மதீனதுல் முனவ்வரா யாத்திரை | எழுவாய், பயமிலை

0
0

பூலோக சொர்க்கம் (பரடைஸ்) என வர்ணிக்கப்படுகின்ற இலங்கைத் தாய்நாடு புது வருட கோலாகலங்களால் களை கட்டிப் போயிருந்தது. நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கம் உருவானதன் பின்னர் கொண்டாடப்படும் முதலாவது புதுவருடக் கொண்டாட்டம் வழமையை விட சிறப்பாக இருந்ததாக புது வருடத்தைக் கொண்டாடியவர்கள் தெரிவித்திருந்தார்கள்.

கப்பல் மூழ்கினாலும் கொண்டாட்டம் நிற்காது என்று சிங்களத்தில் சொல்வது போல, நாடு கடன் சுமையில் மூழ்கிக் கொண்டிருக்கும் நிலையிலும் மக்களின் கொண்டாட்டத்துக்குக் குறைச்சலில்லை. கஷ்டத்திலும் சந்தோஷத்தை அனுபவித்துக் கொண்டு, சிரித்த முகத்துடன் காணப்படுவதுதான் இலங்கை மக்களின் இலட்சணமே.

இலங்கை மக்கள் எனும் பொழுது இலங்கை முஸ்லிம்களும் அதனுள் அடக்கம். இலங்கை மக்களுக்கே உரிய பிரத்தியேக இலட்சணம் அவர்களையும் ஆட்கொண்டிருப்பது ஒன்றும் மாற்றமான விடயமல்ல. அவர்கள் அப்படி இல்லையென்றால்தான் இவர்கள் இலங்கையர்கள் இல்லையா என்று யோசிக்க வேண்டி வருகிறது.

இலங்கைத் தாய்நாடு குளிர், சூடு என எல்லா தட்ப வெப்ப சூழலையும் கொண்ட நாடு. நாட்டின் ஒரு பகுதியில் உஷ்ணம் அதிகமென்றால் நாட்டின் குளிரான பகுதிக்கு ஒரு சில மணி நேரத்தில் சென்று ஆசுவாசப் படுத்திக் கொள்ள முடியுமான பூமி. அந்த வகையில் ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் பல பாகங்களிலும் உஷ்ணமும் புழுக்கமும் அதிகரிப்பதனால் குளிரான பிரதேசத்தை நோக்கி மக்கள் படையெடுப்பது இயல்பானது. அதிலும் நீண்ட விடுமுறைகளும் சேர்ந்து வாய்க்கும் பொழுது யாருமே இந்தச் சந்தர்ப்பத்தை தவறவிடப் போவதில்லை.

முஸ்லிம்களும் மனிதர்கள் என்ற வகையில் இந்த இயல்புகள் அவர்களுக்கும் பொருந்துகிறது. உஷ்ணத்திலிருந்து நிவாரணம் தேடுவது, விடுமுறை காலத்தை குடும்பத்துடன் களிப்பது எதுவுமே அவர்களுக்குத் தடை செய்யப்பட்ட விடயங்கள் அல்ல. ஆறாவது கடமை, உள்ளூர் உம்றா, மதீனதுல் முனவ்வரா (நுவர- நகரம்- மதீனா, எலிய-வெளிச்சம்-முனவ்வரா) யாத்திரை என்றெல்லாம் முஸ்லிம்களுக்கு மத்தியில் பேசப்படுகின்ற நுவரெலியா சுற்றுலாவும் இந்தவகையினதுதான்.

துன்யாவுடைய விவகாரங்கள் எல்லாம் இலக்காக்கப்படுவது போல இந்த நுவரெலியா சுற்றுலாவும் இந்த வாரத்தின் பல்வேறு குத்பாக்களினதும் இலக்காகியிருந்தது. சுற்றுலா சென்றவர்கள், பிள்ளைகளை அனுப்பிய பெற்றோர்கள் அனைவரை நோக்கியும் ஆஸாக்கோல்கள் நீட்டப்பட்டன. அங்கு நடக்கின்ற அனாச்சாரங்கள் பற்றியும் அங்கு போனால் ஜும்ஆத் தொழுகை கூட தொழ மாட்டார்கள் என்றும் கூடிக் கும்மாளமடித்து மௌத்தை மறந்து போவார்கள் என்றும் அடுக்கடுக்காய் குற்றச்சாட்டுக்கள்.

கடந்த வாரம் நுவரெலியா ஜும்ஆப் பள்ளிவாசலில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் தலைவர் நடத்திய ஜும்ஆவில் பள்ளிவாசலுக்கு வெளியிலும் சுற்றுலாவுக்கு வந்தவர்கள் திரண்டிருந்து தொழுகையில் கலந்து கொண்டார்கள் என்பது வேறு செய்தி.

தீமை நடக்கும் என்பதற்காக அனைத்திலிருந்தும் ஒதுங்கியே இருக்க வேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள். தொலைக்காட்சி கூடாது, இன்டர்நெட் கூடாது, சுற்றுலாக்கள் கூடாது, பூமியில் வாழ்வது கூடாது… என நீண்டு, கடைசியில் பூமியில் மனிதனைப் படைத்திருக்கவே கூடாது என்று எண்ணும் அளவுக்கு பூமியை வெறுக்கச் செய்கின்ற உபந்நியாசங்கள் தான் மிம்பரிலே அதிகமாக முழங்குகின்றன.  நரகத்தை ஞாபகப்படுத்த நெருப்பைப் படைத்தான் என்று சொல்பவர்கள், கீழால் ஆறுகள் ஓடக்கூடிய தோப்புக்களையுடைய சுவர்க்கத்தை ஞாபகப்படுத்தக் கூடியவற்றை ரசிப்பதிலிருந்து மக்களை தடை செய்கிறார்கள்.

இவ்வாறான இடங்களில் அனாச்சாரங்கள் நடப்பது உண்மைதான். ஆனாலும் நடக்கின்ற அனாச்சாரங்களுக்கு எதிராகச் செயற்பட வேண்டுமேயன்றி, சுற்றுலாவுக்கு எதிராக அல்ல. முறையாகச் செய்தால் பூமியைச் சுற்றிப் பார்ப்பதுவும் முஸ்லிமுக்கு இபாதத்தான். அதேபோல அனாச்சாரங்களைத் தான் வெறுக்க வேண்டுமே அன்றி, அனாச்சாரம் நடக்கும் பூமியை அல்ல. அது அல்லாஹ்வுடைய பூமி. அதிலிருந்து அனாச்சாரங்களைக் களைந்து அல்லாஹ் விரும்பக் கூடிய பூமியாக வளப்படுத்துவது தான் அல்லாஹ்வுடைய படைப்பாகிய மனிதனின் பணி.

இந்தப் பணியை மனிதன் சரியாகச் செய்தால் பூமி முழுவதுமே சொர்க்கபுரிதான். இது மையத்துக்களால் செய்ய முடியுமான பணியல்ல. இதற்கு ரிஜால்களும் ராஹிலாக்களும் தேவை. இவர்களை உருவாக்குவதற்காக குத்பாக்கள் அறைகூவல் விடுக்குமென்றால் இனி எல்லா இடங்களும் மதீனதுல் முனவ்வராதான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here