விவசாயிகளுக்கும், வன பயனர்களுக்கும் வழி சமைக்கும் அனூஷ்

0
1

– அனஸ் அப்பாஸ் –

அம்பாரை மாவட்டத்தை சேர்ந்த சம்மாந்துறையில் வசிக்கும் மன்சூர் முஹம்மட் அனூஷ், ஹஜ்ஜிப் போடியார் வம்சத்தை சேர்ந்த மீராமுகைதீன் சுலைமான் லெப்பை பொறியியலாளரின் பேரன் எம்.ஐ.மன்சூர் ஆசிரியரின் அன்பு மகனாவார்.
எஸ்.எல்.எம். ரோஜஹா – எம்.ஐ. மன்சூர் தம்பதிகளின் புதல்வர் அனூஷ் வாழும் ஊர் பெரும்பாலும் விவசாயிகளால் சூழப்பட்ட ஒரு பிரதேசம். ஊரை சூழ்ந்து நெற்கதிர் வேளாண்மை பரவலாக இடம்பெறுகின்றது. குறிப்பாக அனூஷின் உறவினர்களும் விவசாயிகளாக காணப்படுகின்றனர். அன்றாடம் தான் வயலில் கண்ட குறைபாடுகளை நிவர்த்திக்கும் செயற்பாடாக ஒரு முயற்சியை மேற்கொண்டார் அவர். வயலுக்கு சென்ற பொழுதுகளில் அங்கு பயிர்களுக்கு எண்ணெய் தெளிப்பதை ஆர்வமாக நோக்குவார் அனூஷ். முதலில் இரு விவசாயிகள் பயிர்களை கைகளால் ஒதுக்கிக் கொண்டு செல்ல, பின்னாலிருந்து ஒருவர் எண்ணெய் தெளித்துக்கொண்டு வருவார். இவ்வாறு எண்ணெய் தெளித்தவாறு வருகின்ற விவசாயியின் கால்களில் பலபோது வேளாண்மை மிதிபட்டு சேதமாகும். இதனை நிவர்த்திக்க வழிகள் இல்லையா என்ற கேள்வியை அவ்விவசாயிகளிடம் கேட்க, “தேசிய மற்றும் சர்வதேச அளவில்கூட இவ்வாறுதான் மரபு ரீதியான நடைமுறை இருக்கின்றது என நினைக்கின்றோம். வேறு வழிகள் எமக்குத் தெரியாதே” என பதில் கிடைத்தது.

அதுமட்டுமன்றி, வேளாண்மைகளை அகற்றும் பணிகளை செய்பவர்களின் கைகள் பலபோது வெட்டிப்பட்டு குருதி வெளியேறுவதுடன், விஷ ஜந்துக்களின் தீண்டல்களும் பலபோது உபாதைகளை தோற்றுவித்தன. குறிப்பாக, விவசாய செயற்பாடுகளின்போது பாம்பு தீண்டி பலர் இவ்வூரில் உயிரிழந்துள்ளனர். இந்த அவதான உந்துதல்தான்’ அனூஷ் ஒரு கண்டுபிடிப்பாளர் ஆவதற்கு வழி சமைத்தது.

வழித் தீர்வு கருவி (ROUTE CLEARING DEVICE) இவரது கண்டுபிடிப்பு. இக்கருவியால் வேளாண்மைக்கு எவ்வித பாதிப்புமின்றி, விஷ ஜந்துக்களில் இருந்து பாதுகாப்புடன், சாய்ந்து இருக்கும் கதிர்களுக்கும் உரத்தை உட்புகுத்த முடிவதுடன், களைகளையும், கலப்புக்களையும் அகற்றுவதற்கும் இலகுவாக முடிகின்றது. பயிர்களுக்கு இரசாயன பதார்த்தங்களை தெளிக்கும்போது விவசாயிகள் பலபோது ஒவ்வாமைகளுக்கு உள்ளாகின்றனர். அவ்வாறான துரதிஷ்டமான நிலைகளில் இருந்தும் இக்கருவி பாதுகாக்கின்றது. அத்துடன், வனப் பகுதிகளுக்குள் செல்லும்போது உள்ள தடைகளை அகற்றுவதற்கு இது உதவுவதுடன், உட்செல்லத் தேவையான வழியை ஏற்படுத்துவதுடன், வரும்போது பாதை மாறிச் செல்லாமல் குறித்த வழியாலே காட்டிலிருந்து வெளியேறவும் இக்கருவி உதவுகின்றது.

