ஷாமா: அக்குரணை முதல் ஜெனீவா வரை..

0
2

அக்குறணையே பிறப்பிடமாக கொண்ட  செல்வி ஷாமா (Faara) முயிஸ் வஹாப்தீன்  ஐக்கிய நாடுகள் சபையில் உரை நிகழ்த்தி இலங்கை முஸ்லிம்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

அக்குறனையே பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Collège Saint Exupéry கல்வி  கற்று வரும் ஷாமா முயிஸ்  ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையில் 34 ஆவது மனித உரிமை மாநாட்டில்  அமர்வில்  பெண்கள் மற்றும்  சிறுவர்கள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் ஏற்பாட்டில் 17.03.2017 அன்று நடைபெற்ற கருத்து சுதந்திரம் மற்றும் ஒன்று கூடும் உரிமை உப மாநாட்டில் சிறப்பாக உரையாற்றினார்.

“காஷ்மீர், மற்றும் பலஸ்தீன சிறுவர்களின் இன்றைய நிலை” என்ற தலைப்பில் உரை நிகழ்த்திய ஷமா முயிஸ் “762 ஜெருசலத்தை சேர்ந்த பிள்ளைகளின் கைது, காஷ்மீரின் 5 வயது குழந்தை கின்ஸா, 14 வயது அமீன் ஆகியோரின் உயிர் காவுகை உற்பட பல்வேறு மனித உரிமை மீறல்கள், சிறுவர்களுக்கு எதிரான கண்மூடித்தனமான வெறியாட்டங்கள்” குறித்து இதன்போது அவர் உரை நிகழ்த்தினார்.

“மனித உரிமைகள் தொடர்பான வழக்கறிஞர்” கனவுடன் பயணிக்கும் 14 வயது சிறுமியான இவர், நால்வரில் மூத்தவர்.

தனது LKG மற்றும் UKG முன்பள்ளிக் கல்வியை கண்டி லெக்சிகன் சர்வதேச பாடசாலையில் தொடர்ந்த ஷாமா, தரம் 5 வரை கண்டி ஸசெக்ஸ் சர்வதேச பாடசாலையில் கற்றார். தனது தந்தையின் தொழில் நிமித்தம் வெளிநாட்டுக்கு குடிபெயர்ந்ததில், பின்னர் கல்வியை சுவிட்சர்லாந்தில் அமைந்திருக்கும் École du Balavista பாடசாலையில் தொடர்ந்தார். தற்போது பிரான்ஸ் நாட்டின் College saint Exupery இல் கற்று வருகின்றார். இலங்கையின் க.பொ.த. சாதாரண தர பரீட்சையை ஒத்த ” BREVET” எனும் பரீட்சையை 2018 இல் எழுதவுள்ளார்.

ஷாமா முயிஸினால் ஐ. நா வில் ஆற்றிய உரைக்கு கிடைத்த பல ஆயிரக்கணக்கான பாராட்டுகளுள் ஐ .நா வுக்கான சிறுபான்மை விவகாரங்களுக்கான விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் அவர்களின் பாராட்டுக்கள் விசேடமானது.

தனது பாடசாலை கல்விப் படிப்பில் முதல் நிலை மாணவியாக தனது தனது திறமையை காட்டி வரும் இவர் மனித உரிமைகள் செயற்பாடுகளிலும், வாசிப்பு, எழுத்துத் துறைகளில்  மிக ஆர்வம் கொண்டு விளங்குகிறார். (பிரெஞ்சு மொழியில் கடந்த 4 ஆண்டுகளாக கற்றுவரும் ஷாமா, பிரெஞ்சு மாணவர்களையும் பின்தள்ளி வகுப்பில் முதலிடம் வருவது குறிப்பிடத்தக்கது) ஷாமா ஆங்கில கவிதைகளை எழுதுவதில் வல்லவர் என்கின்றார் தந்தை.

தேசிய ரீதியான “BIG CHALLENGES” ஆங்கில தின போட்டிகளில் கடந்த ஆண்டு பங்கேற்ற 2781 மாணவர்களுள் 4 ஆம் இடத்தை தனதாக்கிய ஷாமா, பிராந்திய ரீதியான பாடசாலைகளுக்கிடையிலான பாராளுமன்ற உறுப்பினராகவும் பரிந்துரைக்கப்பட்டார்.

