“முஸ்லிம்கள் எதிர்காலத்தில் யாரை நம்பிப் போக வேண்டும் என்ற தடுமாற்றத்தில் உள்ளனர்”

0
2

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். ஸுஹைர்

  • இலங்கை முஸ்லிம் சமூகத்தின் தற்போதைய நிலை பற்றிய உங்களது அவதானங்களை சற்று தெளிவுபடுத்த முடியுமா?

முஸ்லிம் சமூகத்தின் இன்றைய நிலைமை மிகவும் கவலைக்குரியது. 2012ஆம் ஆண்டு முதல் முஸ்லிம் சமூகம் விஷேடமான பல பிரச்சினை களுக்கு முகம்கொடுக்க வேண்டியேற்பட்டது. ஆஆகு போன்ற இயக்கங்கள் நோர்வே சென்று வந்ததன் பிறகே முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினைகள் பூதாகரப்படுத்தப்பட்டது. நோர்வே மூலமாக ஆரம்பிக்கப்பட்ட பிரச்சினைகளுக்கே நாம் தொடர்ந்து முகம்கொடுத்து வருகின்றோம்.

2012 இல் கிரீஸ் பேய் பிரச்சினை உருவாக்கப்பட்டது. அதன் பிறகு ஹலால் பிரச்சினை, அபாயா பிரச்சினை என்று தொடர்ந்து பல பிரச்சினைகள் ஏற்படுத்தப்பட்டு, இறுதியில் அளுத்கமவில் கலவரமொன்றே வெடித்தது. அளுத்கம கலவரம் தொடர்பான குற்றச் செயல்களுடன் சம்பந்தப் பட்டவர்களுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இவ்விடயமானது இனவாத இயக்கங்களை இன்னுமின்னும் அதிகரிப்பதற்கே வழிகோலியது.

நல்லாட்சி அரசாங்கத்திலும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்றன. அம்பாறை, திகன போன்ற பிரதேசங்களில் இடம்பெற்ற நிகழ்வுகளைக் குறிப்பிடலாம். கடந்த அரசாங்கத்தின் கீழ் இது போன்ற சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் கைதுசெய்யப்படவுமில்லை, அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுமில்லை. ஆனால் இந்த அரசாங்கத்தின் கீழ் சம்பந்தப்பட்டவர்கள் கைதுசெய்யப்படுகிறார்கள். ஆனால் வழக்குத் தாக்கல் செய்யப்படுவதில்லை. அதனால் பெரும்பான்மை சமூகத்தில் சிறியதொரு கூட்டம் தொடர்ந்தும் இது போன்ற இனவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது.

இச்சிறிய கூட்டத்தை இன்னுமின்னும் வளர விடக்கூடாது. இச்சிறிய கூட்டம் சிங்கள பௌத்த பெரும்பான்மை சமூகத்துக்கும் ஒரு சவாலாகக் காணப்படுகின்றது. பெரும்பான்மை சமூகம் மற்றைய சமூகங்களுடன் ஐக்கியமாக வாழ விரும்புகிறது. ஆனால் இச்சிறிய கூட்டம் அதற்கு இடைஞ்சல் ஏற்படுத்திக்கொண்டுள்ளது.

எனவே எமது நாட்டின் நிலைமை 21/4 நிகழ்வுக்குப் பின்னர் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதுவே உண்மையான நிலைமை. தற்போதைய முஸ்லிம்களின் நிலைமை கவலைக்குரியது. தீர்க்கப்படாமல் உள்ளது. இதனைத் தீர்ப்பதற்கு சமூக, அரசியல், புத்திஜீவிகள் மட்டத்தில் முன்னுரிமையளிக்கப்பட வேண்டும். இவ்விடயத்தில் முஸ்லிம் சமூக ஊடகங்கள் மிக முக்கிய பங்களிப்பை நல்க வேண்டும்.

  • ஒரு சமூகத்தின் அடிப்படை உரிமைகள் மீறப் பட்டு வருமாயின் அதற்கு நாங்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன?

இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நாம் பல மட்டங்களில் செயலாற்ற வேண்டும். உதாரணமாக நாம் இந்த நாட்டில் 1000 வருடங்களுக்கு மேலாக சிறுபான்மையினத்தவர்களாக பெரும்பான்மை சமூகத்தவர்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறோம். சிங்கள வரலாற்றாசிரியர்கள் இவ்விடயத்தைப் பற்றி மிகவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள். நூல்களைப் பிரசுரித்துள்ளார்கள். இவற்றை நாம் மனதில் வைத்து இந்நாட்டிலுள்ள பெரும்பான்மை சமூகத்துடனான இன ஐக்கியத்தை வளர்ப்பது, அதற்குத் தடையாக உள்ள பிரச்சினைகளைக் கையாண்டு, அவற்றைக் கிடப்பில் போடாமல் அவற்றை அணுகி, அந்தப் பிரச்சினைகள் உண்மையிலேயே நியாயமான பிரச்சினைகள் அல்ல, அவை ஒரு சில ஊடகங்கள் வாயிலாக பூதாகரமாக்கப்பட்ட பிரச்சினைகள், இவற்றுக்கு பின்னால் மேற்கத்தேய நாடுகளும்         சக்திகளும் இயங்குகின்றன என்பதை நாம் அம்மக்களுக்கு உணர வைப்பது மிக முக்கியம்.

இதுவொரு வழிமுறையாகும். நாம் நாட்டுப் பற்றுள்ள மக்கள் என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுவதற்கான பல்வேறு சந்தர்ப்பங்கள் உள்ளன. இது ஜிஹாத் பற்றிப் பேசுகின்ற சந்தர்ப்பம் அல்ல. இந்நாட்டிற்கு நாம் என்ன செய்தோம் என்பதை பற்றியே பேச வேண்டும். அது விஷேடமாக சிங்கள மொழியில் அதிகமாகப் பேசப்பட வேண்டும். பராக்கிரம சமுத்திரம் 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஏறக்குறைய 1000 வருடங்களுக்கும் அதிகமாகும். அந்த நேரத்தில் அதற்காக வேண்டி முஸ்லிம்கள் உதவிசெய்துள்ளமை பற்றி இந்நாட்டின் 3ஆவது பிரதம நீதியரசர் அலெக்ஸாண்டர் ஜோன்சன் லண்டனில் பிரசுரமான ஆய்வுக் கட்டுரையொன்றில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் எமக்கு சிங்கள மொழியில் அல்லது ஆங்கிலத்தில் கட்டுரைகளை எழுத முடியும், ஆசிரியர் தலையங்கங்களைத் தீட்ட முடியும். பெரும்பான்மைச் சமூகத்தின் ஊடகங்களில் பேசக் கிடைக்கின்ற போது இவற்றைப் பற்றி குறிப்பிட முடியும்.

