மின்வெட்டு: மீளவும் இருட்டுக்குள் இலங்கை

0
5

இலங்கையில் போர் உக்கிரமாக நடந்துகொண்டிருந்த 1990 களின் கடைசிக் கூறுகளில் 8 மணித்தியால மின்வெட்டு நடைமுறையில் இருந்தது. பகலில் 5 மணித்தியாலங்களும் இரவில் 3 மணித்தியாலங்களும் அப்போது மின்வெட்டு அமுலில் இருந்தது. ஜனாதிபதியாக இருந்தவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க. அவரது மின்சக்தி எரிபொருள் மற்றும் பாதுகாப்பு அமைச்சராக இருந்த அனுருத்த ரத்வத்தயே மின்வெட்டை அமுல்படுத்தியவர்.

நீர்த்தேக்கங்களில் நீரின் அளவு குறைந்தமையே மின்வெட்டுக்கான காரணம் என அறிவிக்கப்பட்டது. கடுமையான வரட்சியே மின்வலு நெருக்கடிக்கான மூல காரணமாகும். தொடர்ந்து வந்த மஹிந்தவின் ஆட்சியிலும் சில மணித்தியால மின்வெட்டு நடைமுறையில் இருந்தது.

தற்போது நல்லாட்சி அரசாங்கத்தில் 4 மணித்தியால மின்வெட்டு 25 மார்ச் 2019 இலிருந்து அமுலுக்கு வருவதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் விமலதர்ம அபேவிக்ரம தெரிவித்துள்ளார். மின்சார வெட்டு தொடர்பான கால அட்டவணை ஒன்றையும் மின்சார சபை வெளியிட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை 400 MW மின்சாரத் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதை ஈடுசெய்யவே மின்வெட்டு அமுலாக்கப்படுவதாக மின்சார சபை தனது செயல்பாட்டை நியாயப்படுத்தியுள்ளது.

இதில் புத்தளத்திலுள்ள லக்விஜய மின் உற்பத்தி ஆலை செயலிழந்தமையினால் 300 MW மின்சாரமும் கரவலபிடிய மின் ஆலை செயலிழந்துள்ளதால் 100 MW மின்சாரம் இழக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை கூறுகின்றது. நாட்டில் தொடர்ச்சியாக நிலவி வரும் கடும் வரட்சியினால் நீர்த்தேக்கங்களின் மட்டம் 35 வீதத்தால் குறைந்துள்ளது.

நீர் மின் உற்பத்தியின் அளவு குறைந்துள்ளதனால் வெப்ப மற்றும் நிலக்கரி மின் உற்பத்தி ஆலைகளிலிருந்து அதிக மின்உற்பத்தியை பெற வேண்டியுள்ளது. ஆனால், நீர் மின்உற்பத்தியுடன் ஒப்பிடும்போது வெப்ப சக்தியின் மூலம் ஒரு அலகு மின் உற்பத்தியை மேற்கொள்ள 10 மடங்கு செலவாகின்றது என மின்சார சபையின் தலைவர் அபே விக்ரம தெரிவித்துள்ளார்.

லக்விஜய மற்றும் கரவலபிடிய கரையோர மின்உற்பத்தி நிலையங்களின் செயற்பாடுகள் முடங்கியுள்ளதால் மின்சார நெருக்கடியொன்று ஏற்பட்டுள்ளது.

மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க, தொடக்கத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என்று அறிவித்தபோதும், ஜூலை நடுப்பகுதி வரை மின்வெட்டு அமுலில் இருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்தது. தற்போது ஏப்ரல் நடுப்பகுதி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும், அதன் பின்னர் நிலைமைகள் சீரடைந்து விடும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். பொது மக்களிடம் மன்னிப்புக் கோரியுள்ள அமைச்சர் மின்சார நெருக்கடியினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை பொதுவசதிகள் ஆணைக்குழுவில் முன் அனுமதி பெறாமல் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவது சட்டவிரோதமானது என பொதுவசதிகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜயந்த ஹேரத் ஊடகங்களிடம் தெரிவித்தார். இவ்வாணைக்குழுவுக்கு நுகர்வாளர்களிடமிருந்து ஏராளமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் இலங்கை மின்சார சபை பொதுவசதிகள் ஆணைக் குழுவின் முன்னனுமதியோடு முறையான கால அட்டவணையைத் தயாரித்து முற்கூட்டிய மக்க ளுக்கு அறிவிக்க வேண்டும் என ஜயந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இலங்கை எதிர்கொண்டுள்ள தற்போதைய மின்சார நெருக்கடி குறித்து கடந்த சில ஆண்டுகளாக துறைசார் நிபுணர்கள் பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்திருந்தபோதும்  மாறி மாறி வந்த எந்த அரசாங்கமும் அதனைக் கருத்திற் கொள்ளவில்லை. அரசாங்கங்களின் மெத்தனமும் தூர தரிசனம் இல்லாமையுமே தற்போது நாடு எதிர்கொண்டுள்ள மின்வெட்டுக்கான காரணமாகும். முன்னாள் மின்சக்தி அமைச்சராக இருந்த சம்பிக்க ரணவக்க எழுதிய பிரபலமான நூலொன்றிலும் இலங்கை மின்சார சபை மற்றும் மின் உற்பத்தித் துறைக்குப் பின்னாலுள்ள மாபியாக்கள் குறித்து வெளிப்படுத்தியுள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் மின்சார சபையில் நிலவும் ஊழல் மோசடிகளை முறையாகக் கையாள முடியாத நிலையிலேயே அவ்வப்போது நியமிக்கப்படும் மின்சக்தி அமைச்சர்கள் இருப்பதாக சம்பிக்க பல முறை      சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு நாட்டின் அபிவிருத்தியில் மின்வலும் எரிபொருளும் இரு அடிப்படை சக்தி மூலங்க ளாகும். அரசாங்கங்களின் மூலோபயத் திட்டங்களில் முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டிய விடயங்களாகும்.

வளர்ந்து வரும் தேவைக்கு ஏற்ப மின்உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பான திட்டங்களை தொழில்சார் நிபுணர்கள் அவ்வப்போது முன் வைத்து வந்துள்ளனர். அரசாங்கங்கள் அவற்றை செவியேற்கவில்லை. இதன் விளைவாகவே நாடு மின்வெட்டை எதிர்கொண்டுள்ளதாக இலத்திரனியல் மற்றும் மின்சாரப் பொறியியலாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இரவில் பரீட்சைகளுக்காக கற்கும் மாணவர்கள் உள்ளிட்டு நாட்டின் அனைத்து மக்களும் மின்வெட்டின் மோசமான விளைவுகளை அனுபவிக்கின்றனர். மக்களிடம் மன்னிப்புக் கோருவதால் மின் உற்பத்தியை அதிகரித்து இருட்டில் தடுமாறும் நாட்டை மீட்க முடியாது.

சந்திரிக்காவின் ஆட்சிக் காலத்தில் 8 மணித்தியாலங்கள் அமுலில் இருந்த மின்வெட்டு தற்போதைய நல்லாட்சியில் 4 மணித்தியாலங்களாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது. தீர்க்க தரிசனமற்ற, ஊழல் நிறைந்த அரசாங்கங்கள் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளில் எவ்வளவு தூரம் மெத்தனப் போக்கோடு செயல்படுகின்றது என்பதற்கு அமுலில் உள்ள மின் துண்டிப்பு சிறந்த உதாரணமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here