மீள்பார்வை 400 ஆவது இதழ் | கடந்து வந்த பாதை

1
5

1995 டிசம்பரில் மீள்பார்வையின் முதலாவது இதழ் “முஸ்லிம்கள் தேசத் துரோகிகள், தென்னிலங்கை இனவாதிகள் குற்றச்சாட்டு” என்ற முன்பக்கச் செய்தியோடு வெளிவந்தது. அன்று தொடங்கிய பத்திரிகைப் பயணம் 23 ஆவது ஆண்டை ஓரிரு மாதங்களில் பூர்த்தி செய்யவுள்ள நிலையில், 400 ஆவது இதழ் வெற்றிகரமாக வெளிவருகின்றது அல்ஹம்துலில்லாஹ். இலங்கை முஸ்லிம்களின் பத்திரிகைத் துறை வரலாற்றில் 400 இதழ்கள் இடையறாது தொடர்ச்சியாக வெளிவந்தமை ஊடகத் துறையில் குறிப்பிடத்தக்க சாதனை என்பதில் அணுவளவும் ஐயமில்லை.

இலட்சியப் பயணம், விடிவெள்ளி, சத்தியத் தீ போன்ற சஞ்சிகைகளில் இஸ்லாமிய தஃவா மற்றும் முஸ்லிம் சமூகப் பிரச்சினைகளைப் பேசியவர்களே காலவோட்டத்தில் மீள்பார்வை பத்திரிகையை ஆரம்பித்தனர். இப்பத்திரிகை ‘தளிர்’ எனப்படும் இதழிலிருந்தே தொடங்கியதையும் இங்கு நினைவுகூர வேண்டும்.

1994 பெப்ரவரியில் சிறிய அளவில் பத்துப் பக்கங்களுடன் அக்பர் டவுனிலிருந்து வெளியான தளிர், பின்னர் 1995 டிசம்பரில் மீள்பார்வை எனும் பத்திரிகையாக பரிணாமம் பெற்றது. அரசியல், கல்வி, கலாச்சாரம், சமூகப் பிரச்சினைகள், ஆன்மீகம், வரலாறு, களஆய்வுகள், கலை இலக்கியம், சர்வதேச முஸ்லிம் உம்மத்தின் பிரச்சினைகள் என 16 பக்கங்களில் ஒரு பல்கலைக்கழகமாய் பரிணமிக்கத் தொடங்கியது மீள்பார்வை.

23 ஆண்டு கால இடைவெளியில் அது பல்வேறு வளர்ச்சிப் பரிணாமங்களையும் பரிமாணங்களையும் பெற்று வந்துள்ளது. 2008 ஆம் ஆண்டிலிருந்து இரு வாரங்களுக்கு ஒருமுறை வெளிவரத் தொடங்கிய மீள்பார்வை, உள்ளடக்கத்திலும் பக்க வடிவமைப்பிலும் புதுப் புது மாற்றங்களை உள்வாங்கி வந்தது.

மீள்பார்வை பத்திரிகை வரலாற்றில் 2015 நவம்பரில் ஏற்பட்ட திருப்பம் முக்கியமானது. தேசிய நாளிதழ்களின் அளவில் ‘மௌலவி ஆசிரியர் நியமனத்தில் இழுபறி’ எனும் தலைப்புச் செய்தியுடன் அந்த ஆண்டு நவம்பரில் மீள்பார்வை வெளிவந்தது. எமது வளர்ச்சிப் பரிமானத்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

மீள்பார்வை பத்திரிகையை வெளியிடும் நிறுவனமாக மட்டுமன்றி சமூக மாற்றத்திற்காக உழைக்கும் ஒரு வெளியீட்டு நிறுவனமாகவும் பணியாற்றி வருகின்றது. இப்பின்னணியிலேயே பயணம், வைகறை, சர்வதேசப் பார்வை ஆகிய சஞ்சிகைகளையும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை வெளியிடுவதோடு, இதுவரை இஸ்லாமிய சமூக மாற்றத்தை இலக்காகக் கொண்ட 43 நூல்களையும் வெளியிட்டுள்ளது. அதற்கு மேலாக மீள்பார்வை இணையத்தளமொன்றையும் நடாத்தி வருகின்றது.

பல்வேறு நபர்களின் அர்ப்பணத்தோடும் தியாகத்தோடும் 400 ஆவது இதழை எட்டியுள்ள மீள்பார்வைக்கு வாசகர்கள் தந்துவரும் ஆதரவையும் இத்தருணத்தில் நன்றியுடன் நினைவுகூர்கிறோம்.