முஸ்லிம் சமூகத்தின் மீது கொண்ட நம்பிக்கை காரணமாக 14ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மன்னர்கள் முஸ்லிம்களை பாதுகாப்புத் துறையிலும் இணைத்துக் கொண்டிருந்தமைக்கான ஆதாரங்களும் உள்ளன. அன்று எம்மை பற்றிய நம்பிக்கை பெரும்பான்மை சமூகத்திற்கு அதிகமாகக் காணப்பட்டது. 17ஆம் நூற்றாண்டளவில் முஸ்லிம்கள் மாயாதுன்ன மன்னனுடன் சேர்ந்து இந்நாட்டிற்கு வந்த போர்த்துக்கீசர்களுக்கு எதிராகப் போராடியுள்ளார்கள். இவைகள் சொல்லப்பட வேண்டும். அன்று மட்டுமல்ல. எமது வாழ்நாளில் எமது நாட்டைப் பிரிப்பதற்கு வந்த எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நாம் அவற்றுக்கு ஆதரவளிக்கவில்லை. அதற்கு ஆதரவளிக்காத காரணத்தினால் தான் எமது சமூகம் வடக்கிலிருந்தும் விரட்டப் பட்டது. நாட்டுப்பற்று காரணமாகவே நாம் தண்டிக்கப்பட்டோம். பள்ளிவாசல்களில் கொலை செய்யப்பட்டோம். ஒரு அறிக்கையின் படி அப்போது இடம்பெற்ற எல்லா நிகழ்வுகளிலும் 1050 முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்நாட்டிற்காக வேண்டி சேவை செய்தவர்களை இந்நாட்டின் பௌத்த தலைவர்களே குடியமர்த்தியிருக்க வேண்டும். ஆனால் பெரும்பான்மை சமூகத்தின் மத்தியிலுள்ள தீவிரவாதக் குழுக்களே இதனை இன்னும் எதிர்த்துக் கொண்டுள்ளன. எனவே நாம் இந்நாட்டிற்கு வழங்கிய பங்களிப்புக்கள் அடிக்கடி நினைவுபடுத்தப்பட வேண்டும். இந்த நூற்றாண்டிலும் கூட நாம் பிரிவினைவாதத்திற்கு ஆதரவளிக்கவில்லை. ஆனால் நாம் தமிழ் சமூகத்திற்கு விரோதமானவர்களும் அல்ல. நாம் தீவிரவாதம் மூலமாக இந் நாட்டைப் பிரிப்பதற்கு ஆதரவளிக்கவில்லை. முஸ்லிம்கள் ஆதரவளிக்காத படியால் முஸ்லிம்களை விரட்டினார்கள். ஆதரவளிக்காத காரணத்தினாலேயே முஸ்லிம்கள் விரட்டப்பட்டார்கள். இவைகளையே முஸ்லிம் சமூக எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், புத்திஜீவிகள் அடிக்கடி நினைவுபடுத்திக்கொண்டிருக்க வேண்டும். விஷேடமாக சிங்கள மொழியில். இதில் எம்மிடம் குறைபாடுகள் இருந்தால் இவை பற்றிப் பேசுவதற்கு வளவாளர்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும். எமக்கு சிங்களப் புலமையுள்ள ஊடகவியலாளர்கள் அதிகம் தேவைப்படுகின்றனர்.

பௌத்த சமயம் அன்பையும் பொறுமையையும் போதிக்கின்றது. இஸ்லாத்திலும் இது குறித்து சொல்லப்பட்டுள்ளது. ஆனால் நாம் அதனை இணைப்புப் பாலமாக எடுக்கவில்லை. நாம் பெரும்பான்மை சமூகத்துடன் மத, கலாசார ரீதியாக நட்புறவைப் பேண வேண்டும். சட்டத் தரணிகள் சென்று வழக்குகளை பதிவு செய்வது தீர்வல்ல. அளுத்கம சம்பவத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை என குற்றம் சாட்டினாலும் அதிலும் நன்மையுள்ளது. சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு நாம் பின்நிற்கத் தேவையில்லை. இந்நாட்டில் தமிழ், கிறிஸ்தவ, முஸ்லிம்கள் ஆகிய மூன்று இனங்களுக்கும் பிரச்சினைகள் உள்ளன.

பெரும்பான்மை சமூகத்துடன் சேர்ந்து இவை குறித்து கலந்துரையாடப்பட வேண்டும். வெறுமனே சட்டரீதியாக மாத்திரம் போக முடியாது.          சட்டரீதியாக போகின்ற விடயங்களும் உள்ளன. உதாரணமாக பஸ்ஸில் பயணிக்கின்ற போது நடக்கும் விடயங்களுக்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய வேண்டும். ஆனால் இதற்கு நான் பரிந்துரை செய்வதில்லை. ஒரு காதால் எடுத்து மறு காதால் விட்டு விடுவது மேலானது. மிகவும் மோசமான பிரச்சினையொன்று நடந்தால் முறைப்பாடு செய்யத்தான் வேண்டும். அதை விட்டுவிடவும் கூடாது.

