ரஜப் தையிப் அர்தூகான்; காஸிம்பாஷாவிலிருந்து சர்வதேசத்திற்கு

0
0

– முஷாஹித் அஹ்மத் –

சமீபத்தில் துருக்கியில் இடம்பெற்ற ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் நீதிக்கும் அபிவிருத்திருக்குமான கட்சியினரும் அதன் தலைவரும் அமோக வெற்றியீட்டியுள்ளனர். ஜனாதிபதித் தேர்தலில் 53% வாக்குகளைப் பெற்றதன் மூலம் துருக்கியின் வரலாற்றில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட முதல் ஜனாதிபதியாக அர்தூகான் மாறியுள்ளார்.

2017 இல் நடந்த அரசியலமைப்பு மாற்றங்களுக்கு ஏற்பவே இரு தேர்தலும் ஒரே முறையில் நடைபெற்றதோடு, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமைக்கான அங்கீகாரமும் வழங் கப்பட்டது. கடந்த கால அரசியல் மாற்றத்திற்கு ஏற்ப மீண்டும் புதிய திருத்தங்களை மேற்கொள்வதற்கும் புதிய அரசாங்கம் தயாராகி வருகின்றது.

நிறைவேற்று அதிகாரம் பெற்றுள்ள ஜனாதிபதி அர்தூகான் முன்பொரு போதும் இல்லாத வகையிலான அதிகாரங்களை தன்னிடம் தக்கவைத்துக் கொள்வதற்கு தேர்தல் வெற்றி வாய்ப்பளித்துள்ளது. உப ஜனாதிபதி, அமைச்சர்கள், நிர்வாகத் துறையின் உயர் அதிகாரிகள், உயர் நீதிமன்ற நீதியரசர்கள் போன் றோரை நியமிக்கும் அதிகாரம் அர்தூகானுக்குக் கிடைத்துள்ளது. அதேபோன்று பாராளுமன்றத்தை விரும்பும் நேரம் கலைப்பதற்கும் அவசரகால நிலையைப் பிரகடனம் செய்யவும் அர்தூகான் அதி காரம் பெற்றுள்ளார்.

கடந்த 16 ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்து வரும் AKP துருக்கியின் எதிர்கால முன்னேற்றத்திற்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையொன்றே தீர்வு என வலியுறுத்தி வந்துள்ளது. ஸ்திரமான அரசாங்கம், பொருளாதார வளர்ச்சி, ஜனநாயகத்தைப் பலப்படுத்தல் மற்றும் மனித உரிமை களைப் பாதுகாத்தல் போன்ற இலக்குகளை அடைய வேண்டுமாயின், இன்றைய துருக்கிக்கு இத்தகையதோர் ஜனாதிபதி முறைமை அவசியம் என அர்தூகானும் கூறி வந்தார்.

தேர்தல் முடிவுகள் பலருக்குப் பயத்தை உருவாக்கியுள்ளது. சிலர் பாரிய குற்றச்சாட்டுக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர். அதே வேளை AKP இற்கு வாக்களித்த பெரும்பான்மை மக்கள் அர்தூகானின் மீள்வரு கையை ஆவலோரும் எதிர்பார்ப்புடனும் பார்க்கின்றனர்.

துருக்கியின் பிரபலமான எழுத்தாள ரும் அரசியல் ஆய்வாளருமான ஊனி ஒஸ்குரல், அர்தூகானின் வெற்றி குறித்து இப்படி எழுதுகிறார். “நீண்டகாலத்தில் துருக்கியை ஸ்திரமான நாடாக உருவாக் குவதற்கு நிறைவேற்று முறை உதவும். அர்தூகானும் அவரது குழுவும் அரசி யலமைப்பில் தேவையான திருத்தங்க ளைச் செய்து கொண்டு நாட்டை மென் மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கு இது வாய்ப்பளிக்கும். ஆயினும், தொடக்கத்தில் சில பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து, அவற்றுக்குத் தீர்வு காண வேண்டிய அனுபவம் அவர்களுக்குக் கிடைக்கும்” என்கிறார்.

இதேவேளை, அஓக ஆதரவாளர் ஒருவர் ஸ்தன்பூலில் உள்ள கட்சி அலு வலகத்திற்கு முன்பாக அல் ஜஸீராவுக்கு வழங்கிய பேட்டியில், “நாம் அர்தூகானை துருக்கியின் முதல் நிறைவேற்று ஜனாதிபதியாகத் தெரிவுசெய்துள்ளோம். இந்த வெற்றிக்காக அவருக்காக நாம் அதிகம் பிரார்த்தனை செய்துள்ளோம். துருக்கியின் பொருளாதாரத்தோடு விளையாடி வந்த மேலைய ஏகாதிபத்திய சக்தி களின் சதித் திட்டம் தோற்கடிக்கப்பட் டுள்ளது. இனி துருக்கி 100% தனது வழியில் சுதந்திரமாகச் செல்லும். 1923 இல் துருக்கியை முடக்கிப் போடுவதற்கு ஐரோப்பிய காலனித்துவம் அப் போதைய துருக்கியின் பலவீனப்பட்ட அரசாங்கத்தோடு செய்து கொண்ட ஒப் பந்தம் 2023 இல் முடிவுக்கு வருகின்றது. அதன் பின்னர் துருக்கியின் பலத்தையும் பொருளாதார சக்தியையும் கண்டு உல கமே வியக்கப் போகின்றது” என்கிறார்.

