வடக்கு கிழக்கு இணைப்பும் சமஷ்டித் தீர்வும் முஸ்லிம்களின் எதிர்பார்ப்பு என்ன?

0
1

இனப் பிரச்சினைத் தீர்வு அல்லது அரசியலமைப்பு சீர்திருத்தம் குறித்த விவாதங்கள் மேற் கிளம்பும்போது வடக்கு கிழக்கு இணைப்புப் பற்றிய விவாதங்களும் சமாந்திரமாக மேற் கிளம்புவதுண்டு. இவ்விவாதங்களில் ‘தேசிய இனப் பிரச்சினை’ என்ற சொல்லாடலும் ‘இணைந்த வடகிழக்கு’ என்ற பதமும் பலராலும் கையாளப்படுவதுமுண்டு.

26 ஆண்டு கால இனப் போருக்குப் பின்னர் குடும்ப ஆட்சியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள இலங்கையில், அரசியல் உரிமைகளுடனும் பாகுபாடற்ற அபிவிருத்தியுடனும் எல்லா மக்களும் வாழ முடியும் என்பதை நிறுவுவதே இல ங்கை அரசு எதிர்கொள்ளும் பெரும் சவாலாகும்.

தேர்தல் சீர்திருத்தம், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை, ஒற்றை ஆட்சி அல்லது சமஷ்டி போன்ற மையப் பிரச்சினை களை முன்னிறுத்தி, அரசியல் அமைப்பொன்றை வரைவது பற்றிய முன்னெடுப்புகள் ஆரம்பித் துள்ளன. இத்தறுவாயில் தமிழ் தேசியக் கூட்ட மைப்பு தமிழர்களின் பிரச்சினைக்கான ஒரே தீர்வு சமஷ்டியே என்றும், சமஷ்டி இல்லாத ஒரு தீர்வுத் திட்டத்தை தாம் ஏற்கப் போவ தில்லை எனவும் அடித்துக் கூறியுள்ளது.

ரணிலும் அவருக்குப் பின்புலமாக இருக்கும் மேற்கு நாடுகளும் அருகிலுள்ள இந்தியாவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சமஷ்டிக் கோரிக்கைக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளதாக உள்ளூர், சர்வதேச, ஊடகங்களும் அரசியல் அவதானிகளும் கருதுகின்றனர். அதற்கான சில சமிக்ஞைகளையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அரசியலமைப்பு மாற்றம் குறித்து பொது மக்கள் அபிப்பிராயத்தைத் திரட்டி வரும் தற் போதைய அரசாங்கம், மக்கள் ஆலோசனை வழங்க வேண்டிய விடயப் பரப்பில் 20 அம்சங்களை சுட்டிக் காட்டியுள்ளது. அதில் அரசியல மைப்பு நீதிமன்றம்  (Constitutional Court)என் பதும் ஒன்று. இது பலருக்குப் புதிய விடயம்.

இலங்கையின் நீதிக் கட்டமைப்பில் அதி கூடிய அதிகாரம் கொண்டது உச்ச நீதிமன்றமே (Suprime Court). அதற்கப்பால் வேறொரு நீதி மன்றம் இங்கில்லை. சமஷ்டி நடைமுறை யிலுள்ள நாடுகளில் மாநில அரசுக்கும்  (Federal Government) மத்திய அரசுக்கும்  (Central Government) ஏதேனும் பிணக்குகள் ஏற்படின், அதனைத் தீர்த்து வைப்பதே அரசியலமைப்பு நீதிமன்றத்தின் பிரதான பணியாகும். பொதுவாக சமஷ்டி நடைமுறையிலுள்ள நாடுகளில் இவ் வகை நீதிமன்றம் செயல்படுகின்றது.

புதிய அரசியலமைப்பு வரைபில் இத்தகைய நீதிமன்றம் குறித்து அரசாங்கம் கருத்துக் கோரி யிருப்பது சமஷ்டி கோரிக்கைக்கு அரசாங்கம் பச்சை கொடி காட்டுகின்றது என்பதற்கான சமிக்ஞையாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள சமஷ்டி தீர்வுத் திட்டம் இணைந்த வடகிழக்கை உள்ளடக்க வேண்டும் என்று கோரியுள்ளது. இந்தக் கோரிக்கை குறித்துத்தான் இலங்கை முஸ்லிம் சமூகம், குறிப்பாக கிழக்கு முஸ்லிம்கள் மிக எச்சரிக்கையோடு பார்க்க வேண்டியுள்ளது.