எமக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமைகளை நாம் நிதானமாக பாவிக்க வேண்டும். எதையும் செய்ய முடியும் என்கின்ற மனப்பான்மையை குறைத்து, சமாதானத்தை, அன்னியோன்யத்தை, நட்பை வளர்க்கக்கூடிய வகையில் நாம் நடந்து கொள்வது நல்லது. அடுத்தவர்களுடன் அழகிய முறையில் கதைக்க முடியுமென்றால் கதையுங்கள். பிரச்சினை வருமென்று தெரிந்தால் விட்டுவிடுங்கள் என்று அல்குர்ஆன் கூறியுள்ளது. அத்துடன் மோசமான முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டால் நாம் முறைப்பாடு செய்ய வேண்டும். விஷேடமாக 21/4 தாக்குதலுக்கு பின்னர் நடைபெற்ற விடயங்கள் சம்பந்தமாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யலாம், உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கை தாக்கல் செய்யலாம். ஒரு பொலிஸ் நிலையத்தால் முறைப்பாடு பதிவுசெய்யப்பட வில்லை என்றால் பொலிஸ் தலைமையகத்திற்கு செல்ல முடியும். இப்படியான வழிமுறைகள் உள்ளன. ஆகத் தேவையான சந்தர்ப்பங்களில் பயன்படுத்த நாம் பின்நிற்கவும் கூடாது.

  • ஒரு சமயத்தை, நம்பிக்கையை அழிப்பதற்கான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது. உலக நியாயப்படி இது சரியானதா?

Universal Declaration of Human Rights,  Iccpr    போன்ற சர்வதேச சட்டங்கள் மற்றும் எமது நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் அவதானிக்கின்ற போது ஒரு சமய நம்பிக்கையை அழிப்பதற்கு முயற்சியெடுப்பது இந்தச் சட்டங்களுக்கு முரணானதாகும். இது வெற்றியளிக்கக் கூடியதுமல்ல. ஏனெனில் உண்மை தாக்கப்படலாம், குழப்பப்படலாம், திசை திருப்பப்படலாம். ஆனால் இறுதியில் உண்மையே நிலைநாட்டப்படும். எமது பழைய பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன என்பதை எமது அரசியல் தலைமைகள் உணர வேண்டும். உதாரணமாக வடக்கிலிருந்து விரட்டப்பட்ட மக்கள் இன்னும் மீள்குடியமர்த்தப்படவில்லை. இது கவலையான விடயம். மீள்குடியமர்த்தப்பட வேண்டும் என்பது அம்மக்களின் உரிமையாகும்.

இந்நாட்டின் பெரும்பான்மை சிங்கள மக்கள் இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். எல்டீடீஈ விரட்டியது தவறாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறினால் அவர்களும் இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். எனவே இரண்டு தரப்பும் இணைந்தே இம்மக்களின் மீள்குடி யேற்றத்தை செய்து வைக்க வேண்டும். இதனை முஸ்லிம் அரசியல் தலைவர்களிடம் அடையாளப்படுத்தப்பட வேண்டும். வெறுமனே ஜனாதிபதியையும் பிரதமரையும் அழுத்தம் கொடுப்பதால் இதனை செய்ய முடியாது.

அத்துடன் 2012 ஆம் ஆண்டிற்கு பிறகு முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்க்கப்பட்ட பிரச்சினைகளுக்கும் சரியான தீர்வுகள் வழங்கப்படவில்லை. எனவே முஸ்லிம்கள் எதிர்காலத்தில் யாரை நம்பிப் போக வேண்டும் என்ற தடுமாற்றம் உள்ளனர். அரசியல் ரீதியாக பிரதிநிதித்துவம் செய்பவர்கள் இந்நாட்டின் இன்றைய நிலைமை மிகவும் ஆபத்தானது என்பதை உணர வேண்டும். இந்நாட்டில் 21/4 தாக்குதலுக்கு பின்னர் முன்பு இருந்ததை விட அதிகமாக வெளிநாட்டு சக்திகள் ஊடுருவியுள்ளன. இந்தப் பிரச்சினை இவ்வரசாங் கத்தின் கீழேயே நடந்துள்ளது.