2001 இல் நீதிக்கும் அபிவிருத்திக் குமான கட்சி ஸ்தாபிக்கப்பட்டது. 2002 தேர்தலில் அமோக வெற்றி பெற்ற இக் கட்சி, 2007, 2011, 2015 ஆகிய ஆண்டு களில் இடம்பெற்ற தேர்தல்களிலும் வெற்றி பெற்று 16 ஆண்டுகளாய் ஆட்சி யில் நீடிக்கின்றது. 1923 இல் உஸ்மானிய பேரரசு ரத்துச் செய்யப்பட்ட பின்னர் எந்தவொரு அரசாங்கமும் இரண்டு ஆண்டுகளுக்குக் கூட நீடிக்கவில்லை. அந்த வகையில் அர்தூகானின் முதல் அரசியல் சாதனை; நாட்டில் அவர் உருவாக்கிய அரசியல் ஸ்திரப்பாடுதான்.

அதேபோன்று துருக்கியின் பொருளாதாரம், கீழ்க்கட்டுமானம் என்பவற்றிலும் கடந்த 16 ஆண்டுகளில் வியத்தகு சாதனைகள் நிலைநாட்டப்பட்டுள்ளன. வீதி அபிவிருத்தி, புதிய விமான நிலையங்கள், நாட்டின் சகல நகரங்களையும் வேகமாக ஒருங்கிணைக்கின்ற புகையிரத வலையப்பு என்பன அர்தூகானின் அபிவிருத்தித் திட்டங்களில் முக்கியமானவை.

அதேபோன்று வர்த்தக பிராந்தியங் கள், கைத்தொழில் ஆலைகள், ஏற்று மதியை இலக்காகக் கொண்ட உற்பத்தி நிறுவனங்கள் கடந்த 16 ஆண்டுகளில் பெருமளவு வளர்ச்சி கண்டுள்ளன. நாட்டில் 1978 இல் தொடங்கிய குர்திஷ் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் அர்தூ கான் 2002 இலேயே பேச்சுவார்த்தை களைத் தொடங்கினார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் இரு தரப்பு பொருளாதார உடன்படிக்கை களிலும் கைச்சாத்திட்டார்.

கடந்த காலங்களில் அவரது ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு வெளிநாடுகளின் ஆதரவு பெற்ற இராணுவக் கும்பல் பலமுறை முயற்சித்துத் தோல்வி கண்டது. இந்தப் பின்னணியிலேயே ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் பார்க்க வேண்டியுள்ளது.

ஸ்தன்பூல் செஹிர் பல்கலைக்கழகப் பேராசிரியர் மசூத் யெசின், ஸ்தன்பூல் மேயராக 1994 இல் பதவி வகித்த அர்தூகான், கடந்த 20 ஆண்டுகால இடைவெளியில் நாட்டின் முதல் நிறை வேற்று ஜனாதிபதியாக மாறியமை குறித்து இப்படி எழுதுகிறார்:

“துருக்கியின் முதல் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி எனும் கனவை மெய்ப்பிப்பதற்கு அர்தூகான் மிக சாமர்த்தியமாக காய்களை நகர்த்தி வந்தார். அவருக்கு எதிராக இருந்த எத்தனையோ தடைகளையும் முட்டுக் கட்டைகளையும் நுணுக்கமாகத் தாண்டி வந்தார். MHP உடன் தற்போது அவர் கூட்டிணைந்துள்ளார். இதனால் சில விட்டுக் கொடுப்புகளையும் அவர் செய்ய வேண்டியிருக்கும். CHP பிரதான இடதுசாரிக் கட்சிகளுடன் இணைந்தால் நிறைவேற்று அதிகாரத்தை மிக வசதி யாகக் கையாளும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கும்” என்கிறார் மசூத் யெசின்.

ஒரு வருடம் தேர்தலை முற்படுத்திய அர்தூகான், இரண்டு முறை பதவி வகிக்கலாம் என்கின்றது புதிய அரசிய லமைப்புச் சட்டம். அதன்படி 2026 ஆம் ஆண்டு வரை (இன்னொரு முறை வெற்றி பெற்றால்) அர்தூகான் பதவி யில் நீடிக்க முடியும். இந்த இடை வெளிக்குள் துருக்கியை கட்டிப் போட்டி ருக்கின்ற நூறாண்டு கால ஒப்பந்தம் முடிவுக்கு வந்து விடும். துருக்கி எல்லா வகையிலும் எழுச்சியடைவதற்கான வாய்ப்பு பிறந்து விடும். அதன் மூலம் மீளவும் இஸ்லாமிய உலகின் தலை மைப் பாத்திரத்தை ஏற்கும் நிலைக்கு துருக்கி வந்து சேரும்.