இக்கருவிக்கு கிடைத்த அங்கீகாரங்கள்

மாகாண மட்ட போட்டிகளில் கிழக்கு மாகாணத்தில் முதலிடம்.

அகில இலங்கை ரீதியான “சஹஸக் நிமவும்” போட்டியில் “மெரிட்” விருது.

தேசிய ரீதியான SLAAS போட்டியில் இரண்டாமிடம் (வெள்ளிப் பதக்கம்)

“முதன்முதலாக மாகாண போட்டிகளில் பங்கேற்றபோது 250 கண்டுபிடிப்புக்கள் அங்கு காட்சிக்கு வைக்கப்படிருந்தன. இதில் ஒருசில கண்டுபிடிப்புக்களே அடுத்த கட்ட அங்கீகாரத்தைப் பெரும். ஏனையவை தர வரிசையில் இடம்பிடிக்காது என்ற உள ரீதியான தாக்கம் என்னை ஆட்கொண்டது. இருந்தாலும், எனது முயற்சி மீதான நம்பிக்கை அன்று என்னை முதலிடமாக மிளிரச் செய்தது. அடுத்து, தேசிய போட்டிகளில் கிடைத்த அனுபவங்களால் ஏற்கனவே அங்கீகாரம் கிடைத்த கண்டுபிடிப்புக்கள் தொடர்பிலான அறிவு கிட்டியது. இதன் பயனாக புதிய முயற்சிகளுக்கான தோற்றுவாய் என்னுள் மையம் கொண்டது. ஆகவே, தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன்” என தனது பயண அனுபவத்தை இங்கு பகிர்ந்துகொள்கின்றார்.

இக்கருவியால் விவசாயிகளும், வனப் பயணங்களை மேற்கொள்வோரும், வனத் தொழிலாளர்களும் பயன்பெறுவது திண்ணம். இதனை உருவாக்குவதற்கான செலவு அண்ணளவாக ரூபா. 3000. இதற்கான பதிப்புரிமைக்கு விண்ணப்பித்துள்ளார் அனூஷ். பதிப்புரிமை கிடைத்ததும், இதனை தொடராக உற்பத்தி செய்து ரூபா. 3500  உத்தேச விலையில் சந்தைப்படுத்தும் எண்ணம் அவருக்கு இருக்கின்றது.

அல்ஹம்துலில்லாஹ், தட்டிக்கொடுத்த தந்தை மன்சூர், வலயக் கல்வி அலுவலர் ஹுசைன் சேர், பாடசாலை அதிபர் அவர்கள், ஆசிரியர் சர்ஜூன் சேர், புத்தாக்க உற்சாகமூட்டல் செய்த இர்பான் மௌலானா சேர், சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய பாடசாலை சமூகம், நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றார் அனூஷ்

“தேவை அறிந்து, இயலுமைகளை உள்ளத்தால் உணர்ந்து உத்வேகத்துடன் முயற்சிக்கும்போது, சமூகத்தில் இருந்து எதிர்கொள்ளும் சவால்களை முறியடிக்கும்விதமாக, தொடராக புத்தாக்க போட்டிகளில் உங்கள் முயற்சிகளை பங்கேற்க செய்யுங்கள். வெற்றி ஒருநாள் நிச்சயம் உங்களை வந்தடையும்” என இளைஞர்களையும், இளம் கண்டுபிடிப்பாளர்களையும் நோக்கி அனூஷ் அறிவுரை வழங்குகின்றார்.

உயர்தர வணிகப் பிரிவில் கற்றுவரும் 19 வயதான அனூஷின் இன்னும் சில கண்டுபிடிப்புக்கள் பரீட்சார்த்த நடவடிக்கைகளில் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here