வெளிநாட்டு சக்திகளை எவ்வித தடங்கலும் இல்லாமல் இந்நாட்டில் நடமாட விட்டுள்ளது இவ்வரசாங்கம். கடந்த வாரம் விமல் வீரவன்ச கூறிய ஒரு கருத்து இங்கு நோக்கத்தக்கது. ஆறு அமெரிக்கர்கள் பயணப் பொதிகள் சோதனையிடப்படாமல் நாட்டிற்குள் விடப்பட்டுள்ளார்கள். இது தொடர்பில் முழுமையானதொரு விசாரணை நடாத்தப்பட வேண்டும். வந்தவர்கள் இராணுவத்தினர்கள். இவர்கள் சுங்கப் பணியாளர்களின் சோதனையின்றி எப்படி உள்ளே வரவிடப்பட்டார்கள் என்பது குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும்.

இது முதற் தடவையல்ல. இதற்கு முன்பும் ஹில்டன் ஹோட்டலில் வைத்து சிலர் பிடிபட்டார்கள். இவை பற்றி விசாரணை செய்யப்பட வேண்டும். ஏனெனில் 21/4 தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள் போன்று வேறு நபர்களுக்கு இவர்கள் ஆயுதம் வழங்கலாம். இப்படி சிரியாவில் நடந்தது. ஆகாய மார்க்கமாக வந்த அமெரிக்க இராணுவம் வெளிப்படையாகவே ஆயுதங்களை கீழே போட்டிருக்கிறது. இது நேரடியாகவே ஐசிஸின் கரங்களுக்குச் சென்றுள்ளது. அங்கு அப்படி நடந்ததென்றால் இங்கு அப்படி நடக்காது என்பதற்கு என்ன நிச்சயம்? இப்படி நடக்காமல் இருப்பதற்கு முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்கின்ற விடயங்களில் முஸ்லிம் தலைமைகள் ஏன் மௌனித்திருக்கிறார்கள்?

விமல் வீரவன்ச மாத்திரம் தானா இதை பேச வேண்டும். இறுதியில் இது எம்மையே பாதிக்கும். வெளிச்சக்திகள் எமது நாட்டிற்குள் ஒரு பன்சலைக்கு அருகாமையில் ஆயுதத்தை வைத்துவிட்டால் பெரும் பான்மைச் சமூகம் யாரை சந்தேகம் கொள்ளும்? தற்போதைய நிலையில் எமது சமூகத்தையே குறிவைப்பார்கள். முஸ்லிம்களே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப் படுவார்கள். மூன்று வருடங்களுக்கு முன்னர் இந்நாட்டிற்குள் ஒரு இஸ்ரேலியர் நுழைந்தார். விமான நிலையத்தில் வைத்து அவர் பிடிபட்டார். காரணம், அவர் ஈரான் கடவுச் சீட்டில் நாட்டிற்குள் நுழைந்ததாகும். ஆனால் எமது உளவுத்துறை அவரை விசாரணை செய்யாமல் மறுநாள் நாட்டிற்கு அனுப்பிவைத்தது. சரியாகப் பார்த்தால் அவர் கைதுசெய்யப்பட்டு நீர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட வேண்டும். ஆனால் அது நிகழ வில்லை. ஏன் அவர் ஈரானிய தேசத்தவ ரொருவனின் கடவுச் சீட்டில் இங்கு வர வேண்டும்?

இது போன்று எத்தனையோ நிகழ்வுகள் உள்ளன. இவை பற்றி எமது அரசியல் தலைமைகளுக்கு தெரியாமல் இல்லை. ஒரு முறை தெரியாமல் நடந்ததென்று வைத்துக்கொள்வோம். இனிமேல் நடந்தால் மன்னிப்புக் கிடைக்குமா? அண்மை யில் இலங்கைக்கு வந்த ஐ.நா. பிரதிநிதியொருவர் இந்நாட்டிலுள்ள முஸ்லிம்கள் கடல்வழியாகப் போக வேண்டிய நிலை வந்தாலும் வரும் என்றார். அவர் ஏன் அப்படிச் சொல்ல வேண்டும். சிரியாவில், லிபியாவில், ஈராக்கில் நடந்தவையெல்லாம் ஆரம்பப்படியாகும். இது இலங்கையோடு மாத்திரம் முற்றுப்பெறப் போவதில்லை. தெற்காசியாவை ஒரு வட்டமாக எடுத்துச் செய்யப் போகின்றார்கள். இவற் றுக்குப் பின்னால் ஆயுதக் கலாசாரமே முதற் காரணம் என்று மல்கம் காடினல் ரஞ்சித் குறிப்பிட்டுள்ளமையும் இங்கு கவனிக்கத்தக்கது.

