வசீம் தாஜுதீன்: ஒரு வசீகர இளைஞனின் படுகொலை பற்றிய குறிப்பு

0
5

கடந்த நான்கு வருடங்களாக மெளனமாக இருந்த வஸீம் தாஜுதீனின் குடும்பம், தமது பிள்ளைக்கு நடந்த அநீதியையும், அவர் படுகொலை செய்யப்பட்டதையும் பற்றி இப்போது பேசத்தொடங்கியிருக்கிறது.

வஸீமின் சகோதரி டாக்டர் ஆயிஷா முதன் முறையாக ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின் குறிப்புகளின் அடிப்படையில் இந்த பத்தி அமைகிறது.

“உம்மா 12 மணிக்கு முந்தி வந்திடுவேன்” என்று கூறியவாறே இரவு 8 மணியளவில் போன தம்பி திரும்பி வரவேயில்லை…..!!!

உம்மா இன்னும் அவருக்காக அழுதழுது காத்துக்கொண்டிருக்கிறார்….

அன்று அதிகாலை இரண்டரை மணியிருக்கும் பொலிஸார் எங்கள் வீட்டுக்கு வந்து என்னை அழைத்துச்சென்றார்கள்…

பார்க் வீதியின் ஷாலிகா மைதானத்தின் ஒதுக்குப்புற சுவரில் எனது கார் மோதுண்ட நிலையில் எரிந்தவாறு காணப்பட்டது…

நாரஹென்பிட்ட OIC மிகவும் பக்குவமாக என்னோடு உரையாடி அந்த காரின் கதவினை திறந்து காட்டினார்…

எனக்கு தலை சுற்ற தொடங்கியது !
என்றார் டாக்டர் ஆயிஷா.

காருக்குள் இருந்த தனது சகோதரனின் உடலை அடையாளம் காண்பதில் இவ்வளவு மோசமான அனுபவங்களை பெறவேண்டிவருமென அவர் ஒருபோதும் எதிர்பார்த்திருக்கவில்லை.

” என்னால் தம்பியின் உடலை அடையாளம் காண முடியவில்லை, அந்தளவுக்கு அது மாற்றம் பெற்றிருந்தது. எனது இளைய தம்பி மிகவும் வசீகரமானவர், நல்ல ஆளுமை மிக்கவர். அவ்வாறுதான் எல்லோரும் அவரை ஞாபகம் வைத்திருக்கின்றனர். அவரது உடல் சிதைந்திருந்த விதம் பற்றி விபரித்து அவர் பற்றிய நல்ல ஞாபகங்களை நான் வீண்டித்துவிட விரும்பவில்லை” என்கிறார் கண்ணீருடன் டாக்டர் ஆயிஷா.

மறு நாள் வசீமின் உடலை பெறும் வரை அவரது குடும்பம் நடாத்தப்பட்ட விதம் குறித்து பாரிய மன உளைச்சலுக்கும் அவர் ஆளானார்.

அப்போதைய கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி பேராசிரியர் ஆனந்த சமரசேகர, வசீமின் உடலை அடையாளங்காண்பதற்காக அவரது உடலில் உள்ள அடையாளங்களை வினவியுள்ளார்.

அந்த நேரத்தில் டாக்டர் ஆயிஷாவுக்கு தம்பியின் உடலையே அடையாளங்காண முடியவில்லை!

ஆனாலும் ஆறுவருடங்களுக்கு முன்னர் வசீமின் முழங்காலில் செய்யப்பட்ட சத்திரசிகிச்சை அவருக்கு ஞாபகம் வந்தது. அதைப்பற்றியும் அதனுள்ளே இருக்கும் இரும்புத்தகடுகள் பற்றியும் விபரித்தபோதும், அதற்கான diagnosis x-ray இனை சட்டவைத்திய அதிகாரி கேட்டுள்ளார்.

நவலோக வைத்தியசாலையின் டாக்டர் வசந்த பெரேரா கையொப்பமிட்ட அந்த அறிக்கைகளை சமர்ப்பித்த போதும் அவர் திருப்தியடையவில்லை!

