ஸ்திரமற்ற ஆட்சிக்கான முஸ்தீபு

0
0

பியாஸ் முஹம்மத்

தேர்தலில் முக்கியமானது மக்கள் வாக்களிப்பது என்பது தான். மக்கள் வாக்களிப்பதில் காட்டும் அசிரத்தை ஜனநாயகத்தை கேலிக்குள்ளாக்குவதாகவே அமையும். இதனால் தான் ஜனநாயகத்துக்கு முரணான அரசியல்வாதிகள் எல்லாம் மக்களை தேர்தலில் வாக்களிக்க விடாமல் இருப்பதற்காக பல பிரயத்தனங்களைச் செய்கின்றார்கள். இவர்களிடம் இருந்து ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டுமென்றால் மக்களை வாக்களிக்கத் தூண்டுகின்ற செயற்பாடுகள் பரவலாக முன்னெடுக்கப்பட வேண்டும். முஸ்லிம்கள் கஸ்து போவது போல வீடு வீடாகச் சென்று மக்கள் வாக்களிப்பதை ஊக்குவிக்க வேண்டும் என மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவரின் ஞாபகார்த்த உரையில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கூறியிருந்தார்.

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல்களில் 1988 ஆம் ஆண்டைத் தவிர்த்துப் பார்த்தால் வாக்களிப்பு வீதம் 75 க்கும் அதிகமாகவே இருந்துள்ளது. 1994 தேர்தல்களில் இருந்து வளர்ச்சிப் போக்கைக் காட்டி வந்து 2015 இல் அதி உச்ச வாக்களிப்பு வீதமாக 81.52 வீதத்தை பதிவு செய்துள்ளது. இம்முறை இதனை 85 வீதமாக அதிகரிப்பதற்கு முயற்சிப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். இலங்கையின் மொத்த சனத்தொகையில் 10 வீதத்தினர் வெளிநாடுகளில் வசிக்கின்றார்கள். அந்த வகையில் ஆணையாளர் எதிர்வு கூறும் வாக்குப் பதிவு நடக்குமாக இருந்தால் அது இலங்கையின் ஜனநாயகத் தேர்தல் முறைக்குக் கிடைத்த வெற்றியாகவே அமையும்.

இருந்த போதிலும் தேர்தலில் பெறுகின்ற வெற்றி ஜனநாயகத்தை நிலைக்கச் செய்யுமா என்றதொரு கேள்வி முளைக்கிறது., 1994 இல் சந்திரிகா பண்டாரநாயக்கவும் (62.28) பெற்ற வெற்றியைத் தவிர வேறு எந்த ஜனாதிபதியும் தேவையான 51 வீதத்துக்கு மேலதிகமாக மக்களுடைய வாக்குகளைப் பெறவில்லை (1982 இல் ஜேஆர் ஜயவர்தன (52.91)). 1994 இல் சந்திரிகாவை எதிர்த்துப் போட்டியிட்டவர் காமினி திசாநாயக்கவின் மனைவி ஸ்ரீமா திசாநாயக்க என்பதுவும், முதல்தடவையாக தேர்தலில் கூட்டணியை அறிமுகப்படுத்தி எதிர்கொண்ட தேர்தல் என்ற வகையிலும் இவருக்கு இந்தளவு வித்தியாசத்தில் வெற்றி பெற முடிந்திருக்கிறது. மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தை வென்ற வீரனாகக் கருதப்பட்ட போதிலும் 2005 தேர்தலில் 50.29, 2010 தேர்தலில் 57.88 வீதத்திலேயே அவரால் வெற்றி பெற முடிந்தது. இந்த வகையில் குடிபெயர்ந்து வாழும் 10 வீதம் உட்பட வாக்களிக்காத 25 வீதத்தையும் சேர்த்துப் பார்க்கும் பொழுது நாட்டுத் தலைவர்களில் அதிகமானவர்கள் நாட்டு மக்களில் பெரும்பான்மையானவர்களின் தெரிவாக அமையப் பெற்றவர்களாக இல்லை. இதனால் நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய தலைவர்களை நாடு பெற்றுக் கொள்ளவில்லை. கடைசியாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுக்கு ஸ்திரமான அரசொன்றை மத்தியில் எடுத்துச் செல்ல முடியாமல் போனமைக்கு பெரும்பான்மையான மக்களின் தெரிவாக அவர் அமையாமையும் முக்கிய காரணியாக அமைந்திருந்தது.

