வடக்குக் கிழக்கு இணைப்பு ஏன் சாத்தியமில்லை?

0
0

– ரவூப் ஸய்ன் –

வடக்குக் கிழக்கில் வாழும் முஸ்லிம்களை பொறியில் மாட்டக் காத்திருக்கும் இணைப்பு ஏன் ஆபத்தானது என்பதை நாம் எமது அரசியல் பத்தியில் தெளிவாக விளக்கியுள்ளோம். முஸ்லிம்கள் மென்மேலும் சிறுபான்மையாக்கப்படுவதும் அவர்களது அரசியல் வலுவாண்மை பலவீனப்படுத்தப்படுவதுமே இதற்கான முதல் காரணமாகும்.

கடந்த கால கசப்பான அனுபவங்களிலிருந்து முஸ்லிம்கள் பெற்ற பாடங்கள், படிப்பினைகள் இதற்கான இரண்டா வது காரணமாகும். தமிழ் அரசியல் மேலாதிக்கத்தின் கீழ் முஸ்லிம்கள் வாழ்வது இதற்கு மேல் சாத்தியமில்லை என்ற வரலாற்றுப் பாடத்தை 87 இற்குப் பின்னர் அவர்கள் தெளிவாகக் கற்றுள்ளனர்.

சிங்கள ஆட்சியாளர்களிடம் பிச்சை கேட்கின்ற நிலையிலிருந்து தமிழ் குறுந் தேசியவாதிகளிடம் கையேந்தும் நிலைக்குச் செல்ல அவர்கள் தயாரில்லை. விடு தலைப் போராட்டத்திற்குக் கைகொடுத்தவர்கள் நள்ளிரவோடு நள்ளிரவாக அனைத்தும் களையப்பட்டு வீதிகளில் நிறுத்தப்பட்ட வரலாறு மீளக் கூடாது என்பதில் முஸ்லிம்கள் உறுதியாக உள்ளனர்.

கிழக்கு முஸ்லிம்களின் ஏக பிரதிநிதிகள் முஸ்லிம் காங்கிரஸ் அல்ல. அங்கு பல்வேறு அரசியல் கட்சிகள், சிவில் சமூக நிறுவனங்கள், புத்திஜீவிகள் உள்ளனர். அவர்களின் ஒட்டுமொத்த அபிலாஷைகளும் இணைப்புக்கு எதிராகவே இருக்கின்றது.

மட்டக்களப்புத் தமிழர்கள் கூட யாழ்ப்பாணத் தமிழர்களோடு தாம் இணைக்கப்படுவதை விரும்பவில்லை. வரலாற்றில் முன்னொரு போதும் அவர்கள் அவ்வாறு விரும்பியதுமில்லை. நீண்டகாலம் கிழக்கு மாகாணத்தில் பிரசித்தி பெற்றிருந்த, அதேவேளை பாராளுமன்ற உறுப்பினராகவும் உள்நாட்டலுவல்கள் அமைச்சராகவும் நீதி அமைச்சராகவும் விளங்கிய கே.டபிள்யு தேவநாயகம், “மட்டக்களப்புத் தமிழர்கள் தம்மை யாழ்ப்பாணத் தமிழர்களிலிருந்து வேறுபட்ட ஒரு தனித் தன்மை கொண்ட தமிழர்களாகவே நோக்குகின்றனர். அவர்களுக்கு வித்தியாசமான சட்ட முறை உள்ளது. மட்டக்களப்புத் தமிழர் ஒரு வித்தியாசமான ஜனசமூகம் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. ஆகவே, வடபகுதி மக்களுக்கு கிழக்கு மாகாணத்தில் தாயகம் இல்லை என 1980 களிலேயே தெளிவாகத் தெரிவித்து விட்டார்.

இந்தக் கண்ணோட்டத்திற்கு முன் னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கே. ராஜதுரை, பிரின்ஸ் காசிநாதர், அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திவ்யநாதன் மற்றும் வேறு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே அமுலில் உள்ள இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்படி மகாõணங்கள் இணைக்கப்படுவதாயின் இரு மாகாணங்களிலும் உள்ள மக்களிடம் அபிப்பிராய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அவ்வாறு நடத்தப்படுமாயின், கிழக்கிலுள்ள முஸ்லிம்கள் மட்டுமன்றி, தமிழர்களும் இணைப்புக்கெதிராகவே வாக்களிப்பர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கப்பால் இணைப்பினால் அறுதிச் சிறுபான்மையாக மாற்றப்படும் சிங்களவர்கள் இணைப்புக்கு எதிராகவே வாக்களிப்பர் என்பதில் அணுவளவும் சந்தேகமில்லை. மக்களின் எதிர்பார்க்கைக்கு மாற்றமாக தான்தோன்றித் தனமான அரசியல் தீர்மானங்களை ரணில்-மைத்திரி அரசு மேற்கொண்டாலேயே ஒழிய, ஜனநாயக நியமங்களுக்கு ஏற்ப வடக்கு கிழக்கு இணைவதற்கான சட்டபூர்வத் தன்மைக்கு எங்கும் இடமில்லை. இதனை இணைப்புக்கு ஆதரவளிக்கும் தனிக்கட்சி அரசியல்வாதிகள் தெளிவாகப் புரிந்துகொள்ளல் வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here