போராட்டங்களின் முடிவு | Editorial

0
1
Editorial | 409

நாடு மீண்டும் ஐம்பது நாட்களுக்குப் பின்னால் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்திருக்கிறது. அரசியல் கலவரம் காரணமாக நாடு அல்லோலகல்லோலமாய் இருந்த நிலை படிப்படியாக மாறி வருகிறது. மக்களும் தாம் வெளிக்காட்டிக் கொண்டிருந்த நாட்டின் மீதான அக்கறையை அரசியல்வாதிகள் போலவே மறக்கத் தொடங்கிவிடுவார்கள். மீண்டும் அரசியல்வாதிகளின் அராஜகம் நாட்டில் மேலெழும்.

இந்தத் தலைவிதியை இனியாவது மாற்றி புதியதொரு விதி செய்யாவிட்டால் இந்த நாட்டில் மீண்டும் அடிமைகளாக வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாக வேண்டியது தான் விதியாக அமையப் போகிறது. நடந்து முடிந்த அரசியல் கலவரத்தின் போது நாட்டுத் தலைவர்களின் பற்று எங்கே இருக்கிறது என்பதை மக்கள் தெளிவாகக் கண்டு கொண்டார்கள். தமது அதிகாரப் போட்டியினால் நாட்டைச் சீரழித்த தலைவர்கள் மூவருக்குமே நாட்டுப் பற்றை விட தமது பதவியின் மீதான மோகம் தான் அதிகமாக இருப்பதை மக்கள் தெரிந்து கொண்டார்கள். நீதித்துறை சுயாதீனமாகத் தொழிற்படும் பாக்கியம் மட்டும் கிட்டாதிருந்தால் மீண்டும் இந்த நாடு இப்படியானதொரு நிலைக்குத் தள்ளப்படும் வாய்ப்புத் தான் அதிகமாக இருந்திருக்கும்.

இந்த நிலைமையில் இருந்து நாட்டைப் பாதுகாப்பதற்குப் போராடிய சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் பணி மெச்சத்தக்கதாகும். கட்சி பேதங்கள் இன்றி நீதிக்காகவும் ஜனநாயகத் தைப் பாதுகாப்பதற்காகவும் அயராது உழைத்த இவர்களின் பணி அர்த்தமுள்ளதாக அமைய வேண்டுமானால், இந்தப் பணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும். ஏனெனில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம் நீதியான இலங்கையை வேண்டி நின்ற மக்களின் தேவையை நிவர்த்திக்கின்ற மாற்றமல்ல. நாடு முழு வதும் நீதியை மதிக்கும் மக்கள் ஒன்று திரண்டு கூட்டங்களை யும் பேரணிகளையும் நடத்தியது ரணில் விக்கிரமசிங்கவுக்கோ, மஹிந்த ராஜபக்ஷவுக்கோ, மைத்திரிபால சிரிசேனவுக்கு அதிகா ரத்தை வழங்கி அழகு பார்ப்பதற்கல்ல. இவர்கள் எவருமே நாட்டின் மீது பற்றில்லாதவர்கள் என்ற உண்மையை மக்கள் உணர்ந்த பின்னாலும் தற்போதைய இந்த மாற்றத்துடன் தமது போராட்டத்தை சுருக்கிக் கொள்வார்களாக இருந்தால் அது சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களும் மக்களை ஏமாற்றியதாக அமையும். இந்த நிலை மக்களை விரக்தி நிலைக்கு இட்டுச் சென்று நாட்டை மீட்பதற்கு எந்தச் சக்திகளும் முன்வராத ஒரு கையறு நிலையைத் தோற்றுவிக்கும்.

எனவே சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களின் அர்ப்பணிப் புடனான பணி தொடர வேண்டும். இடைக்காலத்தில் இவர்கள் மேற்கொண்ட செயற்பாடுகளினால் மக்கள் மத்தியில் துளிர் விட்டிருக்கின்ற நம்பிக்கையை கருகச் செய்துவிடாது இவர்கள் பாதுகாக்க வேண்டும். மக்கள் இனி அரசியல்வாதிகளை நம்புவதற்குத் தயாராக இல்லை. அவர்கள் வழங்குகின்ற வாக்குறுதிகளுக்குப் பெறுமானம் வழங்குவதற்குத் தயாராக இல்லை. அவர்கள் நம்பக் கூடியதாக இருந்தது அரசியல் யாப்பினூடான காப்பீடுதான். அதனைக் கூட மீறுகின்ற அளவுக்கு நாட்டை ஆட்சி செய்பவர்கள் வந்திருக்கிறார்கள். இதனால் மக்களின் நம்பிக்கையின் அத்திவாரமே தகர்க்கப்பட்டிருக்கிறது. முன்னொரு பொழுதும் இல்லாத அளவுக்கு மக்கள் அரசியல் யாப்பைப் பற்றி அறிந்து கொள்வதற்கும் இந்த யாப்பு நெருக்கடி வழி வகுத்திருக் கிறது. இருந்தாலும் சட்டவசனங்களையும் வார்த்தை ஜோடனைகளையும் வைத்து மக்களைத் திசை திருப்புவதற்கான வேலைகளும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

இந்த நிலை தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வுகளை வழங்கி நீதியின் பால் மக்களைக் கட்டி இழுப்பது சிவில் அமைப்புக்களின் பொறுப்பாகும். இதற்கான நல்லதொரு அவகாசம் மக்க ளுக்கு மத்தியில் உருவாகியிருப்பதை இந்த நிறுவனங்கள் பயன் படுத்திக் கொள்ள வேண்டும். மக்கள் இதுபோன்ற விடயங்களை இலகுவில் மறந்து விடக் கூடியவர்கள். ஆகவே இடை விடாத தொடர்ச்சியான முயற்சி மக்களுக்கு மத்தியில் நடக்க வேண்டும்.

சோபித தேரர் தலைமையிலான நீதியான சமுதாயத்துக்கான இயக்கம் ஒருவகையில் சிவில் சமூகத்திடையே எழுச்சியை ஏற்படுத்தியது. மாற்ற முடியாத சக்தியாகக் கட்டமைக்கப்பட்டிருந்த விம்பங்களை அது உடைத்துக் காட்டியது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் அந்தச் சமூக எழுச்சி மங்கத் தொடங்கியதனால் இன்றைய அரசியல் கலவரம் வரை அது பாதிப்புச் செலுத்தியிருக்கிறது.

அநீதி எப்போதும் கோலோச்சுவதற்குத் தருணம் பார்த்துக் கொண்டே இருக்கிறது. தொடராக முயற்சிக்காத போது அநீதி வென்று விடுகிறது. ஆகவே தொடங்கப்பட்டிருக்கின்ற இந்த நீதிக்கான போராட்டம் ஓயாத அலையாகப் பரிணமிக்க வேண் டும். ஓயாத போராட்டம் தான் நிலையான வெற்றியைத் தரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here