ஆண்டு வாக்களிப்பு வீதம் வெற்றி பெற்றவர் பெற்ற வாக்கு வீதம் எதிர்த் தரப்பு வேட்பாளர் பெற்ற வாக்கு வீதம்
2015 81.52 மைத்திரி பால சிரிசேன 51.28 மஹிந்த ராஜபக்ஷ 47.58
2010 74.5 மஹிந்த ராஜபக்ஷ 57.88 சரத் பொன்சேகா 40.15
2005 73.73 மஹிந்த ராஜபக்ஷ 50.29 ரணில் விக்கிரமசிங்க 48.43
1999 73.31 சந்திரிகா ப. குமாரதுங்க 51.12 ரணில் விக்கிரமசிங்க 42.71
1994 70.47 சந்திரிகா ப. குமாரதுங்க 62.28 ஸ்ரீமா திசாநாயக்க 35.91
1988 55.32 ரணசிங்க பிரேமதாச 50.43 ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க 44.95
1982 81.06 ஜேஆர் ஜயவர்தன 52.91 ஹெக்டர் கொப்பேகடுவ 39.07

இம்முறைய ஜனாதிபதித் தேர்தலிலும் எந்த வேட்பாளரும் பெரும்பான்மையான மக்களின் தெரிவில் வருவதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன. கடந்த காலங்களைப் போலன்றி எந்த வேட்பாளரும் இம்முறை 50 வீதத்தையேனும் தாண்ட மாட்டார்கள் என்பது தான் பெரும்பாலானவர்களின் எதிர்வு கூறலாக இருக்கின்றது. அந்த வகையில் 2020 இல் அமையப் போகும் அரசாங்கம் நிச்சயமாக கடந்த அரசாங்கங்களை விட ஸ்திரமற்றதாகவே அமையப் போகிறது.

ஸ்திரமற்ற அரசாங்கம் ஒன்று மத்தியில் வருவதில் இதனைவிடவும் பங்களிப்புச் செய்யக் கூடிய காரணிகள் தேர்தல் களத்திலே கிடக்கின்றன. முதலில், வெல்லுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்ற முதன்மை வேட்பாளர்கள் இருவரும் தமது கட்சிகளில் அமோக ஆதரவைப் பெற்றவர்கள் அல்லர். ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக முன்னிலைப்படுத்துவதற்கு அவர் இறுதி நிமிடம் வரையில் கட்சியில் போராட வேண்டியிருந்தது. கட்சித் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பின்னால் சிலரும் சபாநாயகர் கரு ஜயசூரியவின் பின்னால் இன்னும் சிலரும் அணி திரண்ட நிலையிலேயே சஜித்துக்கு ஜனாதிபதி வேட்பாளர் தகுதி கிடைக்கப் பெற்றிருக்கிறது. சஜித்தின் பின்னால் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, பொது நிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார, நீதி அமைச்சர் தலதா அதுகோரள, அமைச்சர்களான மலிக் சமரவிக்கிரம, ஹர்ஷ டி சில்வா, அஜித் பெரேரா போன்றவர்கள் அணி திரண்டிருக்க, ரணில் விக்கிரமசிங்கவின் பின்னால் அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, பி.ஹரிஸன், லக்ஷ்மன் கிரியெல்ல, ஜோன் அமரதுங்க எனப் பலரும் இணைந்திருந்தனர். சஜித் பிரேமதாசவை பகிரங்கமாகவே விமர்சித்து வந்த அமைச்சர் ரவி கருனாநாயக்க, சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக்குவதை விட அவருக்கு பிரதமர் பதவியை வழங்குவதைக் கூட எதிர்த்தவர். ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்திருக்கின்ற பங்காளிக் கட்சிகளும் ஒன்றுடன் ஒன்று ஒத்திசைபவைகளாக இல்லை. முஸ்லிம் கட்சிகள் ஆதரவளிக்கும் ஐதேகவுக்குள்ளேயே முஸ்லிம்களை எதிரிகளாகப் பார்க்கும் ஜாதிக ஹெல உருமயவின் தலைவர் சம்பிக்க ரணவக்கவும் இருக்கிறார். சஜித்தின் ஆட்சி வந்தால் முஸ்லிம்களுக்குச் சாதகமாக அவர் எந்த முடிவை எடுத்தாலும் அதனைத் தடுப்பதில் அவர் முன்னிற்பார் என்று எதிர்பார்க்க முடியும். சஜித்தை வேட்பாளராக்குவதில் முட்டுக்கட்டையாக இருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கோதாபயவுக்கு சார்பானவர் என்ற கருத்துக்கள் மேலெழுந்து வருகின்றன. ரணிலின் உறவினருக்குச் சொந்தமான டீஎன்எல் தொலைக்காட்சி கோதாவை ஆதரிப்பதாகவும், பிரதமர் அலுவலகத்தில் பணி புரியும் பிரதமரின் மருமகளான இஷினி விக்கிரமசிங்க கோதாபயவுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பேசி வருவதையும் கொழும்பு டெலிகிராப் சுட்டிக் காட்டியிருந்தது.

