார்த்துள்ளார் என்பது தெளிவான விடயம். இவரது ஆளுகையின் கீழ் தமிழ், முஸ்லிம் தலைமைகள் பலமடைந்துள்ள காரணத்தினால் மீண்டும் அவருக்கு தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெறுவது அவ்வளவு கடினமான விடயமாக அமையாது எனினும், சிங்கள வாக்குகள் அதிகளவில் எதிரணி வேட்பாளருக்கு கிடைத்தால் அவருக்கு வெற்றிபெறுவது கடினமாக அமையும். இதனால் சிங்கள வாக்குகளில் ஒரு பகுதி ஒருங்கிணைந்த எதிர்கட்சியல்லாத ஏனைய அணியொன்றிற்கு செல்லுமாக இருந்தால் அது அவருக்கு சாதகமாக அமையும். ஜனாதிபதிக்கு தெரியாமல் அமைச்சர் ஒருவர் ஞானசார தேரரரை மறைத்துக்கொண்டிருக்க முடியாது. அத்தோடு ஜனாதிபதியின் நேரடி தலையீடின்றி, ஞானசார தேரருக்கு ஒரு நாளைக்குள் 3 வழக்குகளில் பிணை பெற முடியாது. எனவே இங்கு முழுமையானஅரசியல் தேவையொன்றிற்கமைய இடம்பெற்ற விளையாட்டொன்றாகவே இதனை நோக்க வேண்டியுள்ளது.
2017 ஜூன் 20ம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மாகல்கந்தே சூதத்த தேரர், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஞானசார தேரர் போட்டியிடவுள்ளதாக தெரிவித்தார். எனவே இவர்கள் எதற்குத் தயாராகின்றார்கள் என்பது விளங்க வேண்டும். 2015இற்கு முன்னர் கிறிஸ்தவ, முஸ்லிம் வாக்குகளை மறுபுறம் திருப்பி ராஜபக்ஷவை தோற்கடிக்க நடவடிக்கை எடுத்ததன் பின்பு, தற்பொழுது சிங்கள வாக்குகளைச் சிதைத்து தேசியவாத தலைமையொன்று மீண்டும் அதிகாரத்திற்கு வருவதைத் தடுக்கும் ஒப்பந்தத்தை கனகச்சிதமாக நிறைவேற்றி வருகிறார்கள். 2015 ஆகஸ்ட் பொதுத்தேர்தலில் இவர்கள் தனியாக போட்டியிட்டது எதிரணி வேட்பாளர்களின் வாக்குகளை உடைப்பதற்கேயன்றி வேறு எதற்கு?
வேறு எவரும் சிங்களவர்கள் பற்றிப் பேசுவதில்லை என்றும் தாம் மாத்திரமே சிங்களர்கள் தொடர்பில் கதைத்து வருவதாகவும் பொதுபலசேனா தெரிவிக்கின்றது. பொதுபலசேனாவின் செயற்பாடுகளினால் சிங்களவர்கள் பலம்பெற்றுள்ளார்களா இல்லாவிட்டால் பலவீனமுற்றுள்ளார்களா என்பதை சிங்களவர்கள் தமக்குள் கேள்வியெழுப்பிக்கொள்ள வேண்டும். பொதுபலசேனா உருவாக்கப்பட்ட 2012ம் ஆண்டு முதல் இன்று வரையில் அவர்கள் பேசிவந்த ஒரு பிரச்சினைக்காவது தீர்வு கிடைத்துள்ளதா? இல்லாவிட்டால் அப்பிரச்சினை இருந்த நிலையையும் விட அதிகரித்துள்ளதா? 2015 ஜனவரி ஆட்சி மாற்றத்தினைத் தொடர்ந்து சிங்களவர்கள் அவல நிலைக்கு தள்ளப்பட்டார்கள். ராஜபக்ஷ ஆட்சிக் காலப்பகுதியில் வாயை மூடிக்கொண்டிருந்த விக்னேஷ்வரன், சிவாஜிலிங்கம் போன்றோர் இராணுவத்தினரை வடக்கிலிருந்து விரட்டிவிட வேண்டும் என்றும் ஜனாதிபதிக்கு கூட ஒரு தடவை வடக்கிற்கு வர இடமளிக்காமை தொடர்பிலும் பேசுகிறார்கள். முஸ்லிம் தலைவர்களுக்கும் ராஜபக்ஷ ஆட்சியின் கீழ் ஒருநாளும் கிடைக்கப்பெறாத அதிகாரம் இவ்வரசாங்கத்தின் கீழ் கிடைத்துள்ளது. இதனாலேயே ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2005ம் ஆண்டு முதல் ராஜபக்ஷ அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தது. இன்று அவர்களது சகல கனவுகளும் நனவாகியுள்ளது. பொதுபலசேனாவின் தலையீட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆட்சி மாற்றத்தின் மூலமே இந்நிலை ஏற்படுத்தப்பட்டது.