அதற்கும் மேலதிகமாக வைத்தியரால் கையொப்பமிடப்பட்ட bed head ticket இனை சட்டவைத்திய அதிகாரி வினவியுள்ளார்!

அதனை தேடி எடுக்க தாஜுதீன் குடும்பத்திற்கு அன்று பல மணி நேரம் சென்றுள்ளது.

உடலை அடையாளங்காண ஆறு வருடங்களுக்கு முன் நிகழ்ந்த சத்திர சிகிச்சை பற்றி சட்டவைத்திய அதிகாரி ஆராய்ந்த விதமும் அந்த குடும்பத்தின் நிலை அறிந்தும் அவர்களை மேலும் சித்திரவதைக்கு உள்ளாக்கிய கொடூரமும் கவனிக்கப்படவேண்டியதும் கண்டிக்கத்தக்கதுமாகும்!

இறுதியாக, டாக்டர் ஆயிஷாவிடம் சத்தியக்கடதாசியை பெற்றுக்கொண்டு சட்டவைத்திய அதிகாரி பேராசிரியர் ஆனந்த சமரசேகர உடலை உறவினர்களுக்கு ஒப்படைத்துள்ளார்.

” ஒரு வைத்தியராக உடலை உறவினர்களுக்கு ஒப்படைக்க முன்பாக தேவைப்படும் ஆவணங்கள் பற்றி அறிவேன், ஆனாலும் ஆரம்ப முதலே சட்ட வைத்திய அதிகாரி இரண்டு மனதோடு செயற்பட்டதையும், அவர் பயங்கலந்து காணப்பட்டதையும் அவதானித்தேன்” என்கிறார் ஆயிஷா!

இஸ்லாமிய வழிகாட்டலுக்கமைய விரைவாக ஜனாஸாவினை அடக்கம் செய்துவிட வேண்டுமென்பதில் வசீமின் தாயார் சிரத்தை கொண்டிருந்ததால் இரவு 9 மணியளவில் தெகிவளை ஜும்ஆ பள்ளிவாயல் மையவாடியில் வசீமின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அதனால் அவுஸ்திரேலியாவிலிருந்து அவ்வளவு தூரம் துயரத்துடன் பயணித்துவந்த வசீமின் சகோதரருக்கு தம்பியின் உடலை பார்க்க முடியாமல் போயிற்று!

“இந்த மரணத்தில் சந்தேகம் இருந்தால் இவ்வளவு காலமும் ஏன் மெளனமாக இருந்தீர்கள்?” என வினவப்பட்ட போது,

” எங்களுக்கு அப்போது என்ன செய்வதென்றே புரியவில்லை, மறுபக்கம் எனது பெற்றோர் அதனை ஒரு விபத்தென்றே நம்பியிருந்தார்கள். எனது தாயாரின் மனதை சாந்தப்படுத்த அந்த நம்பிக்கை எனக்கு அப்போதைக்கு இலகுவாகவும் இருந்தது. எனது குடும்பத்தின் அந்த மனநிலையினை நான் குலைத்துவிடவும் விரும்பவில்லை. ஆனால் எனது மனது எரிந்து கொண்டேயிருந்தது” என்கிறார் ஆயிஷா!

“எனக்கு தெரியும் எனது தம்பி இவ்வாறு விபத்தில் இறந்திருக்கமாட்டார். அவரது மரணம் நிகழ்ந்து ஒரு மாதத்தின் பின்னர் இடம்பெற்ற நீதிமன்ற விசாரணையின் போது மரணத்தில் சந்தேகமிருப்பதாக சொன்னேன். ஒன்றரை வருடங்களின் பின்னர்தான் post-mortem report இனை வழங்கினார்கள்! எனது தம்பி மிகவும் பலசாலி, வாகனம் எரியும் போது அவன் சும்மா உள்ளே உட்கார்ந்து கொண்டிருக்கமாட்டான்,
குறைந்தது கண்ணாடிகளை உடைத்துக்கொண்டாவது வெளியில் வர முயற்சித்திருப்பான்” என்று தொடர்கிறார் ஆயிஷா.

