சமூகம் விவாத மேடை

­வெண்ணெய் திரண்டு வருகின்றபோது முஸ்லிம்கள் தாளி உடைப்பார்களா?

Written by Administrator

(வாதமேடை என்ற பகுதியை ஆரம்பித்த மீள்பார்வைக்கு எனது உள்ளார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் சமூகங்களுக்கிடையிலான கருத்துப் பரிமாற்றம் நடைபெறுவது ஆரோக்கியமான நிலையை உருவாக்கும் என எதிர்பார்க்கிறேன்.)

 – போல் ராஜ், திருகோணமலை –

கிறிஸ்துக்கு முன்னரே தமிழர் கள் சிறப்பாக ஆட்சி நடத்தினர் என்ற வரலாறு உண்டு. அதற்கு முன்பே தமிழர்கள் வாழ்ந்தனர் என்பதுதான் வரலாற்று உண்மை. இப்படியெல்லாம் ஆண்ட தமிழ் இனம், இன்று இனப்பாகுபாடு கள் மற்றும் புதிதாக உதித்துள்ள பல காரணங்களால் அழிவில் உள்ளது.

இந்தத் தமிழர்கள்- சிங்கள அரசுக்கு எதிராகப் போராடினார்களே தவிர, முஸ்லிம்களை எதிர்த்துப் போராடவில்லை. ஆனால், சிங்களத்தவர்களும் முஸ்லிம்களும் தமிழர்களை விரோதிகளாகவே கருதினர். மாறாக, தமிழர்கள் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் போராடினார்களே தவிர, இனங்களுக்கு எதிராகப் போராடவில்லை என்பதுதான் உண்மை.

தமிழர்களின் நீண்ட இப்போராட்டத்தின் பின்னரே, இன்று இலங்கை அரசாங்கம் அரசியல் அமைப்பு மாற்றம், மனித உரிமை, சமத்துவ கோரிக்கை போன்ற விடயங்களில் கரிசனை கொண்டுள்ளது. இவைகளில் வடக்கு கிழக்கு இணைப்பு, சமஷ்டி, விகிதாசாரப் பிரதிநிதித்துவமா தொகுதிவாரிப் பிரதிநிதித்துவமா என்ற விடயங்களில் தமிழ் சமூகம் தீர்வின்றித் தவிக்கிறது. இவற்றில் முஸ்லிம்கள் என்ன நிலைப்பாடு எடுக்கப் போகிறார்கள். தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் என்ற வகையில் நியாயமான முடிவுகளை எடுப்பார்கள் என தமிழர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

இனம், நிறம், மொழி, மதம், கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், அரசியல் நிலைப்பாடுகள், தாய் மண், பிறப்பு என்ற நிலையில் உரிமைகளைப் பெற ஒவ்வொரு வருக்கும் உரிமை உண்டு என்று ஐ.நா. மன்றத்தின் பிரகடனம் 1948 இல் நடைமுறைக்கு வந்தது. மேற்குறிப்பிட்ட தகுதிகளைக் கொண்டுதான் தேசிய இனங்கள் வகுக்கப்படுகின்றன. அந்நிலையில்தான் இலங்கையில் வாழும் தமிழர்களும் ஓர் இனம். 1990 ஆம் ஆண்டுக்குப் பின்பு வரை உலகளவில் 23 தேசிய இனங்கள் பிரிந்து தங்களுக்கான அரசுகளை அமைத்துக் கொண்டுள்ளன. இவை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

தன்னாட்சி, சுயஉரிமை உல களவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நியாயங்கள் ஆகும். 1775 இல் நடைபெற்ற அமெரிக்க விடுதலைப் போரும், 1789 இல் ஏற்பட்ட பிரஞ்சுப் புரட்சியும் இன்றைக்கும் வரலாற்றில் பேசப்படுகின்றன.

இப்போராட்டங்கள் யாவும் தன்னாட்சி உரிமைக்கு வித்திட்டவையாகும். ஆதிக்கம், அடிமைத்தனம், பாசிசம் என்ற நிலையில் இன வேற்றுமையை பார்க்கும் போது புரட்சி, சுயநிர்ணயம், விடுதலை என்ற தாகம் ஏற்படுகிறது.