எமது அரசியல் தலைவர்கள் அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டு ஒன்றையுமே சாதிப்பதில்லை. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு எவ்வளவோ விடயங்களை           சாதித்துக்கொண்டுள்ளது. பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற முன்னர் பிரதமர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கலந்துரையாடல் நடாத்துவார். இந்தப்  பி.ஆர் முறைப்படி பொதுத் தேர்தலை பொறுத்தவரையில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மையை எடுப்பது மிகவும் கடினம். முஸ்லிம் உறுப்பினர்கள் பதவிகளை எடுத்துக்கொள்ளும் போது முஸ்லிம் சமூகத்துக்கு வேறொன்றும் கிடைக்கப்போவதில்லை. கடந்த காலத்தில் பிரச்சினை வந்தபோது முஸ்லிம் எம்பிக்கள் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக அமைச்சுப் பதவிகளை துறந்த போது சமூகம் எவ்வளவோ சந்தோஷப்பட்டது.

தற்போது ஜனாதிபதித் தேர்தலும் அதனைத் தொடர்ந்து மாகாண சபைத் தேர்தலும் நடைபெறப்போகின்றது. இன்னும் ஓரிரண்டு மாதங்கள் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்காமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். குறுகிய அரசியல் நோக்கத்திற்காக முஸ்லிம் உறுப்பினர்கள் பதவிகளை பொறுப்பேற்றிருக் கிறார்கள். முஸ்லிம் விரோத நாடுகள் 21/4 இல் நடந்த தாக்குதல் சம்பவத்தை விசாரணை செய்யும் குழுவில் அங்கம் வகித்துள்ளன. எமது எதிரிகளை கொண்டுவந்து எம்மை விசாரிக்கின்றார்கள். யார் இவர்களை கொண்டு வந்தார்கள்? இந்த அரசாங்கமே இவர்களை கொண்டு வந்தது. இதைப் பற்றி என் பேசுகிறார்களில்லை. இவற்றின் பாரதூரங்களை நாம் விளங்க வேண்டும்.

தேர்தல்களை எவ்வாறு எதிர்கொள்வதென்பது மிக முக்கிய பிரச்சினையாக உள்ளது. இதை இன்னும் அதிகரிக்கக் கூடிய வெளிச்சக்திகளே நாட்டிற்குள் ஊடுருவியுள்ளன. இதில் மொசாட் உள்ளதென்றால் அது முஸ்லிம் விரோத உளவு அமைப்பாகும். அமெரிக்காவின் FBI ஐ எடுத்தாலும் அமெரிக்க ஜனாதிபதி தேர் தல் நடைபெறும்போது ‘Anti Black Anti Muslim’ எனும் கருத்தை முன்வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்தார். இப்படிப்பட்டவர்களுக்கு கீழால் உள்ள உளவுத் துறையையா நாம் இங்கு கொண்டு வர வேண்டும். வெளிநாட்டவர்கள் இதில் சம் ந்தப்படுவது இந்த சட்டத்திற்கு விரோதமானது. அவர்களது நாட்டில் ஏதாவது நடந்தால் எம்மை உள்நுழைய விடுவார்களா? 9/11 தாக்குதல் தொடர்பில் கூட்டு விசாரணை மேற்கொள்ள உலகில் எந்தவொரு நாட்டிற்கும் இடமளிக்கப்படவில்லை. உள்ளூர் மட்டத்தில் ஒரு விசாரணையை நடத்தி அவர்களுக்கு தேவையான ஒரு அறிக்கையை வெளியிட்டார்கள்.