சர்வதேச அரங்கில் உங்களைப் பேசத் தூண்டியது என்று நான் கேட்டதற்கு,

“சிரியா, பலஸ்தீன், காஷ்மீர், நாடுகளில் இருந்து வந்த அகதி மாணவிகள் எனது வகுப்புத் தோழிகளாக என்னுடன் கற்கின்றார்கள். அவர்கள் வாழ்ந்த சுக போக வாழ்க்கையையும் இன்னல்களின் பின் அவர்கள் அடைந்த துயரங்கள், துன்பங்களை வகுப்பின் ஒய்வு நேரங்களில் என்னோடும் எமது வகுப்பில் உள்ளவர்களுடனும் பகிர்ந்து கொள்வார்கள். மேலும், எமது வகுப்பில் பல நாட்டு, பல மதங்களை பின்பற்றும் மாணவிகள் கற்பதனால், முஸ்லிம் மாணவிகளான எமக்குள் மாத்திரம் சற்று அதிகமாகவே வல்லாதிக்க ஒடுக்கு எண்ணங்களுக்கு எதிராக பல விடயங்களை கலந்துரையாடுவோம். கல்லூரியில் அன்புத் தோழிகள் பகிரும் துயரங்களை எனது வீட்டில் வந்து நான் கலந்துரையாடுவேன், இதனாலோ என்னவோ, எனது தந்தை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் என்று நினைக்கின்றேன், அவர் செயற்படும் மனித உரிமை அமைப்பின் மூலம் ஜெனீவாவில் உள்ள ஐ நா அமைப்புக்கு ஒரு செயலமர்வுக்கு என்னை அழைத்துச சென்றார், அன்றிலிருந்து, ஜனநாயக, மனித உரிமைகள், வல்லாதிக்கம் போன்ற விடயங்களை கற்கவும், செயற்படவும் வேண்டும் என்ற எண்ணம் என்னில் உருவாகியது. அன்றிலிருந்து, இது சம்பந்தமான நூற்களை வாசிக்கவும், எனது தந்தையுடன் இணைந்து செயற்படவும் ஆரம்பித்தேன். அந்த அடிப்படையில் பலஸ்தீனத்துக்கு அடுத்தபடியாக அரச வன்முறை அதிபயங்கரமாகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் காஷ்மீர் பிராந்தியம் பற்றி செயற்படும் அமைப்புடன் கடந்த பல ஐ. நா அமர்வுகளில் கலந்து கொண்டேன்” என்றார்.

பிரெஞ்சு, தமிழ், ஆங்கிலம் சரளமாகப் பேசும் ஷாமா, சற்று சிங்களமும் பேசுவார். அல்-குர்ஆன் முழுமையாக தமாம் செய்துவிட்டு தற்போது மனனமிட்டு வருகின்றார். மேலும், ஜேர்மனி, அரபு மொழிகளை கற்று வருகின்றார். இணையத்தில் மார்க்க ரீதியான வகுப்புக்களிலும் பங்கேற்கின்றார்.

கூடைப்பந்து மற்றும் பெட்மிண்டன் போட்டிகளிலும் பாடசாலை ரீதியில் ஜொலிக்கும் ஷாமாவிற்கு பெரிதும் உறுதுணையாக இவரது தந்தை முயீஸ் வஹாப்தீன் செயற்படுகின்றார்.

தந்தை முயீஸ் வஹாப்தீன் சுயதொழிலுக்கு அப்பால், தற்சமயம் ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகத்தில் பகுதி நேர வேலை பார்ப்பவர். அவரும் ஜெனீவாவின் பல்வேறு அமர்வுகளில் பங்கேற்று வருகின்றார்.

செல்வி ஷாமா அக்குறணையின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அல் ஹாஜ் வாஹாப்தீன் (வஹாப் மாஸ்டர்) மற்றும்  அக்குறணையின் பிரபல சமூக சேவையாளர் அல்ஹாஜ் மவ்ஜூத்யினதும் பேத்தியும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. ஊக்கமளிப்போடு, உருதுணை நல்கும் தந்தைக்கும், தந்தையின் தந்தைக்கும் ஷாமா உருக்கமாக நன்றிகளை தெரிவித்திருந்தார்.

இலங்கை முஸ்லிம் பெண்களை பொறுத்தவரை அதிகபட்சம் தேசிய மட்ட போட்டிகள் வரை செல்வதே அரிதாக உள்ள நிலையில், சர்வதேச ரீதியிலான ஷாமாவின் இந்த நகர்வு இளம் பெண்களுக்கு ஒரு முன்மாதிரி என்றே கூறலாம்.

இறுதியாக, சக மாணவிகளுக்கு கூறும் செய்தி என்னவென்று கேட்டதற்கு,

“பெண்கள் கற்பதன் மூலம், இஸ்லாத்தில் பெண் என்றாலே அவமதிக்கின்ற, புறக்கணிக்கின்ற நிலை என்று வல்லாதிக்க சக்திகளாலும் மற்றும் இஸ்லாத்துக்கு எதிரானவர்களாலும் செய்யப்படும் குற்றச் சாட்டை தகர்த்து, திட நம்பிக்கையுடன் இஸ்லாமிய ஒழுக்க நெறிகளை பேணி, கூட்டாக இணைந்து செயற்பட கூடியதுமான ஆரோக்கியமான சூழலை உருவாக்க முடியும்.. உலகின் முஸ்லிம்களுக்கு எதிராக வல்லாதிக்க சக்திகளுக்கு எதிரான எனது நம்பிக்கையான இந்த பயணத்தில் ஆர்வமுள்ளவர்கள் இணைந்தும் கொள்ளலாம்” என்றார் எதிர்காலத்தில் ஒரு மனித உரிமைகள் தொடர்பான ஐ.நாவின் அமர்வுகளில் தொடராக ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கக் காத்திருக்கும் ஷாமா.

அவரின் சிறந்த எதிர்காலத்திற்காக வாழ்த்துவதோடு, பிரார்த்திக்கின்றோம்!

 – அனஸ் அப்பாஸ் –

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here