முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்திருத்தம்; ஜம்இய்யத்துல் உலமா தற்போது செய்யவேண்டியது என்ன?

0
4

– அஷ் ஷெய்க் அக்ரம் அப்துஸ் சமத் –

முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்திருத்தம் தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பொதுவெளியில் கருத்துக்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர்.

உண்மையில் குறித்த இவ்விவகாரம் தொடர்பில் ஜம்இய்யதுல் உலமா ஏனைய அனைத்து இஸ்லாமிய அமைப்புகளையும் விட மிகுந்த ஈடுபாட்டுடன் செயற்பட்டது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அவர்களது அந்தப்பங்களிப்பு கட்டாயமாக மதிக்கப்பட வேண்டியது.

இதுவரை காலமும் குறித்த சட்டத்திருத்த பிரேரணைகள் தொடர்பில் இஸ்லாமிய அமைப்புகளுடனும் தனிநபர்களுடனும் தனியாகவும் கூட்டாகவும் ஜம்இய்யதுல் உலமா பல்வேறு சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளனர். அவற்றில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது என்ன? என்பது தொடர்பிலும் இரண்டு பிரேரணைகள் ஏன் வந்தன? என்பது தொடர்பிலும் மாற்று நிலைப்பாடுகள் உள்ள இடங்கள் எவை? என்பது தொடர்பிலும் நியாயமான தெளிவுகள் வழங்கப்படடன.

தற்போது குறித்த பிரேரணைகள் தொடர்பாக பொதுமக்கள் அபிப்ராயங்கள் கோரப்பட்டிருக்கும் ஒரு சந்தர்ப்பத்தில் ஜம்இய்யதுல் உலமா பொதுவெளியிலும் இக்கருத்தை பேச முற்பட்டுள்ளனர். தங்களது நிலைப்பாட்டை முன்வைத்து அதற்காக போராடுகிறார்கள், அவர்கள் ஒரு பொறுப்பு வாய்ந்த அமைப்பு. எனவே அவர்களது இந்தப் போராட்டத்தை யாரும் குற்றம் சொல்ல முடியாது. நியாயமற்றது என்று சொல்ல முடியாது.

ஆனால் இந்த இடத்தில் ஜம்இய்யதுல் உலமா கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய விடயத்தை கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன். ஜம்இய்யதுல் உலமா முன்வைக்கும் முக்கிய வாதம் என்னவெனின் சலீம் மர்சூப் அவர்களது குளுவினரின் பிரேரணையில் ஷரீஅத்திற்கு முரணான விடயங்கள் உள்ளடங்கியிருக்கின்றன என்றும் எனவே ஷரீஅத்தைப் பாதுகாக்க நாம் முனைகிறோம் என்பதாகக் காணப்படுகின்றது. இந்த வாதம்தான் தவறு நிகழுகின்ற முக்கிய இடம் என்று நான் நினைக்கின்றேன். சலீம் மர்சூப் அவர்களது குழுவினரின் பிரேரணையும் அடிப்படையில் ஷரீஆ வரம்புகளுக்கு உள்ளேயே இருக்கின்றது என்பது நாம் ஒத்துக் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய விடயம்.

எனவே இங்கு, ஷரீஆ வரம்புகளுக்கு உற்பட்ட இரண்டு வேறுபட்ட அபிப்ராயங்களுக்கு இடையிலான பேதம்தான் இருக்கிறதேயன்றி ஒன்று ஷரீஆவுக்குற்பட்டது மற்றையது ஷரீஆவுக்கு அப்பால்பட்டது என்ற ஒரு நிலை கிடையவே கிடையாது.

எனவே இங்கு சட்டத்திருத்தத்தில் எந்த அபிப்ராயம் உள்ளடக்கப்படுவது மிகவும் பொறுத்தமானது என்பது, எந்தக் கருத்து தற்போதைய சூழலின் நடைமுறைக்கு மிகவும் உகந்தது என்பதை வைத்தே தீர்மானிக்கப்பட முடியும்.

அந்தவகையில் ஜம்இய்யதுல் உலமா செய்ய வேண்டியது, மற்றைய அபிப்ராயம் ஷரீஆவுக்கு அப்பால் பட்டது என்ற வாதத்தைத் தவிர்த்து, தமது அபிப்ராயம் இந்த சூழலின் நடைமுறைக்கு மிகவும் பொறுத்தமானது என்பதற்கான நியாயங்களை முன்வைப்பதேயாகும். அத்துடன் மற்ற அபிப்ராயத்தின் பொறுத்தாப்பாடு இன்மையும் எப்படி வருகிறது என்பதையும் தெளிவு படுத்தலாம். இந்த அணுகுமுறைதான் நியாயமானது. அப்பொழுதுதான் மக்களும் மிகவும் பொறுத்தமான முடிவை விளங்கிக் கொள்வார்கள் என்று நான் நினைக்கிறேன்.

இதைத் தவிர்த்து ஷரீஆவுக்கு முரண் என்ற வாதத்தை முன்வைக்கின்ற பொழுது, அதனால் மக்கள் மத்தியில் அவசியமற்ற உணர்வுக் கொந்தளிப்புகள்தான் ஏற்படுத்தப்படுமேயன்றி அறிவுபுர்வமான ஒரு கருத்தாடலுக்கு அங்கு வழியேற்பட மாட்டாது. மாத்திரமன்றி தேவையற்ற பிளவுகளையும் முரண்பாடுகளையும் சமூக மட்டத்தில் அது கொண்டுவந்து விடமுடியும்.

ஜம்இய்யதுல் உலமா, சமூகத்தை அறிவுபுர்வமாக வழிநடாத்த வேண்டுமேயன்றி உணர்வுத் தூண்டல்களை மாத்திரம் செய்து விடக் கூடாது. அது ஒரு மூலோபாயத் தவறு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

அல்லாஹ்வே போதுமானவன்.

Image result for mmda reform sri lanka groundviews

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here