இந்தியாவின் ரோவை எடுத்துக்கொள்ளுங்கள். முன்பிருந்த இந்தியாவல்ல தற்போதிருப்பது. முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு அமைப்பே இது. இந்திய அரசாங்கம் மிகவும் அபாயகரமானது. 21/4 தாக்குதல் இடம்பெறும் என்று இந்திய உளவுத் துறைக்கு எப்படித் தெரிய வந்தது? அவர்கள் தூண்டியும் இருக்கலாம். இதனால் தான் மல்கம் ரஞ்சித் அவர்கள் சுயாதீன விசாரணைக் குழுவொன்றை நியமிக்கும் படி கூறினார். இன்னும் உண்மை வெளிவரவில்லை. இவர்கள் ஏன் இந்தப் பயங்கரவாதச் செயல்களை செய்தார்கள்? அதற்கான பதில் இன்னும் வெளிவரவில்லை. அல்குர்ஆன் தான் பிழையாக காட்டப்படுகிறது.

எனக்குத் தெரிந்த வகையில் சுயாதீன ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் என காதினல் கூறிய கருத்துக்கு என்னைத் தவிர ஒருவரும் ஆதரவாக குரல் எழுப்பவில்லை. நாம் முஸ்லிம் சமூகம் என்ற வகையில் இந்தப் பிரச்சினையை 100 வீதம் தீர்ப்பதற்கு உதவியளிக்க தயாராக உள்ளோம். அந்தத் தீர்ப்பை இந்த நாட்டிலுள்ள உளவுத்துறைக்கு செய்யலாம். வெளிச்சக்திகள் தேவையில்லை. இந்த நாடு புலிப் பயங்கரவாதத்தை வெற்றிகரமாக முடித்த நாடு. வெளிநாடுகள் இன்னும் அந்த நாடுகளில் உள்ள பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடிக்கவில்லை.

எனவே வெளிச்சக்திகள் இங்கு பிரச்சினைகளை உருவாக்கப் பார்க்கின்றன. அவற்றுக்கு முஸ்லிம் தலைமைகள் ஆதர வளிக்கக் கூடாது. குறுகிய அரசியல் லாபங்களுக்காக எமது ஒட்டு மொத்த சமூகத்தையே தாரைவார்த்து விடக்கூடாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பை போன்று எதிரணியில் நின்று எமது சமூகத்திற்கான விடயங்களை சாதிக்க வேண்டும்.

  • தற்போதைய தேர்தல் பிரச்சாரம் நாட்டின் பாதுகாப்பை முன்வைத்தே நிகழ்த்தப்பட்டு வருகிறது. இதில் முஸ்லிம்கள் இலக்குவைக்கப்பட்ட பிரச்சினைகளே அதிகம் முன்னெடுக் கப்படுகின்றது. இதனை நீங்கள் எப்படி அவதானிக்கின்றீர்கள்?

பிரதான இரண்டு கட்சிகளும் 21/4 சம் பந்தப்பட்ட விடயங்களையே பாதுகாப்பு விவகாரமாகக் காட்டுகின்றது. இதனை இனவாதப் பின்னணியில் நகர்த்தினால் அது நாட்டுக்கு மிகப்பெரும் பிரச்சினையாக மாறும். நான் ஜேவிபி ஆதரவாளன் அல்ல. ஆனால் ஜேவிபி தலைவர் கூறிய கருத்தொன்றை இங்கு நினைவுபடுத்துகின்றேன். ஒரு இனவாதிக்கு இந்த நாட்டில் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது. அது தோல்வியிலேயே முடிவடையும். அவரது கருத்து என்னவெனில் பிரதான இரு கட்சிகளும் பாதுகாப்பு என்னும் பெயரில் இனவாதத்தையே கக்குகின்றன என்பதாகும். இது நாட்டிற்கோ முஸ்லிம் சமுதாயத்திற்கோ நல்லதல்ல. இப்படியானவர்கள் நாட்டின் தலைமைத்துவத்திற்கு வந்தால் இப்படியான பிரச்சினைகள் தீராது. இந்தக் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். இதை வைத்து அவரை ஆதரிக்க வேண்டும் என்பதல்ல.