இவற்றையெல்லாம் மிகச் சரியாகக் கணக்குப் பார்க்கும் எதிரிகள் மற்றும் அறபு சியோனிஸ்டுகள், அர்தூகான் மீதும் அவரது அரசாங்கத்தின் மீதும் அவதூறுகளை அள்ளி வீசுகின்றனர். ஒற்றை மனிதரிடம் அதிகாரத்தைக் குவிப்பது சர்வதிகாரத்திற்கு வழிகோலும் என்றும், 2016 ஜூலையிலிருந்து அதாவது இராணுவ சதிப் புரட்சியை அடுத்து அமுலில் உள்ள அவசரகாலச் சட்டம் நீடிக்கும் எனவும் மேற்கு நாடுகளுடனான உறவு மென்மேலும் விரிசலடையும் எனவும் எதிர்க்கட்சிகளும் அவற்றைத் தூண்டும் வெளிநாட்டு புல்லுருவிகளும் விமர்சித்து வருகின்றனர்.

இதேவேளை, சவூதி அறேபியா மற்றும் அதன் அறபு நேச நாடுகள் துருக்கியின் இந்த மீளெழுச்சியை அச்சத்தோடு பார்க்கின்றன. துருக்கி மாதிரி (Turkey Model) மிதவாதத்தை அடிப்படையாகக் கொண்டது. துருக்கியின் சமீபகால அரசியல், பொருளாதார மாற் றங்கள் துருக்கியின் எல்லைக்குள் மாத்திரம் பிரதிபலிப்பவை அல்ல. அறபு இஸ்லாமிய உலகெங்கும் அர்தூகானின் வெற்றியைக் கொண்டாடும் கோடிக் கணக்கான மக்கள் இருப்பதற்குக் காரணம் உண்டு.

முஸ்லிம் உலகம் குறித்த துருக்கியின் அக்கறையும் ஈடுபாடுமே இதன் மூல காரணமாகும். மத்திய கிழக்கில் தனி மைப்படுத்தப்பட்ட கட்டார், பத்தாண்டுகளுக்கு மேலாக பொருளாதார முற்று கையின் கீழுள்ள காஸா, உலகிலேயே மிகப் பாரிய சோதனையை எதிர்கொண்டுள்ள மியன்மார் முஸ்லிம்கள் மற்றும் ஆபிரிக்க முஸ்லிம் நாடுகளின் விவகாரங்களில் துருக்கி கவனம் செலுத்தி வருகின்றது. இதனால் அர்தூகானின் வெற்றியை சகித்துக் கொள்ளாத எதிரிகள், சர்வாதிகாரம் மற்றும் ஜனநாயக விரோத அணுகுமுறைகள் குறித்து விமர்சிக்கின்றனர். அமெரிக்கா ஜனநாயகத்தின் குறியீடாகப் போற்றப்பட்டாலும், இன்று அந்நாட்டின் உச்சநீதிமன்றங்களின் நீதிபதிகள் டொனால்ட் ட்ரம்பின் முட்டாள்தனமான வெளிநாட்டுக் கொள்கைகளுக்கும் புலம் பெயர்பவர்கள் குறித்த தீர்மானங்களுக்கும் ஜால்ரா போடுகிறார்கள்.

நெடன்யாஹுவுக்கு விரும்பிய நேரத்தில் போரைப் பிரகடனம் செய்யும் தனியுரிமை வழங்கப்பட்டுள்ளது. பிரான்ஸின் மெக்ரோன், ஜேர்மனியின் அன்ஜலா மார்கல் எல்லோருமே பல வகையில் ஜனநாயக முகமூடி அணிந் துள்ள சர்வதிகாரிகள்தான். இத்தனைக்கும் அர்தூகான் எனும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி மாத்திரமே சர்வதிகாரி என்று விமர்சிப்பதில் எந்த அரசியல் நியாயமும் இல்லை.

துருக்கியின் ஒவ்வொரு நகர்வும் நேர்மையாக சிந்திப்பவர்களுக்கு நம்பிக்கையளிக்கின்றது. எதிரிகளின் சூழ்ச் சித் திட்டங்களைத் தவிடு பொடியாக்கி, வெற்றியை நோக்கி வீறுநடை போடும் அதன் திருப்பங்களில் ஒன்றே நடந்து முடிந்த தேர்தல்கள். 2023 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இதன் உண்மையான விளைவுகளை துருக்கி மட்டுமன்றி, ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகும் நிச்சயம் கண்டுகொள்ளும். அதில் சந்தேகமில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here