ஹஸ்ரத் மீண்டும் மிம்பர் ஏறுகிறார்

0
0
 – அபூ ஷாமில் –
முஸ்லிம் சமூகத்தைப் போல உபந்நியாசங்கள் கேட்கின்ற சமூகம் இலங்கையில் வேறு எதுவும் கிடையாது. இலங்கையில் முஸ்லிம்களின் வரலாறு ஆயிரம் வருடங்களையும் தாண்டிவிட்டது என்கிறோம். பேருவளையில் 950 வருடங்களுக்கு முன்னரே பள்ளிவாசல் கட்டப்பட்டது என்பதற்குரிய போதுமான சான்றுகளும் நம்மிடையே இருக்கின்றன. அப்படியானால் ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக எமது மக்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் குத்பாக்களை செவிமடுத்து வருகிறார்கள்.
மக்களை ஆன்மீக வழியில் நெறிப்படுத்த வந்த மேதைகளும் வெள்ளிக்கிழமை இரவுகளிலும் மௌலூதுகளிலும் ஆன்மீக அமர்வுகளிலும் உபந்நியாசங்கள் புரிந்திருக்கிறார்கள். ஒவ்வொரு அன்னதானத்திலும் பயான். இவைகள் பிழை என வாதிடுவதென்றால் அதற்கும் பயான். மீலாத் காலங்களில் மாதம் முழுவதும் பயான். பெரியார்கள், அவுலியாக்களை ஞாபகப்படுத்தவென தலைப்பிறை யில் இருந்து அவரது நினைவுதினம் வரும்வரை பயான்.
ரமழானில் முப்பது நாளும் பயான். இன்னும் சிலர் ஒவ்வொரு வக்து தொழுகைக்குப் பின்னரும் பயான் செய்கிறார்கள். சிலவேளைகளில் குத்பாப் பிரசங்கம் முடிந்து கதீப் தொழுகை நடத்தி முடித்த பின்னரும் மீண்டும் பயான் செய்வதற்காக எழும்புகிறார்கள். எக்ஸ்ட்ராவாக ஒரு தராவீஹ் தொழுகையோ கியாமுல்லைலோ கிடைத்தால் அதிலும் பயான். நிகாஹ் நடத்த முன்னர் ஒரு பயான்.  மையித்துத் தொழுகை நடத்த முன் ஒரு பயான். அடக்கம் செய்த பின்னர் மற்றுமொரு பயான்.
இலங்கை வானொலி முஸ்லிம் சேவையை திறந்தால் மாறி மாறி இரண்டு மணித்தியாலத்துக்கும் பயான். நவீன சாதனங்களில் நுழைந்தால் சீடியில் பயான்.  யூடியுபிலும் பயான். சிலர் தனியான தொலைக்காட்சி அலைவரிசைகளை நிறுவி முழு மொத்தமுமாக அதிலே பயான்களை நடத்துகிறார்கள்.
இத்தனையும் முடிந்து பார்க்கும் பொழுதும் முஸ்லிம் சமூகம் ஆயிரம் வருடங்களுக்குப் பின்னால் தான் இருக்கிறது. ஏனைய சமூகங்களெல்லாம் நம்மை விட முன்னேற்றமடைந்து நம்மையே புறமொதுக்குகின்ற அளவுக்கு வளர்ந்திருக்கின்ற நிலையில் நமது சமூகம் மட்டும் பயான்களை நடத்தியே காலத்தைக் கடத்துகிறது. இருபத்தி மூன்று வருடங்களில் ஒரு அறியாமைச் சமூகத்தையே மாற்றி விட்டுச் செல்வதற்கு ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் எத்தனை பயான்கள் பண்ணியிருப்பார்கள்? அவர்களது குத்பாக்கள் கூட தொழுகையை விடச்சுருங்கியதாகத் தான் இருந்திருக்கிறது. இறுதி ஹஜ்ஜில் அரபாவில் ஆற்றிய உரைதான் அவரது நீண்ட பயான். இதில் நல்லடியார்களே, கொள்கைச் சகோதரர்களே, பெரியார்களே என வார்த்தைக்கு வார்த்தை விளித்தாலும் இந்த பயான் அரை மணிநேரத்தைத் தாண்டாது. அவர்களது தோழர்களும் இந்த வழியைத் தான் பின்பற்றினார்கள்.
