சமூகம் விவாத மேடை

கல்முனை நகர தமிழ்-முஸ்லிம் உறவில் பாரிய விரிசல்

Written by Administrator

(பி.எம். முஜீபுர் ரஹ்மான்)

கல்முனை அபிவிருத்திக்கு தமிழர்கள் ஏன் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்? தமிழர்கள் ஏன் முஸ்லிம்களை நம்புகிறார்களில்லை? முஸ்லிம்கள் ஏன் தமிழர்களை நம்புகிறார்களில்லை? இது குறித்து இருதரப்பு அரசியலும் என்ன செய்கின்றன? இதன் வரலாறு எப்படி அமைந்தது என்பன குறித்து இவ்வார வாத மேடையில் நோக்குவோம்.

1957 ஆம் ஆண்டு முதல் கல்முனை, பொத்துவில், சம்மாந்துறை முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்குமிடையில்      நீண்டகாலமாக சில மனக்கசப்புகள் தொடர்ந்தும் இருந்து வருகின்றன. முஸ்லிம்கள் எங்களது காணிகளையும், சில சொத்துக்களையும் அடாத்தாகப் பிடித்துள்ளார்கள் என தமிழ்த் தரப்பினர் கூறுகிறார்கள்.

அதேநேரம் நாங்கள் எந்த அநியாயமும் செய்யவில்லை, சட்டப்படிதான் அனைத்து வேலைகளையும் செய்துள்ளோம் என முஸ்லிம்கள் தெரிவிக்கின்றனர்.

கல்முனை நகரை முஸ்லிம்கள் அடாத்தாகப் பிடித்திருக்கிறார்கள். முஸ்லிம்கள் பண ஆசைகளைக் காட்டி, நலிவற்ற தமிழ் சமூகத்தை தாக்கி, அவர்களின் காணிகளையும் சொத்துக்களையும் பிடித்துள்ளார்கள் என தமிழர் கள் கூறுகிறார்கள். கல்முனை நகரம் தமிழர்களின் பாரம்பரிய பூமி என்றும், அதனை முஸ்லிம்கள் ஆக்கிரமித்துள்ளார்கள் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

கல்முனை முதலாம் வட்டாரத்தில் வாடி வீட்டுப் பிரிவில் பிசர் எனும் பெயருடைய ஆங்கிலேயர் ஒருவர் அரசிடமிருந்து 38 ஏக்கர் தோட்டத்தை வாங்கி, அந்தக் காணியில் தெங்கு உற்பத்தியை 50 ஆண்டுகளாகச் செய்து வந்துள்ளார். பின்னர், அவரிடம் வேலை பார்த்த இராஜநாயகம் எனும் தமிழருக்கு நன்கொடையாகக் கொடுத்து விட்டு, தன் சொந்த நாட்டுக்குச் சென்று விட்டார். இக்காணிகளை முஸ்லிம்கள் ஆக்கிரமித்து, அதிலேயே வாழ்ந்து வருகிறார்கள் என தமிழ்த் தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.

முஸ்லிம்கள் இக்காணிகளை தகுந்த விலை கொடுத்து வாங்கி, அதிலே குடியேறியுள்ளதாக முஸ்லிம்கள் கூறு கின்றனர். இதற்கான முழு ஆதாரங்க ளும் முஸ்லிம்களிடம் உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு, கல்முனை நகரில் அமைக்கப்பட்டுள்ள பள்ளிவாசல் தமிழர்களுக்குச் சொந்தமான காணியில் அமைந்துள்ளதாகவும், அதனை முஸ் லிம்கள் அடாத்தாகப் பிடித்துள்ளார்கள் என்றும் நீண்டகாலமாக தமிழர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