அதே போல மொட்டின் பக்கத்திலும் மஹிந்த ராஜபக்ஷவின் விருப்பின் பேரில் கோதாவுக்கு வேட்பாளர் தகுதி வழங்கப்படவில்லை என்பதனை ஊடகங்கள் வெளிப்படுத்தி வருகின்றன. எந்த நாட்டை எதேச்சாதிகாரத்துக்கு ஒப்பிட்டுப் பேசுகிறார்களோ அந்த நாட்டின் பிரஜையான ஒருவரை ஆதரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் பொதுஜன பெரமுனவுடன் இணைந்திருக்கின்ற இடதுசாரிக் கட்சிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது. கோதாவை வேட்பாளராக அறிவித்த உடனேயே விமல் வீரவன்ச தன்னுடன் இணைத்து கோதாவின் புகைப்படத்தை அச்சிட்டு வெளியிட்ட போஸ்டர்கள் தொடர்பில் கோதா கடுமையான தொனியில் அதிருப்தி வெளியிட்ட செய்தியொன்றும் வெளியாகியிருந்தது. தான் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வி அடைந்திருந்தால் தன்னை ஆறடி குழிக்குள் தள்ளி இருப்பார்கள் என்று சொன்ன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், மீண்டும் அதே குழியில் விழுந்த போதிலும் அவருடைய ஆதரவு சஜித்தின் பால் திரும்பியிருப்பது அவதானிக்கப்பட்டு வருகிறது. ஜனாதிபதி வேட்பாளர் சஜித்தைச் சந்தி்த்த ஜனாதிபதி சிரிசேன, அவரது தேர்தல் பிரச்சார நடவடிக்கைளுக்கு தாம் எந்த இடைஞ்சலும் ஏற்படுத்தப் போவதில்லை என்று சஜித்திடம் தெரிவித்ததோடு, தேர்தல் மேடைகளில் சஜித்துக்கு எதிராகப் பேச வேண்டாம் எனவும் தமது தரப்பிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஜனாதிபதியின் ஆலோசகர் சட்டத்தரணி ஷிரால் லக்திலக்க தானும் சஜித்தையே ஆதரிப்பதாகவும் இதற்கென தான் ஜனாதிபதி ஆலோசகர் பதவியையே துறக்கவிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். ஜனாதிபதி சிரிசேன மொட்டுடன் கையைக் கோர்த்தாலும் தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் போராடி மீட்டெடுக்கப் போவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சூளுரைத்திருக்கிறார். கோதாபய வெற்றி பெற்றால் தேர்தல் முடிந்த கையுடன் அவருக்கும் கட்சியில் பலமில்லாத நிலையொன்று உருவாவதற்கு வாய்ப்பிருக்கிறது.

