அரசியல் விவாத மேடை

தமிழ் – முஸ்லிம் உறவும் அரசியலும்

Written by Administrator

– ஈ.எல்.எம்.இர்ஷாத் –

இலங்கையில் நீண்ட காலமாக பரஸ்பர நல்லுறவுடன் ஐக்கியமாக வாழ்ந்து வந்த சமூகங்கள் ஒருவருக்கொருவர் எதிரிகளாக மாறி கசப்புணர்வுகளையும், காழ்ப்புணர்வுகளையும் தாராளமாக அனுபவித்து, கொடிய மூன்று தசாப்தங் களையும் கடத்தி விட்டு, தற்போது நல்வாழ்வுக்கான காலமொன்றை அடைந்திருக்கின்றார்கள்.

போருக்குப் பின்னரான இலங்கையில் அதிகம் பேசப்படும் ஒரு விடயமே இன நல்லுறவு ஆகும். கடந்த காலப் போர் விட்டுச் சென்ற தடயங்களில் இனத் துவேசங்களும், இனமுரண்பாடுகளும் முக்கியமானவை. குறிப்பாக வடகிழக்கு தமிழ்-முஸ்லிம் உறவு மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் சமூக உளவியலில் ஏற்பட்டிருந்த கரும்புள்ளிகள் கொடூரமானவை.

பல்லினம் கொண்ட ஒரு நாடு உண்மையான அபிவிருத்தியை நோக்கி நகர வேண்டுமாயின் அங்குள்ள இனங்களின் ஒத்துழைப்பும், ஐக்கியமும் அவசியமானதாகும். ஒரு இனம் அடுத்த இனத்தைச் சுரண்டி வாழும்போது, பாரபட்சம் காட்டும்போது, சீண்டிப் பார்க்கும் போது, காழ்ப்புணர்வுகளை கட்டவிழ்த்து விடும்போது, உரிமைகளைப் பறிக்கும்போது பாதிப்படைவது சமூக ஐக்கியம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டினுடைய அபிவிருத்தியுமே கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. இதுதான் இலங்கை யுத்த வரலாறு எமக்குப் புகட்டிய பாடம்.

அண்மைக் காலமாக குறிப்பாக தமிழ்-முஸ்லிம் உறவு வலுப்பெற்று வருவது திருப்தியளிக்கின்றது. கடந்த வடமாகாண சபைத் தேர்தலையொட்டி தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கும் (NFGG) இடையில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கை இச்சந்தர்ப்பத்தில் முன்மாதிரியாகக் கொள்ளப்பட வேண்டியது.  இவ்வாறான செயற்பாடுகள் இன நல்லுறவை வலுப்படுத்துவது மாத்திரமன்றி, பேரினவாதிகளுக்கும் பிரித்தாள முனையும் சர்வதேச மற்றும் உள்நாட்டு அரசியல்வாதிகளுக்கும் பேரிடியாக அமையும்.

அரசியல் ரீதியான உடன்படிக்கைகளையும் தாண்டி கல்வி, கலாசார அம்சங்களிலும் கூட்டிணைந்த திட்டங்களைச் செயற்படுத்தலாம். இதனை சர்வ சமய ஒன்றியங்கள், சிவில் சமூக நிறுவனங்கள், சமூக சேவை நிறுவனங்கள் செய்யலாம்.

இன நல்லுறவினை ஆரம்பமாக திட்டமிட்டு செயற்படுத்த வேண்டும். சமூக, அரசியல் ரீதியில் உயர் மட்ட உடன்பாடுகள் இனங்காணப்பட்டு, பேணப்பட வேண்டும். இதற்கென்றே நல்லுறவுச் சங்கங்களை நிறுவ முடியும். துரதிஷ்டவசமாக இலங்கையில் காணப்படும் அரசியல் கட்சிகள் அனேகமானவை இனச்சார்பு கட்சிகளாகவே காணப்படுகின்றன.

தேர்தல் காலங்களில் கூட்டிணைந்த அரசியல் நிறுவனங்கள், பொதுவான இலக்குகளை வரையறுத்துச் செயற்படுவது மிக முக்கியமானது. ஏனெனில், இனங்களுக்கிடையிலான துவேசக் கருத்துக்கள் தேர்தல் காலங்களிலேயே அதிகம் பகிரப்படும்.  அதுவும் அரசியல் வாதிகளினாலேயே மேற்கொள்ளப்படும். அந்த சந்தர்ப்பங்களில் அரசியல் நிறுவனங்கள், கட்சிகள் இணைந்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு பரஸ்பர உடன்பாடுகளோடும் சகிப்புத் தன்மையோடும் பரஸ்பர விட்டுக் கொடுப்போடும் செயற்படுவது அவசியமாகும்.

About the author

Administrator

Leave a Comment