இங்கு இணைந்த வடகிழக்கு என்ற பிரயோகம் முற்றிலும் பிழையானது. ஏனெனில், 1987 இல் ஜே.ஆர். ராஜிவ் காந்தி ஆகியோரினால் கைச்சாத்திடப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தமே வடக்கையும் கிழக்கையும் இணைத்தது. ஆக, 2010 ஆம் ஆண்டு வரை அது ‘இணைக்கப்பட்ட’ வடகிழக்காகும். தன்னியல்பாக இணைந்தவை அல்ல.

இந்த சொற்களுக்குப் பின்னாலுள்ள அரசியலைப் புரிந்துகொள்ளல் முக்கியமானது. முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்திக்கும் தெற்காசியாவின் அதி மூளைசாலியான ஜூனியர் ரிச்சட் ஜெயவர்தனவிற்கும் இடையில் நடந்த கள்ளத்தனமான பேச்சுவார்த்தைகளை அடுத்தே இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தானது. அதில் வடக்கும் கிழக்கும் தற்காலிகமாக இணைக்கப்படும் என ஒப்புக்கொள்ளப் பட்டது.

ஜே.ஆர். இன் இம்முடிவு குறித்து ஐ.தே.க. வுக்குள்ளேயே பெரும் கருத்து மோதல் உரு வாகியது. பாராளுமன்றத்தில் பெரும் புரளி யைக் கிளப்பியது. எதிர்க்கட்சிகள் கிளர்ந் தெழுந்தன. காரணம், ஒப்பந்தம் கைச்சாத்திடப் படும்வரை பிரதமர் பிரேமதாஸவுக்கே அதன் ஷரத்துகள் தெரியவில்லை. அமைச்சரவை அங் கீகாரமோ, பாராளுமன்றத்தின் ஒப்புதலோ இல்லாமல் தன்முனைப்பாக ஜே.ஆர். எடுத்த முடிவு இது. ஜே.ஆர்.இன் குரூரமான சர்வதிகாரப் போக்கிற்கு அவர் ஏற்படுத்திக் கொண்ட நிறைவேற்று அதிகாரமுறை ஒரு பாதுகாப்புக் கேடயமாகக் கையாளப்பட்டதற்கு இது ஒன்றே போதுமான உதாரணமாகும்.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து எதிர்கட்சியினர் சிறிமாவின் தலைமையில் வீதிக்கு இறங்கினர். தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால அந்த எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னணியில் இருந்தார்.

ஜே.ஆர். கிழக்கை வடக்குடன் இணைத்தபோது, கிழக்கில் 40 வீதமாக வாழ்ந்த முஸ்லிம்கள் இந் நாட்டின் இன்னொரு தேசிய இனம் என்பதை கிஞ்சிற்றும் கணக்கில் எடுக்கவில்லை. முஸ்லிம் காரணி யை (Muslim Factor)அவர் ஒரு பொருட்டாகவே கொள்ளவில்லை. முஸ்லிம்களின் அரசியல் கட்சிகளையோ சிவில் சமூகத் தலைவர்களையோ சிறிதேனும் கலந்தாலோசிக்காமல், இணைப்பினால் ஏற்படப் போகும் விளைவுகளுக்கு எவ்வித உத்தர வாதமும் வழங்காமல், கிழக்கை வடக்குடன் இணைத்தார்.

நடந்தது என்ன? 40 வீத முஸ்லிம் பெரும்பான் மை எனும் நிலை இணைப்பின் பின்னர் 17 வீதமாக சுருக்கப்பட்டது. கல்வி, காணி, நிர்வாகத் துறையில் இணைக்கப்பட்ட வடக்குக் கிழக்கில் முஸ்லிம்களின் விகிதாசாரம் புறக்கணிக்கப்பட்டது. வீகிதாசார அடிப்படையிலான வேலைவாய்ப்பு கவனத்திற் கொள்ளப்படவில்லை. இவை எல்லாவற்றையும் கடந்து முஸ்லிம்களின் பௌதிக இருப்பே ஆபத்தில் தள்ளப்பட்டது.