இரண்டு பேரில் யார் வெற்றி பெற்றாலும் ஜேவிபியின் நிலைப்பாடு ஸ்திரமான அரசொன்றை அமைப்பதில் பெரும்பங்கு வகிக்கப் போகிறது. ஊழல் மோசடிக்கு எதிராக, அராஜகத்துக்கும் கொடுங்கோண்மைக்கும் எதிராக மக்களைத் திரட்டிய ஜேவிபியின் வாக்குகள் கோதாவைச் சார்ந்து நிற்கப் போவதில்லை. விஜேவீரவின் ஜேவிபியிலிருந்து சோமவன்சவினதும் வீரவன்சவினதும் ஜேவிபியைக் கழித்துப் பார்த்தால் வருவதுதான் அநுர குமாரவின் ஜேவிபியாக இருக்குமாக இருந்தால் ரணசிங்க பிரேமதாசவின் வாரிசுடன் இவர்கள் ஒத்துப் போவார்கள் என்பதை எதிர்பார்க்க முடியாது. 1982 இல் ரோஹன விஜேவீர, 1999 இல் நந்தன குணதிலக்கவுக்கு அடுத்தபடியாக 20 வருடங்களுக்குப் பின்னர் ஜேவிபி அபேட்சகர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகிறார். மறுபுறத்தில் ஜேவிபியினரின் கிளர்ச்சியை அடக்கி அதன் தலைவர் ரோஹன விஜேவீர கொல்லப்படும் போது நாட்டின் தலைவராக இருந்த ரணசிங்க பிரேமதாசவின் புதல்வர் போட்டியிடுகிறார். தேர்தல் மேடைகளில் இருவருக்குமிடையில் பாரிய மோதல்கள் இல்லாதபோதும் ஐக்கிய தேசியக் கட்சி ஸ்திரமான ஓர் அரசாங்கத்தைக் கட்டியெழுப்புவதில் இந்தப் பழைய முரண்பாடுகள் தாக்கம் செலுத்துவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

இங்கு தமிழ்த் தேசியக் கூட்டணியின் தேர்தல் நிலைப்பாடும் கவனிக்கத்தக்கது. மலையகத் தமிழர்களுடைய தமிழ் முற்போக்கு முன்னணி ஐதேமு வேட்பாளர் சஜித்தை ஆதரிப்பதற்கு அவருக்கு கட்சியில் அனுமதி கிடைக்கு முன்னரே தீர்மானித்து விட்டது. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 13 அம்சக் கோரிக்கைகளுடன், தம்மை நோக்கி வரும் வேட்பாளருக்காக இன்று வரை காத்திருக்கிறது. இதில் தமிழர்களின் போராட்டத்தை மழுங்கடித்த பாதுகாப்புச் செயலாளர் கோதாவின் தரப்பு இவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அதேபோல இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டால் இதனை வைத்து ஐதேமு வின் சிங்கள வாக்குகளை அபகரிப்பதற்கும் இவர்கள் பின்னிற்கப் போவதில்லை. எந்த மீனாலும் விழுங்க முடியாத இரையையே தமிழ் தேசியக் கூட்டமைப்பு தூண்டிலில் மாட்டி வைத்திருக்கிறது. இந்த நிலையில் தமிழர் அரசியல் வேறொரு பாதையில் செல்வதற்கான வாய்ப்பும் இருக்கிறது.

நாட்டில் தேர்தலைத் தொடர்ந்து வருகின்ற ஸ்திரமற்ற நிலை நாட்டைக் குறி வைத்து ஒற்றைக் காலில் நிற்கின்ற வெளிச் சக்திகளுக்கே சாதகமாக அமையப் போகிறது. உள்நாட்டில் ஸ்திரமற்ற தன்மையை உருவாக்குவதன் ஊடாகத் தான் அவ்வாறான சக்திகள் நாட்டுக்குள் ஊடுருவ முடியுமாக இருக்கின்றது. எனவே இம்முறைய தேர்தலில் மக்கள் நிதானமாகச் சிந்தித்து வாக்களித்தால் மட்டுமே நாட்டின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்க முடியும். நாட்டை முன்னேற்றக் கூடியவர் என்று மக்கள் தீர்மானிக்கின்ற எவரையும் பெரும்பான்மையான மக்களின் தெரிவாக அமையச் செய்வதற்கு ஒரு இனத்தை மட்டுமன்றி நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்று திரளச் செய்வது முக்கியமானதாகும்.   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here