முஸ்லிம் சமூகத்தைக் கூட்டிணைக்கும் கூட்டு ஸகாத்

0
2

ஒருவர் தனது பொருளாதார பௌதிகத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலை என்பதுதான் வறுமை என்பதற்குரிய வரைவிலக்கணமாகும். இலங்கையின் தேசிய வறுமைச் சுட்டி 6.5 ஆக இருக்கையில், முஸ்லிம் சமூகத்தில் அது இருபதை விட அதிகமாகும் என்று உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் அஷ்ஷெய்க் மிப்லி அவர்கள் முன்வைத்த கருத்து சபையில் இருந்தவர்களுக்கு தாம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர்த்தப் போதுமானதாகும்.

வறுமை ஒழிப்பின் சூத்திரமாக இஸ்லாம் ஸகாத்தை முன்வைக்கிறது. இதனை நடைமுறைப்படுத்துவது இஸ்லாமிய அரசின் கடமை. இந்தக் கட மையை மக்கள் புறக்கணிக்கின்றபோது அதற்கெதிராக போர் தொடுப்பதற்கும் முடியுமான ஒரு கட்டாயக் கடமையாக ஆட்சியாளர் அபூபக்கர் (ரழி) இதனை முன்னிலைப்படுத்தியிருக்கிறார்கள்.

ஸகாத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒழுங்கொன்று இல்லாதபோது மக்கள் தத்தமது ஸகாத்தை தமது போக்கில் பங்கிட்டு விடுகின்றனர். இதனால் ஸகாத் வறுமை ஒழிப்புக்கான சூத்திரமாக எமது சமூகத்திலே பிரயோ கிக்கப்படுவதில்லை. இதனைக் கருத்தில் கொண்டு பல்வேறு ஊர்களிலும் கூட்டு ஸகாத் நிறுவனங்கள் இயங்கத் தொடங்கியிருக்கின்றன.

13055295_1708845105994838_9005062485217819256_nஇவ்வாறான கூட்டு ஸகாத் அமைப்புக்களை ஒன்று திரட்டி, அவற்றினது அனுபவங்களை பகிர்ந்து கொள்வதும், வறுமை ஒழிப்புக்கான மூலமாக ஸகாத்தை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதற்கான வழிவகைகளை ஆராய்ந்து, அவற்றை மேம்படுத்துவதும் இந்தக் கூட்டத்தின் நோக்கமாகும் என அஷ்-ஷெய்க் மிப்லி கூட்டத்தினது நோக்கத்தை விபரித்தார்.

நாட்டின் பல பிரதேசங்களிலும் இயங்கி வருகின்ற கூட்டு ஸகாத் நிறுவனங்களை ஓரிடத்தில் சந்திக்கச் செய்கின்ற நிகழ்வொன்றை தேசிய ஷூறா சபை கொழும்பில் ஏற்பாடு செய்திருந்தது. நாட்டிலுள்ள எல்லா ஸகாத் கமிட்டிகளையும் கலந்து கொள்ளச் செய்யும் நோக்கில் பத்திரிகைகளிலும் சமூக ஊடகங்களிலும் இந்நிகழ்வு விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. ஊர்களிலே ஸகாத் பணியில் ஈடுபட்டிருக்கின்ற ஐம்பது நிறுவனங்கள் தேசிய ஷூறா சபையுடன் தொடர்பு கொண்டிருந்தன. இவற்றுள் 47 ஸகாத் நிறுவனங்கள் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தன.

தேசிய ஷூறா சபையின் உப குழுக்களுள் ஒன்றான சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான குழுவின் தலைவரான இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் அஷ்-ஷெய்க் மிப்லி, இலங்கையில் ஸகாத் துறையில் தேர்ச்சி பெற்ற அறிஞரான ஜாமியா நளீமிய்யா கலாபீடத்தின் உதவிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் அய்யூப் அலி ஆகியோர் உரை நிகழ்த்தியதோடு, அல்குர்ஆன் திறந்த கல்லூரியின் பணிப்பாளர் உஸ்தாத் மன்ஸூர் கருத்துரை வழங்கினார். தேசிய ஷூறா சபையின் தலைவர் தாரிக் மஹ்மூத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை அதன் உப தலைவர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பழீல் நடத்தி வைத்தார்.