இந்த மரணத்தில் சந்தேகமிருந்த படியால், ஜனவரி 08 ,2015 இல் பதவிக்கு வந்த புதிய அரசு இதனை CID இனரிடம் பாரம் கொடுத்தது.

பெப்ரவரி 25 , 2015 அன்று கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் ஊடகங்களின் கருத்துகளுக்கு ஒப்பவே அந்த மரணம் ஒரு படு கொலை என தீர்ப்பளித்தார்.

வசீமுக்கும் யசாராவிற்கும் இடையில் உறவுகள் இருந்தது பற்றி தான் எதுவுமே அறியவில்லை எனக்கூறும் டாக்டர் ஆயிஷா, ” எங்களுக்கு வசீமுடைய அனைத்து நண்பர்களையும் தெரியும், அவர்கள் எங்கள் வீட்டுக்கு வருகை தந்துள்ளார்கள். ஆனால் யசாரா ஒருபோதும் எங்கள் வீட்டுக்கு வந்ததில்லை. யோஷித்த ராஜபக்‌ஷ மற்றும் நாமல் ராஜபக்‌ஷ ஆகியோர் வஸீமின் பாடசாலை காலத்தின் போது வீட்டிற்கு வந்துள்ளார்கள்” என்கிறார்.

ஆனால் இந்த விசாரணைகளின் போது சாட்சியமளித்த சந்தேக நபர் ஒருவர், விசாரணைகளை திசை திருப்புவதற்காக இட்டுக்கட்டப்பட்ட கதையே வஸீம்- யசாரா உறவு என கூறியுள்ளார். இதனை CID இன் சிரேஷ்ட அலுவலர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். அத்தோடு கொலைக்கான காரணம், ஹெவ்லொக் ரக்பி விளையாட்டு கழகத்தினை இன்னொரு விளையாட்டு கழகம் வாங்குவதற்கு முற்பட்ட வேளை அதனை வஸீம் கடுமையாக எதிர்த்தமையே என்றும் அந்த சந்தேக நபர் தெரிவித்துள்ளார்!

இதுபற்றி ஏதாவது தெரியுமா என ஆயிஷாவிடம் வினவப்பட்ட போது ….

“இது நடந்து கொண்டிருக்கும் நீதிமன்ற விசாரணையின் ஒரு பகுதியாதலால், இந்த கேள்விக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. ஆனாலும் இன்னொரு விளையாட்டுக்கழகம், ஹெவ்லொக் விளையாட்டு கழகத்தினை வாங்கப்போவதாக வஸீம் சொன்னார், தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர் சொல்லவில்லை. நாங்கள் கவலைப்படுவோம் என்பதால் வஸீம் தனது பிரச்சினைகளை எங்களிடம் சொல்வதில்லை.” என்றார்.

வஸீமின் வாழ்வின் ஒருபகுதியாகவே ஹெவ்லொக் விளையாட்டுக்கழகம் இருந்துள்ளது. அது அவரது வீட்டைப்போல இருந்தது. அதன் மீது அவர் அவ்வளவு நேசம் வைத்திருந்தார். அதற்காக எதையும் செய்வதற்கும் அவர் ஆயத்தமாயிருந்தார்.

வேறு கழகங்களிலிருந்து வஸீமுக்கு வந்த அழைப்புகளையும் அவர் நிராகரித்திருந்தார். காரணம் ஹெவ்லொக்கை விட்டு விலகிச்செல்ல வஸீம் விரும்பவில்லை.

யாருடன் வஸீம் தனது கடைசி இரவை கழித்தார் எனக்கேட்கப்பட்ட போது…

” 17 மே 2012 இரவு 8 மணியளவில் அவர் வெளியே சென்றார். அந்த சம்பவம் நடப்பதற்கு சற்று முன்னர் வரை அவரது இரண்டு நெருங்கிய நண்பர்களோடு இருந்துள்ளார். நண்பர்களது வீடுகளுக்கு அருகே அவர்களை இறக்கி விட்டு திரும்பிய வழியில்தான் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது”.