ஆரம்பத்தில் பொதுபலசேனா ஹலால் சான்றிதழ் பிரச்சினையை மேலெழுப்பியிருந்தாலும் முன்பு எப்போதும் இல்லாத வகையில் இன்று பலமான அமைப்பில் ஹலால் சான்றிதழ் வழங்கப்ட்டு வருகின்றது. அவர்கள் கூரகல தொடர்பில் கதைத்தார்கள். ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின்பு கூரகல விவகாரம் பழைய நிலைக்கு சென்றுள்ளது. முஸ்லிம் வர்த்தக நிலையங்களை பகிஷ்கரிக்க வேண்டும் என பொ.ப.சேனா கூக்குரலிட்டது. முஸ்லிம் அரசியல்வாதிகள் பலமடைந்ததனைத் தொடர்ந்து முஸ்லிம் வியாபாரிகளும் முன்பை விட பலமடைந்துள்ளார்கள். பொ.ப.சேனா முஸ்லிம்களின் வியாபார நிலையங்களுக்கு தாக்குதல் நடாத்தியமையினால் இன்று இந்நாட்டின் முஸ்லிம் மக்களுக்கு சர்வதேசத்தின் தயவும் கிடைத்துள்ளது. பொ.ப.சேனா எதைச் செய்தாலும் அது சிங்களவர்களை கீழே தள்ளிவிடுவதற்கும் சிங்களவர்களின் எதிரிகளை பலப்படுத்துவதற்குமே தூண்டுகோளாய் அமைகின்றது என்பதை சிங்களவர்கள் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். இந்நாட்டிலுள்ள முஸ்லிம்கள் அரபு நாட்டிலுள்ளவர்களை விடவும் தந்திரமானவர்கள். அவர்கள் பதற்றத்துடன் முடிவுகளை எடுப்பதில்லை. அவர்களது கோஷ்டிவாதத்திற்கும் தீவிரவாதத்திற்கும் பொறுமையுடனும் மதிநுட்பத்துடனுமே பதிலளிக்க வேண்டும். சிங்கள தலைவர்கள் கதைக்காத விடயங்கள் தொடர்பில் பொ.ப.சேனா கதைப்பதாக கூறி அவர்கள் முஸ்லிம் தீவிரவாதிகளை இருந்த நிலையையும் விட பலப்படுத்தியுள்ளார்கள்.
இலங்கையை பிளவுபடுத்தக் காத்திருக்கின்ற தமிழ் டயஸ்போராக்கள் மாத்திரமல்ல அத்திட்டத்திற்கு தூண்டுதல் அளிக்கும் மேற்குலக நாடுகளும், இலங்கையை தனது காலணித்துவத்திற்கு கீழ் கொண்டு வரும் எதிர்பார்ப்பிலுள்ள இந்தியாவும், ராஜபக்ஷ அரசை தோற்கடித்து தமது அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்ளும் முனைப்பில் உள்ள சந்தர்ப்பத்தில் அவ்வரசாங்கத்தை நிலைகுழையச் செய்து, எதிரிகளுக்கு நாட்டை காட்டிக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதின மூலம் சம்பிக்க ரணவக்க, அதுரலிய ரத்ன தேரர், ஞானசார தேரர் போன்றோர் தாங்கள் எவ்வினத்தை சார்ந்தவர்கள் என்பதை முழு உலகிற்கும் காண்பித்துள்ளார்கள். அதுரலிய மற்றும் ஞானசார தேரர்கள் கடந்த காலப்பகுதியில் சம்பிக்க ரணவக்க கூறிய விடயங்களை செய்வார்கள் என்றால் பொ.ப.சேனா அரசியலிலிருந்து ஒதுங்குவதற்கு தயார் என்பதாக மாகல்கந்தே சூதத்த தேரர் 2017 ஜூன் 20ம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார். இவ்வனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பது அவர்கள் ஒரே மாதிரியான அரசியலை செய்வதின் மூலம் தெளிவாகிறது.