இஸ்லாமிய பொருளாதாரத் துறையில் அறிவும் அனுபவமும் மிக்க இந்த உலமாக்களோடு, கலந்து கொள்வதற்காக வந்திருந்த உலமாக்கள், அனுபவம் வாய்ந்தவர்களும் தமது கருத்துக்களைப் பரிமாறி நிகழ்வை ஆக்கபூர்வமானதாக்கினர். ஸகாத்தை நீண்ட கால, குறுகிய கால முதலீடுகளாக மாற்றுவது தொடர்பான கருத்துக்களையும் வழிகாட்டல்களையும் அஷ்ஷெய்க் மிப்லி முன்வைத்தார். குறிப்பிட்ட எட்டுக் கூட்டத்தின் தேவைக்கு மட்டுமே ஸகாத் பயன்படுத்தப்பட முடியும் என்ற கருத்தை ஸகாத் விநியோகம் தொடர்பில் உரையாற்றிய அஷ்ஷெய் அய்யூப் அலி தெரிவித்தார்.

உஸ்தாத் மன்ஸூர் கருத்துரைக்கையில், ஸகாத்தின் தேசிய ரீதியான பங்குகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும், பீஸபீலில்லாஹ், முஅல்லபதுல் குலூப் தொடர்பான பார்வைகள் மீள்பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும், அல்காரிமூன் பங்கிலிருந்து கடனுதவி வழங்குவது சம்பந்தமான அறிஞர்களின் கருத்தை யோசிக்க முடியும் என்றும், சர்வதேச பைதுஸ் ஸகாத்துடன் இணைந்து வேலை செய்வது பற்றி ஆராய வேண்டும் என்றும் கருத்துரைத்தார்.

நாட்டில் சிறப்பாக இயங்குகின்ற சில ஸகாத் நிறுவனங்கள் தமது அனுபவங்களை முன்வைத்தமை கலந்து கொண்டவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.  1973 இல் 4,000 ரூபா ஸகாத் சேகரிப்போடு உருவாக்கப்பட்ட வெலம்பொட ஸகாத் கமிட்டியினரின் முன்வைப்பில், தமது ஸகாத் நிதி தற்போது ஒரு கோடியாக வளர்ந்திருப்பதாகவும், மலசலகூடம், மின்சார நீர் வசதிகள் இல்லாத ஒரு குடும்பமாவது தற்போது தமது பிரதேசத்தில் இல்லை என்றும் தெரிவித்தனர்.

பலாங்கொட பிரதேசத்தில் ஸகாத் நிதியத்தினால் 07 ஏக்கர் காணி வாங்கப்பட்டு 120 குடும்பங்களுக்கு வீட்டு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக பலாங்கொட ஸகாத் பௌன்டேஷன் தெரிவித்தது. தெஹிவல கல்கிஸ்ஸ பகுதியில் உண்டியல் மூலம் திரட்டப்படும் ஸதகாக்கள் மூலமாக சமூகப் பணி நடப்பதாகச் சொல்லப்பட்டது. காத்தான்குடி பள்ளிவாசல் சம்மேளனத்தின் ஸகாத் கமிட்டியினர் காணி வாங்கி சிகரம் வீட்டுத் திட்டம் என்ற பெயரில் தொடர்மாடி வீடுகளை அமைத்து சீதனம் வாங்காது திருமணம் முடிக்கின்ற ஆண்களுக்கு 05 வருடத்துக்கு அந்த வீடுகளை வாடகையின்றி வழங்குவதாகவும், முஅல்லபதுல் குலூபுக்கு தாம் முன்னுரிமை வழங்குவதாகவும் குறிப்பிட்டனர்.

நிந்தவூரின் 32 மஹல்லாக்களிலும் மஹல்லா ஸகாத் நிதியம் உருவாக்கப்பட்டு அவை நிந்தவூர் ஸகாத் நிதியத்துடன் இணைக்கப்படுவதாகவும், தமது ஊரிலிருந்து யாரும் வெளியே யாசகத் துக்காகச் செல்லாத அளவுக்கு தமது ஸகாத் நிதியத்தின் பணி அமைந்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஆமில் பங்கின் ஊடாக ஸகாத் வழங்குவதை உற்சாகப்படுத்தும் நிகழ்ச்சிகளை தாம் செய்வதாக சம்மாந்துறை ஸகாத் நிதியத்தினர் தெரிவித்தனர்.

இவ்வாறு சில பிரதேசங்கள் தமது அனுபவங்களை சபையில் முன்வைத்ததோடு, மற்றும் பலரும் தமது அனுபவங்களை தேசிய ஷூறாவுக்குக் கையளித்தனர். ஸகாத் விநியோகிப்பதற்கான படிவங்கள், குடும்பங்களின் படிவங்களைத் திரட்டுவதற்கான படிவங்கள் என நடைமுறையில் இருக்கும் படிவங்களின் மாதிரிகளை வந்திருந்த ஸகாத் கமிட்டியினர் பகிர்ந்து கொண்டனர்.