ஆனால், ஆங்கிலேயர் காலத்தில் ஒவ்வொரு வருடமும் அரச காணிகள் ஏலத்தில் விடப்படுவது வழக்கம். இவ்வேல விற்பனையிலேயே முஸ்லிம் கள் இக்காணியை வாங்கியுள்ளார்கள். 1934 ஆம் ஆண்டு கல்முனையைச்      சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்பவரும், மருதமுனையைச் சேர்ந்த பக்கீர் தம்பி மரைக்காயர் என்பவரும் அரச காணிகளை ஏலத்தில் வாங்கி ஆட்சி செய்து வந்துள்ளனர். அதன் பின்னர் முத்துக் கிருஷ்ணன் என்பவர் பக்கீர் தம்பி என்பவருக்கு காணியை விற்றுள்ளார். இதனை மட்டக்களப்பைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவர் எழுதியுள்ளார்.

இந்த பக்கீர் தம்பியின் பின் உறுத்தாளிகளே இக்காணியை இக்கல்முனைப் பள்ளிவாசலுக்கு கொடுத்துள்ளதாக வரலாறு கூறுகிறது என முஸ்லிம்கள் தெரிவிக்கின்றனர்.

1947 ஆம் ஆண்டு கல்முனை பட்டின சபையாகப் பிரகடனப்படுத்தப்பட்ட போது சில பொதுச் சொத்துக்களின் பராமரிப்பு அச்சபையிடம் ஒப்படைக் கப்பட்டுள்ளது. அவற்றுள் பொலிஸ் கட்டிடம், சந்தைப் பகுதி, பிஸ்கால் கட்டிடம், பகிரங்க வேலைப் பகுதி காரி யாலயம், கல்முனை வைத்தியசாலை என அனைத்தும் உள்ளடங்கும். இதில் சந்தைப் பகுதியில் மீன் விற்பனை நிலையம், இறைச்சிக்கடை என 33 கடைத் தொகுதிகள் இருந்துள்ளன.

இக்கடைத் தொகுதியில் கல்முனைத் தமிழர்களுக்கு 7 கடைகளும், யாழ்ப் பாணத் தமிழர்களுக்கு 4 கடைகளும், இந்தியத் தமிழர்களுக்கு 2 கடைகளும், கல்முனை நகர முஸ்லிம்களுக்கு 12 கடைகளும், இந்திய முஸ்லிம் வியாபாரிகளுக்கு 6 கடைகளும், மருதமுனை முஸ்லிம்களுக்கு 2 கடைகளும் பங்கிடப்பட்டிருந்தன. மொத்தமாக இன அடிப்படையில் தமிழர்களுக்கு 13 கடைகளும், முஸ்லிம்களுக்கு 20 கடைகளும் பங்கிடப்பட்டிருந்தன. இது குறித்து தமிழர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

ஆனால், 25 வீதமான கல்முனைத் தமிழர்களுக்கு 40 வீதமான கடைகள் பங்கிட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது. இது முஸ்லிம்களின் பெருந்தன்மையைக் காட்டுவதாக முஸ்லிம்கள் தெரிவிக்கின்றனர்.

கல்முனைக்குடிக்கும் சாய்ந்தமருதுவுக்கும் இடையில் தமிழர்கள் வாழ்ந்தார் கள் என்றும், அவர்களை இம்முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றினார்கள் என்று தமிழ் தரப்பினர் குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். குறித்த பிரதேசத் தில் வண்ணான் எனப்படுகின்ற, உடுப்புத் தோய்க்கும் சிலர் வாழ்ந்து வந்ததாகவும், அவர்களை முஸ்லிம்கள் வெளியேற்றியுள்ளார்கள் எனவும் அவர்கள் கூறுகிறார்கள்.

