மாட்டுச் சமன்பாடு | எழுவாய் பயமிலை

0
0

– அபூ ஷாமில் –

ஹஜ்ஜுப் பெருநாள் நோன்புப் பெருநாள் போல களைகட்டாவிட்டாலும் இதனூடே நடைபெறுகின்ற வியாபாரங்களுக்கு மட்டும் இலங்கையின் வியாபாரச் சமூகத்தில் எந்தக் குறைச்சலுமில்லை. ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்வதற்காக மக்களைத் திரட்டுவதில் முகவர்கள் மும்முரமாக இருந்தார்கள். குர்பானுக்காக மாடுகளை விற்பனை செய்வதில் மாட்டு வியாபாரிகள் களேபரமாக இருந்தார்கள். இந்த ஆரவாரங்களுக்கு மத்தியில் பள்ளிவாசலுக்கு ஏதாவது வருமானத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என நிர்வாக சபைகள் கூட்டுக் குர்பானை குத்பாக்களில் ஓதவைத்தார்கள். வழமையாக கலண்டர்களைத் தூக்கிக் கொண்டுவரும் மத்ரஸா மாணவர்கள் மாட்டுத் தோலை சேகரிப்பதற்காக காத்துக் கிடந்தார்கள்.

இப்படி இன்னோரன்ன ஆர்ப்பரிப்புக்கள் ஹஜ்ஜுப் பெருநாள் மாண்மியத்தில் அடங்குகின்றன. இவற்றுக்குப் பின்னால் நடக்கின்ற தில்லுமுல்லுகளையும் குத்து வெட்டுக்களையும் பார்க்கும் போது இப்ராஹீம் நபியின் கத்தி அறுபட்டிருந்தால் நல்லது போல இருக்கிறது என்று சமூகமே முணுமுணுப்பது கேட்கிறது. ஹஜ்ஜுக்கு முன்னரே மாடுகளை பதுக்கி வைத்து விலையேற்றும் கூட்டம் ஒருபுறம். வயிற்றிலே இருக்கின்ற கன்று மாட்டைப் பற்றி எதுவுமே பேசாமல் அறுப்பதற்காக தாரை வார்க்கின்ற வியாபாரிகள் ஒருபுறம். அறுப்பவர்கள் கூலி கேட்டு குர்பான் கொடுப்பவரை அறுப்பதுவும், அடுத்த அறுப்புக்காகச் செல்லும் அவசரத்தில் மாட்டின் மீது மனிதாபிமானம் காட்ட மறுப்பதுவும், நிறுவனத்தார் வரும் வரைக்கும் மாடுகளைக் கட்டிப் போட்டு வதைப்பதுவும் என பலியிட வேண்டிய பல பாவங்கள் இப்புனித நாட்களில் அரங்கேறுவதைப் பார்த்தால் இந்த ஆதங்கத்திலும் பிழை இல்லை போலத்தான் தெரிகிறது.

இதற்காக குர்பானியே தேவை இல்லை என்று நினைக்குமாற்போல கருத்துரைகள் வழங்குவதும் பொருத்தமானதல்ல. பலருக்கு சமூகத்தின் அவலங்களை ஒட்டுமொத்தமாகப் பார்க்கக் கிடைத்த பின்னர் தான் இது போன்ற யோசனைகள் உதிக்கின்றன. குர்பானிக்குச் செலவழிக்கும் பணத்தில் அனாதைகள், படிக்கின்ற மாணவர்கள் என எவ்வளவோ செய்ய வேண்டியிருப்பதாக சமூகக் களத்தில் வேலை செய்பவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் உழ்ஹிய்யாவின் தாத்பரியம் இறைச்சி மட்டும் அல்ல. இதனூடாக பலவிடயங்களை படைத்தவன் நாடுகிறான் என்பதால் உழ்ஹிய்யாவை விட உழ்ஹிய்யாவின் பேரால் நடக்கின்ற அவலங்களை சமூகம் எதிர்க்கப் பழக வேண்டும்.