அப்போது வடக்கிலும் கிழக்கிலும் செயல்பட் டது தமிழ் பாசிஸ புலிகள் மட்டுமல்ல, EPDP, EPRLF, PLOT, TELO என ஏகப்பட்ட தமிழ் ஆயுதக் குழுக் கள் அங்கு செயல்பட்டன. ஒப்பந்தத் தில் கூறப்பட்ட முக்கிய ஷரத்துகளுள் ஒன்று, இணைக்கப்பட்ட வடக்குக் கிழக்கில் தேர்தலை நடத்துவதற்கு முன்பாக அனைத்து ஆயுதக் குழுக்களிடமிருந்தும் ஆயு தங்கள் களையப்படும் என்பதே. ஆனால், எந்தவொரு குழுவிடமிருந்தும் ஆயுதங்கள் களை யப்படாத நிலையிலேயே பதட்டமும் வன்முறைகளும் பாதுகாப்பின்மையும் நிலவிய ஒரு சூழலில் தேர்தல் நடத்தப்பட்டது. வரதராஜப் பெருமாள் முதலமைச்சராக ஆக்கப்பட்டார்.

புலிகள் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. ஒப்பந்தத்திற்குப் பின்னர் உக்கிரமான தாக்குதல்களை நடத்தத் தொடங்கினர். அவர்களைக் காட்டிக் கொடுத்து வந்த மேற்போந்த ஆயுதக் குழுக்களோடு இந்திய இராணுவம் களத்திற்கு வந்தது. இவற்றின் ஒட்டுமொத்த விளைவையும் மோசமாக அனுபவிக்கும் நிலைக்கு முஸ்லிம்கள் தள்ளப்பட்டனர்.

இவ்வுடன்படிக்கையின்படி 1987 ஜூலை 31 இற்கு முன்னர் வடக்கு கிழக்கு வன்முறைகள் அனைத்தும் நிறுத்தப்படும். அரசாங்கம் நியமிக்கும் அதிகாரிகளிடம் ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட வேண்டும். அமைதியான சூழ்நிலையிலேயே தேர் தல் நடைபெறும் என ஷரத்துகள் விரிந்தன. ஆனால், இதில் கூறப்பட்ட ஒன்றும் செயலுக்கு வரவில்லை.

ஆயுதக் குழுக்கள் தமது குரூரமான ஆயுதங்களை முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்பத் தொடங்கினர். முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக படுகொலைகளும் அத்துமீறல்களும் விரட்டியடிப்புகளும் நடந்தன. இதற்கு ஒரு நீண்ட பட்டியல் உள்ளது. இணைக் கப்பட்டவடக்குக் கிழக்கில் முஸ்லிம்கள் எதிர் நோக்கிய சோதனைகள் குறித்து ஒரு முழுப் புத்தகமே எழுதலாம்.

1987 செப்டம்பர் 03 இல் மூதூர் உதவி அரசாங்க அதிபர் ஹபீப் முஹம்மதை தமிழ் ஆயுததாரிகள் சுட்டுக் கொன்றனர். 1987 செப்டம்பர் 10 இல் கல்முனையில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதனால் முஸ்லிம்களின் 7 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டன. 1987 நவம்பர் 13 இல் கிண்ணியாவைச் சேர்ந்த அமைச்சர் அப்துல் மஜீத் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். 1987 டிசம்பர் 02 இல் தமிழ் ஆயுதக் குழுக்கள் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்திய இனக்கலவரத்தில் 26 முஸ்லிம்கள் குரூரமாய் கொல்லப்பட்டனர். அதே மாதம் 30 ஆம் திகதி காத்தான்குடி யில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 60 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதோடு, 20 கோடி ரூபாய் சொத்திழப்பும் ஏற்பட்டது.

தமிழர்களுக்கு அதிகாரம் பகிரப்பட்ட, அப்போதைய இணைக்கப்பட்ட வடக்குக் கிழக்கில் இவையெல்லாம் நடந்துகொண்டிருந்தபோது முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எவராலும் முடியவில்லை. அப்போதைய தலைவர்களான டொக்டர் எம்.சி.எம். கலீல், கலாநிதி பதியுதீன், எம்.எச். முஹம்மத், ஏ.ஸீ.எஸ். ஹமீத், பாக்கிர் மாக்கார், அப்துல் மஜீத், உதுமா லெப்பை, ஏ.ஆர்.எம். மன்ஸூர் போன்றவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய தாக்குதல்கள் குறித்து ஜே.ஆர்.இன் கவனத்திற்குக் கொண்டு வந்தனர். ஆனால், ஜே.ஆர். முஸ்லிம்கள் சார்பாக எதுவும் செய்துவிடவில்லை.