மிகக் குறைந்த வசதிகளோடு தனது ஊடகப் பயணத்தை ஆரம்பித்த மீள்பார்வை, தொடக்கத்தில் நிரந்தரமான முகவரியின்றி தலைநகரின் பல்வேறு இடங்களிலும் தற்காலிக அலுவலகங்களில் இயங்கி வந்தது. அக்பர் டவுனில் ஆரம்பித்த இந்தப் பயணம் கொழும்பு 12 இல் அமைந்துள்ள முஹம்மத் ஸெய்ன் மாவத்தைக்கு இடம்பெயர்ந்தது. பின்னர் ஸ்டேஸ் வீதியில் குறிப்பிடத்தக்க காலம் இயங்கியது.

அங்கிருந்து கிராண்பாஸிலுள்ள லெயாட்ஸ் புரோட்வேக்கு மாறிய பத்திரிகை அலுவலகம் மருதானைக்கும், பின்னர் அபய பிளேஸிற்கும் தொடர்ந்து பண்டாநாயக்க மாவத்தைக்கும் இடம்மாறியது. 2000 தொடக்கம் 2004 வரை மீள்பார்வை பத்திரிகை திஹாரியின் ஜுனைத் மாவத்தையிலுள்ள ரிபாத் கலாசார நிலையத்திலிருந்து வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது ஸ்ரீ மஹிந்த தர்ம மாவத்தையிலுள்ள நிரந்தரக் கட்டிடத்தில் இயங்கி வருகின்றது.

மீள்பார்வையின் 400 ஆவது இதழை வெளியிடும் இத்தருணத்தில் பத்திரிகையின் ஸ்தாபக உறுப்பினர்கள், ஆரம்ப கால எழுத்தாளர்கள், நிருவாகப் பொறுப்பாளர்கள், பிரதம ஆசிரியர்கள், விநியோகத் துறை சார்ந்தவர்கள், கணக்காளர்கள், தட்டச்சு/ தளக்கோள/ பக்க வடிவமைப்பாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் என பலரையும் நாம் நன்றிப் பெருக்கோடு நினைவுகூர்கிறோம். அவர்கள் ஆற்றிய அர்ப்பணங்களையும் தியாகங்களையும் மதிக்கின்றோம். பெயர் விபரங்களை குறிப்பிட முனைந்தால் மிக நீண்டதொரு பட்டியல் இங்கே இடம்பெறும் என்பதைக் கருத்திற் கொண்டு பின்னால் நின்று உழைத்தவர்களின் பெயர்களை விரிவஞ்சித் தவிர்க்கின்றோம். ஆனால், அவர்கள் அத்தனை பேரின் அர்ப்பணத்தையும் கௌரவத்தோடும் நன்றியோடும் பார்க்கின்றோம்.

1990 கள் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் பல்வேறு சமூக, அரசியல் கொந்தளிப்புகளும் நெருக்கடிகளும் நிகழ்ந்த காலம். இணைய வசதிகளோ ஸ்மாட் போன்களோ சமூக ஊடகங்களோ இல்லாத காலம். முஸ்லிம் சமூகம் பிரச்சினைகளை வெளிக்கொணர்வதற்கு குறைந்தபட்சம் அச்சு ஊடகங்களே இல்லாத காலம். வடக்குக் கிழக்கில் தமிழ் ஆயுதக் குழுக்களால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டும் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டும் நெருக்கடியை எதிர்கொண்ட காலம். தெற்கிலும் பேரினவாதத்தின் தாக்குதல்கள் கூர்மையடைந்த ஒரு காலம். இத்தகைய கொதிப்பான ஒரு சூழலிலேயே மீள்பார்வை முஸ்லிம் சமூகப் பிரச்சினைகளை அதன் ஆழ அகலங்களுடன் ஆராய்ந்து இஸ்லாமிய கண்ணோட்டத்தில் அவற்றுக்குத் தீர்வு சொல்லும் வகையில் வெளிவரத் தொடங்கியது.

அதன் ஆரம்பம் மிகவும் எளியது. ஆனால் அதன் படிமுறை வளர்ச்சி குறிப்பிடத்தக்கது. மிக முக்கியமானதொரு கால கட்டத்தில் அது வெளிவந்தது என்பதும் எதையும் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் பார்க்க முனைந்தது என்பதும் அதன் இரண்டு முக்கிய தனித்துவங்கள். அதைத்தாண்டி 400 இதழ்கள் முஸ்லிம் பத்திரிகைப் பரப்பில் இடையறாது வெளிவந்த ஒரே பத்திரிகை என்பது அதன் இன்னொரு தனித்துவம். புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே.

மீள்பார்வை பத்திரிகைக்கு பின்னாலிருந்து உழைத்தவர்களின் தூய்மையும் கடின உழைப்புமே இடையறாத 400 ஆவது இதழின் வருகையை சாத்தியப்படுத்தியுள்ளது. அந்த வகையில் மீளவும் நாம் பத்திரிகைக்கு நெம்புகோலாக இருந்த அனைவரையும் நன்றியுடன் நினைவுபடுத்துகின்றோம். அவர்களுக்காக உளமாறப் பிரார்த்திக்கின்றோம்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here