அப்படியானால் ஆயிரம் வருடங்களாகியும் இத்தனை ஆயிரம் பயான்களுக்குப் பின்னாலும் எமது சமூகம் ஏன் இப்படி இருக்கிறது? நமக்கு முன்னிருந்த சமூகம் ஏன் பயான் பண்ணுகிறோம் என்பதை விளங்கி பயான் பண்ணினார்கள். யாருக்கும் வக்காலத்துக்கு வாங்கு வதற்கு, தமக்கு அனுசரணை வழங்குகின்ற எஜமானர்களை திருப்திப் படுத்துவதற்கு, பயானுக்கோ குத்பாவுக்கோ அழைத்தவர்களை ஷேப் பண்ணிவிட்டுச் செல்வதற்கு உபந்நியாசம் செய்பவர்களாக அவர்கள் இருக்கவில்லை. தாம் உபதேசித்ததை நடைமுறைப்படுத் துபவர்களாக அவர்கள் இருந்தார்கள். உபதேசத்தைத் தாண்டி மக்களுக்குப் பயிற்சி கொடுக்கக் கூடிய முரப்பிக்களாக அவர்கள் திகழ்ந்தார்கள். மக்களுடன் அண்டிப் பழகி அவர்களது குறைகளை  நீக்கி வைப்பவர்களாக இருந்தார்கள். மேடையில் முழங்கிவிட்டு, அதற்கு எந்தச் சம்பந்தமும் இல்லாமல் மக்களை புறக்கணித்து வாழ்பவர்களாக அவர்கள் இருக்கவில்லை. இதனால் சமூகமாற்ற மொன்றை அவர்கள் கண்டார்கள்.
எமது சமூகத்தில் குத்பாக்களை ஏற்பாடு செய்கின்ற பள்ளிவாசல்களும் பயான்களை ஏற்பாடு செய்கின்ற ஜமாஅத்துக்களும் ஏன் இதனைச் செய்கின்றோம் என்ற இலக்கின்றிச் செயற்படுகின்றன. ஹஸ்ரத் ஒரு பயான் பண்ண வாருங்களே என்று அழைப்பவரிடம் என்னத்தைப் பேச என்று கேட்டால் ஏதாவது பேசிவிட்டுச் செல்லுங் களே என்று தான் ஏற்பாட்டாளர்கள் சொல்லுவார்கள். பள்ளிவாசல் களில் நடக்கின்ற குத்பாக்களுக்கும் பள்ளிவாசலின் செயற்பாடுகளுக்கும் சில வேளைகளில் எந்தத் தொடர்பும் இருக்காது. மார்க்கக் கல்விக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உலகக் கல்வி மறுமைக்கு உதவப் போவதில்லை என கதீப் மிம்பரிலே வஸிய்யத்துச் செய்கிறார். குத்பா முடிந்தவுடன் ஸயன்ஸ் ப்ரொஜக்ட்டுக்கு உங்களது பிள்ளைகளைச் சேர்த்து விடச் சொல்லும் விளம்பரத்தை பள்ளிவாசல் நிர்வாகத்தின் செயலாளர் வாசிக்கிறார். இது பிழை என உலகக் கல்வியை மறுதலித்து குத்பா ஓதியவர் எழும்பிச் சொல்லப் போவ தில்லை. ஏனெனில் குத்பா ஓதியதுடன் அவரது கடமை முடிந்து விடுகிறது. குத்பாவுக்கு ஹஸ்ரத்தை அழைத்து வந்தவருக்கும் இது பிரச்சினையாகத் தெரியப் போவதில்லை. ஏனெனில் பக்தர்கள் தலையாட்டி விட்டுப் போகின்ற, நிர்வாகத்தின் குறைகளை எடுத்துச் சொல்லாத குத்பாவை ஏற்பாடு செய்கின்ற அவரது பணியும் அத்தோடு முடிந்து விடுகிறது.
வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது போல அடுத்த வாரம் ஹஸ்ரத் மீண்டும் மிம்பர் ஏறுவார். மற்றுமொரு குத்பா நடந்து முடியும். இடையில் கொத்துக் கொத்தாக பயான்களும் நடக்கும். ஆயிரம் வருடத்துக்குப் பின்னர் உலகம் எப்படி இருக்கும் என பல ஆராய்ச்சிகளுக்குப் பின்னர் ஆர்தர் சி கிளார்க் எதிர்வு கூறி சாதனை படைத்தார். அடுத்த ஆயிரம் வருடங்களுக்குப் பின்னர் இலங்கை முஸ்லிம் சமூகம் எப்படி இருக்கும் என்பதனை எந்த ஆய்வுகளும் இன்றி ஐந்தாம் வகுப்பு மாணவனே இன்றே இப்பொழுதே  எதிர்வு கூறி சாதனை படைத்தான் என்னும் செய்தியுடன் இலங்கை முஸ்லிம் சமூகம் மூவாயிரமாம் ஆண்டில் கால்பதிக்கும்.
மீண்டும் ரமழான் வருகிறது. ரமழானை மீண்டும் எப்படிப் பயன் படுத்துவது என்ற பயான்களுடன் மீண்டும் ரமழானைச் சந்திப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here