மக்களே தீர்ப்புச் சொல்ல வேண்டும்

0
1

 – இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் –

இலங்கை வரலாற்றில் பதியும் மிக மோசமான நாளே அன்றைய தினம். கட்சி பேதமின்றி தாய் நாட்டை நேசிக்கும் சகலரதும் மனமுடைந்துபோன நாளே அன்றைய தினம். சகல இலங்கை வாழ் மக்களையும் அவமானத்திற்கு உட்படுத்திய நாளே அன்றைய தினம். சகல மக்களையும் ஜனநாயகக் கட்டமைப்புக்குள் பிரதிநிதித்துவம் செய்வதற்கு நியமிக்கப்பட்ட ஒரு சில பா.உறுப்பினர்கள் அவர்களது நடத்தைகளின் மூலம் உங்களது வாக்கை இழிவுபடுத்தியுள்ளனர். நாம் இவர்களுக்கு வாக்களித்து பாராளுமன்றம் அனுப்புவது, எங்களது பிரதிநிதிகளாகவும் நாட்டின் அபிவிருத்திக்காகவும், எமது நலன்களுக்காகவும் எமது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக சேவை புரிவதற்காகவுமாகும்.

Image result for karu jayasuriyaஎனினும் அவர்களுடைய கீழ்த்தரமான நடத்தைகளின் காரணமாக அவர்களை எமது பிரதிநிதிகள் என அழைப்பதற்கு வெட்கப்பட வேண்டும். இவ்வாறான நடத்தைகளுக்கு இடமளித்து விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தலைவர்களும் வெட்கப்பட வேண்டும். கோபங்களுக்கு உள்ளாக்கி ஆவேசத்தைத் தூண்டுகின்ற நிலைமைகளின்போது பொறுமையுடனும் பண்பாட்டுடனும் கௌரவமான நடத்தைகளுடனும் செயற்பட்ட மக்கள் பிரதிநிதிகளை நாம் பாராட்ட வேண்டும்.

மனவேதனையைத் தருகின்ற இவ்வாறான சம்பவங்களை மக்கள் கவலையுடனும் பொறுமையோடும் அவதானித்துக் கொண்டுள்ளனர். எமது நாடு ஆசியாவில் பழமை வாய்ந்ததொரு ஜனநாயக நாடு. முன்மாதிரிமிக்க ஜனநாயக நாட்டில் பொதுமக்கள் தங்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்குப் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்வது, தீர்மானம் எடுக்கப்பட வேண்டிய எல்லாச் சந்தர்ப்பங்களிலும் ஒன்று சேர முடியாததன் காரணத்தினாலாகும்.

எமக்காக வேண்டி தீர்மானங்களை எடுப்பதற்கு நியமிக்கப்பட்ட எம்.பிக்கள் நடந்துகொள்வது இப்படியா? இப்படியான நடத்தைகளின் மூலம் அவர்களைத் தெரிவுசெய்த எம்மையே அவமானத்திற்கு உள்ளாக்குகிறார்கள். சகலரும் மதிக்கின்ற முன்னாள் இராணுவ உத்தியோகத்தரும் சிரேஷ்ட பிரஜையுமான சபாநாயகர் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் மிகவும் இழிவானதாகும். கோபத் தாக்குதல் மற்றும் தேவையற்ற நடவடிக்கைகளுக்கு மத்தியில் அவர் துணிவுடன் மேற்கொண்ட சேவையை நாம் பாராட்ட வேண்டும்.

