போரினால் பெருகும் அகதிகள்! பாப்பரசர் குறிப்பிடுவது..

0
0

உள்நாட்டுப் போர் மற்றும் தீவிரவாதம், பயங்கரவாதம் போன்ற பல்வேறு காரணங்களால் தமது நாடுகளிலிருந்து வெளியேறி அகதிகளாக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 கோடியை தாண்டியுள்ளதாக ஐ.நாவின் அகதிகளுக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐ.நா.சபை அகதிகள் ஆணையம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையின் படி அவர்களில் 2.2 கோடி மக்கள் போர்கள் மற்றும் அடக்குமுறை காரணமாக அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.

மொத்த அகதிகளில் 20 லட்சத்திற்கும் அதிகமானோர். ஜேர்மெனி, ரஷ்யா, அமெரிக்காவிடம் புகலிடம் கோரி விண்ணப்பித்து நிலுவையில் உள்ளது. முதன் முறையாக வலுக்கட்டாய உலக அகதிகள் மற்றும் புலப்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 6 கோடியைத் தாண்டியுள்ளது. உலக சனத் தொகையில் இது 122 பேரில் ஒருவராகும். இவர்கள் தமது வீடுகள்,    சொத்துக்கள், நாடுகளை இழந்து வெளியேறியுள்ளனர். சுமார் 3.4 கோடி மக்கள் உள்நாட்டு அகதிகளாய் உள்ளனர். இது 2014ம் ஆண்டின் எண்ணிக்கையைக் காட்டிலும் 20 லட்சம் அதிகமாகும். 2015 மார்ச் மாதம் வளைகுடா நாடுகளின் கூட்டுப்படைத் தாக்குதலுக்கு இரையான யெமன் இதில் முன்னணியில் உள்ளது. அந்நாட்டிலிருந்து மட்டும் 933500 பேர் அகதிகளாய் வெளியேறியுள்ளனர்.

முன்பை விட அனைத்தையும் இழந்து தவிப்போர்மீது அன்பும் சகிப்புத்தன்மையும் தயாள குணமும் வெளிப்படுத்தப்படவேண்டும் என்பதையே இத்தகைய திடுக்கிடச்செய்யும் தகவல்கள் நமக்கு உணர்த்துகின்றன. வளர்முக நாடுகளில் உள்ள முரண்பாட்டு அல்லது மோதல் நிகழும் பகுதிகள், அகதிகளை உருவாக்குவதில் பெரும் பங்களிக்கின்றன. கடந்த ஒக்டோபரில் சிரியா, ஈராக், மியன்மார், சோமாலியா, மாலி, லிபியா, சூடான் போன்ற நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்தோர் தொகைக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட கணிப்பீடே இதுவாகும். 2011ம் ஆண்டு தொடங்கிய சிரியாவின் சிவில் யுத்தம் பெரியளவில் புலம்பெயர்வைத் தூண்டியுள்ளது. 2015 ஜூன் வரை 42 லட்சம் சிரிய நாட்டு அகதிகள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். சுமார் 78 லட்சம் மக்கள் அந்நாட்டிலேயே உள்ளக அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். அதாவது, சிரியாவின் மொத்த சனத் தொகையில் அரைவாசிப் பேர் அகதிகளாய் மாறியுள்ளனர். உலக மோதல் வரலாற்றில் குறிப்பிட்ட நாட்டின் அரைவாசி மக்கள் அல்லது அதற்கும் சற்று அதிகமானவர்கள் அகதிகளாய் மாறியிருப்பது இதுவே முதன் முறையாகும்.

ஆப்கான், சோமாலியா, தென் சூடான் என்பனவும் பெருமளவு அகதிகளை உருவாக்கி வருகின்றது. இதில் பாதுகாப்பாக மீண்டும் நாடு திரும்புவோரின் எண்ணிக்கை இந்த ஆண்டின் முதற்பகுதிவரை வெறும் 84 ஆயிரம் மட்டுமே தற்போதைய போர் நிலைகள் நீடித்துச் சென்றால் எதிர்காலத்தில் அகதிகளின் பெருக்கம் இன்னும் அதிகரிக்கும். அவர்கள் மீண்டும் தாயகம் திரும்புவதானால் 30 ஆண்டுகள் எடுக்குமென்று ஐ.நா வின் அறிக்கை எச்சரிக்கின்றது.

சர்வதேச அகதிகள் தொகையை மதீப்பீடு செய்து வரும் ஐ.நா முரண்பாடுகளுக்கு பொறுப்பானவர்களை இனங்காண்பது மற்றும் போர்களை நிறுத்துவது குறித்து காட்டும் கரிசனை போதியதாய் இல்லை.

இன்னொரு புறம் சமாதானத்தை நிலைநாட்ட வேண்டுமென்று பேசிவரும் மேற்கு நாடுகளே உள்நாட்டு சிவில் போர்களுக்கு ஆயுதங்களை விநியோகிக்கின்றன. பாப்பரசர் போன்று, பயங்கரவாதிகளை குற்றம் சாட்டுவதற்கு முன்பாக ஆயுதங்களை உற்பத்தி செய்கின்றவர்களையே தண்டிக்கவேண்டும் தவறினால் 6 கோடி அல்ல அகதிகளின் எண்ணிக்கை அதற்கும் மேலாக உயர்ந்துவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here