யெமன்: போரும் பட்டினி மரணங்களும்

0
2

 – றவூப் ஸெய்ன் –

யெமன் போர் மூன்றாவது ஆண்டில் காலடி வைக்கின்றது. ஒரு புறம் ஹூதி ஆயுததாரிகள். அவர்கள் ஈரானின் கைக்கூலிகள். ஷீஆ கும்பல். அதிகாரத்தில் பங்கு கேட்டு ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சிவில் யுத் தத்தில் குதித்தவர்கள். இன்னொரு புறம் சவூதி தலைமையில் ஐந்து அறபு நாடுகளின் இராணுவக் கூட்டு. வளைகுடா ஒப்பந்த நாடுகளின் ஆயுதக் கூட்டு.

இரு தரப்பிற்கும் இடையிலான மோதலில் பலியாக்கப் படும் யெமனியர்களின் கதை மிகவும் சோகம் நிறைந்தது. ஐ.நா. உலக உணவுத் திட்ட அறிக்கை 14 மில்லியன் யெமனியர்கள் (1.4 கோடி) உணவுத் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருவதாக அறிவித்துள்ளது. இதேவேளை, இலட்சக்கணக்கான குழந்தைகள் பட்டினியால் இறக்கும் துயரத்தை எதிர்கொண்டுள்ளனர்.

போர் முரசு பறையும் யெமனில், அதிகாரக் கயிறிழுப்பில் மக்களைப் பலிக்கடாவாக்கும் அறபு-ஷீஆ வர்க்கங்களுக்கு யெமனின் பட்டினி வயிறுகளும் அப்பாவி மரணங்களும் பொருட்டாகத் தெரியப் போவதில்லை. ஆனால், மத்திய கிழக்கிலுள்ள ஒரேயொரு வறிய அறபு நாடான யெமனின் எதிர்காலம் சூனியமாகி வருகின்றது.

இந்தப் போரில் யாரும் வெல்லவில்லை. தோற்றவர்கள் மக்கள் மட்டுமே என்பது தெளிவாகின்றது. போரைத் தொடங்கிய அறபு நாடுகள் எங்கே நிறுத்துவது என்று தெரியாது தடுமாறி நிற்கின்றன. திரை மறைவிலிருந்து மறைகரமாய் செயல்படும் ஈரான், ஹூதிகளுக்கு ஆயுதம் வழங்கி அவர்கள் தரப்பை பலப்படுத்தி வருகின்றது.

தலைநகர் சன்ஆ இன்னும் ஹூதிகளின் கட்டுப்பாட்டின் கீழேயே இருக்கின்றது. அறபு நாடுகளோ வானிலிருந்து எறி கணைகளை வீசி மக்களைக் கொல்கின்றது. அர்த்தமற்ற இந்தப் போருக்கு யெமனியர்கள் கொடுக்கும் விலை என்ன? இதுதான் இப்போது ஒவ்வொரு யெமனியனையும் குடைந்து கொண்டிருக்கும் கேள்வி.

சன்ஆவில் வசிக்கும் 45 வயதான மஹ்தி அப்துல்லாஹ், தனது துயரக் கதையை இவ்வாறு பகிர்கிறார்.

கடந்த சில மாதங்களாகவே எனக்குத் தொழில் இல்லை. ஒரு ரியாலைக் கூட நான் சம்பாதிக்கவில்லை. எனது குடும்பத்தை காப்பதற்கு குப்பைத் தொட்டிகளில் வீசப்பட்ட உணவுகளை தேடிச் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளேன். அடுத்த மக்களிடம் கையேந்துகின்றேன். சிலர் சில ரியால்களைக் கொடுக்கின்றனர். பலரோ எதுவும் கொடுப்பதில்லை. நான் வாழும் இந்தப் பிரதேசத்தில் அடுத்தவர்களுக்குக் கொடுக்கும் நிலையில் யாரும் இல்லை. ஒவ்வொரு நாளும் குப்பை மேடுகளை தேடியலைவதே எனது விதியாகி விட்டது. ஒவ்வொரு நாளும் பசியிலிருந்து எனது குழந்தைகளை பாதுகாப்பதே எனது போராட்டம். அதற்காக எத்தனை நாட்களுக்கு நான் குப்பைகளைக் கிண்டுவேன்” என்கிறார் அப்துல்லாஹ்.

யெமனின் சிவில் யுத்தத்தினால் அல்லாடி நிற்கும் மில்லியன் கணக்கான மக்களில் ஒருவர்தான் அப்துல்லாஹ். மிக வறிய நாடான யெமனில் 14 மில்லியன் மக்களுக்கு சுத்தமான குடிநீரோ போதுமான உணவோ இன்னும் கிடைக்கவில்லை என்கின்றது உலக உணவுத் திட்டம். அவர்களில் 12 மில்லியன் மக்கள் மிகப் பாதுகாப்பற்ற உணவைவே உட்கொள்கின்றனர்.

யெமனின் பொருளாதார அறிஞர் அஹ்மத் ஷாமாக் அல் ஜஸீராவின் ஊடகவியலாளர்களிடம் “இங்கு போர் யெமனியர்களை பட்டினி மரணத்திற்குள் தள்ளிவிட்டது. பொருளாதாரம் சரிந்து விட்டது. மக்களைக் காப்பதற்கு எந்த முறையான திட்டமும் இங்கே இல்லை. போர் உணவுப் பற்றாக் குறையை தீவிரமாக்கியுள்ளது” என்கிறார்.

இதற்கான முக்கிய காரணம், சிவில் யுத்தத்தினால் மக்கள் வேலை வாய்ப்பை இழந்திருப்பதுதான். இதனால், உணவு விடுதிகளிலிருந்து வீசப்படும் கழிவுகளை உண்டு பிழைக்கும் மக்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகின்றது என்கிறார் அவர்.