CID அவர்களையும் விசாரித்துக்கொண்டிருப்பதால், அந்த நண்பர்களின் பெயர்களை ஆயிஷா வெளியிடவில்லை. இருந்தாலும் இந்த படுகொலை தொடர்பில் அந்த நண்பர்களுக்கும் ஏதாவது தெரிந்திருக்கும் என அவர் பலமாக சந்தேகிக்கிறார்.

நட்பின் அடிப்படையை மதித்து அவர்கள் இதைப்பற்றி சொல்லியிருக்கலாம், ஒரு மனிதனாக மற்ற மனிதனின் மீது நமக்கு பொறுப்புகள் உண்டு. இந்த கடமை சரிவர நிறைவேற்றப்படாததால் வஸீம் இந்த துயரத்தை சந்திக்க நேர்ந்தது. அந்த உண்மை படிப்படியாக வெளிவந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வஸீம் மரணிக்க முன்னர் Citrus Hotels Group இன் CEO வாக பணியாற்றியதோடு MBA கற்கை நெறியினையும் பயின்று கொண்டிருந்தார்.

“எனது பெற்றோர் வஸீமின் மரணத்திற்கு ஒரு மாத்த்திற்கு முன்னரே அவுஸ்திரேலியாவில் வசிக்கும் எனது மூத்த சகோதரரின் வீட்டில் இருந்துவிட்டு நாட்டுக்கு வந்திருந்தார்கள். அதுவரை நானும், தம்பியும் மூன்று மாத காலம் வீட்டிலிருந்ததால் மிகவும் நெருக்கமாகவும், அன்பாகவும் இருந்தோம். 17 மே 2012 காலையில் அவனை கடைசியாக சந்தித்தேன், ஆனால் அந்த கணம் எனக்கு சரியாக ஞாபகமில்லை.”

“வஸீம் வழமையாக திரும்பி வரும் நேரத்தை சொல்லுவான், அதுவரை உம்மா தூங்காமல் காத்திருப்பார். அன்றிரவு 12 மணிக்கு வருவதாக சொல்லிவிட்டு போனான், ஆனால் திரும்பிவரவில்லை. உம்மா இன்னும் அவனது வருகைக்காக அழுகையோடு காத்துக்கொண்டிருக்கிறார்” என கண்ணீரோடு கூறுகிறார் டாக்டர் ஆயிஷா.

அவர்களது வீட்டின் மேல் மாடியில் இரண்டு அறைகள் இருக்கின்றன ஒன்று வஸீமுக்கு மற்றது ஆயிஷாவுக்கு.

“தம்பி இல்லாமல் போன பிறகு இப்போது நான் மட்டுமே இங்கே வசிக்கிறேன்” என்கிறார் ஏக்கத்தோடு….

வஸீமின் அறை வெற்றிடமாகவே இருக்கிறது!

பாரபட்சமற்ற விசாரணைகளை மேற்கொள்ளும் CID இனருக்கு நன்றி தெரிவிக்கும் வஸீமின் சகோதரி, தமக்கு யார் மீதும் தனிப்பட்ட சந்தேகங்கள் கிடையாதென்றும், தம்பிக்கு நண்பர்கள் மாத்திரமே இருந்ததாகவும், தமது குடும்பம் யார் மீதும் ஒரு போதும் விரல் நீட்டவில்லையென்றும் குறிப்பிட்டுள்ள அதேவேளை விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கிவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

விசாரணைகளின் முடிவுகளை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கும் அதேவேளை ஆரம்ப முதலே பொலிஸார் மீது தமக்கு சந்தேகம் இருந்ததாகவும் ஆனாலும் ஜனவரி 08 இன் பிறகு CID இனர் விசாரணைகளை தொடங்கிய போது நம்பிக்கை பிறந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வஸீமின் கொலை பற்றி தெரிந்தவர்கள் தங்கள் கடமையினால் சரியாக செய்திருந்தால் , உண்மைகளை வெளிப்படுத்தியிருந்தால் இந்த விடயம் தொடர்பாக இவ்வளவு காலத்திற்கு மரணம் நிகழ்ந்து நான்கு வருடங்களாகியும் தாஜுதீன் குடும்பம் பாரிய சிரமங்களை எதிர் நோக்கி இருக்காது.