உண்மையில் வண்ணான் இனத்தவர்கள் சிலர் அப்பகுதியில் வாழ்ந்துள்ளார் கள். அவர்கள் எப்போதும் முஸ்லிம்களை அண்டிய பகுதிகளிலேயே வாழ்ந்துள்ளார்கள். காலப்போக்கில் அவர்கள் முஸ்லிம்களுக்கு அக்காணிகளை அதிக விலைக்கு விற்று விட்டுச் சென்றுள்ளார்கள். அப்பிரதேசத்தில் சுமார் 9 வண்ணான் குடும்பங்கள்தான் வாழ்ந்து வந்தனர் என முஸ்லிம்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ் – முஸ்லிம் உறவு இணைந்த செயற்பாடு

கல்முனை நகரம் செனிட்டரி சபையாக சுமார் 43 வருடங்களும், உள்ளூராட்சி சபையாக 36 வருடங்களாகவும், பட்டின சபையாக 34 வருடங்களும், ஆக மொத்தம் 113 வருடங்களாக நகர அந்தஸ்துடன் செயற்பட்டுள்ளது. இதற்கு முஸ்லிம்கள் வரிசெலுத்தி வந்துள்ளனர்.

இதன் பின்னர் ஆங்கிலேயரின் காலத்தில் நிலத் தொடர்பு, நீர் வசதி, பொருளாதார வசதி, சுகாதார நிலை, அபிவிருத்தி என்பவற்றிக்காக 7 வட்டாரங்களாகப் பிரித்துள்ளனர். இதில் தமிழர்களின் பாரம் பரியப் பிரதேசங்களும் முஸ்லிம்களின் பாரம்பரியப் பிரதேசங்களும் உள்ளடங்குகின்றன. இதில் 2 வட்டாரங்கள் தமிழ் வட்டாரங்களாகவும் 1 தமிழ் முஸ்லிம் கலப்பு வட்டாரமாகவும், 4 தனி முஸ்லிம் வட்டாரங்களாகவும் பிரித்து அமைத்திருந்தனர்.

இங்கு சுமார் 113 வருடங்களாக தமிழ் மற்றும் முஸ்லிம்கள் இணைந்து அபிவிருத்தி செய்தும் நிருவகித்தும் வந்துள்ளனர் என முஸ்லிம்கள் தெரிவிக்கின்றனர்.

நகர தலைவர்களாகவும் பிரதிநிதிகளாகவும் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளும் மாறி மாறி நிருவகித்து வந்துள்ளனர். கிட்னப் பிள்ளை உடை யார், சீனி விதானை, என்.எஸ். தங்க ராசா ஆகிய தமிழ்த் தலைவர்களும், முஸ்லிம்களில் ஏ.கே.காரியப்பர், இஸ்மாயில் காரியப்பர், ஹேக் முதலியார், எம்.எஸ்.காரியப்பர் ஆகியோர் முஸ்லிம் தலைவர்களாகவும் இருந்துள்ளனர்.

இன்று கல்முனை நகரத்தில் இயங்கும் தமிழ்ப் பாடசாலையான உவெஸ்லி பாடசாலையை ஏ.கே. காரியப்பர் என்ற முஸ்லிம்தான் ஆரம்பித்து வைத்தார் என முஸ்லிம்கள் தெரிவிக்கின்றனர். இதன் மூலம் தமிழ் முஸ்லிம் உறவு சிறப்பாக இருந்துள்ளது என்பது புலனாகிறது.

ஆனால், இன்றைய அரசியலும் இன்றைய சில சமூக செயற்பாட்டாளர்களும் இரு இனத்தையும் பிரித்தாள முயற்சிக்கின்றனர். இதனை இரு இனத்தவர்களும் புரிந்து செயற்படுவது முக்கியமாகும். கல்முனை முஸ்லிம்கள் தமிழர்களின் பிரச்சினைகளைப் புரிந்து விட்டுக் கொடுத்து செயற்படுவதோடு, தமிழ்த் தரப்பினரும் தற்போதைய முஸ்லிம்களைப் புரிந்து செயற்படுவதன் மூலமே கல்முனையை முன்னேற்ற முடியும்.

About the author

Administrator

Leave a Comment