போருக்கு முன்னதாகவே தனக்குத் தேவையான 99 வீதமான உணவுப் பொருட்களை வெளிநாடுகளிலிருந்து தருவித்த நாடு யெமன். இப்போது போர்ச் சூழலில் இறக்குமதி முற்றாக ஸ்தம்பித்துள்ளது. இதனால் ஒரு உணவுப் பஞ்சத்தை யெமன் எதிர்நோக்கியுள்ளது. இதனால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பது இளம் தலைமுறையாகும். குறிப்பாக, வளரும் வயதிலுள்ள குழந்தைகள் அதீத போஷாக்கின்மையால் உடல் வளர்ச்சி குன்றி, பலர் இறக்கும் நிலைமை உருவாகியுள்ளது. மிக வறிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் பலர் பட்டினியால் இறந்த சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன.

கிழக்கு அபிரிக்க நாடுகளில் பல்லாண்டு காலமாக மக்கள் எதிர்கொண்டுள்ள உணவுப் பற்றாக்குறை மற்றும் பட்டினி ஆகிய நிலைமைகளை யெமனியர்கள் இப்போது எதிர்கொண்டுள்ளனர். 10 நிமிடத்திற்கு ஒரு குழந்தை பட்டினியால் இறக்கும் ஆபத்து இங்கு நேர்ந்துள்ளது.

ஹூதிகளின் கட்டுப்பாட்டிலிருந்து வங்கியைக் காப்பாற்றுவதற்கு சன்ஆவிலிருந்து மத்திய வங்கி ஏடன் நகருக்கு மாற்றப்பட்டுள்ளது. நிர்வாக மாற்றம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தைக் கொண்டு வருமா? அரச நிர்வாகம் ஸ்தம்பித்துப் போயுள்ளது. பல மாதங்களாக அரச ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை.

இந்நிலமைகள் நீடித்தால் பட்டினியினால் இறப்பவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என எச்சரிக்கிறார் ஷாமா. நாட்டில் ஏற்கனவே கொள்ளையும் திருட்டுச் சம்பவங்களும் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கின்றன.

12 வயதான பஷார் எனும் சிறுவர் யெமன் உள்நாட்டுப் போரின் இன்னொரு பலி. அவன் தனது கதையை இப்படித் தொடங்குகின்றான்.

“ஒவ்வொரு நாளும் அதிகாலை விழித்தது முதல் கொஞ்சம் உணவுக்காகவும் பணத்திற்காகவும் வீதி வீதியாய் அலைகிறேன். இறுதியில் உணவகங்களின் குப்பைத் தொட்டிகளில் எச்சிலாக வீசப்பட்டவற்றை எடுத்துச் செல்கின்றேன். அதன் மூலம் எனது மூன்று சகோதரர்களுக்கும் உணவூட்டுகின்றேன். பல மாதங்களுக்கு முன்பாகவே எனது தந்தை இறந்து விட்டார்.”

கடந்த ஆண்டில் இறுதியில் ஐ.நா. சபை யெமனில் 370,000 குழந்தைகள் பட்டினியை எதிர் கொண்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதே வேளை, 20,000 இற்கும் அதிக மான குழந்தைகள் போரினால் பாடசாலைக் கல்வியை இழந் துள்ளனர் என்றும் தெரிவித்துள் ளது.

யெமனியர்களுக்கிடையில் பட்டினிச் சாவிலிருந்து மக்களைக் காப்பதற்கான நிவாரண நிறுவனங்கள் சில இயங்குகின்ற போதும், அவற்றின் பணி போதுமானதாய் இல்லை. அவை மிகுந்த பிரயத்தனத்துடன் களத்தில் செயல்படுகின்றன என்பது உண்மைதான். ஆனால், களத்திலுள்ள உணவுத் தேவைகளை முழுமையாக நிறைவுசெய்யும் நிலையில் அவை இல்லை.

போர் புரியும் அறபு நாடுகளோ யெமனியர்களின் வறுமை, பட்டினி குறித்து எந்த அக்கறையும் கொள்வதாய்த் தெரியவில்லை. தாய்க்கு முன்னால் குழந்தை பாலின்றி அழுகின்றது. காயப்பட்ட தந்தைகளுக்கு முன்னால் குழந்தைகள் பட்டினியால் மடிகின்றன. வயோதிபர்கள், நோயாளிகளின் நிலையோ சொல்லில் மாழாதவை. இருப்பிடங்களை இழந்து அகதிகளாய் தட்டழியும் மக்க ளின் கதையோ பெரும் சோகம்.

இத்தனைக்கும் மத்தியில் எங்கே நிறுத்துவது என்று தெரியாத போரில் கோடிக்கணக்கான டொலர்கள் கொட்டப்படுகின்றன. யெமனின் பட்டினி வயிறுகளை நிரப்புவதற்கு அறபு நாடுகள் போருக்குச் செலவிடும் தொகையின் அரைவாசிப் பங்கே போதுமானது. ஆனால், போர்ப் பிரியர்கள் தமது அதிகாரத்தை நீடிப்பதற்கும் புவி அரசியல் நலன்களைக் காப்பதற்கும் இத்தகைய கேவலமான போரை நீடித்து வருகின்றனர். அதற்கு யெமனியர்கள் கொடுக்கும் விலை தான் மிகப் பெரியது.

யெமனின் சிவில் சமூகம் நடந்து கொண்டிருக்கும் போர் குறித்து கொண்டிருக்கும் உண்மையான நிலைப்பாட்டை உலகறியச் செய்வது அவசியம். அவர்களது மௌனம் எதற்கான சம்மதம் என்பதை உலகம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here