முஸ்லிம் தனியார் சட்டம் திருத்தப்படவில்லை: GSP வரிச்சலுகை இன்று முதல் அமுல்

0
3

ஐரோப்பிய யூனியனால் இலங்கைக்கு வழங்கப்படுவதாகச் சொல்லப்பட்ட ஜீஎஸ்பீ வரிச்சலுகை இன்று முதல் அமுலாகும் என ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது.

ஐரோப்பிய யூனியனின் அதிகாரிகளால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டின் போதே இது அறிவிக்கப்பட்டது.

கடந்த அரசாங்க காலத்தில் தடைப்பட்டிருந்த ஜீஎஸ்பி வரிச்சலுகையை மீளப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கை பல நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட வேண்டியிருந்ததாக முன்னதாக கூறப்பட்டது. இலங்கைக்கு இந்த வரிச்சலுகை கிடைக்கப்பெறுவதற்கு முஸ்லிம் தனியார் சட்டம் திருத்தப்பட வேண்டும் என சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க ஊடகவியலாளர் மாநாடொன்றில் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தத்துக்கென பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. நீதியரசர் ஸலீம் மர்சூபுடைய குழுவுக்குப் புறம்பாக நியமிக்கப்பட்ட இந்தக் குழுவும் முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தம் சம்பந்தமாக எந்தத் திருத்தங்களையும் முன்வைக்காத நிலையிலேயே ஐரோப்பிய யூனியன் ஜீஎஸ்பி வரிச்சலுகையை வழங்கியுள்ளது.

இதேவேளை ஜீஎஸ்பி வரிச்சலுகையைப் பெறுவதற்காக விதிக்கப்பட்ட நிபந்தனைகளில் ஒன்றான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும் இதுவரை இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ஜீஎஸ்பி வரிச்சலுகையைப் பெறுவதற்கான நிபந்தனைகள் எதனையும் அரசாங்கம் பகிரங்கப்படுத்தாத நிலையில், இந்த நிபந்தனைகள் ஜீஎஸ்பியின் சாக்கில் அரசாங்கம் விதித்துக் கொண்ட நிபந்தனைகளா என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here