குர்பான் இந்தளவு போட்டியாக மாறுவதற்கு கடந்த ஒரு மாதகாலமாக காதுகளை வந்தடைகின்ற பீரங்கிப் பிரச்சாரங்களுக்கு முக்கிய பங்கிருக்கிறது. மாட்டின் தேகாரோக்கியம், அதனுடைய பிறப்பு, அங்க அவயவங்கள் என மாடு தொடர்பான வியாக்கியானங்கள். பின்னர் மாட்டைக் குர்பான் கொடுப்பவர் நகம் வெட்டலாமா, பல் துலக்கலாமா, முடியென்றால் எந்தெந்த முடிகளை வெட்டக் கூடாது என பல்வேறு விளக்கங்கள். துல்ஹஜ் முதல் பத்தின் நன்மைகளை ஞாபகமூட்டினார்களோ இல்லையோ நகம் வெட்டக் கூடாத நாளை ஞாபகப்படுத்தும் விதமான வட்ஸ்அப் நினைவூட்டல்கள். இது போலத்தான் ஹஜ், உம்ரா என விளம்பரப்படுத்தும் உபன்னியாசங்களும் பயான்களும். கூடவே வானொலி முஸ்லிம் சேவையின் வங்குரோத்துத்தனமும்.

இவைகள் எதுவுமே கூடாது என்பதல்ல. ஆனால் இவை தான் மார்க்கம் என்று கருதிக் கொள்ளும் அளவுக்கு ஊதிப் பெருப்பிப்பதனால் சமூகத்தின் சமன்பாடு சீர்குலையக் கூடாது. சுன்னத்தான குர்பானி பேசப்பட வேண்டும். அதேபோல பறிபோகும் சமூகத்தின் உரிமைகளையும் பேச வேண்டும். பர்ளான ஹஜ்ஜைப் பற்றி உரை நிகழ்த்த வேண்டும். அதே போல சமூகத்திற்காக அல்லாஹ்வின் பெயரில் செலவழிக்க வேண்டிய ஏனைய பகுதிகளையும் பறைசாற்ற வேண்டும். பள்ளிவாசல் நிர்வாகம் சொல்கிறதே என்பதற்காக கூட்டுக் குர்பானை வலியுறுத்தும் மிம்பர்கள், அல்லாஹ்தஆலா சொல்லுகின்ற கூட்டு ஸகாத்தையும் ஊக்குவிக்க வேண்டும்.

பணம் புரளுகின்ற, வருமானம் கிடைக்கின்ற விடயங்கள் தவிர்ந்த இன்னும் பல உரிமை சார்ந்த விடயங்கள் சமூகத்திலே பேசப்பட வேண்டியிருக்கின்றன. பல விடயங்கள் சமூகத்தின் கூட்டுச் செயற்பாட்டை வேண்டி நிற்கின்றன. சமூகத்தின் பொருளாதார ஏற்றத் தாழ்வு போலவே சமூகத்தின் அறிவுத் தராதரத்தின் இடைவெளியும் அதிகரித்து வருகிறது. இது குறித்தும் பேசப்பட வேண்டும்.

ரமழான் முழுக்க நோன்பையும், துல்கஃதாவிலே ஹஜ்ஜையும், துல்ஹஜ்ஜிலே இப்ராஹீம் நபியையும் குர்பானையும், ரபீஉல் அவ்வலிலே மீலாதையும் என வகுத்து வைத்துக் கொண்டு ஊதுகுழல்களை உயிர்ப்பிக்கத் தொடங்கினால் இவற்றைத் தாண்டியுள்ள விடயங்களில் சமூகம் மரத்துப் போகத் தான் செய்யும். பின்னர் இஸ்ராபீல் (அலை) ஊதுகுழல்தான் இந்தச் சமூகத்தை மீள எழுப்ப முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here