80 களில் ஒரு சஹர்

0
3

– Mohamed Nizous –
பைவ் ட்ரம்ஸ் அலாம்
பதற்றமாய் அடிக்கும்.
உம்மாதான் எழும்பனும்
உள்ளுக்குள் ஆறுதல்.
படுத்த பாய் எடுத்து
பக்குவமாய்ச் சுற்றி விட்டு
வெளியே தொங்கும்
வெள்ளை டியூப் லைட்டை
மெல்லப் போட்டு விட்டு
மெதுவாகக் கிணற்றில்
அள்ளும் நீர் சத்தம்
அடுத்துக் கேட்கும்.
திலாந்தின் ஓசைகள்
திரும்பத் திரும்ப
கலந்து காற்றில்
காதுகளில் விழும்.
ராத்தா அடுத்தெழுந்து
ராவு ஆக்கிய கறி எடுத்து
அடுப்பில் வைத்து
அடியில் கொள்ளி போட்டு
கொளுத்தும் ஓசை
கூதலில் கலந்து வரும்.
பாயைப் போட்டு
பழைய பேப்பர் விரித்து
மண் பீங்கான் வைத்து
மத்தியில் கோப்பையிலே
சூடாய் சோறு போட்டு
சுற்றி வரக் கறி வைத்து
நோன்பு பிடிக்க எழும்பென்று
நோண்டுவார் கால்களிலே.
போர்த்திய புடவையையுடன்
புரண்டு  படுக்க
பாங்கு சொல்லப் போகுதுடா
பறந்து வாடா என்று சொல்லி
KDK ஐ ஓப் பண்ணி
வேடிக்கையாய் தட்ட
கிணற்றடிக்கு செல்கையில்
கிணுகிணுக்கும் ரேடியோ.
மஸூத் ஆலிம் அவர்கள்
மார்க்கம் விளக்க
பத்து வருசம் போட்ட பயானை
பதினொன்றாக்கும் முஸ்லிம் சேவை.
புது அரிசிச் சோறும்
பொரியலும் கறியும்
கரையலில் முடியும்
காலை சஹர் வேளை.
கோப்பையில் நீர் எடுத்து
குமட்டும் மட்டும் நீர் குடித்து
மைக்கில் ஊதும் போதும்
மறுகாவும் நீர் குடித்து
நிய்யத்து வைக்க
நேரம் முடிவடையும்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here