இலங்கையில் 82 வீதமான மக்களின் விருப்பத் திற்கு எதிராகவும், கிழக்கில் பெரும்பான்மையான இருந்த முஸ்லிம்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் தகர்த்தெறியும் வகையிலும் 1988 செப்டம்பர் 02 இல் ஜே.ஆர். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் 2.9, 2.7 பிரிவுகளின் நோக்கத் தையே தகர்த்து மாற்றும் வகையில் 1987 ஆம் ஆண்டின் 42 ஆவது மாகாண சபைச் சட்டத்தின் 37(1) உட்பிரிவில் கூறப்பட்டுள்ள அதிமுக்கிய கட்டுப்பாடு ஒன்றை நீக்கிவிட்டார். இது ஜே.ஆர் இழைத்த மிகப் பெரிய அரசியல் துரோகமாகும்.

கிழக்கு முஸ்லிம்கள் ஜே.ஆர்.ஐ ஒரு கொடுங்கோலனாக நினைத்து அச்சமுறுவதற்கு அவரது இந்த நடவடிக்கை மாத்திரமே போதுமானது. அந்த ஷரத்து இதுதான். “ஆயுதக் குழுக்களின் வன்முறை களை நிறுத்தி, எல்லா ஆயுதங்களையும் கையளிக் காதவரை ஜனாதிபதியானவர் கிழக்கு மாகாணத்தை வடக்கு மாகாணத்தோடு தற்காலிகமாக இணைக்கக் கூடாது.” ஜே.ஆர். தனது கையாலாகாத் தனத்தை மூடி மறைப்ப தற்கு இந்த ஷரத்தையே நீக்கிவிட்டார். இதன் மூலம் தமிழ் ஆயுதக் குழுக்களின் முஸ்லிம்கள் மீதான வன்முறைகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் கொடுக்கப்பட்டது.

1987 முதல் 2010 ஆம் ஆண்டு வரை முஸ்லிம் களின் எதிர்பார்ப்பையும் அக்கறையையும் அலட்சியப் படுத்தி உருவாக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாண இணைப்பில் முஸ்லிம்கள் மிகக் கசப்பான அனுபவங்களையே எதிர் கொண்டனர். அவநம்பிக்கையும் நிராசையுமே அவர்களைச் சூழ்ந்தது. தமது அரசியல் தலை விதி குறித்த ஓர் அச்சம் அவர்களை ஆட் கொண்டது. அதற்கு ஏதுவான பதட்டம் நிறைந்த அரசியல் சூழ்நிலையொன்றே 23 ஆண்டு காலமாக அங்கு நீடித்தது.

2009 போர் வெற்றிக்குப் பின்னர் உச்ச நீதி மன்றத்தின் உத்தரவின்படி வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டது. இணைக்கும் போதும் பிரிக் கும்போதும் முஸ்லிம்களோ முஸ்லிம் கட்சிகளோ கலந்தாலோ சிக்கப்படவில்லை. கிழக்குக்கு தேர்தல் நடத்தப்பட்டு பிள்ளையான் முதலமைச்சராக்கப்பட்டார். அவரை விட அதிக விருப்பு வாக்குகள் பெற்ற ஹிஸ்புல்லாஹ் ஏமாற்றப்பட்டார்.

தற்போது மீளவும் சமஷ்டி, வடக்குக் கிழக்கு இணைப்பு என்ற கோஷங்கள் மேலெழுந்துள்ளன. கிழக்கு முஸ்லிம்களுக்கு மீளவும் எதிர்காலம் பற்றிய அச்சம் எழுந்துள்ளது. வடக்கு கிழக்கு இணைப்பு குறித்த ஒரு தெளிவான அரசியல் நிலைப் பாடு நம்மிடையே இல்லை என்பதை அன்றாடம் நிகழும் எழுத்தும் பேச்சும் உறுதி செய் கின்றன. சமஷ்டிக்கான முஸ்தீபுகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், ஒன்றுக்குப் பின் ஒன்று முரணான கருத்துகளையும் நிலைப்பாடுகளையும் முஸ் லிம் கட்சிகளும் சிவில் நிறு வனங்களும் வெளிப்படுத்தி வருவது ஓர் ஆபத்தான அறிகுறியாகும்.