ஆனால் இன்று முஸ்லிம் சமூகத்தின் பெரும்பாலானவர்கள் அனுரகுமாரவிற்கு ஆதரவாகப் பேசி வருகின்றார்கள். எமது அரசியல் பிரதிநிதிகள் சூடான தட்டின்  மீது உள்ளனர். அதிலிருந்து நாங்கள் நெருப்பில் பாய்வதா என்று கேட்கிறார்கள். தொடர்ந்தும் சூடான தட்டிலிருந்தால் அதிலே எரிந்து போய்விடுவோம். இதி லிருந்து எப்படியாவது பாய வேண்டும். நெருப்பின் மீதாவது பாய வேண்டும். அப்போது இடம்பெறுகின்ற பிரச்சினைகளிலிருந்து வெளிவர முயற்சிக்க வேண் டும் என்றே நான் கூறுகின்றேன். இங்கிருந்து பாய்ந்தால் நெருப்பில் விழுந்து விடுவோம் என்கின்ற காரணத்தை வைத்து அதிலே கிடந்து மாய்ந்துவிடக்கூடாது. எப்படியாவது அதிலிருந்து வெளிவர முயற்சிக்க வேண்டும்.

  • முஸ்லிம்கள் காரணமின்றி கைதுசெய்யப்பட்டு வருவது குறித்த உங்களது அவதானங்களை சற்று தெளிவுபடுத்த முடியுமா?

சர்வதேச உளவு நிறுவனங்களுக்கூடாக வருகின்ற தகவல்களை அடிப்படையாக வைத்தே 21/4 தாக்குதலுக்கு பிந்திய அனேகமான கைதுகள் நடைபெறுகின்றன. எமது நாட்டின் பாதுகாப்புத் துறைக்கு அவசியமாக இருப்பது இந்தப் பிரச்சினையை எப்படியாவது முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பது. ஆட்சியாளர்கள் கூட அண்மையில் எல்லாப் பிரச்சினைகளும் முடிந்துவிட்டது என்று குறிப்பிட்டார்கள். ஆனால் வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் கொடுக்கின்ற சில விடயங்களை வைத்து சிலர் கைதுசெய்யப்பட்டு வருகின்றார்கள். சில விடயங்களை விசாரிக்காமல் கைது செய்வது தவறானது. இந்தப் பின்னணியிலேயே இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் ஹஜ்ஜுல் அக்பரின் கைது இடம்பெற்றிருக்கிறது.

இவரது கைது குறித்து அரசாங்கம் இது வரையில் ஒரு ஊடக அறிக்கையையேனும் வெளியிடவில்லை. அவர் ஒரு முக்கியமான சமூகத் தலைவர். ஜமாஅதே இஸ் லாமியில் 24 வருடங்கள் தலைவராக செயற்பட்டவர். இந்நாட்டிற்கு மிகவும் பெறுமதியான சேவையை நல்கிய ஒருவர். ஆனால் இவர் ஏன் கைதுசெய்யப்பட்டுள்ளார்? என்பது குறித்து அரசாங்கம் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை. என்ன காரணத்திற்கு கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று கூறினால் அதற்கான பதிலை அவரால் தர முடியும். உதாரணமாக மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு தொடர்பில் இவர் சம்பந்தப்பட்டுள்ளார் என ஏதாவது பிழையான செய்தி போயிருந்தால் அவருக்குப் பதில் சொல்லக்கூடிய நிலைமை உள்ளது. இற்றைக்கு 3 வருடங்களுக்கு முன்னரே அதற்கு சம்பந்தப்பட்ட வரை இவர் அவ்வமைப்பிலிருந்து வெளியேற்றியுள்ளார். இப்படியான ஒருவரை எவ்வாறு கைதுசெய்வது? அடுத்த தேர்தலில் நிறையப் பேர் அரசாங்கத்திற்கு வாக்களிக்க மாட்டார்கள். அப்படியான நிலையிலேயே நாடு உள்ளது.

நேர்காணல்: ஹெட்டி ரம்ஸி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here