சமூகம் சிறப்புக்கட்டுரைகள் மீள்பார்வை

எட்டாப் பள்ளிக்கு கொட்டாவி

Written by Administrator

 – அபூ ஷாமில் –

பொதுவாகவே அடுத்த சமூகங்களைப் பார்த்து ஏங்குகின்ற பண்பு எல்லா சமூகங்களிலும் இருக்கிறது. அவர்கள் இப்படியிருக்கிறார்கள், அவர்கள் இப்படியெல்லாம் செய்கிறார்கள் என்று அடுத்த சமூகத்தாரை மெச்சுவதும் தம்மைத் தாழ்த்திக் கொள்வதும் எல்லா சமூகத்திலும் நடக்கிறது. முஸ்லிம் சமூகமும் இதற்கு விதிவிலக்கல்ல.

அவர்கள் வேளைக்குச் சாப்பிடுகிறார்கள், இயற்கை உணவைத்தான் புசிக்கிறார்கள் என்றெல்லாம் அடுத்த சமூகங்களைப் பார்த்து ஏங்கத் தொடங்கிய நமது சமூகம், இப்பொழுதெல்லாம் எமது சமூக அமைப்பை விட அடுத்தவர்களது சமூக அமைப்பு சிறந்ததாக இருக்கிறது என்று சொல்லுமளவுக்கு வந்துவிட்டார்கள். இதற்குக் காரணம் எமது சமூக அமைப்பைக் கட்டிக் காக்கவேண்டிய சமூக நிறுவனங்கள் தமது பணியை செய்யாமல் விட்டதுதான்.

அண்மையில் ஒரு முஸ்லிம் சகோதரர் தனது பிரச்சினையொன்றை முன்வைத்தார். அவருக்கும் அவரது சகோதரருக்கும் இடையில் ஒரு பிரச்சினை. முஸ்லிம் சமூகம் தமக்குள் சண்டை பிடித்தால் அது மதச் சண்டையாகவிருக்கும். முஸ்லிம் குடும்பங்களில் சகோதரர்கள் சண்டை பிடித்தால் அது காணிச் சண்டையாகவிருக்கும்.

இவரது பிரச்சினையும் அதுதான். சகோதரர்களுக்கிடையில் காணிப் பிரச்சினைதான் தலைதூக்கியிருந்தது. பெற்றவர்கள் காணி பிரிக்கும்போது விட்ட தவறுகளும் இருக்கலாம். சகோதரர்களுக்கிடையில் சகோதரத்துவம் அருகிப் போனதும் காரணமாக இருக்கலாம். இது தனிநபர்களை இஸ்லாமிய அடிப்படையில் வழிகாட்டாத, தமது அங்கத்தவத்தவர்களை இஸ்லாமிய நெறிமுறை யில் உருவாக்காத சமூக நிறுவனங்களின் குறைபாடாக இருக்கலாம்.

எமது சமூக நிறுவனங்களில் அடிப்படை அலகாக இருப்பது பள்ளிவாசல்கள் தான். தமது அங்கத்தவர்களிடமிருந்து சந்தா பெற்றுக் கொள்வதன்றி அங்கத்தவர்களுக்குத் தேவையான வழிகாட்டலைக் கூட இந்த நிறுவனங்கள் வழங்குவதில்லை. இந்த வகையில் அடுத்த சமூகங்களின் சமூக நிறுவனங்களையிட்டு எமது சமூகம் கொட்டாவி விடுவது பிழையானதாகத் தெரியவில்லை.

குறித்த இரண்டு சகோதரர்களுக்கும் இடையில் பிரச்சினை வெடித்தபோது இருவருமே ஜமாஅத் அங்கத்துவம் பெற்றிருக்கின்ற பள்ளிவாசலிடம் மத்தியஸ்தம் வகிக்கும்படி கோரியிருக்கிறார்கள். உங்களது பிரச்சினையை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்று பள்ளிவாசல் இவர்களை தள்ளி வைத்திருக்கிறது.

பிரச்சினை பொலிஸாரிடம் செல்கிறது. அவர் கடை வைத்திருக்கும் பகுதியில் உள்ள சிங்கள சகோதரர்களிடம் செல்கிறது. எமக்கிடையே இப்படி ஒரு பிரச்சினை வந்தால் எமது பன்சலையூடாக அவர்கள் இதனைத் தீர்த்து வைப்பார்கள் என்று எரிகின்ற இவருக்கு அவர்கள் மண்ணெண்ணை ஊற்றுகிறார்கள்.

அடுத்த சமூகங்களில் அவர்களது மத நிலையங்கள் அங்கத்தவர்களது விவகாரங்களில் தலையிட்டு வழிகாட்டுகின்றன. சக ஊடக நிறுவனமொன் றில் பணியாற்றுகின்ற கொழும்பைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவ நண்பரை சந்திக்கக் கிடைத்தது. அவர் யாழ்ப்பாணத்தில் திருமணம் முடித்திருந்தார். கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் எப்படி உறவு என்று கேட்டபொழுது, யாழ்ப்பாணத்திலுள்ள பெண்ணொருவருக்கு அங்குள்ள சர்ச் மாப்பிள்ளை தேடி கொழும்பிலுள்ள சர்ச்சை அணுகியிருந்தார்கள். சர்ச்தான் எங்களை இணைத்து வைத்தது என்று தெரிவித்தார்.

காணிப் பிரச்சினையை விட பெண்ணைக் கரை சேர்ப்பது மிகவும் கடினமாக இருக்கின்ற எமது சமூகச் சூழலில், இவ்வாறான பிரச்சினைகளை பள்ளிவாசலுக்கு எடுத்துச் சென்றால் ஊரூராகச் சென்று நிதி சேகரிக்க கடிதம் கொடுப்பதுதான் அவர்கள் செய்கின்ற மெத்தப் பெரிய உபகாரமாக இருக்கும்.

இந்த நிலையில் முஸ்லிம் சமூகம் அடுத்த சமூகங்களைப் பார்த்து ஏங்குகின்ற நிலை தவிர்க்க முடியாததாகிறது. முஸ்லிம்களை பள்ளிவாசலை விட்டும் வெருண்டோடச் செய்கின்ற இந்தப் புண்ணியவான்கள் யார்? அவர்கள் யஹூதி நஸாராக்களா அல்லது அவர்களது வேலைத்திட்டங்களை உள்வாங்கி அவர்களுக்குத் துணை போகின்றவர்களா?

பள்ளிவாசலை விட்டும் சமூகத்தை தூரமாக்குகின்ற சக்திகளிடமிருந்து பள்ளிவாசலை பாதுகாப்பதற்கு சமூகம் முன்வர வேண்டும். அல்லது இதன் அடுத்த கட்டமாக தீர்வுகளை நோக்கி முஸ்லிம் சமூகம் பன்சலைக்கும் சேர்ச்சுக்கும் போவதை அங்கீகரிக்க வேண்டியிருக்கும்.

About the author

Administrator

Leave a Comment