தமிழர்கள், இணைக்கப்படும் வடக்கு கிழக்கு சமஷ்டியை கோரும்போது முஸ்லிம்களின் அரசியல் நிலைப்பாடு எதுவாக இருக்கும் என்பது இன்னும் மங்கலாகவே இருக்கின்றது. இணைக்கப்பட்ட வட கிழக்கில் சமஷ்டி வழங்குவதானால், நிலத் தொடர்பற்ற முஸ்லிம் மாகாணமொன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்தை பலர் எழுதியும் பேசியும் வருகின்றனர். முஸ்லிம் காங்கிரஸும் இதே நிலைப் பாட்டையே கொண்டிருப்பதாகத் தெரிகின்றது.

43484முஸ்லிம்களுக்கான கோரிக்கையை யாரிடம் முன்வைப்பது? அதற்கான பிராந்திய சக்திகளின் அங்கீகாரம், ரணில் அரசை வழிநடாத்தும் மேற்கத்தேய சக்திகளின் ஒப்புதல், தமிழ்த் தேசியக் கூட்டணியின் நிலைப்பாடு பற்றியெல்லாம் நிச்சயமின்மைகள் நீடிக்கும் நிலையில், வடக்குக் கிழக்கு இணைக்கப்பட்டு, சமஷ்டித் தீர்வுத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் முஸ்லிம்களின் நிலை என்னவாகும் என்பதே இப் போதைக்குள்ள மிக ஆபத்தான கேள்வியாகும்.

2009 இற்குப் பின்னர் இலங்கையின் தேசிய அரசியலில் மீள் சிந்திப்புக்குரிய சில பரிமாணங்கள் இருப்பதை தட்டிக்கழிக்க முடியாது. அதில், இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை என்ற பழைய பேசுபொருளை மீள்வரையறை செய்வதும் ஒன்றாகும். இரு இனங்களாலும் இரு தலைகொள்ளி போன்று நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்ட /பட்டுவரும் சிறுபான்மை முஸ்லிம் சமூகம் நல்லாட்சி அரசாங்கத்தினாலும் இந்தியாவினாலும் எந்தளவு ஒரு தனித்த தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பது இங்குள்ள முக்கிய விடயமாகும்.

பொதுவாக ஐ.தே.க. அரசாங்கம் ஆட்சி யிலிருந்த காலத்தில் (சுதந்திரக் கட்சி ஒன்றும் இதற்கு விதிவிலக்கில்லை) முஸ்லிம்கள் பாரிய அரசியல் புறக்கணிப்பையும் ஈவிரக்கமற்ற பாகு பாட்டையும் எதிர்கொண்டு வந்துள்ளனர். ரணில்-பிரபா ஒப்பந்தத்திற்குப் பின்னர் மூதூரி லும் வாழைச்சேனையிலும் புலிகளால் மூட்டப் பட்ட கலவரத் தீயில் கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதி மிக்க முஸ்லிம் வியாபாரம் அழித் தொழிக்கப்பட்டது. பல முஸ்லிம்கள் குரூரமாக கொன்று குவிக்கப்பட்டனர். மூன்று நாட்களாய் நடைபெற்ற இந்தக் கொடூரத்தை ரணில் எப்படி சமாளித்தார் என்பதை அல்லது பதில் குறி (Responce) காட்டினார் என்பதை கிழக்கு முஸ்லிம்கள் அவ்வளவு எளிதாக மறந்து விட மாட்டார்கள்; மறந்துவிடவும் கூடாது.

இந்த இலட்சணத்தில்தான் தமிழ்க் கூட்டணி தூக்கிப் போடும் சமஷ்டிப் பொதிக்கு ரணில் பச்சைக் கொடி காட்டுகின்றார் எனில், முஸ் லிம்களது அரசியல் எதிர்காலம் குறித்து, குறிப்பாக வடக்கு கிழக்கு இணைப்புப் பற்றி ஒரு தீர்க்கமான முடிவுக்கு நாம் வர வேண்டும்.

வடக்கு கிழக்கு இணைப்பு என்ற பேச்சுக்கே முஸ்லிம்கள் இடம்கொடுக்கக் கூடாது. மாகா ணங்கள் இணைக்கப்படாமல் தமிழர்களுக்கு அரசாங்கம் எந்தத் தீர்வுத் திட்டத்தையும் முன் வைக்கலாம். இந்த வாதத்திற்கான நியாயங்கள் என்ன என்பதை விரிவாகப் பேசுவதற்கு இன்னொரு பத்தி அவசியம். அது குறித்தும் விரிவாக நாம் ஆராய்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here