சட்டவைத்திய அதிகாரி தனது கடமையினை சரியாக செய்திருந்தால் மரணித்தவரின் கெளரவத்தை பாதுகாக்கும் பணியினை செய்திருந்தால் சட்டத்தை முன்னெடுப்பதில் இலகுவாக இருந்திருக்கும்.

” நான் ஒரு வைத்தியர், எப்படி ஒரு வைத்தியர் இன்னொரு வைத்தியரிடம் பொய் சொல்ல முடியும், சாதாரணமானவர்கள் செய்கின்ற குற்றங்களை படித்தவர்கள் மறைக்கிறார்கள்! சில குறிப்பிட்ட காரணங்களுக்காக அதிகாரிகள் எனது தம்பியின் மரணத்திற்கான உண்மையான காரணத்தினை மறைத்தார்கள்.” என்று கூறும் வசீமின் சகோதரி, ஒரு குறிப்பிட்ட குழுவின் சதித்திட்டத்திற்கு வஸீம் தன்னையறியாமல் இரையாகிவிட்டார் என ஆதங்கப்படுகிறார்.

ஜனவரி 08 இற்கு பிறகு CID இனருக்கு அளித்த வாக்குமூலத்தின் ஊடாக தம்பிக்கான தனது கடமையினை சரியாக நிறைவேற்றியுள்ளதாக உணரும் ஆயிஷா, எல்லோரோடும் நட்பாக பழகும் தனது தம்பியை கொல்வதற்கு அவர்களுக்கு எப்படி மனம் வந்தது என்றுதான் வியந்து நிற்கிறார்!

“கொலையாளிகள், அவர்களது தராதரத்துக்கு அப்பால் தண்டிக்கப்படவேண்டும். அந்த தண்டனை இது மாதிரியான மனிதாபிமானமற்ற கொலைகளுக்கு ஒரு முடிவாய் அமையவேண்டும். இதனை திட்டமிட்டவர்கள், செயற்படுத்தியவர்கள் அனைவரும் தண்டிக்கப்படவேண்டும். இந்த படுகொலை ஒருவரால் திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது. அந்த நபர் மிகவும் பலம் பொருந்தியவராய் இருக்கவேண்டும். நாங்கள் இனி ஒரு போதும் வஸீமை காணப்போவதில்லை ஆனால் அவரது மரணத்திற்கான காரணம் வெளிக்கொண்டுவரப்படவேண்டும்” என்கிறார் ஆயிஷா.

உங்கள் தம்பியின் கொலையாளிகளை மன்னிக்க நீங்கள் தயாரா எனக்கேடகப்பட்ட போது….

“ஒரு போதுமில்லை, இது திடீரென நிகழ்ந்த ஒரு கொலையாக இருந்தால் மன்னிக்கலாம், ஆனால் இது போன்ற திட்டமிடப்பட்ட கொலையினை மன்னிக்க முடியாது” என்றார்.

கொலையாளிகள் விரைவில் வெளிக்கொணரப்படுவார்கள் என நம்பும் ஆயிஷா….

” எந்தக்குற்றமும் வெளிவராமல் மறைந்து விடாது, எனது உம்மாவின் பிரார்த்தனைகளும் ஒருபோதும் வீண்போகாது” என உறுதியாக கூறியவாறு தனது செவ்வியை நிறைவு செய்கிறார் வசீமின் சகோதரி டாக்டர் ஆயிஷா.

எல்லாம் வல்ல இறைவன் வஸீம் தாஜுதீனின் பாவங்களை மன்னிக்கட்டும். அவருக்கு சுவனத்தை வழங்க பிரார்த்திப்போம்.

அவரது குடும்பத்திற்கு ஆண்டவன் அமைதியை அருளட்டும்.

 – Mujeeb Ibrahim

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here