மணாளியிடம் மனம்விட்டுப் பேசாமல் வேறு யாரிடம் பேச?

0
1
உரையாடலை நிறுத்தாதீர்கள்..!
இல்லறம் வெற்றிகரமாக அமைவதும் ஏனோதானோ என்று அமைவதும் தம்பதியர் கைகளில்தான் இருக்கிறது. என்றாலும் தம்பதியர் தம்மிடையே பேசும் உரையாடலிலும் அது அமைந்துள்ளது. நிறைய தம்பதியர் தங்களுக்கிடையே மனம்விட்டுப் பேசிக்கொள்வதே இல்லை. மனம்விட்டுப் பேசுவது இல்லை என்பதைவிட பலகாலமாக பேசுவதே இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. இதுவே மன விரிசலுக்கும் பின்னர் மண விரிசலுக்கும் காரணமாக அமைகிறது.
ஒன்பது மனைவியர் ஒருசேர இருந்த பின்னரும் நபிகளாரின் மணவாழ்வு வெற்றிகரமாக அமைந்ததற்குக் காரணம் மனைவியரிடம் பெருமானார் (ஸல்) மனம் விட்டுப் பேசியதும்தான். வீட்டிலும் நபிகளார்… அல்லாஹ், குர்ஆன், சொர்க்கம், நரகம் என்றுதான் பேசியிருப்பார்கள் என்று எவராவது நினைத்தால் அது பிழை. அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் பெருமானார் என்னவெல்லாமோ பேசியிருக்கின்றார்கள். எந்த அளவுக்கு எனில் முற்காலத்தில் வாழ்ந்த காதல் ஜோடிகளைக் குறித்து பெருமானார் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் பேசி இருக்கின்றார்கள். அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல.. பதினொன்று காதல் ஜோடிகளைக் குறித்து பேசிய உரையாடல்கள் அனைத்தும் புகாரி நபிமொழி நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இறுதியாக அபூஸர்வு உம்மு ஸர்வு என்ற தம்பதியைக் குறித்து சொல்லிக்கொண்டே வரும்போது, “ஆயினும் அபுஸர்வு உம்முஸர்வுவை மணவிலக்குச் செய்துவிட்டார்” என்று கவலையுடன் கூறினார்கள். இதுகேட்ட அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கவலை கொள்வதைப் பார்த்த நபிகளார், “ஆயினும், அபுஸர்வு மணவிலக்குச் செய்ததைப் போன்று உன்னை நான் மணவிலக்குச் செய்ய மாட்டேன்” என்று ஆறுதல் கூறினார்கள். அனேகமானவர்கள் வீடுகளை அன்பால் கட்டாமல் செங்கலால் மட்டுமே கட்டுகின்றார்கள். ஆகவேதான் இல்லறம் என்ற கட்டிடத்தில் அடிக்கடி விரிசல் ஏற்படுகிறது.
கோவையில் வழக்குரைஞர் நண்பர் ஒருவரின் அலுவலகத்தில் தமது கணவரை விவாகரத்து செய்ய வேண்டும் என்று ஒரு பெண் வந்தார். அவர் கூறிய காரணம்: “காதலிக்கும்போது மணிக்கணக்கா பேசுவான். இப்போ பேசுறதே இல்ல!”. ஒருவரியில் சொல்வதென்றால் உரையாடலை நிறுத்தும் இடத்தில் கலகங்கள் தொடங்குகின்றன. காதல் தொலைந்துவிடும். பெண்களை எப்படிக் கையாள்வது என்றுதான் ஆண்களிடம் சொல்லிக்கொடுக்கப்படுகிறதே தவிர, அவர்களோடு வாழ்வது எப்படி எனச் சொல்லிக் கொடுப்பதில்லை . விரிசலுக்கு இதுவும் ஒரு காரணம். மனைவியிடம் மனம்விட்டுப் பேசுங்கள். நபிகளாரின் வழிமுறையும் இதுதான். மணாளியிடம் மனம்விட்டுப் பேசாமல் வேறு யாரிடம்தான் மனம்விட்டுப் பேசப்போகின்றோம்.?!. உடன் வாழ்பவர்களுடன் உரையாடலை நிறுத்தாதீர்கள்..!
 – நூஹ் மஹ்ழரி –

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here