மியன்மார் முஸ்லிம்கள் தொடர்பில் முகநூல் பாராபட்சம்

0
18

பங்களாதேஷில் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ள மியன்மாரின் ரோஹிங்யோ முஸ்லிம்கள் தொடர்பில் சமூக ஊடகங்கள் -குறிப்பாக முகநூல் நிறுவனம் பாகுபாடு காட்டி வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. ரோஹிங்யர்களுக்கு எதிராக இடம்பெற்ற இனப்படுகொலைகள் குறித்து அமெரிக்காவில் இடம்பெற்று வரும் மனித உரிமை வழக்கொன்று தொடர்பாக முகநூலில் வெளிவந்த செய்திகளை முகநூல் நிறுவனம் முடக்கியமை குறித்து குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

மியன்மார் அரசுக்குச் சார்பாக முகநூல் ஜாம்பவான்கள் செயல்படுவதாக சர்வதேச சுதந்திர ஊடக அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அரக்கான் மாநிலத்திலிருந்து 7 இலட்சம் ரோஹிங்ய முஸ்லிம்களை மியன்மார் அரசு பலாத்காரமாக வெளியேற்றியமை சர்வதேச அளவில் கடும் கண்டனத்திற்கு உள்ளாகி வரும் சூழ்நிலையில் சமூக ஊடகங்கள் நீதிக்கான குரலை முடக்கும் வகையில் செயல்படுவது விசனம் தருவதாக குறிப்பிட்ட ஊடக அமைப்பின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மியன்மாரின் உள்ளே வாழும் பல இலட்சம் ரோஹிங்யர்கள் தொடர்ந்தும் இராணுவ அடக்குமுறையின் கீழ் வாழ்ந்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர்களை பாதுகாப்பதற்கு சர்வதேச சமூகம் தவறிவிட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

மியன்மார் அரசாங்கம் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் எவரையும் அரக்கான் பிராந்தியத்தில் உள்நுழைய அனுமதிக்கவில்லை. இதனால், அரசாங்கத்தின் மூடுதிரைக்குப் பின்னால் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு என்ன நடக்கின்றது என்பது மர்மமாக உள்ளது என்று சர்வதேச சுதந்திர ஊடக அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here