இங்கிலாந்திலிருந்து அயர்லாந்தும், ரஷ்யாவிலிருந்து போலந்தும், பின்லாந்தும், சுவீடனிலிருந்து நோர்வேயும் தன்னாட்சி உரிமை பெற்றதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஒரு தேசிய இனம் சுய நிர்ணய உரிமையை நிலைநாட்டி வெற்றி பெறும்பொழுதுதான் அங்கு ஜனநாயகமும், மக்கள் ஆட்சியும் மலரும்.

உலக அளவில் இதுபோன்று தேசிய இனங்கள் பிரிந்து பல தனி நாடுகள் தோன்றியுள்ளன. இந்தியாவில் இருந்து பாகிஸ்தானும், பாகிஸ்தானில் இருந்து பங்காளதேசமும், செக்கோஸ் லோவேகியாவிலிருந்து செக், ஸ்லோவிய என இரு நாடுகளும், யூகோஸ்லாவியாவிலிருந்து பொஸ்னியா மற்றும் ஹெர்ஸி கோவினா, செர்பியா, குரோசியா, மாண்டனெக்ரே, மாசிடோனியா, சலவேனியா  என ஆறு நாடுகள் தங்களது தேசிய இனத்தின் பிரச்சினைகளைக் கொண்டு சுயநிர்ணய உரிமைகளை நிலைநாட்டின.

அதேபோல கொசோவா போராட்டம், 27 ஆண்டுகள் நடைபெற்று தனி நாடாகியது. அல்பேனியா எழுச்சியும் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது.

கிழக்கு தீமோரும் தங்கள் தேசிய இனப் போராட்டத்தில் வெற்றி கொண்டு தங்களின் இறையாண்மையை நிலைநாட்டி யது. பலஸ்தீனப் போராட்டம் இன்று உலக மக்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அண்மையில் பலஸ்தீனத்தை பிரான்ஸ் ஏற்றுக் கொண்டுள்ளது. இறுதியாக தெற்கு சூடான் பிரிந்துள்ளது.

இவ்வாறு உலகில் பல இனங்கள் தங்களது தேசிய இனத்தைத் தற்காத்துக் கொள்வதற்காக போராடி வெற்றி கண்டுள்ளன. அதே பாதையில்தான் இலங்கையிலும் தமிழ் இன மக்கள் போராடி வருகின்றனர். கடந்த கால துன்பியல் பிரச்சினைகளைக் கொண்டு தொடர்ந்து தமிழர் பிரச்சினை தீண்டப்படாத பிரச்சினை என நினைப்பது மனித நாகரிகத்துக்கும் இயற்கையின் நீதிக்கும் புறம்பானது ஆகும்.

எனவே, காலத்தின் தேவை கருதி இஸ்லாமியத் தமிழர்கள் என்ற வகையில் முஸ்லிம்கள் தமிழர்களின் தனிநாட்டுக் கோரிக்கைக்கு எந்த வகையில் உதவப் போகிறார்கள். இப்போது கனிந்துள்ள இச்சந்தர்ப்பத்தையும் தமிழ் இனம் விட்டுவிட்டால், தமிழ் இனத்திற்கு விடிவே கிடையாது என்ற வகையில் ஒத்துழைப்பது காலத்தின் கடமையாகும்.

About the author

Administrator

2 Comments

  • தமிழர்கள் மட்டுமில்லாமல் தமிழ் கிறிஸ்தவர்களும் போரடதிதில் ஈடுபட்டார்கள். நீங்கள் சொல்லும் உதாரணங்கள் அந்த நாடுகளுக்கு பொருந்தும். அப்படி என்றால் ஏன் தமிழ் நாடு தனி நாடு கோரவில்லை? நீங்கள் சொல்வது போல் உங்கள் போராட்ட வெறியில் முஸ்லிம்களும் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் தான்.

Leave a Comment