இச்சகல விடயங்களிலும் ஞானசார தேரர் வேறு நபர்களால் வழிநடாத்தப்படுகின்ற ஒருவர் மாத்திரமேயாவார். ஞானசார தேரர் ஹிருணிகாவின் சாதனையை தகர்த்து பிணை பெறும் போது அதற்காக வேண்டி முன்னின்ற உலப்பனே சுமங்கல தேரர், நல்லாட்சி முகாமில் மிகப் பிரபலமான ஒருவர். ஞானசார தேரர் முன்னர் ஹெடிகல்லே விமலசார தேரரினால் நெறியாழ்கை செய்யப்பட்டார் என நாம் முன்பு கூறினோம். 2012ல் ஞானசார தேரர் நோர்வேயிலிருந்து வந்ததன் பின்னர் ஹலால் எதிர்ப்பு போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்பு அமைச்சர் ராஜித சேனாரத்னவுடனும் கலாநிதி குமார் ரூபசிங்கவுடனும் இணைந்து அதிகாரப் பகிர்வு மற்றும் நல்லிணக்கம் தொடர்பானதொரு நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டிருந்ததாகவும் அதற்காக வேண்டி பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் பிக்குமார் சம்மேளனமொன்றை ஏற்பாடு செய்வதற்கும் ஞானசார தேரர் உடன்பட்டிருந்ததாகவும் ராஜித சேனாரத்ன என்னிடம் தெரிவித்திருந்தார். அத்தகவல் அனைத்தும் ‘த ஐலண்ட்’ பத்திரிகையில் பிரசுரமாகியது.
ஞானசார தேரருக்கு அவசியமானவற்றை கொடுத்தால் எவருக்கும் அவரால் பிரயோசனம் பெற முடியும். கிழக்கு மாகாணத்திற்கு சென்று தொல்பொருள் அழிவைப் பற்றி மாத்திரம் கதைக்காமல் ‘அல்லாஹ்கே லப்ப’ தொடர்பாகவும் கதைக்கின்ற போது முழு உலகிற்கும் ‘லப்பே’ என்னும் கதையே பரவுமே ஒழிய குறிப்பிட்ட விடயமல்ல. பொதுபலசேனா கையடித்த சகல விடயங்களுக்கும் அதுவே நடந்தது. பொதுபலசேனாவின் சகல செயற்பாடுகளின் மூலமும் சிங்களவர்களின் எதிரிகளே பலம்பெருகிறார்கள் என்பதை சகல சிங்களவர்களும் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். ஞானசார தேரர் காவியுடையை உயர்த்திக்கொண்டு தகாத வார்த்தைகளை கூறுகின்ற போது அதனால் தூண்டப்படும் ஆவேசமுடையோருக்கும் புரிந்துணர்வின்மையினால் இவ்வாறான அமைப்புக்கள் மீது கவரப்படுகின்ற இளைஞர்களுக்கும் இங்கு ஒரு விடயத்தை குறிப்பிட்டாக வேண்டும். சிங்களவர்கள் புத்தியை பயன்படுத்தாவிட்டால் முழு நாடும் இனமும் அழிவடையும்.

1 COMMENT

  1. இந்தக் கட்டுரை C.A.Chandraprema வால் எழுதப்பட்டதூ. அவர்தான் Gota’s War என்ற புத்தகத்தை எழுதி, யுத்தத்தில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் பங்களிப்பை மறைத்து கோத்தாபய / மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்துக்காக பிரச்சாரம் செய்தார். தற்போது பொதுபலசேனா விவகாரத்தில் ராஜபக்ஷவினரின் பங்களிப்பை மறைப்பதற்கு முயற்சித்துக்கொண்டிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here