அனுபவங்களை முன்வைத்த ஸகாத் கமிட்டிகள் ஒவ்வொன்றிலும் தத்தமது பிரதேசங்களில் ஒரு கோடி ரூபாவுக்கு மேல் ஸகாத் சேகரிக்கப்படுவதாகத் தெரிவித்தனர். இந்த வகையில் நாடு முழுவதும் அண்ணளவாக 100 கோடி ருபா அளவில் ஸகாத் விநியோகம் நடைபெறுவதாக மதிப்பீடுகள் தெரிவிக்கப்பட்டன. இந்த அனுபவங்களும் தரவுகளும் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் வறுமை நிலையை எங்களது ஸகாத் மூலமாகவே இல்லாதொழிக்க முடியும் என்ற நம்பிக்கையை வந்திருந்தவர்களுக்கு மத்தியில் ஏற்படுத்தியது.

ஸகாத் நிதியத்தின் செயற்பாடுகளை மேலும் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது தொடர்பிலான குழுக் கலந்துரையாடலின் போது ஆக்கபூர்வமான பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. ஈற்றில் இவை அனைத்தும் தொகுத்து வழங்கப்பட்டு ஒன்றுகூடலின் முன் மொழிவுகளாக முன்வைக்கப்பட்டன.

ஸகாத் தொடர்பில் அல்குர்ஆன், ஸுன்னா அடிப்படையிலான பூரண வழிகாட்டலை விருத்தி செய்தல்

முன்வைத்த மாதிரிகளை தொகுத்து ஒரு பொது ஒழுங்குக்கு வருதல்

ஸகாத் குழுக்களுக்கான கொள்கை கள் அமைந்த கையேடொன்றை தயார் செய்தல்

நடைமுறைப்படுத்தலை எப்படி மேலும் வினைத்திறனுள்ளதாக மாற்றலாம் என்பது தொடர்பில் மேலும் ஆராய்தல்

ஸகாத் நிறுவனங்கள் தொடர்பான தரவுத்தளம் ஒன்றைப் பேணுதல்

வருடாந்தம் இதுபோன்ற மீளாய்வுக் கூட்டங்களை ஒழுங்கு செய்தல்

தேசிய ஸகாத் செயலகம் ஒன்றை நிறுவுதல்

ஸகாத் கமிட்டிகள் அனைத்தையும் இணைத்ததான தேசிய ஸகாத் நிறுவனமொன்று தேசிய சூறாவின் தலைமையின் கீழ் இயங்க வேண்டும், இதற்கு பிராந்திய ஸகாத் கமிட்டிகள் குறிப்பிட்ட ஒரு வீதத்தை வழங்க வேண்டும், ஸகாத் நிதி பற்றாக்குறையாகவுள்ள ஊர்களுக்கும் ஸேவ் த பேர்ள்ஸ் போன்ற முக்கியமான நிகழ்ச்சித் திட்டங்களுக்கும் இந்நிதி பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் பலரும் கருத்துத் தெரிவித்தனர்.

ஸகாத் நிதி போன்றே புலமைப் பரிசில் திட்டங்கள், மருத்துவ முகாம்கள் என ஏனைய பல பல விடயங்களும் ஒன்றிணைக்கப்படும் என தேசிய ஷூறாவின் தலைவர் தாரிக் மஹ்மூத் கூட்டத்தின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல ஸகாத் நிதியத்தினை ஒன்றிணைப்பதற்கான முதல் ஒன்றுகூடல் ஏனைய விடயங்களை ஒன்றிணைப்பதற்கான நம்பிக்கையை  வளர்க்கும் விதமாக அமைந்திருந்தது. தேசிய ஷூறாவை தலைமையாக ஏற்று சமூகம் இந்த விடயத்தில் ஒன்றிணைந்தது போல ஏனைய விவகாரங்களிலும் செயற்படத் தொடங்கினால் சமூகம் சீக்கிரத்தில் விடிவு பெறும் என வந்திருந்தவர்களில் பலரும் பேசிக் கொண்டனர். கூட்டு ஸகாத் நிறுவனங்களின் கூட்டு சமூகத்தையே கூட்டாக இயக்குவதற்கு எமது பிரார்த்தனைகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here