இதன் மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் அதிகமாகும். ஐ.நா. சபையின் செயலாளர் நாயகமாகப் பணியாற்றிய டேக் ஹமர்ஷலின் பணிகள் என் நினைவுக்கு வருகிறது. அவர் ஐ.நா.வின் 15ஆவது பொதுக்கூட்டத் தொடரில் உரையாற்றிய விடயங்கள் என் நினைவுக்கு வருகிறது. டேக் ஹமர்ஷலுக்கு முன்பு அக்கூட்டத் தொடரில் பேசிவிட்டுச் சென்ற சோவியத் யூனியனின் ஜனாதிபதி குசேவ், ஹமர்ஷல் பதவி விலக வேண்டும் என தெரிவித்தார். அதற்குப் பதிலளிக்கும் வகையில் டேக் ஹமர்ஷல் ஆற்றிய உரையின் ஒரு பகுதியை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

“ஐக்கிய நாடுகள் சபை தேவைப்படுவது பலம் பொருந்திய நாடுகளின் பாதுகாப்புக்காக வேண்டியல்ல. அது ஏனைய நாடுகளுக்கே அவசியப்படுகிறது. இந்நாடுகளின் நலனுக்காக எனது சேவை அவசியம் என அவை கருதும் வரையில் நான் பதவி துறக்க மாட்டேன். பதவியில் இருப்பது இலேசான விடயமல்ல. பலம் பொருந்திய நாடுகளுக்குத் தலைசாய்ப்பது இலகு. அந்நாடுகளின் அதிகாரங்களுக்கு எதிராக துணிவுடன் செயற்படுவது இலகுவான விடயமல்ல. ஐக்கிய நாடுகள் சபை தமது பாதுகாப்புக்காக வேண்டியுள்ள ஒரே நிறுவனம் என்பதாகக் கருதும் நாடுகள், நான் இன்னும் சேவையில் நீடிக்க வேண்டும் என எதிர்பார்க்கும் எனில் நான் இன்னும் பதவியில் நீடிப்பேன்”

அவரது இக்கருத்திற்கு சபையில் பலத்த கரகோசம் கிடைத்தது. கொங்கோ நெருக்கடியை தீர்ப்பதற்கு அந்நாட்டிற்கு நான்கு முறை பயணித்த பொதுச் செயலாளரே அவர். கொங்கோவிற்கான நான்காவது பயணத்தின் போது டேக் ஹமர்ஷலும் அவரது அதிகாரிகளும் விமான விபத்தில் கொல்லப்பட்டார்கள். 1961இல் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இனங்களுக்கு மத்தியில் அமைதியை நிலைநாட்ட அவர் மேற்கொண்ட தியாகங்களுக்காக வேண்டி யும், அவர் போராடிய அனைத்து விடயங்களுக்காக வேண் டியும் இப்பரிசு வழங்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

சபாநாயகரின் துணிகரமான செயற்பாடுகளை பார்க்கும் போது எனக்கு ஐ.நா.வின் முன்னாள் செயலாளர் நாயகம் டேக் ஹமர்ஷலே நினைவுக்கு வந்தார். இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாடுகளை பொதுமக்களால் மாத்திரமே தடுக்க முடியும். இப்படியான நடத்தைகளை வெறுப்புடன் காண்பதாக பொதுமக்களால் மாத்திரமே தெரிவிக்க முடியும். எமது வாக்குகளுக்கும் ஜனநாயகத்திற்கும் மதிப்பளிக்குமாறு பொதுமக்களால் மாத்திரமே அழுத்தம் கொடுக்க முடியும். நாட்டிற்குள் மற்றும் நாட்டிற்கு வெளியால் எம்மை அவமானப்படுத்த வேண்டாம் என பொதுமக்களால் மாத்தி ரமே கூற முடியும். எமக்காகவும் எமது பிள்ளைகளுக்காகவும் பண்பாடான முறையில் நடந்துகொள்ளுமாறு பொது மக்களால் மாத்திரமே வேண்டுகோள் விடுக்க முடியும்.

நீங்கள்தான் இந்தப் பொதுமக்கள். கடந்த துன்பியல் தினத்தைப் போன்று இன்னுமொரு தினம் உருவாகாமல் இருப்பதற்கு உங்களால் மாத்திரமே நடவடிக்கை எடுக்க முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here